சிறுகதை மதிப்புரைக் கட்டுரை - கதை புதிது நிகழ்வு
---------------------------------
நன்றி அழகியசிங்கர். வணக்கம் ரெஜினா மேடம் . வணக்கம் நண்பர்களே.
ரெஜினா சந்திரா அவர்களின் ரோலர் கோஸ்டர் சிறுகதை .
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் ; கீழிருந்தும்
கீழல்லார் கீழல்லவர்
என்று ஆசிரியர் எடுத்துக்காட்டும் திருக்குறளுக்கு ஏற்ற சிறுகதை.
வசதியால் மேல்வர்க்கம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போரின் எண்ணங்கள் கீழ் நிலையிலும் ,வசதியால் கீழ்வர்க்கம் என்று நாம் நினைப்போரின் எண்ணங்கள் மேல் நிலையிலும் இருப்பதை எடுத்துரைக்க , பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஒரு ஆட்டோ ட்ரைவரையும் , அந்தக் குழந்தைகளின் அம்மாக்கள் இருவரையும் வைத்துப் பின்னப்பட்ட கதை.
இந்த அறிவுரைக்கும் மேலாக குழந்தைகளின் மன ஓட்டத்தை அப்படியே சித்தரித்துக் காட்டும் விதத்தில் கதையின் சிறப்பு இன்னும் கூடுகிறது .
ரோலர் கோஸ்டர் என்ற தலைப்புக்கு ஏற்ப, இங்கும் அங்கும் மேலும் கீழுமாக தம் குழந்தைகளின் குறும்புத் தனங்களால் ஆட்டி வைக்கப்படும் அந்த அம்மாக்களின் நிலைமை ரோலர் கோஸ்டருக்குள் ஏறி அவதிப்பட்ட நம்மில் பலருக்கும் புரியும் . புரியாதவர்க் கும் புரிய வைக்கும் கதை.
சரி, கதைக்கு வரலாம்.
ப்ரியாவின் மகனும், அனிதாவின் இரண்டு மகள்களும் படிக்கும் பள்ளி அவர்கள் வீட்டில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருப்பதால், அவர்களைக் கூட்டிச் சென்று திரும்பக் கூட்டி வர, சங்கர் என்ற ஆட்டோக்காரர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று அந்த ஆட்டோக்காரர் அண்ணனுக்கு விபத்து என்பதால், அவர் குழந்தைகளைப் பள்ளியில் இருந்து திரும்பக் கூட்டி வர இயலாத நிலை என்று தகவல் வந்ததும் , ப்ரியாவும் அனிதாவும் கிளம்புகிறார்கள் பள்ளிக்கு .
போகும் வழியில் அவர்கள் பேசிக் கொண்டு செல்வது இது .
'போன வாரம் ஆட்டோ கட்டணத்தை 500 ரூபாய் ஏத்திக் கேட்டான், நம்ம முடியாதுன்னு சொன்னதாலே இப்படி ஆரம்பிச்சுட்டான். ரெம்ப தொந்தரவு கொடுத்தா ஆளை மாத்த வேண்டியதுதான்' என்று தாங்களாகவே ஆட்டோக்காரன் பொய் சொல்கிறான் என்று நினைத்துக்கொண்டு அவனைப் பற்றி மட்டமாகப் பேசிக் கொண்டு செல்கிறார்கள்.
ஆச்சு. பள்ளிக்கூடம் வந்தாச்சு. இவர்களைப் பார்த்தவுடன், குழந்தைகளுக்கு குதூகலம். ' அய்யா அம்மா வந்தாச்சு ' என்று அவர்கள் ஓடி வரும்போதே அம்மாக்களுக்கு ' ரோலர் கோஸ்டர் ' ஆரம்பித்தாய் விட்டது. படிக்கும் நமக்கு , நம் குழந்தைப் பருவத்திற்கே செல்லும் அனுபவம் கிடைக்க ஆரம்பித்தாய் விட்டது கதையில் .
ஆம், அந்த மழலைகளின் மனதிற்குள்ளே நுழைந்து அவர்கள் பேசும் பேச்சு, செய்யும் சேட்டை எல்லாம், நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகிறார் ஆசிரியர்.
'அம்மா அதுதான் எங்க புது தமிழ் மிஸ் , இதுதான் நேஹா, இதோ பிரணவ், அவனுக்கு பர்த்டே , அது தான் கலர் டிரஸ் போட்டிருக்கான் ' . குழந்தைகளின் குதூகலம் நமக்கும் தொற்றுக் கொள்கிறது .
இப்போ, அவர்களுக்குத் திரும்புறதுக்கு ஆட்டோ புக் பண்ணப் பார்த்தா ஒண்ணும் கிடைக்கலை, உடனே அனிதாவோட பொண்ணு ' அம்மா , நான் ஒண்ணு சொல்லட்டுமா, நாம மெட்ரோ ரெயில்லே வீட்டுக்குப் போலாமா ' அப்படின்னு ஆசையோடு கேட்கிறா .
‘ஹே சூப்பர் ஐடியா , நான் மெட்ரோலே போனதே இல்லை , சூப்பர் ஐடியா , ப்ளீஸ், ப்ளீஸ் ' மற்ற ரெண்டு வாண்டுகளும் சேர்ந்துடுச்சு .
பிரியா ' ஆட்டோவிலே அஞ்சு பேர் சேர்ந்து போக முடியாது , மெட்ரோவிலே செலவும் கம்மி , சரி போகலாம் ' ன்னு சொன்னதும், உடனே ஒரு வாண்டு ஓடிப்போய் அதோட பிரென்ட் நேஹா கிட்ட சொல்லுச்சு
' நேஹா, நேஹா, நாங்க மெட்ரோவிலே வீட்டுக்குப் போறோமே ' .
போற வழியிலே , ஐஸ் கிரீம் கடை. எல்லாம் வாங்கி சாப்பிட்டுக்கிட்டே செல்பீ வேற எடுத்து அப்பாக்களுக்கு அனுப்பியாச்சு
ஆச்சு. மெட்ரோ ஸ்டேஷன் வந்தாச்சு . உள்ளே போனதும். ஒரு வாண்டு ' அம்மா, அம்மா , இது ஏர்போர்ட்டாமா , அந்த சீட்டை அந்த மெஷின்லெ நாந்தான் வைப்பேன் '
இன்னொன்னு ' நான்தான் வைப்பேன் ' தகராறு .
ஹய்யா, ஸ்டேஷன் ஜில்லுன்னு இருக்கு, தண்டவாளமே காணோம் , ட்ரெயின் எங்கே நிக்கும் '
அம்மா, அம்மா, நான் அந்த எஸ்கலெட்டரிலே மேலே ஏறிப் போயி திரும்பி படி வழியா கீழே இறங்கி வரவா, எனக்குப் பயமா கிடையாதும்மா .' மூணு .வாண்டுகளும் மாத்தி மாத்திப் பேச்சு .
அந்த வழவழப்பான நடை மேடையிலே ஓடி சர் சர்ன்னு நின்னு போன் போட்டோவுக்கு போஸ் வேற . ரெயில் வந்தாச்சு. உள்ளே ஏறி உட்கார்ந்தாச்சு . ஆனால் கேள்விகள் நிக்கலை
' அம்மா நானும் நிக்கவா , அந்த அக்கா மாதிரி, மேலே பிடிச்சுக்கிட்டு தொங்கவா ,
அங்கே ஏன் அந்த சீட்டு மடிச்சிருக்கு .
கேமெரா படம் இருக்கு, கமெரா எங்கேம்மா
ட்ரைனுக்குள் சாப்பிட்டா பனிஷ்மெண்ட்டா , ஏன்
ஒரு செல்பி எடுங்கம்மா '
அம்மா , தினசரி மெட்ரோலியே போலாமா
இருக்கையிலே மேலே ஏறி இறங்குறது , ' ஜாலி , ஜாலி ' ன்னு கூச்சல் .
நடுவில் ஒரு நிறுத்தம். அம்மாக்கள் ரெண்டு பேரும் ' ஏய் , கம்பியைப் பிடி, விழுந்துடுவே, பாப்பாவைப் பிடி, வெளியே ஓடிடப் போறா '.
'அடுத்த நிறுத்தத்தின் பெயர் , செனாய் நகர், செனாய் நகர் ' அப்படின்னு ஒரு வாண்டு கூடவே சேந்து கத்துது .
இதுக்குள்ளே அதுகளை ஒழுங்கு படுத்த ' ஏய் , இந்தத் திருக்குறள் படி ' .என்றாள் ப்ரியா . 'எனக்குத் தெரியுமே , எங்க பாடத்தில் இருக்கே, ஆனா , ஏன் இதுக்கு கரடி படம் போட்டிருக்கு ' என்ற கேள்விக்கு பதில் இல்லை ப்ரியாவிடம் .
இப்போ இவங்க இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தாச்சு . உள்ளே இருக்கிறவங்க எல்லாம், இந்தக் குழந்தைகளுக்கு டாடா சொல்ல , இதுகளும் ' டாட்டா டாட்டா , ன்னு சொல்லிகிட்டே இறங்குச்சுங்க .
'ப்ளீஸ் மைண்ட் தி கேப் , மைண்ட் தி கேப் ' கிக்கீ , கிக்கீ ' ன்னு அந்த மெஷின் குரல் மாதிரி இதுகளும் பேசிக்கிட்டே இறங்க, எல்லோருமே லிஃப்டுக்கு உள்ளே நுழைஞ்சாச்சு .
உள்ளே இருக்கிறவங்க டிரஸ் கலரைச் சத்தம் போட்டு ' ரெட் , ப்ளூ , க்ரீன் ' ன்னு சொல்லிக்கிட்டே வெளியே வந்து ' சுவற்றில் இருக்கும் போட்டோக்களை பார்த்து ' ஏ, இந்தப் பாப்பா, நான் டிவியில் பார்த்திருக்கேன். அம்மா, அம்மா, ஆஸ்பத்திரியலே போயி, எனக்கு ஒரு தம்பிப் பாப்பா வாங்கிட்டு வாம்மா ' . மாற்றி மாற்றி மூன்று வாண்டுகளின் சப்தம்.
நடுவே நகரும் படிக்கட்டில் ஒண்ணு ஏற ' ஓடாதே, ஓடாதே , விழுந்துடப் போறே ' என்று பிரியா கத்த , அந்த படிக்கட்டு நிற்க, எல்லோரும் முன்னே சரிய , பிரியா பெருவிரலில் நல்ல அடி . அப்பத்தான், ஒரு வாண்டு எமெர்ஜென்சி பட்டனை அமுக்கி இருக்கிறது தெரிய வந்துச்சு .
பிரியாவுக்கு பயம், மயக்கம் வர்ற மாதிரி பிபி எகிறது . 'போலீஸ் வந்து பிடிக்கப் போறாங்க ' என்று அலற அனிதா சமாதானப்படுத்தி, வந்த செக்யூரிட்டியிடம் , 'சின்னப்பையன், தவறுதலா அமுக்கிட்டான் ' ன்னு சொல்ல ' அவர் ' சரி , நான் பார்த்துக்கிறேன் ' ன்னு நகர, வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தா போதும்னு ஆயிடுச்சு ரெண்டு அம்மாக்களுக்கும்.
சரியான ரோலர் கோஸ்டு ரைடு தான் அவங்களுக்கு. படிக்கிற நமக்கு , அந்தக் குழந்தைகளோடு சேர்ந்து , குதூகலமாய்ப் பயணம் செய்த உணர்வு . பாவம் அந்த அம்மாக்கள் .
வெளியே வந்தா, 'அய்யா, நம்ம ஆட்டோ அங்கிள் நிக்கிறாங்க ' என்று வாண்டுகள் குதிக்க ' என்னப்பா , ஆஸ்பத்திரியில் அண்ணனைப் பார்க்கப் போகலியா '
'இல்லேம்மா, அது பேர்க் குழப்பம், என் அண்ணன் இல்லே. உடனே ,ஸ்கூலுக்குப் போனேன், நீங்க மெட்ரோவில் போயிட்டதா சொன்னாங்க. அதான், இந்த வீட்டுப் பக்க ஸ்டாப்பில் வந்து நிக்கிறேன். ஏறுங்க, புள்ளைங்களை மடியில் வச்சிக்கிருங்க ' என்றதும் அம்மாக்கள் இருவருக்கும் மெட்ரோ ரெயிலில் பார்த்த குறள் ஞாபகம் வந்தது.
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் ; கீழிருந்தும்
கீழல்லார் கீழல்லவர்
என்று முடிகிறது கதை.
அந்த அம்மாக்களுக்கு குறளின் அர்த்தம் புரிந்தது. ஆட்டோக்காரரின் குணமும் புரிந்தது. தங்கள் தவறும் புரிந்தது. நமக்கு , குழந்தைகளோடு குழந்தைகளாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த அனுபவம் கிடைத்தது . மெட்ரோ ரெயிலில் ஏற வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டு விட்டது . வரட்டுமா. நன்றி .
----------------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக