அமெரிக்கப் பயண அனுபவம் - கட்டுரை
--------------------
வீட்டில் அரைத்த கருவேப்பிலைப் பொடி , பருப்புப் பொடியோடு சேர்த்து, மகனும் மருமகளும் கேட்ட ,கேட்காத பொருட்கள் எல்லாம் வாங்கி ஒருமாதம் முன்பே பேக்கிங் வேலைகள் ஆரம்பித்து ஒரு நாள் இரவு ஊபரில் கிளம்பியாயிற்று ஏர் போர்டுக்கு.
வழக்கமான பரிசோதனைகள், கேள்விகள் ஆரம்பம் அங்கே .
அமெரிக்காவுக்கு எதுக்கு போறீங்க
ஊர் சுத்திப் பார்க்க ( ஏதோ இந்தியாவிலே எல்லா ஊரும் சுத்திப் பார்த்துட்ட மாதிரி )
அங்கே யாரு இருக்கா ( அங்கே போயி கஷ்டப் படக் கூடாதுங்கிற நல்ல எண்ணத்தில் கேட்கப் பட்ட கேள்வி )
பையன் இருக்காரு
என்ன பண்றாரு
( கடையா வச்சிருப்பாரு - மனசுக்குள்ளே ) வேலை பார்க்கிறாரு ( இது என்ன பதில். அடுத்த கேள்வி வரப்போகுது , தெரியும். இன்னும் எத்தனை கேள்விகளோ . போக விடுவீங்களா , மாட்டீங்களா - மனசுக்குள்ளே )
என்ன வேலை
நியூயார்க் பரமவுண்ட் ஸ்டூடியோ மென்பொருள் துறையிலே டைரக்டர்
அதுக்கு மேலே நோ கேள்வி. ஈன்ற பொழுதில் பெரிதுவந்த தருணம் அது
உள்ளே போயாச்சு. பாட்டில் தண்ணீர் எல்லாம் கொட்டிட்டு, ஷூவைக் கழட்டிக் காண்பிச்சுட்டு செக்யூரிட்டி செக் முடிந்து உள்ளே நுழைஞ்சாச்சு. முடி வளர்த்தது தப்போ, வேற மாதிரி ரவுடி லுக் நமக்கு இருக்கோ தெரியலை. கண்ணாடியில் பார்த்தா நல்ல பையன் மாதிரி தான் தெரியறோம் . கலை புதிது குழுவுக்குத் தெரியும் , ஏர் போர்ட் குழுவுக்குத் தெரியலே. பரவாயில்லே . இப்போ கொஞ்ச நேரம் லாப்பியிலே காத்திருந்து பிளேனின் இடைஞ்சலுக்குள் நுழைஞ்சாச்சு .
இன்னும் இருபது மணி நேரம் , நடுவிலே பிரான்க்ப்பர்ட்டிலே இறங்கி ,ஓடிப் போயி அடுத்த பிளேன் பிடிக்கிற இடைவெளி நேரம் சேர்ந்து , இப்படித்தான். இப்பவே முழங்கால் லேசா வலிக்கிற உணர்வு. சமாளிக்கலாம். குடும்பம் சேர்ந்து வரலேன்னா ரெண்டு மூணு பீர் அடிச்சுச் சாஞ்சு கிடந்து நேரத்தைக் கழிச்சுடலாம். . இப்ப அப்படி முடியாதே. ஓ , கலை புதிது குழுவில் அவங்களும் இருக்காங்க , இல்லே, இதைப் படிச்சா, சும்மா நகைச்சுவைக்குன்னு சொல்லி சமாளிச்சுக்கலாம்.
ஆச்சு ஒரு படம் பார்த்தாச்சு. நம்மளை மாதிரி இருக்கார்னு யாரோ ஒரு மேடம் முந்தி சொன்னதால் டென்சில் வாஷிங்டன் மேலே ஒரு பாசம். அவர் நடிச்ச படம் வில்லன் வயலன்ஸ் கொஞ்சம் ஜாஸ்திதான் . ஆனா வழக்கம் போல ஹீரோவோட ஜாஸ்தி வயலன்ஸ் ரசிக்க அது தேவைதான் .
அப்புறம் நடுவிலே அது என்னவோ , என்ன மாயமோ தெரியலே , நாம அந்த இத்தினியூண்டு ரெஸ்ட் ரூம் போயி உடம்பை வளைச்சு நெளிச்சு இருந்துட்டு வர நினைக்கிறப்போ தான் , அங்கே சிவப்பு விளக்கு எரியுது , இல்லேன்னா வழியை அடைச்சுக்கிட்டு வேலைக்கார அம்மா சாரி வெள்ளைக்கார அம்மா சாரி வெள்ளைக்காரப் பெண் தண்ணி இதர தண்ணி பாட்டில்களோட வராங்க . இப்போதைக்கு தண்ணீ குடிக்கிறது டேஞ்சர் . அதனாலே கம்முன்னு இருக்கோம் . அப்புறம் போயிட்டு வர்றோம் .
வர்றதிலே வயிற்றுக்கு ஒத்துக்குறதை பார்த்துச் சாப்பிட்டு முன்னாலே இருக்கிற டிவியில் எல்லாப் படங்களையும் கொஞ்சம் பிரௌஸ் பண்ணிட்டு இருக்கிறப்போ பிராங்க் பர்ட் வந்தாச்சு . ஹிட்லர் ஞாபகம் வந்துச்சு . நேதாஜி ஞாபகத்தோடு சேர்ந்து . ஜெர்மனியின் செந்தேன் மலரே பாட்டு இசை புதுதிலே பாடணும்னும் தோணுச்சு . .
பிராங்க் பர்ட்டில் இருந்து வாஷிங்டன் வேற பிளாட்பார்ம் , சாரி வேற டெர்மினல் . அது ரெம்ப தூரம் ..ஓடணும் . வேணாம் . ரெண்டு மூணு வண்டி மாறி மாறி ஏறி , நடுவுகிற நடக்கிற இடங்களிலே வீல் சேர் மாறி , நடுவிலே செருப்பைக் கழட்டிக் காண்பிச்சு ( யாரும் கோச்சுக்கலே செக்யூரிட்டி செக் - ) அடுத்த வண்டி சாரி விமானம் ஏறியாச்சு .
இப்போ இன்னொரு படம் . விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவரின் வாழ்க்கை . முதுமையின் தாக்கம் தாண்டி வாழும் அந்தத் தம்பதியரின் வாழ்க்கையோடு விமானப் படை உலகப் போர் அனுபவங்களும் கலந்த உணர்ச்சிப் படம் . வழக்கம் போல் பாத்ரூம் , சாப்பாடு , சங்கடமான தூக்கம் கடந்து வாஷிங்டன் வந்தாச்சு .
அமெரிக்கத் தலை நகரம் . அதிகமான பரிசோதனைகள் . இமிகிரேஷன் செக்கில் வழக்கமான கேள்விகள் . கை ரேகை , போட்டோக்கள் . வயசாகி வரவங்கள் கிட்டே அதிக கேள்விகள் இல்லே . கொஞ்ச வயசுக்காரங்க கிட்டேதான் அதிகக் கேள்விகள் . பல வருடங்கள் முன்பு வேலை பார்க்க வந்தப்போ இருந்த மனப் பரபரப்பு இப்போ இல்லே .
அடுத்து லோக்கல் பிளேன் நார்த் கரோலினா ரெலே போக. இங்கே கிடைச்ச நேரத்திலே கொண்டு வந்த இட்லி தயிர் சாதம் காலி பண்ணிட்டு ஏர் போர்ட் சுத்திப் பார்த்து , பேங்க் கார்டுகள் வேலை பண்ணுதான்னு ஏடிம் மெஷின் லே செக் பண்ணிட்டு அடுத்த பிளேன் ஏறி ஒரு மணி நேரத்திலே ரெலே வந்து லக்கேஜ் எடுத்து வெளியே வர வாசலில் காத்திருந்த மகனோடு வந்திருந்த மூத்த பேரன் காவ்யன் வந்து கட்டிக் கொண்டான் ’ தாத்தா ‘ என்றபடி . இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , இல்லை தாத்தா
——நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக