வியாழன், 4 ஜூலை, 2024

திருஷ்டிப் பொம்மை - சிறுகதை

 திருஷ்டிப் பொம்மை - சிறுகதை 

-----------------------------------

மெல்லிய கறுப்புக் கம்பிகளால் சுற்றிச் சுற்றி பின்னப் பட்டு ஒரு குழப்ப உருவம் போல் காட்சி அளிக்கும் அந்தத் திருஷ்டிப் பொம்மையை வாங்கி வந்தான் சேகர். அவனுக்கும் அவன் மனைவி சுந்தரிக்கும் அவர்கள் மேல் கண் திருஷ்டி பட்டு விடக் கூடாது என்ற நினைப்பு . நேற்று அசாம் ஸ்டேட் லாட்டரியில் , அந்த லாட்டரிச் சீட்டுக்குப் பத்து லட்சம் பரிசு விழுந்தது தெரிந்த முதலாய் இதே நினைப்புதான். வேறு ஏதோ ஒரு பயமும்தான் . இதே நினைப்பில் அவர்கள் இரவில் தூக்கம் வராமல் கஷ்டப் பட்டதால் முன்கூட்டியே இந்த திருஷ்டிப் பொம்மை வரவு.


அவன் வாங்கி வந்த பொம்மையை இப்படியும் அப்படியும் வளைத்து உற்றுப் பார்த்தாள் சுந்தரி. அது ஏதோ அவளிடம் சொல்ல வருவது போல் ஒரு பிரமை.

' ஏங்க இது என்னமோ பேசுதுங்க'

'பைத்தியம் , பொம்மை எப்படிப் பேசும் '

'இல்லேங்க, 'நான் உங்க வீட்டுக்கே இப்ப வந்துட்டேன் , அப்படி'ன்னு சொல்லுதுங்க '


சேகர் அந்தப் பொம்மையை உற்றுப் பார்த்தான். அவனைப் பார்த்து அது லேசாக சிரிப்பது போல் இருந்தது .

அவனுக்கும் கொஞ்சம் பயம் வந்தது. 'ஆமாம்டி , லேசா சிரிச்சுதடி'


இப்பொழுது அவனுக்குக் கேட்டது

' எனக்கு எல்லாம் தெரியும் , என்னை ஏமாற்ற முடியாது '

' என்ன தெரியும் உனக்கு '


இப்போது காலிங் பெல் அடிக்கும் சப்தம். திருஷ்டிப் பொம்மையை சோபாவின் ஓரம் வைத்து விட்டுச் சென்று கதவைத் திறந்தான். அடுத்த தெரு ரமேஷ் .

' என்னப்பா, நம்ம கிட்டே சொல்றதில்லையா ,'

'உனக்கு யார் சொன்னா '

'நீ சொல்லாட்ட எனக்கு நியூஸ் தெரியாமப் போயிருமா .'

'என்ன, இதெல்லாம் நியூசிலே வராதே ' என்று குளறினான்.


' உன் பக்கத்து சீட்டு ராஜேஷ் தான் நியூஸ் அறிவிப்பாளர். பயப்படாதே, அவனோ , நானோ உன்கிட்டே எதுவும் கேட்க மாட்டோம். ஒரு காபி கூடக் கிடையாதா .'

'என்னப்பா ' என்று தடுமாறியவனிடம் , ' ப்ரோமோஷன் லிஸ்டில் உன் பேர் இருக்காமே . அடுத்த மாசம் வந்திருமாமே

'அப்பாடா' ' என்று பெருமூச்சு விட்டவன் ' சுந்தரி , காபி கொண்டு வா'


'இதோ ஒரு நிமிஷம்' என்று அடுப்படிக்குச் சென்றாள் சுந்தரி. அங்கே அடுப்படி மேடையில் அந்தத் திருஷ்டிப் பொம்மை.

அலறப் போனவளை எச்சரித்தது அது. 'சத்தம் போட்டா எல்லாம் சொல்லிடுவேன் ' என்று மிரட்டியதும் அடங்கியவள் , வெளியே வந்து , 'ஏங்க, பால் தீந்து போச்சுங்க ' என்றதும் , 'பரவாயில்லைங்க , நான் வரேன் ' என்று கிளம்பினான் ரமேஷ் .


இப்போது லேசான சிரிப்புச் சப்தம். 'வீட்டிலே ஒரு லிட்டர் பால் பிரிட்ஜில் வச்சுக்கிட்டே இல்லேங்கிறியே சுந்தரி ' என்றது அந்தத் திருஷ்டிப்பொம்மை சோபாவில் இருந்தபடி. ' நீ எப்படி அடுப்படியில் இருந்து இங்கே ' என்றவளைப் பார்த்து ' இது இங்கே தானேடி இருக்கு ' என்றான் முகம் வெளிறியபடி சேகர்.


'போதும் இந்த விளையாட்டு , உடனே அந்த லாட்டரிச் சீட்டை , அசாம் ஸ்டேட் அலுவலகத்துக்கு அனுப்பி விடு . அந்தச் சீட்டில் இருக்கும் ஆபீஸ் நம்பருக்குப் போன் செய்து உண்மையைச் சொல். ரெயில்வே ஸ்டேஷனில் கிடந்தது இந்தச் சீட்டு. வாங்கியவர் யாரோ தவறி விட்டு விட்டார். ஏதோ ஒரு உந்துதலில் எடுத்து வந்தவன், நேற்றைய ரிசல்ட் தேதிக்குக் கம்பியூட்டரில் வந்த அசாம் லாட்டரிச் சீட்டு ரிசல்டில் பத்து லட்சம் பரிசு பார்த்து ஆசைப்பட்டு விட்டாய். செய் இதை , இல்லாவிட்டால் .. ' என்று மிரட்டியது பொம்மை.


திஹார் ஜெயில் வாசல். அழுதபடி சுந்தரி .சேகர் கண் முன்னே , வந்து போனார்கள் , பல நண்பர்கள் , உறவினர்களும். 'சேகர் நீயா இப்படி ' . காதுகளைப் பொத்திக் கொண்டவன், 'சுந்தரி அந்தப் போனை எடு ' என்றான்.


அந்தத் திருஷ்டிப் பொம்மையிலே இருந்து கிளம்பிய புகை ஒன்று சுந்தரியின் ஹாண்ட் பேக்கில் நுழைந்து அந்த லாட்டரிச் சீட்டில் இருந்த நாக்கு நீட்டிய,கண்கள் உருண்ட அசாம் நாட்டுக் கிராம அம்மன் படத்தில் போய் ஒன்றியது .


---------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை  ------------------------- கள்ளு இறக்கிய காலத்தில் காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில் கஞ்சி குடித்தவ...