என்ன தவம் செய்தனை - கட்டுரை
---------------------
சுகன்யா மேடம் கொடுக்கும் தலைப்புகளில் வாரா வாரம் பேசியதைத் தொகுத்தாலே , நமது வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதி அனைவர்க்கும் கிடைத்து விடும் என்று தோன்றுகிறது . அதன் இன்னும் ஒரு பகுதியாக, மகன், மகள் பற்றிய இதையும் சேர்த்துக் கொள்ளலாம் .
சில நேரங்களில் நாம் சிலரிடம் நடந்து கொண்ட விதம் பற்றிய சில பழைய நினைவுகள், அவர்கள் இப்போது நம்மிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றி ஒப்பிட்டுப் பார்க்கையில் நெகிழ்வை உண்டாக்குவது உண்டு .
உதாரணத்திற்கு நாங்கள் சமீபத்தில் அமெரிக்கா சென்ற பொழுது , மகனும் , மகளும் ஒவ்வொரு விஷயத்திலும் எங்களைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்ட விதம் , நான் அவர்களிடம் அவர்களின் குழந்தைப் பருவத்தில், எவ்வளவு கண்டிப்பாகவும் சில சமயம் திட்டவும் செய்திருக்கிறேன் என்பதை எல்லாம் நினைக்கும் போது ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி நெகிழ வைத்தது . அதைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது .
விமானத்தில் ஏறுவதற்கு முன்பே அங்கங்கே ஏர் போர்டுகளில் எங்களுக்கு வீல் சேர் வசதிகளை செய்து வைத்திருந்து நடப்பதைக் குறைத்த விதம், விமானத்தின் உள்ளும், இருவருக்கும் ஓர சீட்டுகளுக்கு ஏற்பாடு செய்து பாத் ரூம் சென்று வர இடைஞ்சல் இல்லாத படி ஏற்பாடு செய்த விதம் . வருகின்ற உணவுகளை ருசித்துப் பார்த்து , எது எங்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று அறிந்து சாப்பிட வைத்தது என்ற விமானப் பயண அனுபவம், நான் அவர்களின் இளம் பருவத்தில் அழைத்துச் செல்லும் இடங்களில் , பஸ்களிலும் ரெயில்களிலும் அவசரமாக ஏற்றி இறக்கிய விதமும் , வாங்கிக் கொடுப்பதைச் சாப்பிட வைத்த விதமும் நினைவில் வந்து கொஞ்சம் குற்ற உணர்வைக் கிளப்பின.
அடுத்து அங்கே வீட்டில் தங்குவதற்கு தனி ரூம் ,தேவையான வசதிகளோடு ஏற்பாடு செய்து கொடுத்தது , எங்களை எப்போதும் அவசரப் படுத்தாமல் ,நாங்கள் விழித்த பின்பே , வெளியில் செல்லும் பயணம் பற்றிய முடிவு செய்தது . வெளி ரெஸ்டாரண்டுகளில் உள்ள உணவு வகைகளை முன்பாகவே நெட் மூலம் தெரிந்து, எங்களுக்கு ஒத்துக் கொள்ளும் உணவு இருக்கும் இடங்களுக்கே அழைத்துச் சென்றது போன்றவற்றை நினைத்தபோது , நான் , பயணங்களில் அவர்களை அதிகாலை உசுப்பி விட்டது, அவர்களுக்கு ஆரோக்கியம் என்று நினைத்த உணவுகளை வற்புறுத்திச் சாப்பிட வைத்தது போன்ற நினைவுகளை எழுப்பி விட்டது . .
எங்களின் ஆர்வமும் ஆசையும் புரிந்து , அதற்கேற்ற இடங்களாக, நூலகம், இசை நிகழ்வு, காப்பி ரெஸ்டாரண்ட் , விளையாட்டு, நீச்சல் , டோஸ்ட்மாஸ்டர் , என்று பார்த்துப் பார்த்துக் கூட்டிச் சென்றது . வீட்டில் சுகர் , பிபி போன்றவற்றை செக் அப் செய்து அதற்கேற்ற படி வீட்டில் உணவு முறை , வெளியூர் செல்வது போன்ற பல விஷயங்களைத் திட்டமிட்டது , மற்றும் அமெரிக்காவில் நாங்கள் முன்பு பார்க்காத இடங்களாக , நயாகரா, டிஸ்னி உலகம் போன்ற இடங்களுக்கு முறையே , மூன்று நாட்கள், ஒரு வாரம், என்று நிதானமாக இருந்து பார்க்கும் படி திட்டமிட்டு ஏற்பாடு செய்தது , அந்த இடங்களில், மிகவும் வேகமான, உடலைக் கஷ்டப்படுத்தும் மகிழ்வு ரைடுகளைத் தவிர்த்து எங்களுக்கு ஏற்ற மகிழ்வு ரைடுகள் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்தது ,பிரம்மாண்ட டிஸ்னி உலகில் எங்கும் நடக்க அவசியம் இல்லாமல், நாங்களே இயக்கும் எலெக்ட்ரிக்கல் வாகனம் முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொடுத்தது . நமக்கு விருப்பமான புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தது , மலைப் பாங்குப் பாதையிலே சேர்ந்து வாக்கிங் வந்தது என்று ஒவ்வொன்றையும் யோசிக்கும் போது , அவர்களின் இளம் பருவத்தில் பெரும்பாலும் நமக்குப் பிடித்த இடங்கள், படங்கள், புத்தகங்கள் அவர்களுக்கும் பிடிக்கும் என்று நாமே முடிவு செய்து நடந்து கொண்ட விதம் பற்றி யோசிக்க வைத்தது .
அவர்களின் குழந்தைப் பருவ, இளம் பருவத்திலே,நாம் எத்தனை முறை அவர்களை அவசரப் படுத்தி இருக்கிறோம், திட்டி இருக்கிறோம் என்ற நினைவுகள் கூடவே வந்து கலங்க வைத்து கண்களை மறைத்த நேரங்கள் பல.
ஆனால் அந்தக் காலத்திலே , என் துணைவியார் , அவர்கள் கூடவே இருந்து, அவர்களுடன் கலந்து பேசி குழந்தை வளர்ப்பில் கருணையும் கண்டிப்பும் கலந்து காட்டி , அவர்கட்குத் தேவையானவை செய்து , அவர்கட்குப் பிடித்த உணவுகள் அளித்து வளர்த்து வந்த விதம் அதைச் சமன் செய்து இருக்கலாம். அந்த அமைதியும் , அன்பும். எனது வேகத்தையும், அவசரத்தையும் , கண்டிப்பையும் சமன் செய்து இருக்கும் என்றே தோன்றுகிறது ,
மாசச் சம்பளத்தை முழுவதையும் மனைவியிடம் கொடுத்து விட்டோம் என்று பெருமைப் பட்டுக் கொண்டு , வாரம் ஒரு முறை , ஞாயிறு மட்டும் குழந்தைகளுடன் விளையாடுவது , வெளியே கூட்டிச் செல்வது தவிர மற்ற நாட்களில், வேலை , அது சம்பந்தப்பட்ட படிப்பு, நண்பர்களுடன் அரட்டை என்றே இருந்த ஞாபகம் வரும்போது கொஞ்சம் வருத்தம் வரத்தான் செய்கிறது. காலம் கடந்த வருத்தம். .
அப்படி இருந்தாலும். அம்மாவுக்குக் கொடுக்கும் அதே அன்பையும் , ஆதரவையும் எனது மகனும், மகளும் இருவரும் எனக்கும் கொடுத்துக் கவனித்த விதம், சில நேரம், குற்ற உணர்வும், நன்றி உணர்வும் கலந்த ஒரு விதமான உணர்வை எனக்கு ஏற்படுத்தியது உண்மை. .
இங்கு சென்னை வீட்டில் இருப்பது வேறு. இது நம்ம சாம்ராஜ்யம். அங்கு முழுக்க முழுக்க அவர்களையே நம்பி இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் நடந்து கொண்ட விதம் சிறப்பு. நம்மைப் பற்றிப் புரிந்து பக்குவப்பட்டு விட்ட அவர்களுக்குள்ளும் ஒருவித டென்ஷன் இருந்திருக்கலாம். உள்ளுக்குள் அன்பு கொட்டிக் கிடந்தாலும் , அவ்வப்போது சுருக்கென்று கோபித்துக் கொள்ளும் , உணர்ச்சி வசப்படும் இந்தப் ' பெருசை ' ஒழுங்கா எந்தப் பிரச்னையும் இல்லாம பார்த்து அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்திருக்கலாம். அவர்களும் பெற்றோர் ஆகி விட்ட இந்தக் கால கட்டத்தில், எங்களையும் குழந்தைகளாக நினைக்கும் பக்குவம் அவர்களுக்கு வந்து விட்டதாகத் தோன்றியது .
என் போன்ற பெருசுகள் குழந்தைகள் ஆகும் நிலை வந்து விட்டதாகவே தோன்றுகிறது . குழந்தைகள் பெருசுகள் ஆகி விட்ட நிலையும் தெரிகிறது. அவர்கள் என்னைப் போன்ற அவசரப் பெருசாக ,ஆவேசப் பெருசாக இல்லாமல், அமைதியான, அன்பான பெருசுகளாய் இருப்பதற்கு , வளர்த்த மனைவிக்குத் தான், அவர்களின் அம்மாவுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.
மகனை , மகளைப் பற்றி நினைக்கையில் , அவர்களுக்கு நன்றி சொல்வதை விட , ' இவன் தந்தை என் நோற்றான் கொல் ' என்பதற்கு இலக்கணமாக இயங்கும் இவர்களைப் பெற , எனக்கு நானே 'என்ன தவம் செய்தனை 'என்றே சொல்ல வேண்டும் .' தந்தை , தனது மக்களுக்குச் செய்யும் நன்மை, அவர்களைக் கற்றோர் அவையிலே முதன்மையாக இருக்கச் செய்தல் ' என்ற குறளுக்கு ஏற்றபடி சிறு ' நன்மை ' நான் ஓரளவு செய்திருப்பேன் என்றே தோன்றுகிறது . நன்மை செய்த முறையிலே தவறு இருக்கலாம் . நன்மை செய்ததில் திருப்தி.
---------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக