டிஸ்னி உலக அனுபவம் - கட்டுரை
------------------------
எதிர் வீட்டில் அதே பெரியவர் , எங்களைப் பார்த்துக் கொண்டு, தான் எங்கும் வெளியே செல்ல முடியாத அதே முதுமை விரக்தியோடு , நாங்கள் அந்தத் தெருவில் ஓடி ஆடி விளையாடுவதையும் , அடிக்கடி காணாமல் போய் விட்டு சில நாட்கள் கழித்து திரும்பி களைப்போடு காரில் இருந்து இறங்கிச் செல்வதையும் பார்த்துக் கொண்டு. அவரின் கண் திருஷ்டியோ , வேறு யாரின் கண் திருஷ்டியோ தெரியாது, ஒரு அதிர்ச்சியான நிகழ்வு நேற்று .ஆனால் முடிவு சுபம். நன்றியாக நங்கநல்லூர் ஆஞ்சநேயருக்கு ஸ்வர்ண புஷ்ப அர்ச்சனை வேண்டுதல் .திரும்பியதும் நிறைவேற்ற வேண்டும். அதன் விபரம் கட்டுரையின் கடைசியில் .
இப்போது டிஸ்னி உலக அனுபவம். கார்ட்டூன் என்றாலே மிக்கி , மின்னி , , சிப் அண்ட் டேல் ஞாபகம் தானே வருகிறது . பேரன், பேத்திகளுக்குக் கேட்கவா வேண்டும். உலகின் மிகப் பெரிய டிஸ்னி உலகம் பிளோரிடாவின் ஓர்லாண்டோவில் இருக்கும், டிஸ்னி உலகம் போகும் பிளான் சொன்னதும் சஞ்சனா, காவ்யனின் உற்சாகத்துக்குக் கேட்கவே வேண்டாம்.
ஒரு வாரம் முன்பிருந்தே அதைப் பற்றிய யூடியூப் சேனல் வீடியோக்கள் எல்லாம் பார்த்து அவர்கள் பார்க்க விரும்பும் பார்க்குகள் , ரைடுகள் எல்லாம் சொல்லி அதற்கேற்பவே அந்த ஒரு வாரம் பிளான். இரண்டு நாட்கள் , காரில் போக, வர . பனிரெண்டு மணி நேர பகல் பயணம், திரும்ப பனிரெண்டு மணி பகல் பயணம் , அமெரிக்காவின் கிழக்குக் கடல் அட்லாண்டிக் கடல் ஓரச் சாலை , வடக்கு தெற்கை இணைக்கும் இணைக்கும் ஐ 95 , அமெரிக்காவின் பிரபல நீண்ட சாலையின் வேகப் பயணம். தொடர்ந்து அதி வேகக் கார்கள். மற்றும் அதிக ட்ரக்குகள் பலவித கார்களை ஏற்றிக் கொண்டு, ரோட்டோரம், போலீஸ் ஜீப்புகள் அங்கங்கே . வேகத்தை மீறுவோரைக் கவனித்துக் கொண்டு. மணிக்கு 70 மைல்கள் , 110 கிலோமீட்டர் வேகம் அதிக பட்சம்.மூன்று ஸ்டேட்கள் தாண்டி, நார்த் கரோலினா, சவுத் கரோலினா, ஜார்ஜியா , அடுத்து புளோரிடா . கனடா ஓரம் தொடங்கி மியாமி வரை செல்லும் நீண்ட பயண நேரம் , பகல் நேரம் இரண்டு நாட்கள் கழித்தால், கிடைத்தது ஐந்து நாட்கள்.
அங்கே டிஸ்னி உலகில் பெரிய நான்கு பார்க்குகள் பலவிதமான ரைடுகளோடு . யூனிவேர்சல் ஸ்டுடியோவில் மூன்று பெரிய பார்க்குகள் பலவிதமான ரைடுகளோடு. ரைடு என்பது ஏதாவது ஒரு சினிமாப் படத்தோடு தொடர்புடைய அனுபவத்தை , வேக ராட்டினங்கள் , வேக ரெயில் பயணங்கள் , காடு மலைக்கு நடுவே, நீர் ,நெருப்புக்கு நடுவே திகிலோடு, திருப்பங்களோடு பயணம் செய்வது . ஸ்டார் வார்ஸ். ஜுராசிக் பார்க், ஹாரி பாட்டர் , என்று பல பிரம்மாண்ட படங்கள், டிஸ்னி, யூனிவேர்சல் ஸ்டுடியோ படங்கள் சம்பந்தப் பட்ட அனுபவங்கள். அத்தனையும் பார்ப்பதென்றால், ஒரு மாதம் தங்க வேண்டும். நமக்கு இருந்ததோ ஐந்து நாட்கள்.
மேஜிக் கிங்டம், எப்காட் , ஹாலிவுட் ஸ்டுடியோ என்ற மூன்று டிஸ்னி பார்க்குகள். யூனிவேர்சல் ஸ்டுடியோ , ஐலண்ட் ஆப் அட்வென்ச்சர் என்ற இரண்டு யூனிவேர்சல் பார்க்குகள் முடிவாயின. டிஸ்னி லாண்டில் அனிமல் கிங்டம், கட் . யூனிவேர்சலில் வல்கனோ பே, கட் .நடுவில் நேரத்தைப் பொறுத்து அட்லாண்டிக் பீச் ஒன்று என்று முடிவு செய்தவர்கள் வாண்டுகள்.
நானும் மனைவியும் அங்குள்ள எலெக்ட்ரிக் வண்டி ஒன்றில் ஊர் கோலம் . எனது மனைவி முன்பே டிரைவிங் கற்றுக் கொண்டு லைசென்ஸ் வாங்காமல் விட்டு விட்டார்கள். அந்தப் பழைய அனுபவம் அவர்கட்கு உதவியது . எனக்கு , நான் பல முறை சொல்லியது போல் , வீட்டு காம்பௌண்டுக்குள் இப்போதும் ஓட்டுகின்ற அனுபவம் உதவியது . நடுவில் அங்கங்கே சில பாதுகாப்பான ரைடுகளில் பயணம்.
நடுவில் அமெரிக்க உணவுகள். மைதாவின் பல வித அவதாரங்கள். பர்கர், வேப்பில் , சாண்ட்விச் , இன்னும் பல பெயர்களில், பல உருவங்களில். சாண்ட் விச்சில் முட்டைகோசு போன்ற இலை தழைகள் அதிகம். நடுவில் தேடிப் பார்த்தால் கிடைக்கும் சில உருண்டை உருவங்கள்,பீன்ஸ் போன்றவை. இத்துடன், எல்லோரும் ஒரு கப் காபியோடு அலைவது ஒரு பேஷன். குடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கையில் இருப்பது அவசியம்.
அத்துடன், நமக்குப் பிடித்த நியூயார்க் நகர ஆகாயம், பூமியில் விர்ச்சுவல் டூர். மற்றும உலக அதிசயங்கள் , தாஜ் மகால் சேர்ந்த இடங்களில் ஆகாயம் , பூமி என்று ஒரு விர்ச்சுவல் டூர்.இரண்டும் நாங்கள் நன்றாகவே அனுபவித்தோம். எல்லா போட்டோக்களும் ஏற்கனவே நமது கலை புதிது குழுவில் போட்டு சுருக்க விபரம் கொடுத்து விட்டதால் அதை விளக்கப் போவதில்லை இங்கே.
மொத்தத்தில் ரைடுகளைப் பற்றிச் சொல்வது என்றால், மேலே போவது, கீழே இறங்குவது, இடது வலது பக்கம் திடீர் என்று திரும்புவது, குலுக்குவது, திடீர் என்று தண்ணீர் பீய்ச்சுவது , அந்தப் படங்களின் கதாபாத்திரங்களின் உருவங்கள் வந்து பயமுறுத்துவது இல்லை கொஞ்சுவது, நம்மையும் அந்தக் கதாபாத்திரங்களில் ஒன்றாக ஏற்று விர்ச்சுவல் ரியாலிட்டிக்குள் அழைத்துச் செல்வது இப்படிப் பல. எல்லாமே மேக்ஸிமம், பத்து பதினைந்து நிமிடங்கள் தான். அதற்குள் கிடைக்கும் திகில் அனுபவம் தான். இப்படியாக அந்த பார்க் அனுபவத்தோடு சேர்ந்து ஒவ்வொரு இரவும் வாண , வான வேடிக்கைகள், திரைப்படங்களின் சுருக்கம் பெரிய செட்டுகளின் மேல் வண்ண மயமாக ஓடுவது எல்லா இடங்களிலும் இரவு ஸ்பெசல். காலையில் பத்து மணிக்கு நுழைந்தால், இரவு பத்து மணி வரை நேரம் ஓடுவதே தெரியாது.
இப்படி பார்க், ரைடுகள் முடியும் போது . எல்லா இடங்களிலும் ஷாப்பிங் வாக் என்று ஒரு நீண்ட தெருவில், எல்லா விதமான பிராண்டட் கடைகளின் கிளைகள். வாங்குவதற்கு நாம் இந்தியாவில் ஒரு வீட்டை விற்று விட்டு வந்து இருக்க வேண்டும். அது செய்யாததால், சும்மா , கண் பார்வைக்கு சுகம். பர்ஸ் பத்திரம் . ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக , ஏதோ சில சின்னஞ் சிறிய பொருட்கள் , ஞாபகத்திற்கு.
இந்த முக்கிய இடங்கள் பார்த்த நேரம் போக, ஒரு நாள் மாலை, பக்கத்தில் ஒரு பீச் , அட்லாண்டிக் கடல் ஓரம் டேடோனா என்ற பீச். கடற்பறவைகள், கால் நனைப்பு , கடல் மணலில் ஓவியம், கடல் நடுவே ரெஸ்டாரண்டில் மீன் உணவு, (கொச்சின் ஞாபகம் வரலாம்). ஹோட்டலில், ஜிம், நீச்சல், மைதா தவிர்த்து பழ உணவு, ரூம் கிச்சனில் கொண்டு சென்ற தோசை மாவில் தோசை , அரிசியில் சாதம், தயிர் சேர்த்து உள்ளூர் உணவு, நினைவோடு ஓர்லண்டோவில் . முடிந்தது ஒரு வாரம் . பையன் சளைக்காமல் பன்னிரண்டு மணி நேரம் கார் திரும்ப ஓட்டி அபெக்ஸ் வந்து சேர நள்ளிரவு பன்னிரண்டு மணி. நயாகரா சென்று திரும்பிய அதே நேரம்.
இப்போது அந்த திருஷ்டி பரிகார நிகழ்வு. நேற்று , பேரனும், பேத்தியும் காலால் தள்ளி ஓட்டும் அந்த மெக்கானிக்கல் நீளத் தட்டை ஸ்கூட்டரில் வேகமாக ஓட்டி விளையாடும் போது ஒரு திருப்பத்தில் , சரிவில், பேத்தி சஞ்சனா , வேகத்தில் கீழே விழ , முகம், கை கால்கள் சிராய்ப்போடு ரத்தத்தோடு வீடு திரும்ப, அர்ஜென்ஸி அப்பாயிண்ட்மென்ட் புக் செய்து பக்கத்து ஆஸ்பத்திரி விரைந்து , எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து, மருந்து , மாத்திரை, பேண்டேஜ்களோடு ஆஸ்பத்திரி சுத்தம், வேக கவனிப்பு போன்றவற்றை வியந்தபடி , திருஷ்டி கழிந்தது என்று சொல்லியபடி திரும்பினோம்.
எனக்கு லேசாக காய்ச்சல் என்றாலே , மனைவியால் அனுமாருக்கு பிரார்த்தனை உண்டு. இது போன்ற விபத்துக்கு செய்யாமலா. வழக்கம்போல் அவர் அவரது இஷ்ட தெய்வம் ஆஞ்சநேயருக்கு ஸ்வர்ண புஷ்பம் அர்ச்சனை பிரார்த்தனை செய்து , நல்ல வேளை , தலையில் அடிபடவில்லை என்று அனுமானுக்கு நன்றி சொல்லி திரும்பினோம். எதிர் வீட்டுப் பெரியவர் எங்களைப் பார்த்தபடி வீட்டுக்குள் போய் விட்டார். அநுமானைப் பற்றி அந்த வெள்ளைக்காரப் பெரியவருக்குத் தெரியாது .
-----------------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக