வியாழன், 4 ஜூலை, 2024

எங்கே போனார் - கவிதை

 எங்கே போனார் - கவிதை 

———-

சதுர்த்திக் களிமண் பிள்ளையாரில்

சாமியைக் காட்டிய தாத்தா


சனிதோறும் எள்ளு விளக்கில்

கோயிலைக் காட்டிய அம்மாச்சி


கதைகள் படிக்கச் சொல்லிக்

கவிஞன் ஆக்கிய அப்பத்தா


சினிமா கூட்டிச் சென்று

சிந்தனை சேர்த்த அப்பா


பக்கம் இல்லா விட்டாலும்

பாசம் காட்டிய அம்மா


பெண்ணும் பொருளும் தந்து

பிழைக்க வைத்த மாமா


கறியும் மீனும் சமைத்து

கனக்க வைத்த அத்தை


ஒவ்வொரு நாளும் உள்ளே

உணர்வில் கலந்த போதும்


எவ்வளவு சீக்கிரம் எல்லாம்

இறந்த காலம் ஆச்சு


இருப்பார் என்றும் என்றிருந்து

இருந்தார் என்றான பின்னே


எங்கே போனார் என்று

ஏங்கித் தேடும் கண்ணீர்


————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை  ------------------------- கள்ளு இறக்கிய காலத்தில் காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில் கஞ்சி குடித்தவ...