ஞாயிறு, 17 மே, 2026

'அணையாத தமிழய்யா தீபம்' - உத்திரகோசமங்கை உறவுகள் - 8

 

'அணையாத தமிழய்யா   தீபம்' - உத்திரகோசமங்கை உறவுகள் - 8 

---------------------------

படம் வரைந்து உதவியவர் : உஷா பாரதி மேடத்திற்கு நன்றி 

--------------

அவ்வப்பொழுது வரும் அனுபவத் தொடர்.

---

இளவயதில் நம்மை  செதுக்கி உருவாக்கக்   கூடிய பொறுப்பு பெற்றோர்களுக்கு மட்டுமல்ல ,ஆசிரியர்களுக்கும் உண்டு தானே .   .அவர்களுடைய  பழக்கங்கள் , வழக்கங்கள்  போன்றவற்றை எல்லாம் பார்க்கின்ற மாணவர்களுக்கு  வழிகாட்டிகளாக  இருக்கக்கூடிய அரிய  வாய்ப்பு அவர்களுக்குக்   கிடைக்கிறது . 


ஒரு பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் இருபது மாணவர்கள் என்று எடுத்துக்கொண்டால் , அந்தக்கால உயர்நிலைப்பள்ளியில் ஆறு வகுப்பிற்கு நூற்று இருபது  மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் பல நாட்கள்  ஏதாவது பாடம் நடத்தி , பழகி வரும் ஆசிரியர்கள் ஏற்படுத்தும்  தாக்கம் அந்த வயதில் மிகப் பெரிய தாக்கம். பசுமரத்து ஆணியாய்ப் பதியும் தாக்கம்.அது மாணவர்களிடம்  நல்ல குணங்களையும் வளர்க்கலாம். தீய குணங்களையும் வளர்க்கலாம். அப்படி நல்ல குணங்களை வளர்க்கக் கூடிய ஆசிரியர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்தான் அவனது தமிழ் ஐயா. 


உத்திரகோசமங்கை  சின்ன ஊர் என்பதால் அவருடைய நடவடிக்கைகள் அனைத்துமே எல்லோராலும், குறிப்பாக எல்லா மாணவர்களாலும் கவனிக்கக் கூடிய அளவிலே இருந்தது .  பள்ளிக்கூட நேரம் போக மீதி  நேரத்தில் கோயில்தான் அவர் குடியிருப்பு.   பிரம்மச்சாரி . வீட்டில் அவரும் அவருடைய தம்பியும் அவருடைய அம்மாவும் .


அவர்  அந்த ஊருக்கு மாறுதலாகி  வந்த பொழுது அவருடைய சில பழக்கங்கள் அவனுக்கு மிகவும்  வித்தியாசமாகத் தெரிந்தன  .  அவனும் அவருடைய தம்பியும் ஒரே வகுப்பு என்பதால்  அவருடைய வீட்டுக்கு அடிக்கடி போகக் கூடிய வாய்ப்பு அவனுக்கு ஏற்பட்டது . 


அப்பொழுதெல்லாம்,  அவரும் அவர்  தம்பியும் காலை நேரத்திலும் , மாலை நேரத்திலும்,    அவருடைய அம்மாவின்  காலில் விழுந்து வணங்கி விட்டு பிறகு  கடவுள்களை வணங்குகிற வழக்கம்  இருப்பதையும் கவனித்தான்.


 அவனது வீட்டிலோ அவனுக்கு   அம்மாச்சியிடமும் அப்பத்தாவிடமும் மிகவும் செல்லம் ( வீட்டில் மூன்று சின்னம்மாக்கள், இவன் ஒருவனே சிறுவன் என்பதால்) , அவர்கள் அவனது பிடிவாதத்தை ரசித்து செல்லம் கொடுத்துக்   கொண்டு இருந்த காலம். 


இங்கே தமிழ் ஐயா அவரது  அம்மா சமைப்பதற்கு வேண்டிய காய்கறிகளை வாங்கி வந்து நறுக்கிக்  கொடுப்பதும் , அவரது தம்பி, ஊரணிக்குத் தண்ணீர்க் குடங்களைத்  தூக்கிச் சென்று, இடுப்பிலும் தலையிலும் சுமந்து கொண்டு வருவதும் அவனுக்குப் பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. 


  இப்படி வீடு தவிர கோயில்,  பள்ளிக்கூடம் போன்ற இடங்களிலும்  அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.  பள்ளி நேரம் போக இவர்கள் கோயிலுக்குள் விளையாடச் செல்லும் பொழுதெல்லாம் அவர் கோயிலின் ஒரு பிரகாரத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருப்பார்.  


 பள்ளிக்கூடத்தில் 'உள்ளேன் ஐயா' என்று அவருடைய வகுப்பில் எடுக்கும் வருகைப் பதிவுக்கு  யாராவது தவறி வேறு மொழியில் பேசி விட்டால் அவர்களை உடனே அந்த வகுப்பை விட்டு போகச் சொல்லி விடுவார். 


அதேபோன்றுதான் அங்கே ஆங்கில ஆசிரியராக இருந்த தலைமை ஆசிரியை  ரூபி தாமஸ் அவர்கள்  வகுப்பிலே ஆங்கிலத்தில் மட்டும் தான் பேச வேண்டும். தமிழில் பேசினால் அவரும் வகுப்பை விட்டு வெளியே போகச் சொல்லி விடுவார் . இப்படி பள்ளிக்கூடம், ஆசிரியர்கள் எல்லாமே ஒரு கட்டுப்பாடோடு இருந்த காலம் அது . மாணவர்கள் அதற்கு ஓரளவு பழகிக் கொண்டு இருந்த காலம். 


 அதே நேரத்தில் வெளியே பார்க்கும் பொழுது  தமிழ் ஐயா மிகவும் இயல்பாக  நண்பனைப் போல  பழகக் கூடிய  நல்ல குணம் உள்ளவர் . அவரைப் பற்றி அவனது வீட்டிலும் தெரியும் என்பதால், அவருடைய தம்பியுடன் அவன் நட்புடன் பழகுவதை அவன் தாத்தா மிகவும் வரவேற்றார். அவனைப் பார்த்தாவது இவனுக்குப்  பிடிவாதம் இல்லாத குணம் வராதா  என்ற ஒரு அசட்டு நம்பிக்கை அவருக்கு. ஆனால் அவனும், தமிழய்யா தம்பியும் சேர்ந்து செய்த சேட்டைகள் அவருக்கு தெரிய நீண்ட நாட்கள் ஆகின. 


சென்ற பகுதியில் குறிப்பிட்ட,  டெய்லர் அண்ணனிடம் சேர்ந்து , தேன் எடுத்தது , புறாக்கறி சாப்பிட்டது, ஆட்டுப்பால் குடித்தது எல்லாம் இந்த நண்பனுடன் , தமிழ் ஐயா தம்பியுடன் சேர்ந்து ஆடிய ஆட்டம் தான். ஒருமுறை , வீட்டுக்குச் சொல்லாமல், காலையில் இருவரும் சைக்கிளில் குறுக்கு மண் பாதையில் சேதுக்கரை சென்று கடலில் குளித்து விட்டு ஆட்டம் போட்டு விட்டு , மாலை வீடு திரும்ப ,சைக்கிள்  வருகின்ற கிழக்குத் தெரு கண்மாய்ப் பக்கம் நின்று பார்த்த தாத்தாவிடம் கிடைத்த திட்டுகள் அதிகம். நண்பனுக்கும் அவன் அண்ணன் தமிழ் ஐயாவிடம் கிடைத்தன  திட்டுகள். இருவரும் சில நாட்கள் பேசிக்கொள்ளக் கூடாது என்று அவர்கள் போட்ட தண்டனையும் சில காலம் கொடுமையாகக் கழிந்தது அவர்களுக்கு . அது அவர்களுக்கு  ஒரு பாடம். 


அதே சமயம், அவன் ,வகுப்பில் தமிழ் மனப்பாடப் பகுதி பாடலை ,  சொல்லுகின்ற  உச்சரிப்பு,  அவன் தமிழ்க்  கவிதைகளை  நூலகத்தில் படிக்கும் விபரம் அனைத்தும் கவனித்த அவர் அவனது  தமிழ் ஆர்வத்தைப் பாராட்டி , அவனைக் கவிதை எழுதச் சொல்லி ஊக்குவிக்க, அவன் எழுதிய முதல் கவிதை ' சூரிய உதயம் '  அப்படியே அவனது பழைய  கவிதை ஏட்டில்  இன்னும் இருக்கிறது  . 

அந்தக் கவிதையைத் திருத்தி பள்ளி ஆண்டு மலரில் வெளியிடச் செய்தார். அவனை, பள்ளியின் பேச்சுப்போட்டி,  கட்டுரைப் போட்டி, பாட்டு, நாடகம்  அனைத்திலும் பங்கு பெற வைத்து அவன் வகுப்பில் முதல் மாணவன் போல், அவற்றிலும்  பரிசு பெறுவதைப் பார்த்து மகிழ்ந்தார். 

அப்பொழுது ஆனந்த விகடனில் நடத்திய ' அம்புலிப் பயணம்' கவிதைப் போட்டியில்  அவனைக் கலந்து கொள்ளச் செய்ய வைத்து  அதில் அவனுக்கு ஆறுதல் பரிசு கிடைத்து அவன் வீட்டுக்கு இரண்டு மாதங்கள் வாராவாரம் ' ஆனந்தவிகடன் ' பத்திரிகை வந்ததைக் கண்டு வீட்டோரை விட அதிகம் மகிழ்ந்தவர் அவர்தான். 

கால ஓட்டத்தில் பல மாற்றங்கள். அவருக்குத் திருமணம் ஆனது. அவனும் மேல் படிப்புக்கு வேறு ஊர் சென்று விட்டு, விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம், அவர் வீட்டுக்குச் சென்று அந்தத் தம்பதிகளை வணங்கி வாழ்த்து பெற்றுக் கொண்டு இருந்தான். தமிழ் ஐயா தாயார் தவறி விட்டார். தம்பி வேறு ஊரில் காவல் துறையில் சேர , சிறிது நாட்களில் தொடர்புகள் அறுந்து போயின . 


ஆனால் , அவன் நினைவில் , அவனைப் பல கலைகளில் ஆர்வம் வரச் செய்த அவர், என்றும்  ஒரு ஆசிரியராய், தமிழ் ஐயாவாய்   நினைவில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.   அவனது முதல் கவிதை  ' சூரிய உதயம் ' கவிதையைப் பார்க்கும் போதெல்லாம், அவர் நினைவு  சூரிய தீபமாக ஒளிர்ந்து கொண்டே  கொண்டே இருக்கிறது. பள்ளிப் பருவத்தின் நினைவுகளில்  பூவின் மணத்தோடும்  , இனிப்பின் சுவையோடும்,  ஒளிரும்   தீப ஒளியாக , மேலே உள்ள சித்திர விளக்காக .  அது 'அணையாத தமிழய்யா   தீபம்'. 


--------------நாகேந்திர   பாரதி   

My Poems/Stories/Articles in Tamil and English   


சனி, 16 மே, 2026

'வசந்தாகோவிந்தராஜன்' சிறுகதை மதிப்புரை- கதை புதிது நிகழ்வு

'வசந்தாகோவிந்தராஜன்' சிறுகதை மதிப்புரை- கதை புதிது நிகழ்வு

-----------------

நன்றி அழகிய சிங்கர், வணக்கம்  நண்பர்களே

 நாட்டு நடப்பை அப்படியே துல்லியமாகச்  சொல்லக்கூடிய  அருமையான ஒரு சிறுகதை வசந்தாகோவிந்தராஜன் அவர்கள் எழுதியுள்ள  '  நாடக மேடை'


' உலகமே ஒரு நாடக மேடை அதில்  நாமெல்லாம் நடிகர்கள் ' என்ற ஷேக்ஸ்பியரின் வாக்கியத்தின்   ஒரு காட்சி  கதையாக இங்கே அரங்கேறியிருக்கிறது வசந்தா கோவிந்தராஜன் அவர்களின் எழுத்தில். 


முதலில் கதைச் சுருக்கம் .


 கஷ்டப்பட்டு தனது மகனைப் படிக்க வைத்த பெற்றோர் ,அவன் விரும்பிய பெண்ணையே அவனுக்கு மணம் முடித்து வைக்க  அவன் மாமனார் வீட்டோடு  சென்றுவிட்டு, அங்கிருக்கும் அவுட்ஹவுஸில் வந்து  பெற்றோர்களை இருக்கச்  சொல்ல, இவர்கள் மறுத்துவிட்டு தங்கள் வீட்டிலேயே இருக்க ,  அப்பா சாதாரண வேலையில் இருப்பதால் அவரை அப்பா என்று சொல்லவே அவன் கூச்சப் பட்டு,  அதற்குப் பிறகு அவர்களை அவன் வந்து  பார்க்கவே வராமல் இருக்க , அந்த முதியவரின் மனைவியும் இறந்து போக, அவர் அவனுக்குச் சொல்லாமல் ,  அவராலும் வேலை பார்க்க முடியாத முதுமை நிலையில்  அவர் ஒரு முதியோர் அனாதை இல்லத்தில் வந்து சேர  அங்கு இருக்கும் ஒரு அநாதை முதிவரிடம்   பேசுகின்ற உரையாடலில்,  ஆரம்பிக்கிறது கதை. 


அவர் நண்பர் இவரை  அழைக்கிறார். 'இன்று ஒரு பெரிய மனுஷர் குடும்பத்தோடு வந்து  நமக்கெல்லாம் புத்தாடை , புது உணவு வழங்க வருகிறார்.  வழக்கம்போல் நீங்கள் நல்ல ஆடை  உடுத்திக் கொண்டு தயாராகுங்கள்' என்று சொல்ல,  அதற்கு அவர் பதில்.  'இது  ஒரு நாடகம்  நம்மை குழந்தைகள் கவனிக்கவில்லை என்பதால் வெறுத்துப் போய் வருகின்ற நமக்கு இதுபோன்று  சிலர் வந்து அந்த நேரத்தில் நமக்கு பிச்சை போடுவது போல் போடுகிறார்கள் ' என்று வெறுப்பாகப் பேச , நண்பர்  , ' இது ஒரு நாடகம் தான் . அதுவரை நம்மை சுமாராகவே கவனித்துக் கொண்ட  இல்ல நிர்வாகிகள் அன்று மட்டும் நம்மை மிகவும் அருமையாக கவனித்துக் கொள்வதாக நாடகம் ஆடி  அவர்களிடமிருந்து கிடைக்கும் பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள். நாமும் அதன் மூலம் நமக்கு ஏதாவது கொஞ்சம் நல்லது செய்ய மாட்டார்களா என்று  இந்த நாடகத்தில் பங்கேற்கிறோம்.    இந்த நடவடிக்கைகள்   பிடிக்கவில்லை என்றாலும்  பரவாயில்லை, வாங்க  'என்று  சொல்ல இவரும்   ஒரு நல்ல வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு தயாராகிறார்.


அப்பொழுது   அங்கே வருகிற  காரில் வந்து இறங்குகின்ற அந்த பெரிய மனிதர் குடும்பத்தைப்      பார்த்தவுடன் இவருக்குச்  சங்கடமாகி  விடுகிறது  .  வந்திருந்தவர்கள்  இவருடைய மகன் அவனுடைய  மனைவி மாமனார் மாமியார் பேரன்  . மனம் தளர்ந்து போய் இவர் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பாமல்  தோட்டத்துப் பக்கம் சென்று விடுகிறார்.


 இவர் நண்பர் மட்டும்  சென்று கலந்து கொள்கிறார்.  அங்கே நல்ல உணவு நல்ல ஆடைகள் எல்லாம்  அந்தக் குழந்தை  மூலமாகக் கொடுக்க வைத்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த இல்ல நிர்வாகிகளும் வாயெல்லாம் பல்லாக அவர்கள் கொடுக்கும் செக்கை வாங்கிக் கொள்ள  புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.  இவருக்கு இவருடைய நண்பர் வராததால் அந்த இல்ல நிர்வாகியிடம் பயந்து கொண்டே சொல்கிறார். . 'அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அவருக்கும் சேர்த்து வாங்கிக்    கொள்ளலாமா ' என்று கேட்கிறார்.


 அந்த நிர்வாகியும் நல்ல மூடில் இருந்ததால்  'சரி' என்று சொல்ல மற்றுமொரு சாப்பாடு பாக்கெட் மற்றொரு உடை பாக்கெட்டையும் வாங்கிக் கொண்டு  சென்று அவருடைய நண்பரிடம் போய்க்   கொடுக்கிறார்.  


 நண்பர்  கண்களில் கண்ணீர். 'ஏன்' என்று கேட்கும் பொழுதுதான்  அவர் தனது பழைய கதையை நண்பரிடம்   சொல்கிறார். 'வந்திருந்தது  அவர்  மகனும் அவனது மனைவியும் தான்' என்று சொல்லிவிட்டு அவனிடமே வந்து பிச்சை எடுப்பது போல் வாங்குவதற்கு பிடிக்க வில்லை ' என்று சொல்லி விட்டு , 'பேரன் எப்படி இருக்கிறான்' என்று பாசத்தோடு கேட்கிறார். இந்த இடத்தில அந்த முதியவரின் பேரன் பாசம் உருக வைக்கிறது . 


அதைக் கேட்ட நண்பரின் மனம் வருத்தப்பட்டு , 'தூக்கி எறியலாம்' என்று நினைத்த அந்த உணவு உடை பாக்கெட்டுகளை, மறுபடி யோசித்து   'யாருக்காவது உபயோகப்படும் என்று வாட்ச்மேனுக்கு கொடுக்கலாம் 'என்று நினைத்து அன்று அவரோடு இவரும்  சேர்ந்து உபவாசம் இருக்கிறார் . இதுபோன்று இந்த வாழ்க்கை  நாடக மேடையின் ஒரு காட்சி   இந்தக் கதையில் அரங்கேறி முடிகிறது .



'வாழ்க்கை ஒரு நாடக மேடை' என்பதை மிக மிக அழகாக இந்த கதையிலே ஆரம்பத்திலிருந்து அந்த உரையாடல்களின் மூலம்   நம்மை அழைத்துச் செல்வது போலவும் அந்த முதியவரின் மன உணர்வுகளை நாம் புரிந்துகொள்ளும்படியும்,  இந்தக் கதை,  அமைந்திருக்கிறது 


முதலில் அந்த முதியவர் அந்த இல்லத்தில்  நடக்கும் நிகழ்வுகளைப்   பற்றி சொல்லுவதை ஆசிரியரின் வார்த்தைகளிலேயே பார்க்கலாம். 


நண்பரை ஏற இறங்க ஒரு முறை பார்வை பார்த்த சங்கரன் “எனக்கு இந்த நாடகம் சுத்தமாப் பிடிக்கலை. அவங்கவங்க பிறந்த நாளோ, திருமண நாளோ கொண்டாடறதுக்கு இங்க வரதும், இவங்க அன்னிக்கு மட்டும் நம்மை நல்லா கவனிச்சுக்கற மாதிரி ஷோ பண்றதும் அவங்க நமக்குப் பிச்சை போடற மாதிரி ஏதாவது  கொடுத்து ஃபோட்டோ எடுக்கறதும் என் மனசுக்கு ஒப்பவேயில்லை. நம்மில் நிறையப் பேர் நம்ம  புள்ளைங்க அவமானப் படுத்தறது தாங்காமத் தான் இங்க வந்து உட்கார்ந்திருக்கோம்.  இங்கயும் போறவங்க வரவங்க எல்லாம் நம்மை  அவமானப் படுத்தறாங்க. வாழ்க்கையே கசப்பாய் இருக்கு கோவிந்தன் சார் “என்றார்.  

“உலகமே ஒரு நாடக மேடை”ன்னு கேள்விப் பட்டிருக்கீங்க தானே! இப்போது நமக்குக் கொடுத்திருக்கும் பாத்திரம் ‘அனாதைக் கிழவன்’. இவங்க நல்லா வைச்சுக்கற மாதிரி நாம நடிச்சா இவங்களுக்கு ஒரு நல்ல தொகை டொனேஷன் வரும்.  எப்படியும் அதில் கொஞ்சமாவது நமக்குச் செலவழிக்க மாட்டாங்களா என்ற நப்பாசை தான். என்ன செய்ய, நேரம் ஆகுது சீக்கிரம் ரெடி ஆகுங்க” என்று சொல்லி விட்டுப் போனார்.

வேறு வழியில்லாமல் சங்கரனும் தன்னிடம் இருப்பதில் பளிச்சென்று இருக்கும் வேட்டி, சட்டையுடன் தயாரானார். 


இதே போன்று கடைசியில் அந்த முதியவர்   பேசும் வார்த்தைகள் ஆசிரியரின் எழுத்தில் , இப்படி. 



'உழைக்க உடம்பில் தெம்பில்லாமல் போனதால் இங்கே வந்து சேர்ந்து விட்டேன்.  தெரியாதவங்க எத்தனையோ பேர் கொடுத்த போது வாங்கியிருக்கேன்.  இப்ப என் மகனே அவன் புகுந்த வீட்டாருடன்  வந்து கொடுக்கும் போது நான் தவித்துப்  போயிட்டேன். நான் இங்க இருக்கறது தெரிஞ்சா அவன் அவமானப் படுவான். அப்புறம் இங்க என்னை இருக்க விடுவாங்களோ என்னவோ. தெரியாதவர்களிடம் பிச்சை வாங்கலாம். சொந்த மகனிடமே வாங்கலாமா?” என்று கண் கலங்கினார். உடனே சமாளித்துக் கொண்டு “ஆமாம், என் பேரன் எப்படி இருக்கான்?” என்று ஆர்வமாய்க் கேட்டார்.


கோவிந்தனுக்கு ‘இப்படியும் மனிதர்களா? பெற்றவர்கள் எங்க இருக்காங்க, எப்படி இருக்காங்கன்னு அக்கறையில்லை. ஆனால் தங்கள் சுய  விளம்பரத்துக்காக முதியோர் இல்லத்துக்கு வந்து ஆதாயம் தேடறாங்க. எனக்காவது வாரிசு இல்லை, குடும்பம் இல்லை. இவருக்கு இப்படி ஒரு குடும்பம்,  இதை விட என் நிலையே பரவாயில்லை. அந்தப் பைகளை அப்படியே குப்பையில் வீச வேண்டும் போல் ஆத்திரம் எழுந்தது. வாட்ச்மேனுக்காவது கொடுக்கலாம் என்று பத்திரப்படுத்திக் கொண்டார். “இன்று நானும் உங்களுடன் சேர்ந்து உபவாசம் இருக்கேன்” என்று  நண்பரின் முதுகை ஆதரவாகத் தடவினார். 


இப்படி தனது எழுத்தின் மூலம் மனித மன உணர்வுகளை அப்படியே கொண்டு வரும் திறமை இருக்கிறது ஆசிரியரிடம். 


 ஒரு சமுதாய பிரச்னையை  எடுத்துக் கொண்டு  அதை ஆடம்பரமற்ற சொற்களால் அப்படி அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து  நம் உணர்வுகளைக்    கிளறி விடுகின்ற மிக அருமையான எழுத்து. 


 நாமும் எத்தனையோ முதியோர் இல்லங்கள் சென்றிருக்கிறோம் அங்கு நடக்கக்கூடிய நிகழ்வுகள் எல்லாம் பார்த்திருக்கின்றோம் .சில இல்லங்களில் முதியவர்கள் பரிதாபமாகத்  திரிவதும்,  அந்த இல்ல நிர்வாகிகள் சிரித்துக் கொண்டும் மிகவும் சந்தோஷமாக வருகிறவர்களை வரவேற்றுக்  கொண்டும் இருப்பதும் அந்த முதியவர்கள் அந்த இல்ல நிர்வாகிகளிடம் பழகும் விதத்தில் ,  அவர்கள் முகத்தில்  சுரத்தே இல்லாமல் இருப்பதையும்  நாம் பார்த்த போதெல்லாம் நமக்குள் ஒரு சந்தேகம் வந்து  கொண்டுதான் இருந்தது.  


இந்த  முதியோர் இல்லங்கள் எல்லாம் உண்மையிலேயே ஒரு சமுதாய சேவை மனப்பான்மையுடன் ஏற்படுத்தப்பட்டனவா அல்லது ஏதோ   சில அமைப்புகளுக்கு  சமுதாயத்தில்  ஒரு அந்தஸ்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும் , வருமான வரியில் இருந்து தப்பித்துக்  கொள்வதற்கும்  ஏற்படுத்திக் கொள்ளப்பட்டனவா என்று  ஐயம் எழுந்தாலும் அங்கு இருக்கும் அனாதை முதியவர்களை பார்க்க 'எப்படியோ இவர்களுக்கு அன்றாட சாப்பாடு கிடைக்கிறது ,அவர்கள்  முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்றாலும் இவர்களுக்கு  சாப்பாடு என்ற ஒன்றும் மருத்துவமும்  கிடைக்கிறது அல்லவா, அந்த  விஷயத்துக்காக குற்றம் சொல்லாமல் விட்டு விடலாம்' என்ற  எண்ணம் தான் ஏற்பட்டது .


இவற்றிற்கு நடுவிலே முதியவர்கள் மகிழ்ச்சியோடு வலம் வருகின்ற சில இல்லங்களையும் பார்த்திருக்கிறோம்.  


அதே போன்று பெற்றோர்களை ஒதுக்கி வைத்த பிள்ளைகளையும் பார்த்திருக்கிறோம். 

மற்றொரு பக்கம் , தங்கள் உடல்நிலை காரணமாக தங்களால் கூடவே இருந்து பராமரிக்க முடியாமல் பெற்றோருக்கு கடைசி காலத்தில், உரிய பராமரிப்பு கிடைக்கும் இல்லங்களைத் தேர்ந்தெடுத்துச் சேர்த்து, மருத்துவ உதவியோடு அவர்கள் கடைசி காலத்தில் இருக்க வழி செய்து  , தொடர்ந்து தொடர்பில் இருக்கும் பிள்ளைகளையும் பார்த்திருக்கிறோம். 


எனவே  இது போன்ற முதியோர் இல்லங்கள் ,பராமரிப்பு இல்லங்கள் செய்யக்கூடிய சேவை சமுதாயத்திற்கு முக்கியமான சேவைதான் .


ஆனால் அதே நேரத்தில் இன்று பெற்றோர்களை ஒதுக்கிவிட்டு ஆடம்பரமாக செலவு செய்து கொண்டு திரியும் சிலரைப் பார்க்கும்போது  நமக்குக்  கோபம் வரத்தான்  செய்கிறது..

அதே  நேரத்தில் சரியான அமைப்புகளை   நாடி  பெற்றோரை  நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற  ஒரு நோக்கத்தில்  சேர்க்கின்ற பிள்ளைகளின்  நோக்கங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது . 


 எப்படி  நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள்  இருக்கின்றனவோ 

அது போல்  பிள்ளைகளின் நோக்கங்களிலும்   இரண்டு பக்கங்கள் இருக்கின்றன .கொண்டு சென்று விடப்படுகின்ற பெற்றோர்களிடமும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன . அந்த இரண்டையுமே நாம்  புரிந்து  கொண்டால் இரண்டு பக்கங்களின் நியாயங்களும், அநியாயங்களும்  புரியும். 


இந்த வாழ்க்கை நாடக மேடையில்  நடக்கும் இந்தக் காட்சிகளை பற்றி  இப்படிப்பட்ட ஒரு சிந்தனையை எழுப்பக் கூடிய ஒரு அருமையான  கதையை  எழுதியுள்ள ஆசிரியர் வசந்தா கோவிந்தராஜன் அவர்கட்கு  வாழ்த்துகள்.  இதைப் படித்து மதிப்புரை செய்ய  வாய்ப்பளித்த அழகிய சிங்கருக்கும், கேட்ட அனைவர்க்கும் நன்றிகள்


-------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English 


வியாழன், 7 மே, 2026

சேர்மன் தாத்தா - உத்திரகோசமங்கை உறவுகள் - 7

 


சேர்மன் தாத்தா - உத்திரகோசமங்கை உறவுகள் -  7  

---------------

அவ்வப்போது வரும் அனுபவத் தொடர்

படம் வரைந்து உதவியவர் - நன்றி உஷா பாரதி  மேடம்

---------------


 இன்று போல்  அப்பொழுதும்  இளைஞர் எழுச்சி வந்து அமைதிப் புரட்சி நடந்த காலம். ஆட்சி மாறிய காலம். மாணவர்கள் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலம். அது இரண்டாவது அல்லது மூன்றாவது போராட்டக் காலம்.  


அப்போது  அவனது பள்ளிக்கூடத்திலும் இந்தி கட்டாயப் பாடமாக இருந்தது. அதை எதிர்த்து மாணவர்கள் அப்பொழுது கூட்டமாக தெருக்களில் 'தமிழ் வாழ்க ஹிந்தி ஒழிக' என்று கோஷமிட்டுக் கொண்டு செல்வது வழக்கம். 


அந்த ஊரிலும், பக்கத்து ஊர்களிலும்ஊர்ப்  பெரிய மனிதர்கள்  பலர் இதற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் அவனது அந்த ஊரின் சேர்மன் தாத்தா அவர்கள். வயதில் மூத்தவர்களை தாத்தா பட்டம் போட்டு அழைக்கும் பழக்கம் அவனுக்கு இருந்தது .  அவனது சொந்த தாத்தாவும் அந்த பஞ்சாயத்து போர்டு மெம்பர். 'சேர்மன்  தாத்தா' அவனது  சொந்த தாத்தாவை 'அண்ணே' என்றுதான்  அழைப்பார்.  இருவரும் பஞ்சாயத்து போர்டு ஆபீஸில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பது எல்லாம்  பார்த்திருக்கிறான் .


அவ்வப்பொழுது பஞ்சாயத்து போர்டு மெம்பர்கள் எல்லாம் சேர்ந்து பக்கத்து  இடங்களுக்கெல்லாம் டூர் சென்று வருவார்கள் .வருடா வருடம் நடக்கும் கச்சத்தீவு  திருவிழாவிற்கு அவர்கள் எல்லாம் சேர்ந்து சென்று வருவார்கள்.  ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் கச்சத்தீவு சென்று வந்துவிட்டு மறுநாள்  வீடுகளுக்கு, கொழும்பு தேங்காய் எண்ணெய் ,கொழும்பு  சோப்பு என்று பல வகைகள்  வந்து சேரும் .


அந்த சேர்மன் தாத்தாவின் தம்பி ஒருவர், நீளமான  துப்பாக்கியோடு  பக்கத்து காடுகளுக்கு எல்லாம் சென்று பல பறவைகளைச்  சுட்டு பிடித்து வந்து  தெரிந்தவர்களுக்கு கொடுப்பார். அவர்கள்  வீட்டுக்கும் பெரிய நாரை , கூழைக்கடா  போன்ற பறவைகள் வரும்.  சமைத்துச்  சாப்பிட்டது அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. அப்படி குடும்ப நண்பராக அவன் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்தவர் அந்த சேர்மன் தாத்தா.


 போன வாரம் பதிவில் குறிப்பிட்டது போல்   பக்கத்து ஊரில்  நடக்கும் அத்தனை விஷயங்களும் அவருக்கு உடனுக்குடன்  தெரியவரும் .அப்படித்தான் மாணவர்கள்  கபடி விளையாட்டில் ஊர்களுக்கு இடையே சண்டை வரக்கூடாது என்று தடை  போட்டார். தெருக்களுக்கு இடையே எந்த உரசல்  இருந்தாலும் இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி ஊரை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர். .  நல்ல உயரம் ஆஜானு பாகுவான தோற்றம். அவரைப்  பார்த்த உடனே மற்றவர்கள்  உடனே எழுந்து நிற்கக் கூடிய அளவுக்கு   மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய நபராக அந்த  ஊரில் இருந்தார் . 


அந்த ஊரில் ,தெருக்களில் என்ன பிரச்சனைகள் என்றாலும் பிரச்சனை செய்பவர்களை அழைத்து அவர்களுடன் பேசி தீர்த்து வைப்பார்.  பக்கத்து கிராமங்களுடனும்  நல்ல நட்புறவை வைத்திருப்பவர்.  போட்டி இல்லாமல் ஒவ்வொரு வருடமும் பஞ்சாயத்து  போர்ட் சேர்மன்  அவர்தான். ஊர்த்

 திருவிழாக்களுக்கு வசூல் செய்து சிறப்பாக நடத்துவது. சுகாதார பிரச்சனை, கண்மாய், ஊரணி மேற்பார்வை என்று ஊரைக் கட்டுப்பாடாக வைத்திருந்தவர். 


    அவரது வீட்டுக்குப் பக்கத்தில் அவர் ஒரு படிப்பகம் நடத்தி  வந்தார். 

அதில் தினத்தந்தி உட்பட பல இயக்கங்களின்   பத்திரிகைகள் ,வாரப் பத்திரிகைகள், தினசரி வரும்.  அருமையான தமிழ் வாக்கியங்கள் கலந்த பல கட்டுரைகள் .அவற்றை எல்லாம் படித்து தமிழ் ஆர்வம் அதிகமாகி , தமிழ்க் கவிதைகள் எல்லாம் அவன் எழுதத் தொடங்கியிருந்த காலமும் அது . மொழி உணர்வு மாணவர்களிடம் பரவலாக இருந்த நேரம். அவர்கள் பள்ளியில் அப்பொழுது ஹிந்தி வகுப்புகள் எல்லாம் உண்டு. கட்டாயப் பாடம். நமது பாக்யராஜ் அவர்களின் படம் 'இன்று போய் நாளை வா வா' திரைப்படத்தில், ஹிந்தி ஆசிரியர் ஒருவர் 'ரெஹ் தாத்தா'  'ரகு தாத்தா'  என்று சொல்லிக் கொடுத்தது போல் அவர்கள்   பள்ளியிலும் ஹிந்தி பண்டிட் ஒருவர் இருந்தார்.  அப்பொழுது  இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது தேர்தலிலே. 


அந்த நேரத்தில் ஊரில் நடந்த   ஹிந்தி போராட்டத்திலும் அந்த ஊரில் அவன் நண்பர்களோடு சேர்ந்து கலந்து கொண்டு தெருக்களில் ஊர்வலம்  செல்வது உண்டு. ' ஹிந்தி  ஒழிக ' தமிழ் வாழ்க '  என்று கோஷம் இட்டுக்கொண்டு. அவற்றையெல்லாம்  சேர்மன்  தாத்தா ரசித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால் அவருக்கும் ஒருமுறை கோபம் வரக்கூடிய காரியத்தை அவர்கள்  செய்து விட்டார்கள் . 


ஊரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் .  'உத்தரகோசமங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு' சென்று அங்கே ஸ்டேஷனில் இருக்கும் 'ஹிந்தி பெயரை அழிப்பது'  'தார் கொண்டு அழிப்பது 'என்று ஒரு பத்து மாணவர்கள் ஒருநாள் மதியம் கிளம்பினர்.  இவனும் இவனோட நண்பர்களும் மண்   ரோட்டில் நடந்து உத்தரகோசமங்கை ரயில்வே ஸ்டேஷன்  சென்று கொண்டிருந்தார்கள் .


யாருமே இல்லாத அந்த ரோட்டில் , 'தமிழ்  வாழ்க , ஹிந்தி ஒழிக ' என்று கோஷம் போட்டுக் கொண்டு சென்றார்கள். நடந்து போன பலர் வேடிக்கை  பார்த்து சிரித்துக் கொண்டு போனார்கள். அவர்கள் ஊரில் போய் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு அப்போது தெரியாது .   அவனது ஊரிலே அப்பொழுதுதான் தார் ரோடு போடுவதற்காக மண் ரோட்டின் ஓரங்களில் அங்கங்கே   சாரைக் கற்கள் குவித்தும் தார் டப்பாக்கள்   அடுக்கியும் வைத்திருப்பார்கள் .


அவற்றில் சில  தார்  டப்பாக்களை  எடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.  அவன்  ஊருக்கு அப்பொழுது காலை எட்டரை மணிக்கு ஒரு பஸ் நாலரை  மணிக்கு ஒரு பஸ் 'சொர்ணாம்பிகை' என்று பெயர்' ராம்நாட்டில் இருந்து வந்து போகும்.   மற்ற நேரங்களில் போக்குவரத்து இருக்காது .இவர்கள் சென்றது நடுப்பகல் நேரம்.


 அவர்கள் உற்சாகமாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஒரு வேன் அவர்களைத்  தாண்டிச்  சென்று  சிறிது தூரத்தில்  நின்றது .   அந்த சாரைக்  கற்கள் குவியலுக்கு அருகே. அதிலிருந்து இறங்கிய பெரியவர்கள் சிலர்   அந்தச்  சாரைக் கற்களை எடுத்து அவர்கள் மேல் எறிய ஆரம்பித்தார்கள்.  அந்தக் கல்லெறி பொறுக்க முடியாமல் அவன் உட்பட அனைவரும்   பிரிந்து பின்வாங்கி  ஓடினர்  .அங்கங்கே இருக்கும் வயக்  காட்டுக்குள் இறங்கி அவரவர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் . அப்படி  அவர்களை  விரட்டி அடித்தவர்கள் சேர்மன் தாத்தாவும் அவரது  பஞ்சாயத்து போர்டு நண்பர்களும் தான். 


மாணவர்கள்    ஊருக்குள் ஊர்வலம் போகும்போது  எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை.  ஆனால் மற்றொரு இடத்திற்குச்  சென்று ரயில்வே ஸ்டேஷனுக்குச்  சென்று செய்கின்ற வேலை  அவர்களுக்குப்  பிடிக்காததால் அந்த மாதிரி ஒரு நிகழ்வு நடத்தினார்கள்.  வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள் நுழைந்ததும்  சொந்தத்     தாத்தாவிடம் அவனுக்குச்  சரியான திட்டு . அன்று  முழுக்க வெளியே போகவில்லை


மறுநாள்  காலையில் குற்றாலத் துண்டைத்  தோளில் போட்டுக் கொண்டு  கண்மாய்க்கு நடந்து போகும்போது போகிற வழியில் சேர்மன் தாத்தா ஒரு டீக்கடையில் அமர்ந்து  டீ குடித்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.   அவனைப்  பார்த்ததும் 'என்ன பேராண்டி ஹிந்தியை  அழிக்கப் போறீங்களா போலீஸ் வந்து புடிச்சிட்டு போச்சுன்னா உங்க  குடும்பம் என்ன ஆகும்.   உங்களைப்  படிக்க வைக்கணும்னு நினைக்கிறவங்க , உங்க தாத்தாவுக்கு எல்லாம் எவ்வளவு  வருத்தமா இருக்கும் . உங்க வாழ்க்கையே     போயிரும் , புரியுதா, அதான் ,   அங்க வந்து அப்படி எல்லாம் பண்ணோம் ' என்று அன்போடும் அதட்டலோடும்  அவர் சொன்னது  அவனுக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது.


' சரி தாத்தா' என்று சொல்லிவிட்டு  அவன்  நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்றான்.  அதற்குப் பிறகு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவன் கலந்து கொள்ளவில்லை . தேர்தலுக்குப் பிறகு, ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு , ஹிந்தியும்,  விருப்பப்பாடம் ஆகிவிட்டது. அவன் ஹிந்தியை படிக்கவில்லை.


 ஆனால் பின்னால் வங்கியில்  சேர்ந்த பிறகு இன்சென்டிவ் கிடைக்குமென்று  ஹிந்தி ப்ராத்மிக்    படித்ததும் ஜோத்பூரில் சென்று இந்தி படங்கள் பார்த்ததும்   ,ஹிந்தி நண்பர்களுடன் சேர்ந்து  இந்தி பாட்டுக்கள் பாட ஆரம்பித்ததும் பிறகு இசை புதிது குழுவில் இந்தி பாட்டு ஸ்ம்யூலில்  பாடிக்கொண்டு இருப்பதும்  அவன்தான். 


 அன்று தனது படிப்பகம் மூலம்  ஹிந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டிவிட்ட வரும் அந்த சேர்மன் தாத்தா தான். அதே நேரத்தில் 'அவர்கள் படிப்பை விட்டு விடக்கூடாது ,  வன்முறை நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது 'என்று மாணவர்களை  வழிநடத்தி சென்றதும் அந்த சேர்மன் தாத்தா தான் .


 இதுபோன்று   அப்பொழுதெல்லாம் அங்கிருக்கும் பக்கத்து கிராமங்களில் எல்லாம் கூட  அந்தந்த  ஊருக்கு பெரிய மனிதர்கள் பலர் இருந்தார்கள்  . ஊரில்  கட்டுப்பாடுகள் விதித்து சண்டைகள் வராமல் காத்து வந்த சேர்மன் தாத்தா போன்றவர்கள் அந்த ஊரின் அரசர்கள். காவல் தெய்வங்கள்.  அவர்களில் மறக்க முடியாதவர் சேர்மன் தாத்தா அவர்கள்


பின்னால்  ஒருமுறை உத்திரகோசமங்கை  சென்ற பொழுது சேர்மன் தாத்தா வீட்டுப்பக்கம் அவனும் அவன் மனைவியுமாக சென்ற பொழுது அவர் வீடு பூட்டி இருந்தது .பெரிய வீடு, கம்பிகேட்  போட்ட வீடு, பழமை மாறாமல் அப்படியே இருந்தது . அவரது மகள் அவனுடன்  படித்தவர் . அவர் பெயரைக் குறிப்பிட்டு 'எங்கே' என்று கேட்ட பொழுது  'பக்கத்துத்  தெருவில் மகள் வீட்டில் பேத்தியைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்'  என்ற பதில் கிடைத்தது .'போய்ப்  பார்க்கலாம் 'என்று அவன் மனைவி சொன்னதற்கு அவன்  'வேண்டாம்' என்று சொல்லிவிட்டு  திரும்பி வந்து விட்டார்கள்   .


---------------நாகேந்திர பாரதி 

My Poems/Stories/Articles in Tamil and English  


வெள்ளி, 1 மே, 2026

டெய்லர் அண்ணே -உத்திரகோசமங்கை உறவுகள் - 6



டெய்லர் அண்ணே -உத்திரகோசமங்கை உறவுகள் - 6 

--------

அவ்வப்போது வரும் அனுபவத் தொடர்

(படம் வரைந்து உதவியவர் : நன்றி உஷா பாரதி மேடம் )

-----------------

 மதுரை சித்திரைத் திருவிழா போல் உத்திரகோசமங்கையிலும் சித்திரைத்  திருவிழா அமோகமாக நடந்து , தொடர்ந்து அழகர் திருவிழா போல் அங்கு பெரிய கண்மாய் முக்கில் இருக்கும் கோவிந்தன் கோவிலில் அழகர் திருவிழா நடந்து மறுநாள் ஊருக்கே அன்னதானம் நடைபெறும். அன்று சாப்பிட்ட பூசணிக்காய்ச்  சாம்பாரின்  ருசி  தனி.  வடக்குத்தெரு , தெற்குத்தெரு, கிழக்குத் தெரு , மேலத்தெரு எல்லாம் சேர்ந்து நடத்தும் கோவிந்தன் கோயில் திருவிழாவில் தெற்குத்தெரு மக்களுக்கு விஷேச உரிமை உண்டு. அந்தத் தெற்குத் தெரு மக்கள் தான் உத்தரகோசமங்கை அம்மன் சாமி  வீதிஉலாவுக்கு தண்டு தாங்கி வரும் உரிமை பெற்றவர்கள். அந்தத் தெருவைச் சேர்ந்தவர்தான் 'டெய்லர் அண்ணே'..

 

அவன்  குடும்பத்திற்கு, சட்டை, ஜாக்கெட் தைப்பதற்கு இவரிடம் கொண்டுபோய்த் தான் கொடுப்பார்கள் தாத்தாவும் அப்பாவும். கூடப் போவான் அவன். அவர் கடையின் ஓரத்தில் குவிந்திருக்கும் வண்ண  வண்ணத் துணிகள் கண்கொள்ளாக் காட்சி . ஒரு ஓரத்தில் ஒரு பையன், சட்டைப் பித்தான் ஓட்டைக்கு காஜா போட்டுக் கொண்டு இருப்பான். கிழிக்கப்பட்டு சிறுசிறுதுண்டுகளாக கிடக்கும் வண்ணத் துணிகளை எடுத்து வந்து சேர்த்து வைத்து டிசைன் செய்து பார்க்கும்  பழக்கம் அவனுக்கு    இருந்தது. அவரிடம் அதிகம் பேசியது இல்லை.

 

வயது அவனை   விட கொஞ்சம்  தான் அதிகம்  இருந்தாலும், இளமையிலேயே டெய்லர் தொழில் பழகி  தனிக்கடை வைத்து நடத்தி வந்தார்.   கோயில் தட்ட ஓட்டில் இருந்து ஓடி வந்து அக்கினி  தெப்பக்குளத்தில் குதித்து நீச்சல் அடிப்பதிலும், கபடி விளையாட்டிலும் வல்லவர்.

 

ஒருமுறை அவன்  ஊர் கபடி டீமிற்கு  பக்கத்து ஊர் கபடி டீமோடு போட்டி  விளையாட்டு  ஏற்பாடு செய்திருந்தார் அவர் . அவன்  ஓரளவு கபடி விளையாடினாலும் , அந்த  போட்டியில் ஒரு பார்வையாளராகவே கலந்து கொண்ட ஞாபகம்  .  அவன் ஊர்  டீமில் டெய்லர் அண்ணனும்  , அவனது  பள்ளி நண்பன் ஒருவனும்  பிரமாதமான ஆட்டக்காரர்கள். ஒரு விஷயம்  அப்போது அவர்களுக்குத்  தெரியாது. பக்கத்து ஊர் ஆட்டக்காரர்கள் நன்றாக விளையாடினாலும் வெறி பிடித்தவர்கள். தோற்றால் இந்த ஊர் ஆட்டக்காரர்கள்  மண்டையை உடைப்பதெற்கென்று , பக்கத்துக் கருவக் காட்டில் கம்புகளைப் பதுக்கி வைத்து விட்டு வந்திருந்தார்கள் .

 

ஆட்டம் சூடாக நடந்து டெய்லர் அண்ணன், அவனது பள்ளி நண்பன் திறமையால், உத்தரகோசமங்கை   டீம் ஜெயித்தது. கோபத்துடன் இருந்த அந்த எதிர் டீம் ஆட்களை , தனது சாந்தப் பேச்சால் ஜெயித்து அவர்களைத்  திருப்பி அனுப்பி வைத்த டெய்லர்  திறமை பார்த்து அவனுக்கும் , அவன் பள்ளி  நண்பருக்கும் அந்த அண்ணனிடம் நட்பு இறுகியது .

 

மறு  நாள்   அவங்க  ஊர்  பஞ்சாயத்து போர்டு  சேர்மன் ('சேர்மன் தாத்தா' பின்னால் ' உறவுகள்' பகுதியில் வருவார் )   டெய்லர் அண்ணனின் அப்பாவை அழைத்து , அவனுங்க  சண்டைக்கு  கம்போட  வந்த விபரம் சொல்லி ,  இது பெரிதாகி ஊர்ச்சண்டை  ஆகியிருக்கும் என்று இனிமேல் பக்கத்து ஊரு பசங்களை விளையாட்டுக்கு கூட்டி வர வேண்டாம் என்று தடை விதிக்க, அதன் பின்  கோபுர வாசல் மண்ணு கிரௌண்டில் உள்ளூர் டீம்களோடு தொடர்ந்தனர் . இப்படி கண்மாயில் கபடியில் ஆரம்பித்த நட்பின் தொடர்பில் எத்தனை நினைவுகள்.

 

அந்தக் கபடிப்போட்டிக்குப் பிறகு அவர்களிடம் நெருக்கமான அவர் , அவர்கள்  எங்கே கூப்பிட்டாலும்  எப்போது கூப்பிட்டாலும் வேலையை விட்டு விட்டு வரத்  தொடங்கினார் .

 

வெடி தேங்காய் போடுவதற்கு தேங்காய், கடலை, சர்க்கரை, ஏலக்காய் சுக்கு, தீப்பெட்டி  எல்லாம் அவர் அப்பாவின் பலசரக்கு கடையில் இருந்து  எடுத்து வந்து விடுவார் .அவனும்  பள்ளி நண்பரும் முன் கூட்டியே நாட்டுக் கருவை காட்டுக்குள் போய் சுள்ளி  பொருக்கி கூட்டி சரியான இடம் பார்த்து அமர்ந்திருப்பார்கள் . அவர் வந்ததும் அந்த தேங்காயின் கண்களைத் திறந்து , உள்ளே, பொடியாக்கிய கடலை, சர்க்கரை , ஏலக்காய், சுக்கு எல்லாம் திணித்து , கண்களைக்  கடலைகள் கொண்டு மூடி , சுள்ளிகளில் தீப்பற்ற வைத்து,  அதற்குள் அந்த தேங்காயை வைத்து விட்டு தள்ளி வந்து விடுவார்கள் . சிறிது நேரம் கழித்து தேங்காய் ஓடு லேசாக வெடிக்கும் சப்தம் கேட்டதும்  குச்சி வைத்து அந்தத் தேங்காயை வெளியே தள்ளி விட்டு  பக்கத்து கண்மாய்த் தண்ணீர் ஊற்றி  சிறிது நேரம் கழித்து, பாதி உடைந்த ஓட்டைப் பிரித்து விட்டு அந்த  தேங்காயைப் பங்கு போட்டுத் தின்பார்கள் . கடலை , சர்க்கரை , ஏலம், சுக்கு கலந்த அந்த தேங்காய்ச் சில்லுகளின் ருசி தனி.

 

அதே போல் அவனது  பள்ளி  நண்பர் தேன் எடுப்பதில் வல்லவர், அவர்கள்  மூவரும் ,  தலை , முகம் மறைக்கும் துணிகளோடு , முகமூடி திருடர்கள் போல் அந்தக் காட்டுக்குள் நுழைந்து தேன்  அடைகளைக் கண்டுபிடித்து, ஒரு குச்சியால், அதன் நடுவில் தொடுவார்  நண்பர். தேனீக்கள் மேலே பறக்கும்  . ஓடிப்போய் தேன் அடை இருக்கும் குச்சியை கையாலோ, கத்தியாலோ ஒடித்து அந்த அடிப்பாக அடைக்கூடை ப் பிய்த்துத்   தூக்கி எறிந்து விட்டு தேன் இருக்கும் குச்சியோடு ஓடி வந்து விடுவார் . சில தேனீக்கள்  பாய்ந்து வந்து கொட்டும். கொஞ்சம் தடிப்பு வரும் . வலிக்கும். அப்புறம் சரியாகி  விடும். சில தேனீக்கள் பாவம் , அந்த அடிப்பாக அடைக்கூட்டில் போய் உட்கார்ந்து கொள்ளும். அவை சேமித்து வைத்திருந்த தேன்  எல்லாம் இவர்கள்  கையில் இருக்கும் குச்சியைச் சுற்றி மொத்தமாக தேனடையாக சொட்டிக் கொண்டு. பிறகென்ன , பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம். ஆம் வீட்டுக்கும் கொண்டு வந்து. . இது போன்று எத்தனை மரங்கள். கருவ மரம், முருங்கை மரம், வேப்ப மரம், ஒவ்வொரு மரத் தேனும் ஒவ்வொரு ருசி.

 

இவை மட்டுமா, அந்த கருவைக்  காட்டுக்குள். அது நாட்டுக்கருவை. இப்போது கிராமம் எல்லாம், பச்சையாக  படர்ந்து அடிநீரை உறிஞ்சிக் கொண்டு விவசாயத்தைப் பாதிக்கும்  காட்டுக் கருவை அல்ல. அது கொஞ்சம் சாம்பல் நிறத்தில் நாட்டுக் கருவை, நீள நீள முட்களோடு, அவற்றை  வைத்து பனை ஓலைக் கீற்றுகள்  இரண்டை குறுக்கு  நெடுக்காய் வைத்து, இந்த நாட்டுக்கருவை முட்களைத் குத்தி , காற்றாடி  செய்து, குச்சியில் மாட்டி ஓடுவார்கள் ,  ' காற்றில் அது சுற்றும் அழகை ரசித்தபடி. அந்த நாட்டுக்கருவைக் காட்டுக்குள் இன்னும் எத்தனை அட்டகாசங்கள் .

 

புறாக்களை பிடித்து புறாக்கறி  சமைத்துச் சாப்பிட்டது, ஆட்டைப் பிடித்து ,  ஆட்டுப்பால் பீய்ச்சிக்  குடித்தது . வேண்டாம்.  விளக்கமாகச்  சொன்னால் நன்றாய் இருக்காது.  இப்படி வயது வித்தியாசம் இல்லாமல் , அவர்களோடு  நண்பராய்த் திரிந்த அந்த  டெய்லர் அண்ணனிடம், இன்று  காலை அவன் போனில் பேசி ' உங்களை பற்றி எழுதப் போகிறேன் ' என்றதும்  மகிழ்வுடன்  பழைய நினைவுகள் இன்னும் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.  பேரன் பேத்தியுடன் நிறைவான வாழ்வு வாழ்ந்து கொண்டு , இப்போதும் அவரோட வயக்காட்டு வேலையை  மேற்பார்வை   பார்ப்பதையும் நல்ல விளைச்சலையும் , கோவிந்தன் கோவிலில் இன்று நடந்த திருவிழா விபரங்களையும் , டைலர் கடை இப்போது மகளின் டீக்கடையாக மாறியிருப்பதையும் சொல்லி மகிழ்ந்தார். அன்று  அவர்கள்  சுதந்திரமாக ஓடி ஆடி விளையாடிய அந்தக் கோயில் இன்று உலகப் புகழ் பெற்று மாறி இருப்பதையும் மகிழ்வோடு குறிப்பிட்டார். நன்றி கதிரேசன் . ஓ. டெய்லர் அண்ணன் பேரைச் சொல்லியாச்சா.

 ----------------நாகேந்திர பாரதி

My Poems/Stories/Articles in Tamil and English   








சனி, 25 ஏப்ரல், 2026

' ரமேஷ் கல்யாண்' சிறுகதை மதிப்புரை- ' கதை புதிது நிகழ்வு

 


' ரமேஷ் கல்யாண்' சிறுகதை  மதிப்புரை- ' கதை புதிது' நிகழ்வு 

-----------------------


நன்றி அழகியசிங்கர், வணக்கம் நண்பர்களே .


151 கதை புதிது நிகழ்வுகளில் , 194 எழுத்தாளர்களின் படைப்புகளை நமது நண்பர்களை மதிப்புரை செய்ய வைத்த நண்பர் அழகியசிங்கரின் மகத்தான சாதனைக்கு தலை வணக்கம். இந்த நிகழ்வுகளில் சில எழுத்தாளர்களின் படைப்புகளை நானும் படித்து மதிப்புரை செய்ய வாய்ப்பளித்தமைக்கு நன்றி. அந்த வரிசையில் இன்று ரமேஷ் கல்யாண் அவர்களின் ' வுல்லன் பூக்கள் '


சோகமான காதல் கதை ஒன்று கவிதையாக இங்கே அரங்கேறி இருக்கிறது என்று தான் ஒரே வரியில் சொல்ல வேண்டும்.


கதையின் மையக் கருத்தும் கடைசியில் இப்படி வெளிப்படுகிறது அவர் எழுத்தில் .'நினைவின் அதிர்வுகளுக்கேற்ப நூலில் பூத்த உல்லன் பூக்கள் அவளுக்கு மிகவும் சந்தோசம் தந்தன. அவை நல்ல விலைக்குப் போனது. அவள் கணவனுக்குச் சந்தோசமாக இருந்தது. அவரவர்கள் சந்தோசம் அவரவர்க்கு '.


இப்படி வருணனைகளும், உவமைகளும் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ள இந்தக் கவிதைக் கதையின் சுருக்கம் இது.


ஓவியத்தால் ஒன்றுபட்ட இளம் உள்ளங்கள் இரண்டு, வாழ்க்கைக் காவியத்தில் இணைய முடியாவிட்டாலும் ,அவன் ரசித்த செம்பருத்திப் பூக்களை உல்லன் நூலால் நெய்யும் ' க்ரோஷாக் கலையில்' அவள் உள்ளம் மகிழ்கிறது. அதை விற்று அவள் கணவன் மகிழ்கிறான். கான்பூர் போய்விட்ட காதலன் நிலையைச் சொல்லாமல் விட்டதில் ஒரு சுகம் போலும் ஆசிரியருக்கு . இருக்கட்டும். இதுதான் கதைச் சுருக்கம் .


இந்தக் கதையில் நான் ரசித்த வருணனைகளையும் , உவமைகளையும் சொன்னாலே இந்தக் கதையின் சுவை தெரியும் என்பதால், அவற்றை மட்டும் இடம், பொருளோடு எடுத்துக் காட்டுகிறேன்.


ஆரம்பத்தில் அந்தக் கலை உணர்வு அவர்களை இணைக்கும் காட்சிகள்.

பள்ளிப் பருவத்தில் , 'எனக்கு ஓவியம் வரைய வரும்னு உனக்கு யார் சொன்னா ' என்ற அவளின் கேள்விக்கு அவன் பதில் , 'உன் கை மருதாணியின் வட்டம் இருக்கும் நேர்த்தியைப் பார்த்தேன் .' அவள் அனிச்சையாய் உள்ளங்கை விரிக்க அதில் அந்திவானச் சூரியன் . அருமையான காதல் காட்சி .


அடுத்து ' காதலில் தோற்றவர் வென்றார்' என்ற கருத்துக்கு காட்சியாக சாட்சியாக ஒரு இடம். 'அவனுக்கும் ஓவிய பழக்கம் உண்டு என்றாலும் அவளைப் போன்ற , தேவகியைப் போன்ற லாவகம் அமைவதில்லை என்பதை அறிந்தவனாக தான் கலந்து கொள்ளும் போட்டிகளில் அவள் அனாயாசமாக முதல் பரிசு பெறுவதை சந்தோஷமாக ஏற்றுக் தோற்றான். ' தோற்றவன் வென்றான். பள்ளி நுண்கலை நிகழ்ச்சிகள் பலவற்றை அவர்கள் சேர்ந்து நடத்தினார்கள்.


பள்ளி வாழ்க்கை முடிந்து ஆர்ட்ஸ் காலேஜில் சேர விரும்பிய அவள் ஆசைக்கு அப்பா தடை போட , ஆண்டு மலரில் அவன், செந்தில் எழுதிய ' ஐம்பூதம்' கவிதைக்கு ஐந்து இதழ் செம்பருத்திப் பூக்களை வரையத் தொடங்கினாள். அந்த ஓவியங்களைத் தொகுத்து நோட்டாகத் தைத்தபோது அவன் இட்ட பெயர் ' தேனீ வராத பூந்தோட்டம்' .


அவள் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகப் போகிறது . இவர்கள் இருவரும் சந்தித்ததை தந்தை அறிந்து கொள்வதை ' காற்றுக்குக் கண் முளைத்தது ' என்ற அழகிய உவமை மூலம் எடுத்துக் காட்டுகிறார் ஆசிரியர். 'படித்துக் கிழித்தது போதும்' என்று வரன் தேடி அத்தை மகனுடன் மணம் முடிகிறது .


கதையின் நடுவில் , கணவனுக்கும் அவளுக்கும் இருக்கும் ரசனை வேறுபாடுகளை சில உதாரணங்கள் மூலம் அழகாக வெளிப்படுத்துகிறார். இவள் நுண்கலை உணர்வோடும் அவன் பணத்தின் உணர்வோடும் இருப்பதை வெளிப்படுத்தும் அந்தக் காட்சிகளைக் கதையில் படித்து ரசியுங்கள். உதாரணத்திற்கு ஒன்று மட்டும்.


தஞ்சாவூர் கோயிலுக்குச் சென்றபோது அதன் முன்வாயில் பரப்பில் , அக்காலத்தில் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும் என்று யாரோ சொல்ல அந்த நாட்களில் அந்த இடம் எப்படிக் கோலாகலம் கொண்டிருக்கும் என்பதை அவள் மனத்திரையில் விரித்தபோது , இவன் அந்த இடம் எத்தனை சதுர கஜம் இருக்குமென்று கணக்குப் போட்டு சொன்னான். இப்படி பல இடங்கள்.


அவ்வப்போது இவளுக்கு செந்தில் நினைவு. பள்ளியின் பிரிவுபசாரக் கூட்டத்தில் , செந்தில் பேசிய வார்த்தைகள்

'செடியாக இருக்கும்போது அருகருகே இருந்த செடியின் சிறு கிளைப்புகள், மரமாகப் பெருகி கிளைகளாக நீண்டபின்பு , அதே மரத்தின் எதிர்ப்பக்கங்களிலேயே இருந்தும் கூட , பார்த்துக் கொள்ளக் கூட முடியாதபடி போய் விடுவதை போலத்தான் வாழ்க்கை '


,வீட்டு வாசலில் மரமொன்றைப் பார்த்தபடி க்ரோஷாவில் நூலால் செம்பருத்திப் பூக்களை நெய்து கொண்டு இருக்கும் போது அவள் நினைவு . அதே சமயம் கான்பூர் சென்று விட்ட செந்திலுக்கு மரங்களோ செம்பருத்தியோ என்னவிதமான மனவலைகளைத் தரக்கூடும் என்ற யோசனை அவளுக்கு .' என்று எழுதுகிறார் ஆசிரியர்.


வாசகர்களான எங்களுக்கும் அந்த யோசனை தான். ஆனால் இந்த மனுஷன் , ரமேஷ் கல்யாண் , அதை எழுதவில்லையே என்ற வருத்தம் தான் எங்களுக்கும். ஆனால் அதுவும் ஒரு கதை உத்திதான். எழுதாமல் விட்டதில் நம் எண்ணங்களைத் தூண்டி விடும் ஒரு வித்தை இருக்கிறதுதான் இந்த விபரமான எழுத்தாளருக்கு .

அவர்களின் உறவைக் காதல் என்று வாசகர்கள் நினைத்தாலும் காதல் என்பதை விட நட்பு என்ற ரீதியில் ஆசிரியர் கொண்டு செல்வதற்குரிய பல குறிப்புகள் கதையில் இருப்பதும் குறிப்பிடத் தகுந்தது ..


உதாரணம் ஆசிரியரின் இந்த வரி .. ‘சராசரி யூகங்களைத் தாண்டி எதிர்பாலினத்தவர்க்கு பரிச்சயத்திலேயே ஒருவருக்கொருவர் பிடித்துப் போக கிளர்ச்சியுற்ற காதல் மட்டுமே முதற்காரணமாக வேண்டிய அவசியமற்ற கலை ரசனை அவர்களை பிணைத்திருந்தது’ .


இப்போது அவள் கணவன் அதிக விலை வைத்து விற்க செம்பருத்திப் பூவை க்ரோஷாவில் போடச்சொல்ல , அவள் குழந்தைக்கான மேல் சட்டையில் செம்பருத்தி போட ,அது ரத்தச் சிவப்பாய் சிரித்தது. ஆசிரியரின் இந்த வரிகளை படித்தபோது ஆரம்பத்தில், செந்தில் அவள் உள்ளங்கையில் மருதாணியில் சிரித்த அந்திவானச் சூரியனைப் பார்த்தது எங்களுக்கும் ஞாபகம் வந்தது , நாயகிக்கும் ஞாபகம் வந்திருக்கும் , ஆனால் கதையின் நடுவில் ஆசிரியர் எழுதிய இந்த வரிகள் அவளின் தற்கால வாழ்வை எடுத்துக் காட்டி முடிகிறது .

'தண்ணீரால் அடி வாங்கிய நாயைப் போல சட்டென நினைவை உதறிக்கொண்டு எழுந்து போனாள். பெண்களால் மட்டுமே முடிந்த தீர்மானமான உதறல்.. '

மறுபடியும் சொல்கிறேன்.

'தண்ணீரால் அடி வாங்கிய நாயைப் போல சட்டென நினைவை உதறிக்கொண்டு எழுந்து போனாள். பெண்களால் மட்டுமே முடிந்த தீர்மானமான உதறல்.. '


இப்படி கதையோடு ஒன்றி எங்களை படிக்க வைத்த எழுத்தின் வெற்றி ரமேஷ் கல்யாண் அவர்களுடையது. வாழ்த்துகள். நன்றி அழகியசிங்கர்.


------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English 


புதன், 22 ஏப்ரல், 2026

ஊறத் தண்ணி அம்மாச்சி - உத்திரகோசமங்கை உறவுகள் - 5

 




ஊறத்    தண்ணி அம்மாச்சி 

-----------

படம் வரைந்தவர்: நன்றி உஷா பாரதி மேடம் 

 உத்திரகோசமங்கை உறவுகள் - 5 

(அவ்வப்போது 😃 வரும் அனுபவத் தொடர் ) 

------


பக்கத்து வீட்ல ஒரு பாட்டி இருந்தாங்க .தடிமனான உருவம். மாநிறம். உழைப்பின்  சுறுசுறுப்பு முகத்திலும் தெரியும். அவன் வீட்ல  அரிசி கழுவற தண்ணி, காய்கறி கழுவுற தண்ணி. பழைய சோத்துத் தண்ணீர், புளிச்சு போன தண்ணி,  எல்லாத்தையும் முற்றத்திலே  இருக்கிற ஒரு தொட்டியில கொட்டி  வச்சிருப்பாங்க அவனோட  அப்பத்தா. இந்தப் பக்கத்து வீட்டு பாட்டி  வீட்ல மாட்டு தொழுவம் இருக்கு .மாடுகளுக்கு குடிக்க ஊற்ற   அந்த தண்ணியை ' ஊறத் தண்ணி'ன்னு சொல்லிட்டு  எடுத்துட்டு போவாங்க .


 வீட்டுக் கொல்லையிலே  இருக்கிற  சைடு வாசல் வழியா பக்கெட்டு கப்பு கொண்டு  வந்து எடுத்துட்டுப் போவாங்க  . அவங்க உண்மையான பெயர் தெரியாது . காரணப் பெயரா ' ஊறத் தண்ணீ அம்மாச்சி' ன்னு  தான் கூப்பிடுவான் அவன்  .



அவன்  அப்பத்தாவும் அவங்களும் சின்னப் பிள்ளையில் இருந்து ரொம்ப ஃப்ரெண்ட்சாம் . அவனோட  அப்பத்தா   இளம் வயதிலேயே விதவை ஆகி தாத்தா வீட்டில், அதாவது அவங்க தம்பி வீட்ல வந்து இருந்து அவனை  எல்லாம் வளர்த்தாங்க. இவங்க பக்கத்து வீட்டில் இருந்தவங்க .சின்னப் பிள்ளையிலிருந்து அவங்க பழக்கம்.  அவங்களுக்கு  கல்யாணம் ஆகி ரெண்டு பையன் ஒரு பொண்ணு. பொண்ணுக்கு  மெட்ராஸ்ல கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கு. நல்ல திருப்தியான வாழ்க்கை .  

அப்பத்தாவின்  வாழ்க்கை நினைத்து , அவங்களுக்கு அவன்  அப்பத்தா மேல ஒரு பாசம் உண்டு.


 'இவளே, சொர்ணம்' ன்னு  தான் அவன்  அப்பத்தாவை உரிமையோடு  கூப்பிடுவாங்க .அவன் வீட்டுக்கும்  அவங்க வீட்டு தொழுவத்துக்கும் நடுவிலே  சைடுல சுவர் ஒண்ணு உண்டு.  அதிலே மாடப்பிறை அளவு ஒரு ஓட்டை உண்டு . 


 அந்த ஓட்டை வழியா அவங்க வீட்ல பண்ற , இவன்   வீட்ல பண்ற பலகாரம்  கொடுக்கல் வாங்கல் போயிட்டு இருக்கும்.   அது தவிர , அந்த இடத்திலே  நின்னு பேசிக்கிட்டு இருப்பாங்க. ஒரு மணி நேரம் கதை அடிச்சுகிட்டு இருப்பாங்க. பல ஆபாச  வார்த்தைகள் எல்லாம் வந்து விழும் சிரிப்போடு .   அவனுக்குப்  பாதி புரிந்தும்  புரியாமல் இருக்கும் .


அந்த காலத்துல அவங்களுக்கு அதையெல்லாம் பேசுறதுல ஒரு பெரிய திருப்தி .கூடவே அப்பப்போ ஒரு பெரிய சிரிப்பு சப்தம்.   உள்ள ரூம்ல இருக்கிறவங்களுக்கு அந்த சிரிப்பு சத்தம் கேக்குற அளவுக்கு சிரிச்சு பேசிக்கிட்டு இருப்பாங்க. அவங்களுடைய ஒரு மகிழ்ச்சி அது .


அவனோட  அப்பத்தா வெளியே போகாம  வீட்டிலேயே இருக்கிறவங்க. அந்த அம்மாச்சி ' ஊறத் தண்ணீ  அம்மாச்சி' வெளியே  போய் வயல் வேலை பார்த்துட்டு காலைல போயிட்டு சாயந்திரம்  தான் திரும்புவாங்க.  ஊர் சமாச்சாரம் எல்லாம் தெரியும் .அப்புறம் வந்து இந்த ஊறத்  தண்ணி எடுத்துட்டுப்  போய் அவங்க தொழுவத்து மாடுகளுக்கு எல்லாம் ஊத்திட்டு , அப்புறம் அந்த சுவர்  ஓட்ட வழியா பேசிகிட்டு இருப்பாங்க .இது அவனுக்கு   ஒரு மாதிரி வேடிக்கையா இருக்கும் 


அப்ப பேசுனது பத்தாதுன்னு , திரும்பவும் ராத்திரி அவங்க  வீட்டு வாசல் திண்ணையில் வேற வந்து உட்கார்ந்து ஊர்ப்  புரணி ஓடும். அவங்க  பேசறதே அவனுக்கு  ஒரு பெரிய தாலாட்டு மாதிரி இருக்கும் அதை கேட்டுக்கிட்டு அவன்   தூங்கிடுவான்.  இந்த மாதிரி அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த பல அனுபவங்கள்  ஒருத்தருக்கு ஒருத்தர் பரிமாறிக் கொள்வது எல்லாம் பெரிய பெரிய கதைகள் மாதிரி இருக்கும் .இப்ப  எல்லாம் ஒண்ணும் ஞாபகம்  இல்ல.


 கிராமத்து பெரியவங்க பேசிக்கிட்டதிலே  எல்லாம் எவ்வளவோ  கதைகள் இருந்திருக்கு . பின்னால் கி ராஜநாரயணன் ஐயா அவர்களோட  கதைகளை படிக்கிற போதெல்லாம்  அந்த அம்மாச்சி, அப்பத்தா கதைகளைச்  சரியா கவனிக்காம விட்டுட்டோமே அப்படிங்கற ஒரு வருத்தம் கூட வந்திருக்கு அவனுக்கு. 


 அதைத் தவிர ரோட்டுல சில பெண்கள் சண்டை போட்டுக் கொள்வது எல்லாம் எழுத்தில் எழுத முடியாத  கலைச்சொற்கள் . 'தூமி... ,  கண்டாரா.. ' என்றெல்லாம் ஆரம்பிக்கும்  சில வசவு வார்த்தைகளின் முழு அர்த்தம் என்னன்னு அவனுக்குத்  தெரியாது . இருந்தாலும் அவை ஆபாச வார்த்தைகள் என்பது புரியும். அந்த பக்கம் பஸ் ஸ்டாண்ட் எதிரே  பெரிய தெப்பக்குளம் பக்கத்திலே  ஒரு மண்டபம் .அந்த மண்டபத்தில்  சுருட்டுப் புகைத்தபடி உட்கார்ந்து இருக்கிற  பெருசுகள்  பேசுவதெல்லாம்  ரொம்ப மோசமா இருக்கும். அங்கும், இந்த ஊரத்தண்ணீ அம்மாச்சி    பேச்சுலயும் அடிபட்ட பெண் ஒருத்தி இருந்தாங்க .


அவங்க  எங்கோ  வேலைக்கு போயிட்டு வந்துகிட்டு இருந்தாங்க. அவங்க பாட்டுக்கு ஜாலியா திரிவாங்க. அவங்களை பத்தி ஊரத்தண்ணீ  அம்மாச்சி பேசுறதெல்லாம்   ரொம்ப மோசமா இருக்கும். அந்த ஊரு கருவக்காட்டிலே எவன் கூடவோ  இருந்த கதை  எல்லாம் சொல்லுவாங்க, கூடவே  இருந்து  பார்த்த மாதிரி.  அந்தப் பெண்ணு ஊர் பெருசுக பேச்சைக்  கண்டுக்கறதே இல்லை.  அங்கே இருந்த   சில  இளவட்டங்களுக்கு  அவங்க ஒரு  விதமான வடிகால் ங்கிற   மாதிரி இருந்திருக்காங்க. எங்கேயோ ஒரு இடத்தில் வேலை பார்த்தாங்க அது தவிர இதுல வர்ற வருமானம் .இப்படியும் சிலரின் வாழ்க்கை ஊர் அறிந்த ரகசியமாக இருந்தது. 


 அந்த ஊரத் தண்ணீ  அம்மாச்சிக்கு ரெண்டு பசங்க ஒரு பொண்ணு  பொண்ணு க்கு  மெட்ராஸ்ல கல்யாணம் பண்ணி  பேத்தியோட வருவாங்க வருஷத்திற்கு ஒருமுறை. மெட்ராசுசில இருந்து வந்த  ராமேஸ்வரம் வண்டி அப்பல்லாம்  தஞ்சாவூர் மாவட்டம் எல்லாம் சுத்தி வரும் .ஒன்றரை நாள் ஆகும் . முதல் நாள்லே இருந்தே அந்த அம்மாச்சி பயங்கர குஷியா இருப்பாங்க. பொண்ணும் பேத்தியும் வராங்கன்னு. 


 அந்த ஊரிலே   மஞ்சள் பூசின முகத்தோட பொண்ணுங்களை பார்த்ததற்கு அந்த பொண்ணு பவுடர் பூசின  முகத்தோட கண்ணு மை பூசிக்கிட்டு ஒரு மாதிரியா வித்தியாசமா இருக்கும். அந்த ஒரு மாசமும், பேத்திக்குத் தலை பின்னி பூவு வச்சு, கோயிலுக்கு கூட்டிட்டுப் போயி அம்மாச்சி சந்தோசமா  திரிவாங்க. மெட்ராஸில் இருந்து வந்த கலர் காகிதம் சுத்திய சாக்கலேட்டு , வண்ண டப்பாவுக்குள்ளே பிஸ்கேட்டுன்னு அவன் வீட்டுக்கு வரும். கடலை மிட்டாய், முறுக்கு  ,காராச்சேவு, சீனிச்சேவு சாப்பிட்ட வாய்க்கு அமிர்தமாய் இருக்கும்  அவனுக்கு.


கொல்லை பக்கம், இருந்து அந்தப் பொண்ணு ஹிந்தி பாட்டு வேற  பாடும். ஊரத்தண்ணீ  அம்மாச்சிக்கு பெருமை.   ' பேத்தி ஹிந்தி பாட்டு பாடுவா, ஒண்ணுமே புரியாது.   நல்லா இருக்கு' ன்னு பெருமை அடிச்சுக்குவாங்க.  . அவன்  ஊரு பக்கத்துல 'எக்ககுடி' ன்னு ஒரு ஊர்  இருக்கு . பெரும்பாலும்  முஸ்லிம்கள் வாழ்ற இடம் .அங்கே அவனோட அப்பா சில நேரங்களில் அவனுக்கு முடிவெட் ட  கூட்டிட்டு போவாங்க . முடி வெட்டுற  பாய் கடை .  அந்த கடையில மொஹமட் ரபி ,  லதா மங்கேஷ்கர் பாட்டுகள் கேட்டிருக்கான். அந்தக் கடையிலே தேவ் ஆனந்த் திலீப் குமார்  வைஜயந்தி மாலா, மது பாலா படங்களா தான் இருக்கும் .இந்தப் பேத்தி பாட்டும் எங்கோ கேட்ட மாதிரி இருக்கும். 


 ஒரு மாசம் இருந்துட்டு அவங்க மெட்ராஸ் போன பிறகு ஊரத் தண்ணீ அம்மாச்சி முகத்திலே  சுரத்தே குறைஞ்சு போயிரும்  .பழைய  மாதிரி அந்த பக்கத்து சுவத்துக்கு  வந்து அந்த ஓட்டையில் இருந்து பேசுற பேச்சுக்களும் கொஞ்ச நாளைக்கு இருக்காது. கொஞ்ச நாள்தான்.  அப்புறம் பழையபடி அந்த கணீர் பேச்சு, அதிர்  சிரிப்பு இதெல்லாம் மறுபடி தொடரும் . 


 ஒருமுறை  இவன் சிவகங்கையில்  காலேஜ்ல படிச்சிட்டு லீவில் திரும்பி வந்த ஒரு நாள். கணீர் குரல் கேட்டுச்சு 'நாகேந்திரனா, என்ன மாதிரி வளர்ந்துட்டான் ' திரும்பி  பார்த்தால் ஒல்லியான  ஒரு உருவம், தளர்ந்து போய்  கறுத்துப் போய் ,நின்று கொண்டிருந்தது .'ஊறத் தண்ணீ அம்மாச்சி டா ' என்றார்கள் அப்பத்தா. அதிர்ச்சியாக இருந்தது .


------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


வெள்ளி, 17 ஏப்ரல், 2026

தாய்க்கிழவி - பட விமரிசனம்

 



தாய்க்கிழவி - பட விமரிசனம் 

-------

படம் பார்க்கிற ரெண்டு மணி நேரத்திலே, ஸ்மூலில் தமிழ்ப் பாட்டு பாடி ப்ராக்டிஸ் செய்யலாம் , டோஸ்ட்மாஸ்டர் ஆங்கிலப் பேச்சு பேசி பிராக்டிஸ் செய்யலாம் என்று நினைக்கும் என்னை அவ்வப்போது சில திரைப்படங்கள் பார்க்க வைத்து விடுவார் என் மனைவி உஷா மேடம். அப்படிப் பார்த்து அசந்து போன படம் முன்பு 'மெய்யழகன்' . இன்று 'தாய்க்கிழவி '


'ஏங்க இது நீடாமங்கலம் கோயில் வாசல் ங்க ' என்று ' மெய்யழகன் ' பூக்கடை சீனைப் பார்க்க வைத்து , படத்தைத் திரும்ப ஆரம்பத்தில் இருந்து பார்க்க வைத்து, ரசித்த சீன்களை பற்றி எழுதி நமது கலை புதிது , குவிகம் குழுக்களில் பகிர்ந்து கொள்ள வைத்தது போல் ,


இன்று தாய்க்கிழவி படத்தின் , 'கிராமக் காட்சிகளைப்' பார்த்து ,'நம்ம ஊர்ப்பக்கம் போன மாதிரி இருக்குங்க ' என்று சொல்லிப் பார்க்க வைத்து , முதலில் இருந்து படத்தை முழுவதும் ,இருந்த இடத்தில் இருந்து எழாமல் இரண்டு மணி நேரம் தாய்க்கிழவி படத்தைப் பார்த்து ரசித்த சில காட்சிகள் .


குடும்ப உறவுகள் , அதன் சிக்கல்கள், இதில் பெண்களின் உணர்வுகள், அவர்களின் துணிச்சல் , தன்னம்பிக்கை இவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டப்பட்ட கதையில் 'பிளாக் காமெடி ' வகையில் ஒரு இறப்பு சூழ்நிலையில் நகைச்சுவையும் , சோகமும் கலந்து கொண்டு செல்லும் இயக்குனர் சிவகுமார் முருகேசனின் திறமை பாராட்டப் பட வேண்டியது .தயாரித்த சிவகார்த்திகேயன் அவர்கள் பாராட்டுக்குரியவர் .


நடிகர்களைத் தனித்தனியாகப் பாராட்டுவதற்குப் பதில் அனைவரும் அந்தந்தக் கதாபாத்திரங்களைக் கண் முன் கொண்டு வந்தார்கள் என்று ஒரே வரியில் சொல்லி விடலாம். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்றால் 'முனீஷ் காந்தின்' பாத்திரப்படைப்பு. அதை அவர் வெகு இயல்பாக தனது உடல் மொழியால் கையாண்ட விதம்.


ஆரம்பம் முதல் முடிவு வரை அந்தக் கிராமமும், அதன் தெருக்களும், கோயிலும், ஜனங்களும் , வீடுகளும் அப்படியே தெரிந்து , அங்கேயே சென்று வாழ்ந்து வந்த ஒரு உணர்வை நமக்கு ஏற்படுத்தியதில், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இயக்குனர் என்ற அந்தக் கலைக்குடும்பத்தின் பங்கு மகத்தானது . உறுத்தாத பின்புல இசை குறிப்பிட வேண்டியது .மதுரை நகைக்கடைக்காரர் இளவரசு, கதையின் முதல் திருப்பத்திற்கு முக்கியமானவர் . முடிவுத் திருப்பமும் அவராலே .


சிரித்து மகிழ்வதற்கு மட்டும் அல்ல, உணர்வு பூர்வமாகச் சிந்திக்கவும் வைக்க வேண்டும் , அந்த உணர்வை நமது நெஞ்சின் நெகிழ்வை கண்களின் கசிவின் மூலமும் வெளிப்படுத்தவும் வைக்க வேண்டும் என்ற கலைப்படத்தின் ஒரு விதமான நோக்கத்தை நிறைவேற்றி என்னை நெகிழ வைத்த காட்சிகள் பல. அவற்றில் சில .


நடுரோட்டில் ஆம்புலன்சில் ஒரு உயிர் பிரியும் காட்சியின் பின்புலத்தை அந்த ஆம்புலன்ஸ் ட்ரைவர் விவரிக்கும் இடம்


'பாட்டி இருக்க வேண்டுமா இறக்க வேண்டுமா' என்ற கேள்விக்கு அவள் பேரன் அவனது மாமா பெண்ணிடம் சொல்லும் பதில்


மருமகள்களை வேலை பார்க்கச் சொல்லும் அந்தத் தாய்க்கிழவியின் நோக்கத்தை மகள் அவர்களிடம் சொல்லும் இடம்


நாற்பது வயதிலும் திருமணம் செய்யும் ஆசை இருப்பதன் ஆழமான நோக்கத்தை முனீஷ் காந்த் தாய்க்கிழவியின் பையன்களிடம் விவரிக்கும் இடம்


அந்தக் கோயிலில் தீபம் அணையாமல் எரிய எண்ணெய் ஊற்ற யாரும் வராத போது, தாய்க்கிழவியின் உயிர் காக்க வேண்டி, இன்னுமொரு கிராமக் கிழவி வந்து எண்ணெய் ஊற்றி எரிய வைக்கும் இடம்


முன்னூறு பவுன் நகைகளை மகள் , மருமகள்களிடம் காட்டி பகிர்ந்து கொள்ளச் சொல்லும் போது 'சந்தோசத்திற்கு வேண்டுமானால் பணம் தேவை இல்லாமல் இருக்கலாம், ஆனால் மரியாதைக்கு பணம் அவசியம் தேவை ' என்று பெண்கள் சுயமாக சம்பாதிக்க வேண்டியதின் அவசியத்தை தாய்க்கிழவி சொல்லும் இடம்


'அம்மா மறுமணம் செய்து கொள்ளலாமா ' என்று கேட்கும் கேள்விக்கு மகன் ' மாப்பிள்ளை யார் ' என்று கேட்கும் இடம் .


என்று சொல்லிக்கொண்டே போகலாம். நீங்களே படம் பார்த்து அனுபவியுங்கள். இடை இடையே வரும் ' பிளாக் காமெடி ' கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தாலும், தொடரும் உணர்வு பூர்வக் காட்சிகள் அவற்றை மறக்கச் செய்வதோடு அந்த பிளாக் காமெடியின் முக்கியத்தையும் உணர வைக்கின்றன .


ஆங்கிலப் படம் போல் , கொரியன் படம் போல் , ஹிந்திப் படம் போல் என்றெல்லாம் பல உணர்வுகளை ஏற்படுத்தும் தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் தமிழ்ப் படம் என்ற முத்திரையை அழுத்தமாகப் பதிக்கும் இது போன்ற படங்கள் , நம் வேர்களை நமக்கு ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கும் வெளிச்சங்கள். அந்தப் படைப்பாளிகளுக்கு நன்றிகள் .


-----------------நாகேந்திர பாரதி

 

 My Poems/Stories/Articles in Tamil and English  


வேரை மறந்த மரம் - கவிதை

 வேரை மறந்த மரம் - கவிதை 

---------

நெளிஞ்சு இருந்தாலும்

நிறைகுடம் தளும்பாது 


நேராய் இருந்தாலும்

குறை குடம் கூத்தாடும் 


ஆங்கில இலக்கியம் 

படிச்சு இருக்கியா 


அமெரிக்கா எல்லாம் 

போயி இருக்கியா 


ஆயிரம் பக்கம் 

எழுதி இருக்கியா 


வீட்டை மறந்த 

ஆணவப் பேச்சில் 


வேரை மறந்த 

மரத்தின் வீழ்ச்சி 


விறகுக் கடையில் 

விற்றுக்  கரியாகும் 


-----------------நாகேந்திர பாரதி 


 My Poems/Stories/Articles in Tamil and English   


வரவும் செலவும் - கவிதை

 வரவும் செலவும் - கவிதை 

-------------


வருவேன் என்று சொல்லிவிட்டு 

வராமல் இருந்தால் பரவாயில்லை 


பேசுவேன் என்று சொல்லிவிட்டு 

பேசாமல் இருந்தால் பரவாயில்லை 


சிரிப்பு ஒன்றை மட்டும் 

செலவழித்து     விட்டுப் போகிறாய் 


எந்தக் கணக்கில் 

எழுதுவது என்று தெரியாமல் 


சேமித்து வைத்திருக்கிறேன் 

செலவு செய்ய வழியில்லை 


----------நாகேந்திர பாரதி 


 My Poems/Stories/Articles in Tamil and English 


தண்ணீர்த் தகராறு - கவிதை

 தண்ணீர்த்  தகராறு    - கவிதை 

---------------


ராத்திரி இழுத்துவிட்ட

வாய்க்கால் தண்ணி 

அடுத்தவன் வயலுக்கு 

மாத்திப் பாயுது  


பக்கத்து வயலும் 

பசியாறப் பார்த்து 

இந்த வயலுக்கு 

எரிச்சல்  இல்லை 


கண்மாய்த் தண்ணீ 

பிரிச்சு விட்ட 

கணக்கு நேரம் 

தவறிப் பாய்வதால்   


அறுவடை நெல்லோட 

கணக்குத் தவறுமுன்னு   

வாய்க்கால்  சண்டை 

வரப்பிலே  நடக்குது 


---------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English 



காபி வேளை - சிறுகதை

 

காபி வேளை - சிறுகதை 

---------

'அப்படி என்னங்க அவசரம், நேரே ஆபிசில் இருந்து இங்கே வரச் சொல்லிட்டீங்க. நீங்களும் வீட்டுக்குப் போகாம. பையன் அத்தையை என்ன பாடு படுத்துறானோ. சீக்கிரம் சொல்லுங்க , கிளம்பலாம். ' என்று காபியை அவசரமாக உறிஞ்சியபடி கேட்டாள் கீதா .


'முதல்லே காபியை மெதுவா ரசிச்சுக் குடி , திருமணத்திற்கு முன்பு நாம் இதே காபி ஸ்டாலில் இந்த மங்கிய ஒளியில் பேசிக்கொண்டு இருப்போமே அப்படி ' என்றான் மோகன் .


'என்ன மோகன், பழைய நினைப்பு திடீர்னு ' என்ற கீதாவின் குரலில் நிதானம் வர அவனை உற்றுப் பார்த்தாள்.காபி கப்பை இதழ்களில் பொருத்தி மெதுவாக உறிஞ்சினாள் .


'ம் , அப்படிப் பாரு, அதே மாதிரி . கொஞ்ச நேரம் நானும் பார்க்கிறேன். பேச வேண்டாம். இந்தக் குழந்தை முகத்தின் அழகை இந்த மெல்லிய ஒளியில் கொஞ்ச நேரம் ரசிக்கிறேன் .' அவள் முகம் லேசாக மலர்ந்து ஒரு சிரிப்பு இதழோரம் கசிந்தது. ' அது ' என்று ரசித்தவன் தொடர்ந்தான்.


' கொஞ்ச நாளா பாத்துக்கிட்டு வரேன் உன்னை. ஒரே பரபரப்பு காலையிலே இருந்து .ஆபீசில் என்ன பிரச்சனைன்னு தெரியலை , ஏதோ சிந்தித்தபடி ,பையனைப் பார்த்துக்குறது , என்னிடம் பேசுறது , அப்பா அம்மாவுக்கு மாத்திரை கொடுக்கிறது எல்லாத்திலேயும் ஒரு இயந்திரத்தனம் . நம்ம பிரீயாய்ப் பேசியே ரெம்ப நாள் ஆயிட்டதுன்னு எனக்கு ஒரு பிரமை'


'ஆமாங்க. ஆபீசில் ஆடிட் நேரம். மேனேஜர் ஏதோ உடல்நலப் பிரச்னை . லீவு. நான்தான் எல்லாம் பார்க்கிறேன் . ஏகப்பட்ட ரிப்போர்ட். ஒண்ணொன்னா, அந்தந்த டெபார்ட்மெண்ட்லே கேட்டு ஆடிட்டர் கிட்டே கொடுத்தாலும், திரும்பி வரப்போ ஒண்ணு மறந்துட்டேன்னு ஞாபகம் வரது. உங்க ஆபீசில் நீங்க எத்தனைப் பேரை மேனேஜ் பண்ணுறீங்க , எவ்வளவு டென்ஷன் ' ன்னு எனக்குத் தெரியும். அதான் உங்க கிட்டே சொல்லலே. '


'என்னைப் பாரு டென்சனாவா தெரியறேன்' .


'இல்லே, எப்படிங்க '.


வீட்டுக்குள் நீ நுழைஞ்சதுமே நான் உன்னைப் பார்த்து ரசிக்க ஆரம்பிச்சுடுறேன் . பையனுக்கு சாதம் ஊட்டும்போது உன் உதட்டைக் குவிச்சுக்கிடுவியே , அதை ரசிப்பேன். அவன் முரண்டு பிடிக்கறப்போ பொய்க்கோபத்தோட அவனை ஒரு முறை முறைப்பியே, அதை ரசிப்பேன், அப்புறம் எப்பவாவது என்னைப் பார்க்கறப்போ ஒரு மந்தகாசப் புன்னகை அசால்ட்டா வீசிட்டுப் போவியே , அது , இப்படி ரசிக்கிறப்போ என் டென்ஷன் ஓடியே ஓடிப் போயிடும்.


அவன் பேசப் பேச வெட்கத்தில் லேசாகத் தலை குனிந்து மெல்ல தலை சாய்த்து ஒரு பார்வை. ' இது போதுமடி '


'நீயும் ரசிடி, பையன் சேட்டைகளை ரசி , எங்கம்மா அப்பா பேச்சை ரசி . தோட்டத்தை ரசி. ரசிக்கிறதுக்கு என்ன இல்லை நம்ம வீட்டிலே. ஒண்ணும் முடியலேன்னா,. அடலீஸ்ட் என்னை ரசி .


'ஐயோ, உங்களை நான் ரசிக்காமலா இருக்கேன். உங்களுக்குத் தெரியாது . '


'அப்புறம் எப்படி டென்ஷன். ஓ என்னைப் பார்த்து உனக்கு டென்ஷன் ஏறுதா .'

'சீ , போடா .'

'இது ... , எத்தனை நாளாச்சு , நீ போடா சொல்லி. போகலாமா வீட்டுக்கு '.


மேஜை மேல் இருந்த அவன் கை மேல் ஒரு அழுத்து அழுத்தி ' போலாம் ' என்றாள்.

'புரியுது ' என்றபடி எழுந்தான். கூடவே அவன் தோளில் ஒட்டியபடி அவளும்


------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


புதன், 15 ஏப்ரல், 2026

மண்ணு தின்னி மரகதம் -உத்திரகோசமங்கை உறவுகள் - 4

 


மண்ணு தின்னி மரகதம் -உத்திரகோசமங்கை உறவுகள்  - 4

----------

(படம் வரைந்தவர்  : உஷா பாரதி : நன்றி ) 

---

('அவனும் அவர்களும் ' என்ற தொடரின் பெயரை  'உத்திரகோசமங்கை உறவுகள்' என்று மாற்றி விட்டேன். ஊரின் பெயரும் தொடரின்  தலைப்பில்  இருக்கட்டும் என்று ) 



அவன் மண்ணு தின்று  பார்த்ததில்லே இவன் . அவன் பேரும் மரகதம் இல்லே. இருந்தாலும் அவன் பேரையே மறந்து போற அளவுக்கு இந்தப் பட்டப்பேரு அவனுக்கு அமைஞ்சு போச்சு. அவன் சின்னைப்பிள்ளையிலே மண்ணு தின்னதாவும் அதனாலேதான் அவன் வயிறு வீங்கிப் போய் இருக்குன்னு சொல்லி நண்பர்கள் சில பேர் வச்ச பேரு. அவன் வயிறு வீங்கி இருந்தது என்னவோ உண்மை. அவன் சாப்பிடுறப்ப பார்த்தவர்களுக்கு அதன் இன்னொரு காரணமும் புரியும். 


முதல் வடக்குத் தெருவிலே இவன்  வீட்டிலே இருந்து அஞ்சாறு வீடு தள்ளி முக்கு வீடுதான் அவன்  வீடு . ஓட்டு வீடு. தட்டி வச்ச திண்ணை. காலையிலே அப்பா கூட வயல் வேலைக்குப் போயிட்டு சாயந்திரம் தான் திரும்பி வருவான். பள்ளிக்கூடம்  பாதியிலே நிறுத்தியாச்சு. 


சாயந்திரத்திலே இருந்து  நைட் படுக்கப்  போற வரைக்கும் அந்தத் தட்டி மறைச்ச  திண்ணையிலே இருந்துக்கிட்டு பாடுவான். நல்ல குரல். டி எம் எஸ் பாட்டுதான் பெரும்பாலும். எதுத்தாப்பலே இருக்கிற லைப்ரரியில் இருக்குற இவனுக்கு  நல்லாவே கேட்கும். படிச்சுட்டு அவன் வீட்டிலே போயி உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கிட்டு இருப்பான். 


மண்ணு தின்னி மரகதம் வீட்டிலே அவன் வச்சுக்கிட்டுக் இருக்கிற சினிமாப் பாட்டுப் புத்தகம் எல்லாம் எடுத்துட்டு வந்து காமிப்பான். கட்டுக் கட்டா இருக்கும். எம் ஜி ஆர் , சிவாஜி யில் இருந்து ஜெய்ஷங்கர் , ரவிச்சந்திரன் படம் வரை ஏராளம். 


அப்ப அஞ்சு பைசா பாட்டு புத்தகம். அட்டையில் படத்தோட ஸீன் ஒண்ணு. உள்ளே முதல் பக்கத்திலே  .திரைப்படக் கதைச் சுருக்கம். முடிவைச் சொல்லாம ' மீதியை வெள்ளித்திரையில் காண்க ' என்று படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும். தியேட்டரில் வெண்திரை, அழுக்குத்திரை பார்த்திருக்கோம். 'இது என்னடா வெள்ளித்திரைன்னு' கேட்டா சொல்லுவான். 'வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமைதானே புதுப் படம் வருது . அதுதானப்பு ' என்பான். எல்லா வார்த்தையும் முடியுறது அப்புலேதான். 'வாப்பு, ஒக்காறப்பு , சொல்லுப்பு , சரிப்பு' எல்லாம் 'ப்பு'  தான் . அவன் ஸ்டைலு .


பக்கத்து பஞ்சாயத்து போர்ட் ரேடியோவில் இருந்து காலையிலே பக்திப்பாடல்,அப்புறம்  நியூஸ், ஒலிச்சித்திரம் , சினிமாப் பாட்டு ஒலித்துக்  கொண்டு இருக்கும். அதைக் கேட்டுக் கேட்டுத்தான் பாட்டு ஞானம். அது தவிர முளைக்கொட்டு , மற்ற திருவிழா காலங்களில் எல்லாம் , ஒவ்வொரு   தெரு முக்கிலும் கொட்டாய் போட்டு 'வேலன் வேடன் , விருத்தன்' என்று சங்கரதாஸ் ஸ்வாமிகள் பாட்டுகளோடு மதுரை திரைப்படப் புகழ் நடிகர்கள் பலர் வந்து நடிப்பார்கள். 


ஸ்பீக்கர் இல்லாமலே எல்லாத் தெருக்களிலும் வந்து ஒலிக்கும் அவர்கள் வெண்கலக் குரல். டி ஆர் மஹாலிங்கம், எம் எம் மாரியப்பா போன்ற பிரபலங்கள் வந்த ஞாபகம் . அவர்கள் பாட்டுக்களை எல்லாம் உன்னிப்பாகக் கேட்டு மனப்பாடம் செய்து விடுவான் மண்ணு தின்னி மரகதம் . மறுநாள் திண்ணையில் ' காயாத கானகத்தே ' ஒலிக்கும் அவன் குரலில் . 


முதல் நாள் இரவு பத்துமணிக்கு ஆரம்பிக்கும் நாடகம் , மறுநாள் அதிகாலை நான்கு மணிக்குத்தான் முடியும். தொடர் பாட்டுகள், வசனங்கள். சினிமாப் பாட்டுகளும் நேயர்கள் விருப்பமாக கலந்து பாடுவார்கள் . முன்னால் போய் மண்ணைக் கூட்டி உட்கார்ந்து விடுவான்.சில சமயம் இவன்   சென்று அவன் பக்கத்தில் அமர்ந்து கேட்பது உண்டு. பாதியில் தூக்கம் சொக்கி வீட்டுக்கு வந்து திண்ணையில் படுத்து அந்தப் பாட்டுக்களைக் கேட்டுத் தூங்கி விடுவான் இவன்  . 


மறுநாள் சாயந்திரம் பள்ளிக்கூடம் முடிந்ததும் மரகதம்  வீட்டுக்கு சென்று முழுக் கதையும் கேட்டு , பாட்டுக்களை யும் கேட்டு வருவான். மண்ணு தின்னி சினிமா போனதில்லை. இவன் பல சினிமாக்கள் அப்பாவோடு சேர்ந்து ராம்நாட் சென்று ஷண்முகா தியேட்டர், ராஜாராம் தியேட்டரில்  ரெண்டு ஷோ பார்த்துவிட்டு மரகதத்திற்கு அஞ்சு பைசா பாட்டு புஸ்தகம் வாங்கி வந்து கொடுத்து 'வெள்ளித்திரையில் கண்ட' மீதிக்கதையையும் சொல்லுவான். மரகதத்திற்கு பரம சந்தோசம். ஒரு சில வாரங்களில் அந்தப் படங்களின் ஒலிச்சித்திரம் பஞ்சாயத்துப் போர்டு ரேடியோவில் கேட்டு  ' கரெக்ட்டா சொன்னப்பு கதையை ' என்று பாராட்டுவான். 


ஒருநாள்  'கண் வலி' என்று உள்ளூர் ஆஸ்பத்திரியில் காண்பித்து மருந்து போட்டு கட்டு போட்டுக் கொண்டு இருந்தான். இருந்தாலும் மனப்பாடமாக இருந்த பாட்டுக்களை, அந்தப் பாட்டுப் புத்தகக் கட்டுகள் மேல் தாளம் போட்டுப்   பாடிக் கொண்டு இருந்தான். டி எம் எஸ் சின் அவனுக்குப் பிடித்த பாட்டான 'ஆயிரத்தில் ஒருவன் ' பாட்டு ' ஓடும் மேகங்களே ' பாட்டை அடிக்கடி பாடுவான். ' நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் ' என்ற வரியின் போது கண்ணின் கட்டின் வழி மருந்தோடு சேர்ந்து அவன் கண்ணீர் கசியும். 'கண்ணு வலிக்குதப்பு ' என்பான் .கண் மூடியது மூடியது தான். சில நாட்களில் அவன் கண் பார்வை போய் விட்டது. திண்ணையில் இருந்தபடி பாடுவது நிற்கவில்லை. 


இவன் வெளியூர் போய் வந்த ஒருநாள் சொன்னார்கள். 'மண்ணு தின்னி மரகதம் போயிட்டாண்டா ' என்பதோடு சேர்த்துச் சொன்னார்கள். 'வயித்து வலியாம் .  அவன் மண்ணு தின்னறதை விடலையாம் ' .இவன்  நம்பவில்லை. மரகதம், மண்ணு தின்று இவன்  பார்த்ததில்லை. உத்திரகோசமங்கை உறவுகளில் ,என்றும் மண்ணு தின்னி மரகதம் ' ஆயிரத்தில் ஒருவனப்பு ' ..


-----------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English  


நூலக ஆசான் -உத்திரகோசமங்கை உறவுகள் - 3

 


நூலக ஆசான் 

(படம் வரைந்தவர்: உஷா பாரதி க்கு நன்றி) 

------------

உத்திரகோசமங்கை உறவுகள்  - 3 

-------


'தம்பி, நாளைக்கு காலையிலே எட்டு மணிக்கே வந்திரு,புது  புஸ்தகம் எல்லாம் வருது. எல்லாத்தையும் ரெஜிஸ்டரில் எழுதி , நம்பர் ஒட்டி , அலமாரியில் பிரிச்சு அடுக்கணும். சரியா'


லைப்ரரி சார் சொல்லச் சொல்ல அவனுக்கும் 'எப்படா நாளை விடியும் என்றிருந்தது. ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒரு முறை அந்த மாவட்ட கிளை நூலகத்தில் வந்து இறங்கும் வண்ண வண்ண அட்டைப்படங்களோடு , பலவித வாசங்களோடு புதிது புதியதாய் எத்தனை புத்தகங்கள்.


அவற்றின் வாசனைகளை முகர்ந்து அனுபவித்தபடி , அதன் வழுவழு பக்கங்களையும் சிலவற்றின் சுரசுர பக்கங்களையும் தடவிப்பார்த்து அனுபவித்துவிட்டு, கதை, கட்டுரை, கவிதை, ஆங்கிலம் , தமிழ் என்று பிரித்து எழுதி நம்பர் போட்டு ரெஜிஸ்டரில் எழுதி , அந்தந்த அலமாரிகளில் அடுக்கி வைத்து அதை  அழகு பார்ப்பது ஒரு மகிழ்ச்சி . 


இடை இடையே லைப்ரரியன் சார் வரவழைத்துக் கொடுக்கும் , காஃபி , டீ, பிஸ்கட் , பஜ்ஜி தனி ருசி 


அது தவிர , அந்த எழுத்தாளர்களின் முன்னுரையை ஒருமுறை  வேகமாகப் படித்து விட்டு  அதில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்து அப்பத்தாவிடம் படித்துக்  காண்பிப்பதால் கிடைக்கும் சந்தோசம் இன்னொரு விதம். 


பள்ளி நேரம்  போக , நண்பர்களுடன் சண்டை , விளையாட்டு , படிப்பு நேரம் போக , வீட்டு வேலைகள் ( கிழக்கு தெரு உத்தண்டி வீட்டில் அப்போதே கறந்த பால் வாங்கி வருவது, வடக்குத் தெரு ராமு பிள்ளை கடையில்  காய்கறி கருவேப்பிலையோடு கடலை மிட்டாயும் சேர்த்து வாங்கி வருவது, அப்பாவோடு ரைஸ் மில் சென்று நெல் அரைத்து தவிடு, உமி , அரிசி என்று   தனித் தனியாகப் பிரிந்து வருவதை வேடிக்கை பார்த்து  கூடவே சேர்ந்து பைகளில் எடுத்து வருவது என்று எத்தனையோ வேலைகள் ) நேரம் போக , மீதி இருக்கும் நேரம்  எல்லாம் அந்த லைப்ரரிதானே கதி.


அன்றன்றே வரும் விகடன் , குமுதம்,  கல்கி , ராணி துக்ளக் ,     கண்ணன், கோகுலம், கலைக்கதிர் , அமுதசுரபி, கலைமகள் , பேசும்படம் , பொம்மை என்று சிலவற்றில் படம் பார்த்தும் ,சிலவற்றைப் படித்தும் , கதை, கவிதை, ஓவியம் , கட்டுரைகளில் ஆர்வம் ஏற்பட்டு , தானும் எழுதியும் வரைந்தும் பார்த்துத் திரிந்து கொண்டிருந்த காலம். 

ஈர்த்த எழுத்துக்கள் கல்கி , நா பார்த்தசாரதி, லட்சுமி, வாண்டுமாமா,நாடோடி , மேதாவி, ரங்கராஜு , அப்துல் ரஹீம், பாரதிதாசன், திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர் என்று எத்தனை இமயங்கள். இவர்களை அடையாளம் காட்டி படிக்க வைத்த அந்த நூலகர்  என்றும் நினைவில் நிற்கிறார். 


பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் , இளைய பிராட்டி உரையாடல்கள்  


பொன்விலங்கில்   சத்யமூர்த்தி மோஹினி உரையாடல்கள் 


மிதிலா விலாஸில் தேவகி , ஈஸ்வரன்  உரையாடல்கள் 


அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த மணியம், கோபுலு,  விஜயா படங்கள்.

  இந்த லைப்பரரியில் இருந்த புத்தகங்கள் பெரும்பாலும் குறைந்த  படங்களோடு புதிதாக அச்சில் வந்த புத்தகங்கள் .  


அனைத்தும்  அதிகம் கவர்ந்தன. 


லைப்ரரி புத்தகங்களில் அப்துல் ரஹீம் அவர்களின் சுய முன்னேற்றக் கட்டுரைகளில் தெரிந்த பல பிரபலங்களின் வரலாற்றுக் குறிப்புகள் 


பாரதிதாசனின் ' இருக்கின்றாள் என்பதனால் இருக்கின்றேன் ' என்ற குடும்ப விளக்கு மற்றும்  தமிழ்ப் பற்று தெறிக்கும் கவிதைகள் 


ரா பி சேதுப்பிள்ளையின் ' ஊரும் பேரும் ' கட்டுரைகளில் தெரிந்த இயல்பான எதுகை மோனை 


வாண்டு மாமா  வின் ' மரகதச் சிலை ' வண்ணக் கதை தொடங்கி எத்தனை  சித்திரக் கதைகள் 


துக்ளக் சோவின் கிண்டல் எழுத்து , ஆனந்த விகடன் தொடர்கதைகள், தினத்தந்தியின் ' கன்னித்தீவு  ' ' புதுப்பெண் பொன்னி, அடங்காத அங்கமுத்து '


ரங்கராஜு வின் ராஜாம்பாள், ராஜேந்திரன், மோஹன சுந்தரம் என்று    திருவல்லிக்கேணியில் துப்பறியும் கோவிந்தன் .


கல்கியின் , பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவு 


லக்ஷ்மியின் மிதிலா விலாஸ்( சௌபாக்கியம் , தர்மாம்பாள்,  முதல் அத்தியாய கோபுலு படம் மறக்க முடியுமா, சிவகங்கை  தாத்தா வீட்டு  லைப்ரரியில் பின்னால் பார்த்தது  )  சூர்யகாந்தம், 


நா பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், பொன் விலங்கு , மணிபல்லவம் 


எஸ் ஏ பியின் காதலெனும் தீவினிலே 


சோவின் கோவாடீஸ்


மேதாவி மர்மக்கதைகளின் அத்தியாயத் திகில் தலைப்புக்கள் 


நாடோடியின் கதைகளில் வரும் 'சரசுவின் ' நகைச்சுவை 


தமிழ்வாணனின் சங்கர்லால் , வஹாப், தேநீர் 


தேவனின் துப்பறியும் சாம்பு (பின்னால் சிவகங்கை வக்கீல் தாத்தா  வீட்டில் பத்திரிகையில்  இருந்து பைண்ட் எடுத்து வைத்த புத்தகத்தில்  இன்னும் கண் முன் . தேவனின் துப்பறியும் சாம்பு சித்திரக் கதையாக ) 


ஓவியர்கள் வினு ( கல்கியில் , கயல் விழி )  , மாயா ( இதய வீணை சுந்தரம் பீச்சில் அமர்ந்திருக்கும்   காட்சி ) இன்னும் பல ஓவியர்கள் .


இன்னும்  சொல்லிக்   கொண்டே   போகலாம் 



இதற்கு நடுவில் நண்பர்கள் சிலர் ரகசியமாகப் பகிர்ந்து கொண்ட ' வாலிபம்', ' சரோஜாதேவி ' புத்தகங்களையும் தாண்டி நல்ல வாசிப்பு ரசனையின்  பக்கம் திருப்பியவர்.


அந்த நல்ல ரசனைக்குத் தீனி போட்டு , தீனி போட்டு அதைப்  பார்த்து ரசித்தும் , பாராட்டியும் இருந்த  அந்த லைப்ரரியன் சார் நூலக ஆசான்தானே. 


-----------நாகேந்திர பாரதி .


My Poems/Stories/Articles in Tamil and English   


புதன், 8 ஏப்ரல், 2026

ஆயனச் சிற்பி-உத்திரகோசமங்கை உறவுகள் - 2

 



ஆயனச் சிற்பி

-----------------

உத்திரகோசமங்கை உறவுகள் - 2 

------------------------------

இந்தப் பதிவுக்குரிய படங்களும் புகைப்படங்களும் நானோ, எனது மனைவி  உஷா மேடமோ வரைந்தவை . 'கிளிக் ' கியவை . நேற்றைய உத்திரகோசமங்கை கோயில் உட்புறப் படம் நான் வரைந்தது . இன்றைய ' சிவகாமி ' படம் உஷா மேடம் வரைந்தது. அவர்களுக்கு நன்றி .


------------

திருஉத்திரகோசமங்கை கிழக்கு ஏழுநிலைக் கோபுர வாசல் வழி உள்ளே நுழைந்ததும் கோபுர வாசல் தாண்டியதும் வலது பக்கம் அக்கினி தெப்பக்குளம். அது அக்கினி தெப்பக்குளம் என்று அழைக்கப்படும் காரணத்தை யூடியூபில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.


இடது பக்கம் நீண்ட நீண்ட கருங்கற்கள் அங்கும் இங்குமாக ஏராளம் இருக்கும். அங்கே பல சிற்பிகள் அந்த கற்களின் மேல் உளி நர்த்தனம் செய்து பல சிலைகளை உருவாக்கி கொண்டு இருப்பார்கள் . அந்த உளியின் சப்தம் அங்கே சங்கீதமாக ஒலித்துக் கொண்டு இருக்கும்.


அவர்களின் தலைவராக , தலைமைச் சிற்பி, ஸ்தபதி என்று அழைக்கப்படுபவர் அவற்றை மேற்பார்வை இட்டுக் கொண்டு இருப்பார்.அவரும் செதுக்கிக் கொண்டு இருப்பார்.



கிழக்குக் கோபுர வாசலுக்கு மிக அருகில் தான் அவனது பள்ளிக்கூடம் பள்ளிக்கூட இடைவேளையில் கோயிலுக்குள் சென்று , அவர் அருகில் அவர் சிற்பம் செதுக்கும் அழகை ரசிப்பது வழக்கம். ' தள்ளி நில்லு தம்பி ,கல்லு தெறித்து கண்ணிலே விழுந்திடும் ' என்று அவர் எச்சரிப்பது உண்டு

அவர் கண்களை மறைத்து துணி அணிவதில்லை. உளியின் உரசலில் கற்கள் போகும் திசை அவருக்குத் தெரியும்.


நீண்ட கருங்கல்லாகக் கிடந்ததைப், பல நாட்களுக்குப் பிறகு ஒரு உருவமாக மாற்றி நடனம் ஆடும் அழகை அவர் கொண்டு வரும் அந்த கலை வண்ணம், அவர் கை வண்ணம் , உளி வண்ணம், மெய் சிலிர்க்க வைக்கும். . இன்றும் உத்தரகோசமங்கை பிரகாரங்களில் அவரும் அவரது குழுவினரும் செதுக்கிய சிற்பங்கள் உண்டு. ஒரு உருவத்தின் வாய்க்குள் அடங்கி வெளியே வராமல் உருளும் கல் ஒன்று , பின்னிக் கொண்டிருக்கும் பாம்புகள், அந்தக் கலையின் திறமைக்கு சில துளி சான்றுகள். இன்னும் சுற்றுப் பிரகாரங்களில் எத்தனை எத்தனையோ .


அப்போதுதான் , கல்கியின் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்திருந்த வயது. அவனது அப்பத்தாவிற்கு, அவன் ஒரு கையில் ஈர்வேலி (பேன் எடுக்கும் நீண்ட சீப்பு ) கொண்டு தலையில் இழுத்து, விழும் பேனைக் குத்திக் கொண்டு , மறு கையில் தடிமன் ஆன சிவகாமியின் சபதம் புத்தகப் பக்கங்களை புரட்டிக் கொண்டு படித்துக் காண்பித்துக் கொண்டு இருந்த காலம். மகேந்திர பல்லவர் நரசிம்ம பல்லவரிடம் சொல்லும் இந்த வசனம் . அதன் சாரத்தை மட்டும் இங்கே சொல்கிறேன். நிஜ வசனங்களை சிவகாமியின் சபதத்தில் படித்துக் கொள்ளலாம்

---

மகேந்திர பல்லவன் நரசிம்மனிடம் சொல்லும் கருத்து:


“இது சாதாரண கல் அல்ல, நரசிம்மா!

கல்லில் உயிர் ஊற்றுவது தான் கலை.

இந்தக் கற்கள் பேசும்…

நம்மைப் போல் மனிதர்கள் மறைந்தாலும்,

இவை நம்முடைய எண்ணங்களையும் புகழையும் நிலைநிறுத்தும்.”


அவர் மேலும் சொல்வது:


“நாம் இன்று இருக்கிறோம், நாளை இல்லாமலாகிவிடலாம்.

ஆனால் இந்தச் சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பேசும்.

அதனால்தான் நான் போரை விடக் கலையைக் காதலிக்கிறேன்.”


இதற்கு நரசிம்மன் உணர்ச்சியுடன்:


“அப்பா, கல்லில் உயிர் இருக்கிறதா?”


மகேந்திரன்:


“உயிர் இருக்கிறது…

அதை பார்க்கும் கண்ணும், உணரும் மனமும் இருந்தால்!”


----------

இதைப் படித்துவிட்டுச் சென்று அந்தச் சிற்பியைப் பார்க்கும் போதெல்லாம் கற்களுக்கு உயிர் கொடுத்த 'ஆயனச் சிற்பியாகவே ' அவர் தெரிந்தார் அவனுக்கு . அந்த ' ஆயனச் சிற்பி ' க்கு மகள் இல்லை, சிவகாமி இல்லை என்பதை கல்கியின் சிவகாமியின் சபதம் கதை படித்தவர்களுக்கு சொல்லி விடுகிறேன்.


------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English 


திருநீற்று ஓதுவார் -உத்திரகோசமங்கை உறவுகள் - 1

 



திருநீற்று ஓதுவார்

---------------

உத்திரகோசமங்கை உறவுகள் - 1 

------------------------------

திருஉத்திரகோசமங்கை கோயிலின்  வடக்கு வாசல் பக்கம் வெளி வரும்போது அங்கே திண்ணையில் படுத்திருந்தவர் மெதுவாக எழுந்து தடியை ஊன்றியபடி நடந்து செல்வதைப் பார்த்தான் . நெற்றி,  நெஞ்சு கைகள் முழுக்க பட்டை பட்டையாக பூசப்பட்ட திருநீறு அவரை அவனுக்கு அடையாளம் காட்டியது .


அருகில் நெருங்கிச் சென்று , 'ஐயா , ஓதுவார் ஐயா ' என்றவுடன் திடுக்கிட்டுத் திரும்பியவர் , 'யாரு ' என்று கண்களை இடுக்கிப் பார்த்தார். ' ஐயா , நான்  கோயில் பழைய பேஷ்கார் நடராஜ பிள்ளை பேரன் ' . என்றதும், 'ஓ அவரா, மறக்க முடியாதுப்பா உன் தாத்தாவை எல்லாம் , என்னை எப்படி கண்டுபிடிச்ச, அப்ப எப்படி இருந்தேன், இப்ப எலும்பும் தோலும் தான் ' . ஐயா உங்க திருநீறை வச்சுதான் கண்டுபிடிச்சேன் .'


'ஆமா அதுதானே அப்பவும் இப்பவும் என் அடையாளம் ' என்றவரிடம் சிறிது நேரம் பேசி அவரை அவரது வீடு வரை சென்று விட்டுவிட்டு பஸ்ஸில் திரும்பும்போது மனதிற்குள் ஒலித்தது அவரது கணீர் குரல் .


'மந்திரமாவது நீறு

வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு

துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு

சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன்

திருஆல வாயான் திருநீறே! '


நெஞ்சுவரை தூக்கிக் கட்டப்பட்ட நாலு முழ வேட்டியோடு ,அவரது கட்டுமஸ்தான  உடம்பெங்கும் பூசப்பட்ட திருநீறோடு, தனது கணீர்க்  குரல் எடுத்து ஓதுவார் ஸ்வாமிகள் இந்தப் பாடலைப் பாடுவதைக் கேட்பதற்கே கூடியிருக்கும் கூட்டம்.


எல்லாப் பூஜைகளுக்கு முன்னும், நடுவில்  அலங்காரத்திற்குத்  திரையிடப்படும்போதும் மக்களை இசையெனும் இன்ப வெள்ளத்தில் மயக்கி மகிழ்ச்சியோடு காத்திருக்க வைக்கும் மகத்தான இசை வாணர் அவர்.


'ஏன் தாத்தா , இம்புட்டுத் திருநீறு பூசியிருக்காரு இவரு  ' என்ற கேள்விக்கு தாத்தா சொல்லிய ஞானசம்பந்தர்  திருநீற்றுப் பதிகம் பாடிய வரலாறும், கூன் பாண்டியனின் வெப்ப நோய் தீர்ந்த வரலாறும் திருநீற்று மகிமையை எடுத்துச் சொல்ல அதன் மருத்துவ குணமும் தெரிய வந்தது. 


அப்போதெல்லாம், வீட்டில் எல்லாவற்றுக்கும் திருநீறே மருந்து. தேள் கடிக்குத்  திருநீறு குழைத்துப் பூசுவது.வயிற்று வலிக்கு திருநீற்று  பசை வயிற்றின் மேல். காலையில் குளித்து முடித்து விட்டு வந்தவுடன் நெற்றியில் திருநீறைப் பூசிவிட்டு  , வாயில் கொஞ்சம் திருநீறை வைத்து விடுவது .  காரணங்கள் புரிய ஆரம்பித்த வயது .


தொடரும் நாதஸ்வர, தவில் இசை என்று இசையும் பக்தியும் கலந்த கோயில் நிகழ்வுகளில் எல்லாம் பிரதானமாகத் தெரிந்தவர் அந்த ஓதுவார் ஸ்வாமிகள். பிறகு திருவிழாக்  காலங்களில் சாமியும் அம்மனும்  தெரு உலா வரும்போது ஓதுவார் ஐயா பாடிக்கொண்டு போக அதற்குத்  தலை ஆட்டிக்கொண்டு எங்கள் தாத்தா நடந்து சென்ற காட்சியும் கண் முன்னே வந்து போனது .


அங்கே அம்மனுக்கும்  சாமிக்கும் , எத்தனை வித அபிஷேகங்கள், எத்தனை வித  தீப ஆராதனைகள். இந்த அபிஷேக ஆராதனைகளால், கோயிலின்  உள்ளே உள்ள காற்று மண்டலத்தில் ஏற்படும் அதிர்வலைகள் உருவாக்கும்  ஆரோக்கிய விஷயங்களை பற்றி பின்னால் தான் தெரிந்து கொண்டோம் .


அப்போதெல்லாம் கோயிலுக்குள் ஆவலுடன் அவன் எதிர்பார்த்த  தருணம் , ஓதுவாரின் இசையும் ,  பிரசாதம் கொடுக்கும் தருணமும் தான். . பரிசாரகர்கள் பக்தியுடன் சமைத்த பிரசாதங்களை  சாமிக்கும் அம்மனுக்கும் , அர்ச்சகர்கள் மூடியும் திறந்தும் ரகசியமாகக் காண்பித்து விட்டு  ,  சுற்றுப் பிரகாரம் சுற்றி விட்டு வருவார்கள் .


நாம் பொறுமையோடு காத்திருக்கும் நேரத்தில் ஓதுவார் அய்யாவின் தேவார  திருவாசகப் பாடல்கள்தான் நம் பசியை மறக்க வைக்கும் இசை அமுதம் . அதற்குப் பிறகு கிடைக்கும் அந்தப் பிரசாதங்கள் சில சமயம் ,சுண்டல்  ,  சில சமயம், சர்க்கரை சாதம், சில சமயம் தயிர் சாதம் என்று அவற்றின் ருசி இப்போதும் நாவில் எச்சில் ஊற வைக்கிறது . அதோடு சேர்த்து ஓதுவார் ஸ்வாமிகளின் நினைவும் தான். நாவில் தேவார இசையை ஊற வைக்கும் .


———நாகேந்திர பாரதி 


குறிப்பு : இன்னும் தொடரும் திருஉத்திரகோசமங்கை  நினைவுகள். அவர்களின் நினைவுகள்  . அந்த நினைவுகளை இப்படி நெடுந்தொடராய் எழுத நினைத்ததன் காரணம் முதலில் சில வருடங்களுக்கு முன்பு நமது இரா. முருகன் சார் அவர்கள் எழுதிய 'ரெட்டைத்தெரு ' சிவகங்கை பற்றிய இளம்பிராயக்  கட்டுரைகள். நானும் சிவகங்கையில் பி யு சி படித்த நினைவுகளைக் கிளப்பி விட அப்போது நான் கதை புதிது குழுவில் எழுதிய மதிப்புரையில் ' திருஉத்திரகோசமங்கை ' பற்றி எழுத வேண்டும் என்று எழுதியது. தொடர்ந்து சமீபத்தில்  , ரம்யா வாசுதேவன் அவர்கள்  கலை புதிது குழுவில்  எழுதிய ' அவளும் நானும் '  தொடர் அந்தப் பழைய ஆசையை மறுபடி உசுப்பி விட்டது .  . நான் பார்த்த,  பழகிய பலர்  இதில் வருவார்கள் .  இந்த ' உத்திரகோசமங்கை உறவுகள் ' தொடரில்  . . நன்றி.


------------நாகேந்திர பாரதி

My Poems/Stories/Articles in Tamil and English 


ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

துருவாதேவி (யாரோ ராமமூர்த்தி) சிறுகதை மதிப்புரை - கலை புதிது குழுவில்

 துருவாதேவி (யாரோ ராமமூர்த்தி) சிறுகதை  மதிப்புரை  - கலை புதிது குழுவில் 

-----------------------

குவிகம் சுந்தரராஜன் அவர்களின் இளவல் , நண்பர் யாரோ ராமமூர்த்தி அவர்களின் சரித்திரக் குறும்புதினம் 'துருவா தேவி ', மார்ச் மாத குறும்புதினம் இதழில். இந்தியச்   சரித்திரத்தின் சுவாரசியமான நிகழ்வுகளைக் கதைகளாக எழுதி  அவற்றை , 'சரித்திரம் பேசுகிறது ' என்ற தலைப்பில் நான்கு பாகங்களாக வெளியிட்டவர் நமது ராம மூர்த்தி அவர்கள் என்பது நம்மில் பலர் அறிந்ததே. 


அண்ணன் சுந்தரராஜன் அவர்கள் ஆங்கில இலக்கியச்  சரித்திரங்களை குவிகம் மின்னிதழில்  தொடராக எழுத , தம்பி ராமமூர்த்தி இந்திய இலக்கியச்  சரித்திரங்களை குவிகம் மின்னிதழில் தொடராக எழுத , படித்து மகிழ்ந்த நமக்கு இந்தத்  ' துருவா தேவி ' யும் இலக்கிய இன்பம் அளிக்கும் இரண்டாம் சந்திரகுப்தனின்   கதையாக வெளிவந்துள்ளது.


'குப்தர்கள் காலம்  பொற்காலம்  ' என்று பள்ளிப்பருவத்தில் தேர்வில் கட்டுரை எழுதி மதிப்பெண்கள் வாங்கிய ஞாபகம் வந்தது. அந்தப் பொற்காலத்தின் அகமும் புறமும் கலந்த  இந்தக் கதை அன்றே வந்திருந்தால் நாம் இதையும் சேர்த்து எழுதி , அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்போம் என்று தோன்றியது. 


என்ன செய்வது , அப்போது நமது ராமமூர்த்தி அவர்களும் பள்ளிப் பாடம் படித்துக் கொண்டு இருந்த சிறுவர் தானே. இன்று சரித்திர ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு அவர் கொடுத்துள்ள இந்தக் குப்தரின் கதையில் காதல், வீரம், பாசம் , துரோகம் , நாடகம் வேஷம் அனைத்தும் கலந்து ஒரு பல்சுவை இலக்கியமாக ' துருவாதேவி 'வந்துள்ளாள். 


காதல் காட்சிகள் , உரையாடல்கள் எல்லாம் ஒரு திரைப்படம் பார்க்கும்  திருப்தியைக் கொடுக்கின்றன. உதாரணத்திற்கு துருவா தேவியிடம் உஜ்ஜயினி செல்லும் வழியில் இரண்டாம் சந்திரகுப்தன் பேசும் வசனங்கள்  ' தேவி, ஆண் மயில் தான் அழகு என்று சொல்வார்கள். இல்லை . பொய். பெண் மயில் தான் அழகு ' என்று தொடரும் வசனங்களில் கொஞ்சம் நமது ' கல்கி ' அவர்களின் காதல் நடையைக் கடன் வாங்கி உள்ளார். திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்ற தைரியம் போலும் . 


அதைத் தொடரும் வீர நிகழ்வுகளில், சிங்கத்துடன் இரண்டாம் சந்திரகுப்தன் மோதும் இடங்களில்   சாண்டில்யனின் வேக நடை. இப்படி ஆரம்பமே அகமும் புறமும் கலந்து நம்மை கதைக்குள் இழுத்துச் செல்ல , தொடரும் நிகழ்வுகளில் மன்னர் மரணம் , அண்ணனின் அரசியல் சூழ்ச்சி , எதிரி மன்னனின் படை  எடுப்பு, காதலில் சோகம் , தொடரும் வீர நிகழ்வுகள் , என்று தொடர்ந்து இறுதியில் சுபமாக முடியும் போது ,நமக்கும் ஒரு நல்ல சரித்திரத் திரைப்படம் பார்த்த திருப்தி . 


திரைப்படம் என்று நான் சொல்வதற்கு இன்னும் ஒரு முக்கியக் காரணமும் உண்டு. 

இடை இடையே அவர் காட்சிகளுக்குப் பொருத்தமான திரைப்பாடல் வரிகளையும் உபயோகப்படுத்தியுள்ள விதம் தான். 

'வழி நெடுகக் காட்டு மல்லி, காடே மணக்குது , என்ற சமீப காலப் பாட்டை நினைவுபடுத்தி , கதை போகும் போக்கில்  ' சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் ' ' என்றும் துன்பம் இல்லை , இனித் துயரமில்லை ' என்ற பழைய பாடல் வரை நினைவு படுத்தும் திரைப்பாடல் வரிகளும் அவரது பாணியில் பரவிக் கிடக்கின்றன. மொத்தத்தில் குப்தர்களின் பொற்காலத்தைப் புரிந்துகொள்ள வைக்கும் ஒரு ஜனரஞ்சகமான சரித்திரக் குறும்புதினம்.  படித்து மகிழ்வோம். 


--------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


சிறகு இதழ் மதிப்புரை - கலை புதிது குழுவில்

 சிறகு இதழ்  மதிப்புரை  - கலை புதிது குழுவில் 

-----------------------


சிறகு ரவி அவர்களின் 'சிறகு ' இதழோடு( 167 -168 ) இந்த முறை ' இறகு' இணைப்பு. மைக்ரோ கதைகளின் கூடு என்ற அழகான பெயரோடு . சிறகுக்குள் இருப்பதுதானே இறகு. பொருத்தமான பெயரும் கூட .


அவர் தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் பாதிக்கு மேல் பெண் எழுத்தாளர்கள், இந்த இறகு இணைப்பில் 150 வார்த்தைகளுக்குள் எழுதிய, மைக்ரோ கதைகள். அவற்றில் பாதிக்கு மேல் நமது அழகியசிங்கரின் கலை புதிது குழும பெண் எழுத்தாளர்கள் . மகிழ்ச்சிக்குரிய விஷயம். வாழ்த்துகள் எழுத்தாளர்களுக்கு. நன்றிகள் சிறகு ரவி சார் அவர்கட்கு .


முதலில் அவற்றில் சிலவற்றைப் படித்து விட்டேன். அவை .


நமது அட்மின் சுகன்யா மேடத்தின் கருணை மனம் வெளிப்படும் 'தாம்பூலம் ' சிறுகதை .

அனுராதா மேடத்தின் குறும்பு மனம் வெளிப்படும் 'அனன்யாவின் தம்பிப் பாப்பா '.

அப்பு சிவாவின் விளையாட்டு மனம் வெளிப்படும் ' உப்பு மூட்டை '.

சிறகு ரவி அவர்களின் நகைச்சுவை மனம் வெளிப்படும் ' பெல்ட் '. சசிகலா மேடத்தின் நெகிழ்வு மனம் வெளிப்படும் ' தொடுகையின் இன்பம் '.

கிரிஜா மேடத்தின் ஐடியா மனம் வெளிப்படும் ' ரகளை '.

ரேவதி ராமச்சந்திரன் மேடத்தின் சம்பிரதாய மனம் வெளிப்படும்' பொன்னூஞ்சல் '.

விஜயலக்ஷ்மி மேடத்தின் பயண மனம் வெளிப்படும் 'தேன் நிலவு '.

சாய் ரேணு மேடத்தின் துப்பறியும் மனம் வெளிப்படும் ' மணி'.

சுரேஷ் அவர்களின் புத்திசாலி மனம் வெளிப்படும் ' பொன்னூஞ்சல் கனவு '


இப்படி 150 வார்த்தைகளுக்குள் தேன் சொட்டும் தேன் கூடு இந்த மைக்ரோ கதைக் கூடு.


இத்துடன் வழக்கம் போல் தேர்ந்தெடுத்த கதைகள், கவிதைகள், கட்டுரைகளுடன் சிறகு இதழ். படித்து மகிழுங்கள்


----------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English 


சனி, 4 ஏப்ரல், 2026

'ஆரிரரோ ' சிறுகதை மதிப்புரை - கதைபுதிது நிகழ்வு

'ஆரிரரோ ' சிறுகதை மதிப்புரை- கதை புதிது நிகழ்வு 

---------------------------

நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே


சுந்தரபாண்டியன் அவர்களின் ' ஆரிராரோ ' சிறுகதை


'மலடி'  என்று சொந்தங்களால் அவமானப் படுத்தப்படும் ஒரு பெண் எடுத்த முடிவைச் சூசகமாகக் காட்டி 'ஆரிராரோ ' என்று அவள் தன் பெண்ணை தாலாட்டுவதோடு முடியும் கதை. 


ஆரம்பமே அட்டகாசம். அந்த ஊரின் காலை நேரத்தின் வர்ணனையோடு  கதையும் ஆரம்பிக்கிறது . நாயகி சொர்ணம் பெண் குழந்தை பெற்று தாயாரின் வீட்டில் இருக்கிறாள் . அங்கே அவள் பாட்டியும் அத்தையும் விடியக் கருக்கலிலேயே எழுந்து, பின்புறக் களத்துக் கிணத்தில் நீர் சேந்தி,  அண்டாக்களையும் குடங்களையும் நிரப்பி , முற்றம் தெளித்து பெருக்கி ,  கோலம் போட்டு நிமிர்வதற்கும் , சொர்ணம் தூங்கி விழிக்கவும் சரியாக இருந்தது . குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறாள் . வயிறு பசித்தால் மட்டும் தாங்க மாட்டாள் . இந்த இடத்தில் குழந்தையை  ' வயிற்றுக் கள்ளி  '  அதாவது பசி தாங்க  மாட்டாள் என்று வட்டார வழக்குப் பேச்சில் சொல்லும்போதே கதையின் சஸ்பென்ஸும் ஆரம்பித்து விடுகிறது .


இப்போது குழந்தை பெற்றவளைப் பார்க்க வரும் சித்தியின் பேச்சு , அவளை சொர்ணத்தின் அம்மா வரவேற்பது என்று வரும் உரையாடல்களில் , கிராமத்துப் பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள்  வந்து விழுகின்றன அழகாக.


அந்தச் சித்தி அவள் அக்காவிடம், சொர்ணத்தின் அம்மாவிடம் ' ஆமாக்கா இப்பதான் மொத க்  காருக்கு வந்தேன் , சுகமாயிருக்கியா , இனிமே சுகத்துக்கென்ன , கட்டிப் பொண்ணு வந்துட்டா , கட்வுள் இப்பதான் கண்ணைத் தொறந்திருக்காரு '


ஒரு வருஷமா , ரெண்டு வருஷமா, பத்து வருஷமா இல்லாம போச்சே ,பாக்காத கோயிலா , பிடிக்காத டாக்டரா , கடுக்கற  ஜோசியன் கரெக்ட்டாதான் சொல்லி இருக்கான் ,  சொர்ணம் வயித்தில சொக்கத் தங்கம் வரத்தான் செய்யும்னு '


குழந்தை அழவே சொர்ணத்திடம் கொடுத்தாள் சித்தி .


'ஆவு ஆவு ன்னு பறக்குது வயித்துக் கள்ளி ' , அவ அப்பனை மாதிரி '


சொர்ணம் சொல்லி முடிக்கும் முன்னே அவள் கணவன் ஆறுமுகம் அங்கே வருகிறான் . ' என்னடி , காலையிலேயே என்னைத் திட்டுறே , நானென்ன வயித்துக் கள்ளனா '


'நான் உங்களையா சொன்னேன் '

பின்ன அவ அப்பன்னா வேற யாரு '


சொர்ணம் தலை குனிந்தாள்  என்ற வரிகளில் கதையின் சஸ்பென்ஸ் லேசாக அவிழ்கிறது .


இப்போது அவள் கணவனைப் பற்றிய விபரங்கள். சென்னையில் தனியார் கம்பெனியில்   கேஷியர் உத்தியோகம் . அவன் நண்பர்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி ஒரு வருஷத்தில் குழந்தை பிறந்து விட இவர்களுக்கு மணம்  ஆகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காததால்  பத்து வருஷத்திலே அவளை அவன் படுத்திய பாடு . 'கடவுளுக்கு கண் இருந்தா கலங்கிப் போவாருன்னு ' சொர்ணத்தோட அப்பா சொல்ற அளவுக்கு  கொடுமை .


பெரம்பூரில் சிறிய வீடு . தண்ணீர்க் கஷ்டம். என்று அந்த நடுத்தரக் குடும்ப வாழ்க்கையைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு முக்கியக்  கருவுக்கு , ஆம் கரு வராத கருவுக்கு ‘ உடனே வந்து விடுகிறார் ஆசிரியர். மூணு வருஷமா குழந்தை வரல்லே. உடனேயே ' சொர்ணத்தோட  மாமியாரோட வார்த்தை , அவள் சம்பந்தியமா கிட்டே இப்படி .


'என்ன செய்வீங்களையோ , ஏது செய்வீங்களோ , எனக்கு பேரப்பிள்ளை வேணும் ' சொர்ணத்தின் மனதில் ஆழமாகப்  பதிந்த வார்த்தைகள் இவை என்பது நமக்கு கதையின் முடிவில் தான் புரியப் போகிறது .


தொடர்வது சொர்ணத்தின் பெற்றோர் எடுக்கும் முயற்சிகள் .


முதலில் முப்பந்தரம் இசக்கியம்மனுக்குப் பொங்கல்


அடுத்தமுறை திருவனந்தபுரம் டாக்டர் பாலகிருஷ்ணன் . அவர் சொல்வது. ' இவளிடம் எந்த மிஸ்டேக்கும் இல்லை,  அவ புருஷனைக் கூட்டிட்டு வாங்க . ' அவள் புருஷன்  அதற்கு மறுக்க , சொர்ணத்துக்கும் மாமியாருக்கும்  வாய்ச்சண்டை இப்படி.


‘நீ மலடு , உன் பெரியம்மா பெண்ணுக்கு குழந்தை இல்லே, அந்த வம்சம்தானே நீ ' என்று குத்த பதிலுக்கு சொர்ணம் ' பெரியம்மா மகளுக்கு குத்தம் இல்லே அந்த அத்தானுக்குத்தான் குறை ன்னு டாக்டர் சொல்லிட்டாரு '


அப்ப என் மகன் மலடனா


ஒங்க புள்ளைய அனுப்பி சோதிச்சுப் பாருங்க , எனக்கு மட்டும் குழந்தை ஆசை இல்லையா என்ன '


என்று தொடர்ந்த சண்டையில் முடிவில் அவள் கணவன் , நாகர்கோவில் டாக்டர் நடேசனிடம் பார்க்கச் சொல்ல , அவர் ஏற்கனவே இவர்கள் சொல்லி வைத்திருந்த படி , அவள் கணவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிப் பார்க்கச் சொல்ல , சொர்ணத்தின் பெற்றோர் தவித்துப் போய், மற்றும் ஒரு டாக்டரிடம் , மாதம் ஒருமுறை நாகர்கோயில் விஜயம் செய்யும் , டாக்டர் முத்துகாளியைப்  பார்க்க, சொர்ணத்தையும் அவள் கணவன் ஆறுமுகத்தையும்  அனுப்ப , அவர் கொடுத்த ஏராள மாத்திரைகளை வாங்கிக் கொண்டு கணிசமான பணத்தையும் கொடுத்து விட்டு திரும்புகின்றனர்.


இந்த இடத்தில குழந்தைப் பேறுக்குத் தவிக்கும் தம்பதிகளை வைத்து எத்தனை மருத்துவர்கள், எத்தனை மருத்துவமனைகள் தொழில் நடத்துகின்றன என்ற காட்சியை நாம் தொலைக்காட்சிப் பெட்டியிலே பார்ப்பது எல்லாம் ஞாபகம் வரும்படி , அந்த சமுதாய பிரச்னையை நம் கண் முன் கொண்டு வந்து காட்டுகிறார் ஆசிரியர்.


அந்தப் பெண் சொர்ணத்தின் மேல் நமக்கு அனுதாபம் ஏற்படும் படி கதையைக்  கொண்டு செல்கிறார் ஆசிரியர். 


அடுத்து வருவது கிளைமாக்ஸ் சீன்


சாத்தான்குளம் கோயிலுக்குப் பொங்கல் வைக்கச் செல்கிறது சொர்ணத்தின் குடும்பம். வண்டியை ஓட்டி வருபவன்  முத்துப் பாண்டி. சொர்ணத்தின் அத்தை பையன். அரைக் கிறுக்கு, அநாதை. சொர்ணத்தின் வீட்டில் வளர்ந்தவன். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுவான். உடல் வாட்ட சாட்டமாக தேர்த் தடிகளைப் போல.


அவர்கள் அனைவரும் சாத்தாங்கோயிலில் பொங்கல் இட்டு பாயாசம் வைத்து , சாப்பிட்டு அன்று இரவு அங்கேயே தங்கி விட்டு , மறுநாள்


காலை திரும்புகிறார்கள். சொர்ணத்தின் முகத்தில் சாத்தாவின் அருள் கிட்டியது போல தனிக் களை.


சில நாட்கள் கழித்து, சொர்ணத்தின் அம்மா, வாயெல்லாம் பல்லாக வருவோர் போவோரிடம் எல்லாம் சொல்வது ' சொர்ணம்  குளிக்காம  இருக்காளாம், எழுத்து வந்திருச்சு '.


தொடர்வது சந்தோஷ நிகழ்வுகள்.டாக்டர் முத்துக்காளியின் மருந்துதான் காரணம் என்று அம்மா சொல்ல , சாத்தாவின் செயல்தான் என்று அப்பா சொல்ல , சொர்ணம் புருஷனைக் கடைக்கண்ணால் பார்க்க , அவன் ஆண்மை நிரூபிக்கப் பட்ட மகிழ்வில் இரண்டும் தான் என்று சொல்கிறான். வளைகாப்பு , குழந்தை பிறப்பு என்று அந்தக் குடும்ப நிகழ்வுகளை எல்லாம் ஆசிரியர் அந்த தெக்கத்திப் பழக்கங்களோடு அழகாக விவரிக்கிறார். கதையில் படியுங்கள் .


குடுமபம் அனைவரும் சேர்ந்து இருந்து சாப்பிட்டு முடிக்க  , பின்கூடத்தில் சாத்தாங்கோயிலுக்கு வண்டி ஓட்டி வந்த முத்துப் பாண்டி, சொர்ணத்தின் அத்தை பையன் , அரைக்கிறுக்கு வயிறு புடைக்க மூன்றாவது முறையாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். சொர்ணம் குழந்தைக்கு 'ஆராரோ ,ஆரிராரோ '  என்று அர்த்தத்தோடு தாலாட்டினாள். குழந்தை மீனு பாட்டின் அர்த்தம் தெரியாமலே தூங்கிப் போனாள். முத்துப்பாண்டி பெரிதாக ஏப்பம் விட்டான். நல்லவேளை குழந்தை விழிக்கவில்லை . அவள் கணவன் ஆறுமுகத்திற்கும் தூக்கம் கண்களை சுழற்றியது .


கதையின் கடைசியில் வருகின்ற அந்த ' அர்த்தம் ' என்ற வார்த்தையிலும்,  ஆரம்பத்தில் வந்த 'வயிற்றுக் கள்ளி ' என்ற வார்த்தையிலும் கதையின்  முழு அர்த்தமும் நமக்குப் புரியும்படி கதையை முடிக்கிறார் ஆசிரியர்.


'பொம்பள மனசு ஆழம் ' என்ற சினிமாப்  பாடலும்   நினைவுக்கு வந்தது  . அதோட சேர்ந்தே இக்காலத்தின் குழந்தைப் பேறு மருத்துவனைகளின் செயல்களும் ,   செயற்கைக் கருத்தரிப்பின்  விபரங்களும்  அக்காலத்தில்  குழந்தைப் பேறு இல்லாமல்  கொடுமைப்படுத்தப்பட்டுப்  பத்து வருடங்களாகச் சொர்ணத்தின் மனம் பட்ட பாடும் சேர்ந்தே நினைவுக்கு வந்தன. படிக்கும்போது உங்களுக்கும் இவை அனைத்தும் நினைவுக்கு வரலாம்.  ஆசிரியருக்கும் அழகியசிங்கருக்கும், கேட்ட அனைவருக்கு நன்றி. வணக்கம்.


----------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English  


'அணையாத தமிழய்யா தீபம்' - உத்திரகோசமங்கை உறவுகள் - 8

  'அணையாத தமிழய்யா   தீபம்' - உத்திரகோசமங்கை உறவுகள் - 8  --------------------------- படம் வரைந்து உதவியவர் : உஷா பாரதி மேடத்திற்கு ...