ஞாயிறு, 7 ஜூன், 2026

'புது மொட்டு' சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 


'புது மொட்டு' சிறுகதை  மதிப்புரை - கதை புதிது நிகழ்வு 

-----------------

நன்றி அழகியசிங்கர் .  வணக்கம் நண்பர்களே. தங்களது கதைகளை தாங்களே சொல்வது போன்ற   இது போன்ற புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தும் அழகியசிங்கருக்கு வாழ்த்துக்கள். அவரது கலைபுதிது குழுவிலும் இதுபோன்று தங்கள் கதைகளை தாங்களே சொல்லலாம் என்று கேட்டுக் கொண்டு சில நண்பர்கள் அங்கும் சொல்லி வருகிறார்கள் . கதைகளிலே ' படித்தவர் பார்வை , படைத்தவர் பார்வை  , என்று இரண்டு விதம் உண்டு என்பார்கள். இங்கே படைத்தவர் பார்வையோடு , அவர்களின் புரிதலோடு அந்தக் கதைகளைக் கேட்பதில் மகிழ்ச்சி. 

------

  

 இப்பொழுது எனது கதைக்கு வரலாம் .ஒரு  முறை  நான் குடும்பத்துடன் சென்னை பொருட்காட்சி சென்றிருந்த பொழுது அங்கிருந்த 'தாவர நர்சரி பள்ளியிலே' ரோஜாக்கள் வைத்திருந்ததைப்  பார்த்து  

 அதை வாங்க வேண்டும் என்று எனது மகள்  சொல்ல நாங்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம் . அதை ஆர்வத்துடன்  பராமரித்த  மகளுக்கு யூனிட் டெஸ்ட் வந்துவிட்டதால்  எங்களை அந்த வேலைகளை பார்க்க சொல்லிவிட்டு அவள்  படிப்பில் முழுமூச்சாக இருந்தாள்  . 


அப்பொழுது ஒரு ரோஜா மொட்டு மலர்ந்து இருந்தது  படிப்பில் மூழ்கி உள்ள அவள் அந்த மலர்ந்த பூவைப்   பார்ப்பதற்கு 'அவள் வருவாளா'  என்ற ஒரு எண்ணத்தோடு அந்தக்  கதை எழுதி இருந்தேன்.  'அவள் வருவாளா' என்று தலைப்பு கொடுத்திருந்தேன். அதுதான் நான் வைத்த முதல் பெயர். அது ' புது மொட்டு ' என்று கல்கி எடிட்டரால் மாற்றப்பட்டு 2003  இல் கல்கி இதழில் 'அறிமுக எழுத்தாளர் ' என்று எனது புகைப்படத்தோடு வெளியான எனது முதல் சிறுகதை . இந்தக் கதை வெளிவந்த அடுத்த வாரம் நேயர் கடிதத்தில் பாராட்டுக் கடிதங்கள் வந்திருந்தன. அவர்களின்  வீடுகளில் நடக்கின்ற நிகழ்ச்சி அது என்று

எனது மின்புத்தகம்  சிறுகதை தொகுப்பு பதினொன்று 'மனங்களின் மணங்கள்' தொகுப்பில் ' அவள் வருவாளா ' என்ற தலைப்பில் இந்தச் சிறுகதை உள்ளது. 

.  

  இப்பொழுதும் எனது பேத்தி நீட் போன்ற பரீட்சைகளுக்குப்  படித்துக் கொண்டிருக்கும் பொழுது  அவளுக்கு  பெயிண்டிங் போன்ற பல கலைகளில் ஆர்வம் இருந்தாலும் கூட அதற்கு  நேரம் ஒதுக்க முடியாத நிலைமை இருப்பதை பார்க்கின்றேன்.  இதுபோன்று இந்த கால இளைய தலைமுறையினருக்கு இருக்கக்கூடிய சிரமங் களால் படிப்பு என்பது  எப்படி ஒரு பாரமாக மாறிவிட்டது என்ற ஒரு கருத்து இன்றும் நாம் உணர்ந்து கொண்டு இருக்கிறோம்.


 அந்த ஒரு மெசேஜ் பற்றி கல்கி  எடிட்டர் அவர்கள் அப்போதே சொன்னார்கள்  எழுதிய முறை மிகவும் சரளமான நடையிலே அதிக  வர்ணனைகள் எதுவும் இல்லாமல் அளவாக தெளிவாக ஆற்றொழுக்காக  இருந்ததாகவும் சொன்னார்கள். 


கதை மிகவும் சிறியதுதான். ரெண்டு பக்கங்களுக்கு மேலே கதை எழுதக்கூடாது என்று எனக்கு நானே விதித்துக்கொண்ட விதிப்  படி எழுதிய கதை . நான் மேலே சொன்ன கருத்து தான்.  அதில் உள்ள எளிமையான வருணனைகளையும் அன்பான  உரையாடல்களையும் சிலவற்றை மட்டும் சுருக்கமாக சொல்கிறேன் .


அந்த பொருட்காட்சி தாவர நர்சரியில் நடக்கும்  உரையாடலில் ஆரம்பிக்கிறது கதை.

ரோஜா தொட்டி வாங்கலாமாப்பா'  என்று  கெஞ்சிய  மகளிடம் 'ஓ வாங்கலாமே' என்று  பிரியத்துடன் சொன்ன  நாதன் 'இன்னும் அரை மணி நேரம்' என்று வலிக்கும் கால்களிடம் சொல்லி வைத்தான் .  அவனும் நளினியும் மகள் ஆஷா உடன் பொருட்காட்சியை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ரோஜா செடி வைத்திருந்த நர்சரி கடையை பார்த்த ஆஷாவின் முகம் எல்லாம் மலர்ச்சி . 

இன்ஜினியரிங் படிப்பவளுக்கு பாட்டனியிலும்  ஆர்வம் .


இந்த முதல் பாராவில் அந்தக்  குடும்பத்து நபர்களின் குண நலன்கள்  வெளிப்படுகின்றன. அப்பாவின் நடந்து வந்த  களைப்பு , அதையும் மீறிய அப்பாவின்  அன்பு,  படிப்பிலும் , விருப்பிலும்  முரண்பட்ட  மகளின்   ஆர்வம்,   எல்லாம் உடனே நம் கண் முன் கொண்டு வரும் காட்சியில் வார்த்தைகள் .


அடுத்து ஒரு பின்னோட்டம். அதில் வெளிப்படும் மகளின் ரோஜாச்செடி ஆர்வம் .  



தினசரி காலை வீட்டுக்கு வரும் ரோஜாக் காரனிடம் பார்த்து பார்த்து வாங்கும் சிவப்பு மஞ்சள் ரோஜாக்கள் எல்லாம்  இங்கே செடிகளின் மேல் பூத்து நிற்கும் அழகைப்  பார்த்த அவளுக்கு  ஏகக் குஷி அந்த கதர் வேட்டி சட்டை கடைக்காரர் செடியை பாதுகாக்கும் முறைகளை கம்மிய  குரலில் விளக்க - அவர் எத்தனை முறை  இந்த முறைகளை அங்கே வந்தவர்களிடம் சொல்லி இருப்பார் என்பதை அந்த ' கம்மிய குரல் ' என்ற வார்த்தையில் கொண்டு வருகிறார் ஆசிரியர். 


 ' செங்கல் வைத்து அதன்மேல் தொட்டி  வைக்கணும் வெயில் நேராகப் படக்கூடாது  மண்ணைக் கிளறி விட்டு  உரம் போடணும்.  மாதம் ஒரு முறை மண் மாற்றியே ஆகணும்  .செடியை பூச்சி அரித்தால் மருந்து  தெளிக்கணும், தினமும் ரெண்டு முறை தண்ணீர் ஊற்றணும் ' . 

 ரோஜாச் செடி வாங்க நினைப்பவர்களுக்கு பயனுள்ள ஆலோசனையும் கிடைக்கிறது .


ரொம்ப நேர யோசனைக்கு பிறகு இளம் சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் பன்னீர் ரோஜாச்  செடியை பூத்தொட்டி யோடு தூக்கி வரும் பொறுப்பு நாதனிடம் கொடுக்கப்பட ,  'நான் கொஞ்ச நேரம் தூக்கிக்கிட்டு வரேன் 'என்ற மனைவியின் வற்புறுத்தலை முறுவலுடன்  மறுத்துவிட்டு 'பூ நசுங்காம '  என்றபடி அந்தச் செடியையே  பார்த்தபடி வரும் மகளின் ஆர்வத்தை  ரசித்தான் நாதன். 


இந்த வார்த்தைகளில்  அந்தக் குடும்பத்தின்  அன்பையும்  ஆர்வத்தையும்  நம் கண்முன் தெரிய வைக்கிறார் ஆசிரியர். 


 வீட்டுக்கு வந்ததும் பால்கனிக்கு ஓடி செங்கல் வைத்து செட்டப் செய்த பின் தான் நிம்மதியை அடைந்தாள் ஆஷா.  அந்த வாரம் முழுக்க ரோஜா புராணம் தான் தண்ணீர் ஊற்றுவது உரம் போடுவது ,காம்பை வெட்டி  விடுவது, கல்லூரிக்குச் செல்லும்போது செடிக்கு  'டாட்டா  சொல்வது , சினேகிதியை  அழைத்து  வந்து ரோஜா வளர்ப்பு பற்றி கதைகள் சொல்வது ,ஆஷாவுக்கு வேறு நினைப்பே இல்லை .தூங்கப்போகும் முன்பு செடியைப்  பார்த்து ரசிப்பாள் . 


அந்த இளம்பெண்ணின் மகிழ்ச்சியை அழகாக எளிமையாக ஆடம்பரம் அற்ற வார்த்தைகளில் நம் முன் காட்டுகிறார் ஆசிரியர். 


'அப்பா இங்கே வாங்க இந்த மொட்டு எவ்வளவு சமத்தா இலைகளுக்கு  மத்தியில உக்காந்து இருக்கு பூத்த உடன் எப்படி கம்பீரமா தலையை நீட்ட போகுது ' என்றாள் .  'பூவும் பொண்ணும்  வளர்ற வரை  பெத்தவங்க நடுவுல சமத்தா இருப்பாங்க வளர்ந்த பின்பு 'என்று மகளைச் சீண்டினாள் நளினி '  அவ உன் பொண்ணு தானே'  என்று  நளினியை அவன் சீண்டியதும் நளினியின் ஆஷாவும் அவனைச்  செல்லமாய் பிராண்டினார்கள்,


 இந்தக் காட்சியில் கிண்டலும் கேலியும் கலந்து அந்தக் குடும்பத்தின் அன்பு வாழ்க்கையை சில வரிகளில் விவரித்து விடுகிறார் ஆசிரியர். 


 இப்போது கிளைமாக்ஸ் .


 கல்லூரியில் டெஸ்ட் வந்துவிட்டது இரவு நீண்ட நேரம் கண் விழித்து படித்தாள் ஆஷா.  காலையில் தாமதமாக எழுந்து கிளம்பும் போது 'அம்மா செடிக்கு தண்ணீர் ஊற்றிடு  ப்ளீஸ் , காம்பு  கட் பண்ணிட்டியா ,அப்பா ,  மண் மாத்தணும்' சாப்பிடக்  கூட நேரமில்லாமல் பறந்தாள்  ஆஷா.  அந்த வாரம் முழுக்க பரீட்சை மும்முரத்தில்  ஆஷா  செடியைப்  பார்க்க பால்கனிக்குப்   போகவே இல்லை அங்கே புது  மொட்டு ஒன்று பூத்திருந்தது . காத்திருந்தது . பரீட்சை முடிவதற்குள் வாடி விழுந்து விடுமே அவள் வருவாளா .  முடிகிறது கதை. 


சுருக்கமான வரிகளில்  பூ மேல் அவள் வைத்திருந்த அன்போடு , அந்தப் பூவுக்கே அவள் மேல் அன்போடு பூத்து , காத்திருக்கும் அதன் ஏக்கத்தோடு கவிதை நயத்தோடு ,  படிப்பவர்க்கும்  ஒரு ஏக்கத்தை எழுப்பி விட்டு முடிகிறது கதை. 


இந்தக் கதையை நானே மறுபடி படித்தபோது கதையின் ஓட்டத்தில் உணர்ச்சியில் மூழ்கி, நான் எழுதியது என்பதையே மறந்து , மற்ற எழுத்தாளர்களின் எழுத்தைப் பாராட்டுவது போல் கொஞ்சம் அதிகமாகவே பாராட்டி இருக்கலாம்.மன்னிக்கவும். நன்றி  வணக்கம். 


------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'புது மொட்டு' சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

  'புது மொட்டு' சிறுகதை  மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ----------------- நன்றி அழகியசிங்கர் .  வணக்கம் நண்பர்களே. தங்களது கதைகளை த...