திங்கள், 25 மே, 2026

விசிறி அப்பத்தா -உத்தரகோசமங்கை உறவுகள் - 9

 


விசிறி அப்பத்தா -உத்தரகோசமங்கை உறவுகள் - 9

------------

(கையில் விசிறியுடன் அப்பத்தா -  புகைப்படம் எடுத்தவர் : உஷா பாரதி அவர்கட்கு நன்றி 

-------


விசிறி சாமியாரைப் பார்த்ததில்லை அவன்.  அடிக்கடி  கையில் விசிறி யோடு இருக்கும் அவனது  அப்பத்தா,  'விசிறி அப்பத்தா' தான் அவனுக்கு எல்லாமாக ஒரு காலத்தில் இருந்தார்கள். அந்தக் குடும்பத்தின் முழுப்  பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு வீடு முழுக்க வலம் வந்து கொண்டு அனைவரையும் அடக்கி ஆண்டு கொண்டிருந்த அந்த ஒரு ஆளுமை மிக்க பெண்தான்  அவனது  விசிறி அப்பத்தா. 


சிறுவயதிலேயே அவன் தாத்தா வீட்டுக்கு வந்து விட்டதால், அவனை வளர்த்து ஆளாக்கியவர்   அப்பத்தாதான். தன் இளவயதிலேயே, இருபது  வயதிலேயே இளம் விதவையாக தம்பி வீட்டுக்கு, அவனது தாத்தா வீட்டுக்கு  வந்தவர் தனது  சொத்துக்களை எல்லாம் தம்பியிடம்  ஒப்படைத்து விட்டு தம்பி குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும்  அதைத்  தொடர்ந்து பேரன் பேத்திகளை வளர்க்கும் பொறுப்பையும்   ஏற்றுக்கொண்டு  அந்தக்  குடும்பத்துக்கே ஒரு தலைவியாக இருந்தவர்.


அவர்களுக்கென்று நடு ஹாலில்  ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். அங்கிருந்தபடி  தான் அவனது அம்மாச்சி, சின்னம்மாக்கள் எல்லாரையும் அதட்டி    வேலை வாங்கிக் கொண்டு இருப்பார்.  தாத்தாவின் மனைவி அவனது அம்மாச்சி அவரிடம்  மரியாதையாக பயத்தோடு நடந்து கொள்வார்கள் . அப்பத்தா    வீட்டு வேலைகள் எல்லாம் மிக அனாயசமாக செய்து முடிப்பார். மூட்டை மூட்டையாக வந்து குவியும் நெல்லை அவித்து வைப்பது, காய வைப்பது, ரைஸ் மில்லில் இருந்து அரைத்து வரும் அரிசியைப் புடைத்து  உமி பிரிப்பது,  கல் எடுப்பது   , மற்றும் வந்து குவியும் புளியம் பழங்களை தடியால் ஓடுகளை  உடைத்து புளியைப் பிரிப்பது என்று பயங்கர உழைப்பாளி. அவனும் இந்த குருணை அரிசியில்  கல் எடுப்பது, புளி உடைப்பது என்று செய்தாலும் அவனுக்கு நோக்கம் அந்த அரிசியைத் தின்பதிலும் , புளியைத் தின்பதிலும் என்பதை உணராதவர் அல்ல . அதுவும் அந்தப் பச்சைப் புளி கொடுகும் . நீர் ஊறும் வாயில் . 


அவரது வயலில் வரும் நெல் விற்று வரும் காசை தனியாகச் சேமித்து வைத்திருப்பார். அவ்வப்பொழுது  பஞ்சம் வரும் காலத்தில் எல்லாம் அவர்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை  தாத்தாவுக்குக்  கொடுத்து  நிதி நிர்வாகத்திலும் கெட்டி.  சின்னம்மாக்கள் கல்யாணத்தின் போதெல்லாம் கல்யாணச்  செலவுகள் எல்லாம் வீட்டில் இருந்தபடியே தம்பிக்கு அறிவுரை சொல்லி சரியான முறையில் வழிநடத்தியவர்கள்  அவர்கள். மதுரையில் இருந்து சொந்தங்கள் எல்லாம் வரும்போது , அப்பத்தா படிக்காமலே அனுபவத்தில் எத்தனை விஷயங்கள் தெரிந்து வைத்துள்ளார் என்று வியந்து பேசியதை அவன் கேட்டிருக்கிறான். 


அவன்  ஆரம்பப் பள்ளியில் படித்த போது , அவனுக்கு முழங்காலில் 'அரும்பாரி ' என்று பொடிப்படியாக வரும். அத்துடன் கையிலும் காலிலும் சிரங்கும் வரும். அப்போது பள்ளியில்  விளையாடும் பொழுது அவனுடைய ரவுடி நண்பன் ஒருவன் அவனை தள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பான். மணலில் விழும் பொழுது முழங்காலில் உள்ள அரும்பாரியில் மணல் குத்தி வலிக்கும். அப்பொழுது  அவனுக்கு ஆதரவாக இருந்தவன் இன்னொரு நண்பன்  சங்கரன்.  சங்கரன் இவனைக் கொண்டு வந்து வீட்டில் விடும்போது சங்கரனைப் புகழ்ந்து விட்டு   அந்த ரவுடி நண்பனுக்கு திட்டு விழும் அப்பத்தாவிடம்  இருந்து . 


தினசரி காலையில்  சிரங்கு  போவதற்காக கால் கைகளில் அரப்பு தேய்த்து குளிப்பாட்டி விட்டு துடைத்து சைபால் மருந்து போட்ட  ஞாபகம் அவனுக்கு   இருக்கிறது .அதுபோல் அவனுக்கு ட்ரவுசர்  சட்டை மாட்டி விட்டு தலை நிறைய  கொழும்பு தேங்காய் எண்ணெய் முகத்தில் வழியும் படி தடவி விட்டு  முகம் முழுக்க பவுடர் அப்பி விட்டு  அவனை அலங்காரம் ( அலங்கோலம் ) பண்ணி விட்டு  பள்ளிக்கு அனுப்பி  வைக்கும் பழக்கமும் அவர்களுக்கு .அந்த  அன்பிலும் உபசரிப்பிலும்  கனிந்து உருகிய  பவுடர்,   எண்ணெயிலும் வியர்வையிலும் கலந்து  முகமெல்லாம் அங்கங்கே திட்டுத் திட்டாக இருப்பதை எல்லாம் உணராத ஆரம்பப் பள்ளிக் காலம் அது. 


அப்பத்தாவிடம்   தான் அவன் காய்கறி வாங்கும் முறையைக்  கற்றுக் கொண்டான்.  முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து வாங்க வேண்டும், வெண்டிக்காயை  நுனியை  உடைத்துப்  பார்த்து வாங்க வேண்டும். வாழைக்காயைத்  தட்டிப் பார்த்து வாங்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு வெற்றிலை, களிப்     பாக்கு  வாங்கி வர வேண்டும் . அந்த வெற்றிலைகளில் நடுவில் முற்றல் இலை இருந்து விட்டால் அவனுக்கும் திட்டு  விழும். அந்தக்  கடைக்காரருக்கும்  திட்டு விழும்.


அவர்கள் வெற்றிலை போட அமர்ந்துவிட்டால்  அதைப்  பார்ப்பதே ஒரு அழகு.   அவன் உட்கார்ந்து விடுவான். பக்கத்தில்   முதலில் களிப்பாக்கை, பாக்கு வெட்டியில் நசுக்கி கொஞ்சம் எடுத்து வாயில் குதப்பி வைத்துக் கொண்டு ,  ஒரு பிஞ்சு வெற்றிலை  எடுத்து  பின்புறம் திருப்பி தடவி, நடு நரம்பைக்  கிள்ளி விட்டு , காம்பைக்   கிள்ளி அவனுக்கு கொடுத்து விட்டு  சுண்ணாம்பு தடவி மடக்கி வாயில் போட்டு மென்றுவிட்டு நாக்கைக் காட்டி 'சிவந்துடுச்சா' என்று கேட்பார்கள் . இவனும் வாயில் வெற்றிலைக் காம்போடு ' ஆமாம் அப்பத்தா  ' என்று அதிசயிப்பான். வெற்றிலை கிடைக்காது இவனுக்கு. கோழி முட்டும் என்பார்கள். அறியாத வயதில் கோழி முட்டுவதற்கும் ஒரு பயம் உண்டாகும். வெற்றிலைக் காம்பு கிடைக்கும். அதுவும் ஒரு ருசிதான்.


 அப்பொழுதெல்லாம் மின்சாரம் கிடையாது .இரவில் படிப்பதற்கு மண்ணெண்ணெய் விளக்குதான். அதற்கு  முன்னால் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு படிப்பான். விளக்கின் நிழல் கொஞ்சம் ஓரத்தில் படிந்து பக்கத்தை மறைக்கும் போது  தள்ளி  வைத்துக்கொள்வது. பின்னால் வீட்டில் மரச்சட்டங்கள் அடித்து உள்ளேயே வயர் வைத்து மூடி  குண்டு பல்பு, பெரிய ஸ்விச் என்று வீடு முழுக்க வெளிச்சம்  வந்த காலம் பிறகு. ஆனால் அப்போதும் பேன் கிடையாது. மின்சார வருகைக்கு முன்னும் பின்னும் ஓலை விசிறிதான் . 


 பனை ஓலை விசிறி , தென்னை  ஓலை விசிறி என்று கலர் கலராக வீட்டில் நிறைய விசிறிகள்  இருக்கும். பெரும்பாலும் அப்பத்தா   விசிறியும்  கையுமாக இருப்பார்கள். அந்த விசிறிக்கு பல உபயோகங்கள் . காற்று வாங்க வீசுவது,  முதுகு அரித்தால் சொறிவது, அவன் சேட்டை செய்தால் , அவன் முதுகில் செல்லமாக ரெண்டு தட்டு தட்டுவது .   


நடு ஹாலில் படுத்தபடி, அவன்  நூலகத்தில்   இருந்து எடுத்து வரும், கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, லக்ஷ்மியின் மிதிலா விலாஸ், சூரியகாந்தம், லட்சியவாதி , ரங்கராஜுவின் ராஜாம்பாள், ராஜேந்திரன், மோஹன சுந்தரம் என்று இன்னும் பல கதைகள் படிக்கச் சொல்லிக் கேட்பார்.  நடுவில் அவர்கள் தலையில் ஓடும் பேனை ஈறுவலி வைத்து எடுத்துக் கொடுக்க , 'நரூச்' என்று குத்துவான். 


மற்றும் வீட்டுக்குள் விளையாடும் எத்தனை விளையாட்டுகள் அவர்களோடு . பல்லாங்குழியில்  ஒவ்வொரு குழியிலும் நாலு சோவி  சேர்ந்தவுடன் அது 'பசு'  என்று  அள்ளுவதும் ,  கட்டுப்பாண்டி பல்லாங்குழி விளையாட்டில்   ஓரக்குழியில் அவர்கள் பக்கம் சேர்ந்து குவியும் சோவிகளை அள்ளுவதும், நம்ம பக்கம் மூன்று குழிகள் என்று ஆகி விட்டால், ஒரே ஆட்டத்தில் நம் பக்கத்தில் இருக்கும்  அத்தனை சோவிகளையும் அள்ளித் துடைத்து விடுவதும்   என்று பல்லாங்குழி விளையாட்டுத் திறமை  அவர்களுக்கு . 


அதேபோல் தாயம் விளையாட்டில், நமது காய்களை பழம் போகவேண்டிய   சரியான இடத்தில் குத்தி தூக்கி எறிவதிலும் கில்லாடி. , மடக்கிய  கைக்குள்   அடங்கிய ஆறு சோழிகளை, ஆறு போடு, அஞ்சு போடு , பன்னிரண்டு போடு என்று சொல்லி வைத்து ஆடுவதிலும் திறமை . இப்படி பல்லாங்குழி, தாயம் எல்லாவற்றிலும் அவர்களிடம் தோற்ற பிறகு ,   கேரம் போர்டு வாங்கி வந்து விளையாடினாலும், அதிலும் சரியாக குறி வைத்து அத்தனை காயின்களையும் குழியில் சிவப்போடு சேர்த்துத் தள்ளி அவர்களோடு விளையாடுவதே தோற்பதற்குத்தான். நாம் கோபத்தோடு ' கள்ள ஆட்டம்' என்று கத்த   சில சமயம் விட்டுக் கொடுத்து நம்மை ஜெயிக்கவும் வைப்பார்கள் . 


இளம் வயதிலேயே  உடல் முழுக்க    வெள்ளை தேமல் வந்து சங்கடப்பட்டு  அப்பத்தா வீட்டை   விட்டு வெளியே வருவதே இல்லை.வீட்டுக்குள்ளேயே இத்தனை விளையாட்டுகளில் அவர் திறமைசாலி.  ஒரு  முறை அவன் உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவுக்கு வாசலில்   மேடை போட்டு வெளியே நாடகம் நடத்தினார்கள் . அவன்தான் இன்ஸ்பெக்டர் வேடத்தில் ஹீரோ. அதைப்  பார்ப்பதற்காக மட்டுமே கோயில் கிழக்கு வாசல் வெளியே  உள்ள பிள்ளையார் கோயில்  திண்ணையில் அன்று மாலை முக்காடு போட்டு   வந்து அமர்ந்து பார்த்து விட்டு அவன் இன்ஸ்பெக்டர் வேடத்தில் பேசிய  வசனங்களை எல்லாம் கேட்டுவிட்டு திரும்பியவுடன் அவனுக்கு சுற்றிப்போட்டு திருஷ்டி கழித்த பாசக்காரத்  தாயும் அவரே. 


இப்பொழுதுதான் பம்பாய் ஜெயஸ்ரீ  கர்நாடக இசைப் பாட்டு கேட்டபடி தூங்கும் பழக்கம் அவனுக்கு . அப்போது அப்பத்தாவிடம் கதைகள் கேட்டபடி திண்ணையில் தூங்கிய பழக்கம், பக்கத்து வீட்டு ஊறத்தண்ணி  அம்மாச்சி ,அடுத்த தெரு அப்பத்தா என்று  பலர் வந்து பேசிக்கொண்டு இருப்பதைக் கேட்டுக் கொண்டே தூங்கிய காலம். 


அப்பத்தா சொன்ன கால்திருடன் , அரைத்திருடன் ,  முக்கால் திருடன் கதை, நல்லதங்காள் கதை, இவற்றோடு அவரின் சொந்தக் கதையும், சோகக் கதையும் கேட்ட நாட்கள் அவை. சிக்கல் ஊரில் வேலை பார்த்த அப்பத்தாவின்  அப்பா ( அவனுக்கு அவர்  சிக்கல் தாத்தா ) , தங்கள் வயலில் விளைந்த நெல்லு மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றி , ராம்நாட் ,பரமக்குடி சந்தைகளில் விற்று வந்து அப்பத்தாவின்  தாத்தா ( அவனுக்கு அவர் நெல்லுத் தாத்தா ) இருவரும் அவரை செல்லமாக வளர்த்த காலம், விளையாடிக் கொண்டு இருந்த பெண்ணை , இழுத்து வந்து மண மேடையில் இருத்திய  காலம், 


பெரிய பெண்ணானபின், வயதில் இடைவெளி அதிகம் உள்ள கணவன் வீட்டுக்குச்  சிக்கல் ஊர் சென்றது, இரண்டு  குழந்தைகள் பிறந்து விரைவில் இறந்து போனது, மாமியார் வீட்டில், குடம் குடமாய்த்  தண்ணீர் இறைத்து, கும்பல் கும்பலாய் சேலைகள் துவைத்து, சட்டி சட்டியாய் சமையல் செய்து அந்தப் பெரிய குடும்பத்தில் உழைத்தது, ஒரு நாள் கணவன் மறைந்தது, குழந்தைகளும் இல்லாமல் தம்பியே கதி என்று தாத்தாவிடம் வந்து சேர்ந்தது என்ற கண்ணீர்க் கதைகள். 


நடுவில் வெள்ளைத்தேமல் . சில உறவுகள் விலகிய நேரம், தாத்தா குடும்பம் அவரைத் தாங்கிப் பிடித்தது. நாங்கள் எல்லாம் அவர் மேல் விழுந்து புரண்டு விளையாடி அவருக்கு கொடுத்த நம்பிக்கை என்று வந்து விழும் வார்த்தைகள். சில நேரம் தனியாக உட்கார்ந்து அமைதியாக இருப்பார். பழைய நினைப்புகள் . அவரது அப்பா, தாத்தா நினைப்பு என்று சொல்வார்.  அந்த  செல்லமான  சின்னப்பெண் பிராயம் நினைவு எப்படி வராமல் இருக்கும். 


உழைப்பே வாழ்க்கை என்று வாழ்ந்த அவர்கள் ஓயும் காலமும் வந்தது. தொடர்ந்த , அம்மாச்சி மறைவு , தாத்தா மறைவு .பிரிந்த நாங்கள் வேறு வேறு ஊர்களில். ஆனால் விடாமல் அதே ஊரில் அதே வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக தனியாக சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். பக்கத்து ஊரில் இருந்த அவனது  பெற்றோர்கள் அடிக்கடி  போய்ப் பார்த்து வந்து கொண்டு இருந்தார்கள். 


நடுவில் மதுரை உறவினர்கள் சிலர் அப்பத்தாவை  வலுக்கட்டாயமாக   வெளியூர் டூர் அழைத்துச் சென்று வந்த பிறகு அவர்கள் முகத்தில் மறுபடி மலர்ச்சி.  அங்கே இருந்து  வாங்கி வந்திருந்த சாமான்களை எல்லாம் அவர் எடுத்து விரித்து வைத்து எங்களுக்கு காண்பித்த அந்த மகிழ்ச்சியில் ஒரு  நிறைவு. அதன் பின் சொந்தங்கள் வீடுகளுக்கு, சின்னம்மாக்கள் வீடுகளுக்கு மதுரைக்கு என்று சென்று வந்தாலும், சிறிது நாட்களில் அவனது பெற்றோரின் வீட்டுக்கு , உத்தரகோசமங்கை அருகில் உள்ள ஊருக்கு வந்து விடுவார்கள். கடைசி காலத்தில் அங்கு தான் அவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். 


அவனும் ஹாஸ்டல் வாழ்க்கை   முடிந்து வேலைக்குப் போனபிறகு அவர்களை அவன் வேலை பார்த்த இடங்களில் கூட்டிச் சென்று வைத்திருந்து ,   கூத்தாநல்லூர் , தஞ்சாவூர் இன்னும் பல இடங்கள்,  சென்னைக்கும் கூட்டி வந்து காந்தி மண்டபம் பீச் போன்ற இடங்களுக்கு சென்று வந்த நிறைவோடு திரும்ப அவனது பெற்றோர் வீட்டுக்கே திரும்பி விட்டார்கள். 


அங்கும் தினசரி இரவு அவர் சொல்லும் பழைய கதைகளைக்  கேட்க ஊர்ப் பெண்கள் வீட்டு வாசலில் உள்ள வேப்ப மரத்தடியில் வந்து குழுமி விடுவார்கள். அவன் அங்கு செல்லும்போதெல்லாம் அவனும் சேர்ந்து பழைய கதைகளும் புரணிகளும் கேட்டும் , பகலில் அவர்களுடன் தாயம் பல்லாங்குழி விளையாடியும் , வேண்டும் என்றே அவன் தோற்றுப் போயும்  , பழைய நினைவுகளை பகிர்ந்து விட்டு திரும்பும் போது தளர்ந்த குரலில் கண் கலங்கச் சொல்வார்கள். 'அடுத்த முறை நீ வரும் போது நான் இருப்பேனோ , மாட்டேனோ ' . அது தான் நிகழ்ந்தது ஒருமுறை . 


செய்தி அறிந்து  அவன் குடும்பத்தோடு  வருவதற்குள் காரியங்கள் முடிந்து விட  சுடுகாடு சென்று பார்த்தது. வண்ணான் குடும்பத்திற்குக்  கொடுத்த   அவரின் பல சேலைகள் தவிர சில பழைய சேலைகள் கும்பலாக அங்கே ஒரு இடத்தில். குளித்து விட்டு வந்து ஒரே சேலையாக சுற்றிக் கொண்டு வந்து சூரியனைப் பார்த்து கும்பிட்ட படி நிற்கும் அவர் உருவம் ஒருகணம் அவன் மனக்கண் முன்னே. அவர் எந்தச் சாமியும் கும்பிட்ட ஞாபகம் இல்லை, அவர் வாழ்க்கையின் சோகம் அவரை அப்படி ஆக்கி இருக்கலாம். அவர் கும்பிட்டது சூரியனை மட்டும் தான். அவர் கட்டி இருந்த பழைய சேலைகள்  மட்டும் அங்கே சூரியனைப் பார்த்தபடி . அவர் எங்கே . 


ஒரு முறை சிறுவயதில் அவன் அப்பத்தாவிடம் கேட்ட ஞாபகம். 'உங்க அப்பா, சிக்கல் தாத்தா, உங்க தாத்தா  நெல்லுத் தாத்தா எல்லாம் செத்தபிறகு எங்கே போனாங்க அப்பத்தா ' . 'அதோ மேலே பாரு, மேகங்கள் , அந்த மேகங்களோடு மேகங்களாக மேலே உலாவிக்கிட்டு இருக்காங்க, நம்மை பார்த்துக்கிட்டு , மழை பொழிஞ்சு  நம்மைக் காத்துக்கிட்டு  ' . அவன் மேலே பார்த்தான். அங்கே சில வெள்ளை மேகங்கள். அப்பத்தாவின் வெள்ளைத்தேமல் திட்டுகளைப் போல்  அங்கும் இங்கும். 'நீங்க எந்த மேகம் அப்பத்தா '


---------------நாகேந்திர பாரதி 

( அடுத்தது   'அன்புள்ள அப்பா - உத்தரகோசமங்கை உறவுகள் -10 அத்துடன் இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது )


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விசிறி அப்பத்தா -உத்தரகோசமங்கை உறவுகள் - 9

  விசிறி அப்பத்தா -உத்தரகோசமங்கை உறவுகள் - 9 ------------ (கையில் விசிறியுடன் அப்பத்தா -  புகைப்படம் எடுத்தவர் : உஷா பாரதி அவர்கட்கு நன்றி  ...