சேர்மன் தாத்தா - உத்திரகோசமங்கை உறவுகள் - 7
---------------
அவ்வப்போது வரும் அனுபவத் தொடர்
படம் வரைந்து உதவியவர் - நன்றி உஷா பாரதி மேடம்
---------------
இன்று போல் அப்பொழுதும் இளைஞர் எழுச்சி வந்து அமைதிப் புரட்சி நடந்த காலம். ஆட்சி மாறிய காலம். மாணவர்கள் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலம். அது இரண்டாவது அல்லது மூன்றாவது போராட்டக் காலம்.
அப்போது அவனது பள்ளிக்கூடத்திலும் இந்தி கட்டாயப் பாடமாக இருந்தது. அதை எதிர்த்து மாணவர்கள் அப்பொழுது கூட்டமாக தெருக்களில் 'தமிழ் வாழ்க ஹிந்தி ஒழிக' என்று கோஷமிட்டுக் கொண்டு செல்வது வழக்கம்.
அந்த ஊரிலும், பக்கத்து ஊர்களிலும்ஊர்ப் பெரிய மனிதர்கள் பலர் இதற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் அவனது அந்த ஊரின் சேர்மன் தாத்தா அவர்கள். வயதில் மூத்தவர்களை தாத்தா பட்டம் போட்டு அழைக்கும் பழக்கம் அவனுக்கு இருந்தது . அவனது சொந்த தாத்தாவும் அந்த பஞ்சாயத்து போர்டு மெம்பர். 'சேர்மன் தாத்தா' அவனது சொந்த தாத்தாவை 'அண்ணே' என்றுதான் அழைப்பார். இருவரும் பஞ்சாயத்து போர்டு ஆபீஸில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பது எல்லாம் பார்த்திருக்கிறான் .
அவ்வப்பொழுது பஞ்சாயத்து போர்டு மெம்பர்கள் எல்லாம் சேர்ந்து பக்கத்து இடங்களுக்கெல்லாம் டூர் சென்று வருவார்கள் .வருடா வருடம் நடக்கும் கச்சத்தீவு திருவிழாவிற்கு அவர்கள் எல்லாம் சேர்ந்து சென்று வருவார்கள். ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் கச்சத்தீவு சென்று வந்துவிட்டு மறுநாள் வீடுகளுக்கு, கொழும்பு தேங்காய் எண்ணெய் ,கொழும்பு சோப்பு என்று பல வகைகள் வந்து சேரும் .
அந்த சேர்மன் தாத்தாவின் தம்பி ஒருவர், நீளமான துப்பாக்கியோடு பக்கத்து காடுகளுக்கு எல்லாம் சென்று பல பறவைகளைச் சுட்டு பிடித்து வந்து தெரிந்தவர்களுக்கு கொடுப்பார். அவர்கள் வீட்டுக்கும் பெரிய நாரை , கூழைக்கடா போன்ற பறவைகள் வரும். சமைத்துச் சாப்பிட்டது அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. அப்படி குடும்ப நண்பராக அவன் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்தவர் அந்த சேர்மன் தாத்தா.
போன வாரம் பதிவில் குறிப்பிட்டது போல் பக்கத்து ஊரில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அவருக்கு உடனுக்குடன் தெரியவரும் .அப்படித்தான் மாணவர்கள் கபடி விளையாட்டில் ஊர்களுக்கு இடையே சண்டை வரக்கூடாது என்று தடை போட்டார். தெருக்களுக்கு இடையே எந்த உரசல் இருந்தாலும் இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி ஊரை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர். . நல்ல உயரம் ஆஜானு பாகுவான தோற்றம். அவரைப் பார்த்த உடனே மற்றவர்கள் உடனே எழுந்து நிற்கக் கூடிய அளவுக்கு மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய நபராக அந்த ஊரில் இருந்தார் .
அந்த ஊரில் ,தெருக்களில் என்ன பிரச்சனைகள் என்றாலும் பிரச்சனை செய்பவர்களை அழைத்து அவர்களுடன் பேசி தீர்த்து வைப்பார். பக்கத்து கிராமங்களுடனும் நல்ல நட்புறவை வைத்திருப்பவர். போட்டி இல்லாமல் ஒவ்வொரு வருடமும் பஞ்சாயத்து போர்ட் சேர்மன் அவர்தான். ஊர்த்
திருவிழாக்களுக்கு வசூல் செய்து சிறப்பாக நடத்துவது. சுகாதார பிரச்சனை, கண்மாய், ஊரணி மேற்பார்வை என்று ஊரைக் கட்டுப்பாடாக வைத்திருந்தவர்.
அவரது வீட்டுக்குப் பக்கத்தில் அவர் ஒரு படிப்பகம் நடத்தி வந்தார்.
அதில் தினத்தந்தி உட்பட பல இயக்கங்களின் பத்திரிகைகள் ,வாரப் பத்திரிகைகள், தினசரி வரும். அருமையான தமிழ் வாக்கியங்கள் கலந்த பல கட்டுரைகள் .அவற்றை எல்லாம் படித்து தமிழ் ஆர்வம் அதிகமாகி , தமிழ்க் கவிதைகள் எல்லாம் அவன் எழுதத் தொடங்கியிருந்த காலமும் அது . மொழி உணர்வு மாணவர்களிடம் பரவலாக இருந்த நேரம். அவர்கள் பள்ளியில் அப்பொழுது ஹிந்தி வகுப்புகள் எல்லாம் உண்டு. கட்டாயப் பாடம். நமது பாக்யராஜ் அவர்களின் படம் 'இன்று போய் நாளை வா வா' திரைப்படத்தில், ஹிந்தி ஆசிரியர் ஒருவர் 'ரெஹ் தாத்தா' 'ரகு தாத்தா' என்று சொல்லிக் கொடுத்தது போல் அவர்கள் பள்ளியிலும் ஹிந்தி பண்டிட் ஒருவர் இருந்தார். அப்பொழுது இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது தேர்தலிலே.
அந்த நேரத்தில் ஊரில் நடந்த ஹிந்தி போராட்டத்திலும் அந்த ஊரில் அவன் நண்பர்களோடு சேர்ந்து கலந்து கொண்டு தெருக்களில் ஊர்வலம் செல்வது உண்டு. ' ஹிந்தி ஒழிக ' தமிழ் வாழ்க ' என்று கோஷம் இட்டுக்கொண்டு. அவற்றையெல்லாம் சேர்மன் தாத்தா ரசித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால் அவருக்கும் ஒருமுறை கோபம் வரக்கூடிய காரியத்தை அவர்கள் செய்து விட்டார்கள் .
ஊரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் . 'உத்தரகோசமங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு' சென்று அங்கே ஸ்டேஷனில் இருக்கும் 'ஹிந்தி பெயரை அழிப்பது' 'தார் கொண்டு அழிப்பது 'என்று ஒரு பத்து மாணவர்கள் ஒருநாள் மதியம் கிளம்பினர். இவனும் இவனோட நண்பர்களும் மண் ரோட்டில் நடந்து உத்தரகோசமங்கை ரயில்வே ஸ்டேஷன் சென்று கொண்டிருந்தார்கள் .
யாருமே இல்லாத அந்த ரோட்டில் , 'தமிழ் வாழ்க , ஹிந்தி ஒழிக ' என்று கோஷம் போட்டுக் கொண்டு சென்றார்கள். நடந்து போன பலர் வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டு போனார்கள். அவர்கள் ஊரில் போய் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு அப்போது தெரியாது . அவனது ஊரிலே அப்பொழுதுதான் தார் ரோடு போடுவதற்காக மண் ரோட்டின் ஓரங்களில் அங்கங்கே சாரைக் கற்கள் குவித்தும் தார் டப்பாக்கள் அடுக்கியும் வைத்திருப்பார்கள் .
அவற்றில் சில தார் டப்பாக்களை எடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். அவன் ஊருக்கு அப்பொழுது காலை எட்டரை மணிக்கு ஒரு பஸ் நாலரை மணிக்கு ஒரு பஸ் 'சொர்ணாம்பிகை' என்று பெயர்' ராம்நாட்டில் இருந்து வந்து போகும். மற்ற நேரங்களில் போக்குவரத்து இருக்காது .இவர்கள் சென்றது நடுப்பகல் நேரம்.
அவர்கள் உற்சாகமாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஒரு வேன் அவர்களைத் தாண்டிச் சென்று சிறிது தூரத்தில் நின்றது . அந்த சாரைக் கற்கள் குவியலுக்கு அருகே. அதிலிருந்து இறங்கிய பெரியவர்கள் சிலர் அந்தச் சாரைக் கற்களை எடுத்து அவர்கள் மேல் எறிய ஆரம்பித்தார்கள். அந்தக் கல்லெறி பொறுக்க முடியாமல் அவன் உட்பட அனைவரும் பிரிந்து பின்வாங்கி ஓடினர் .அங்கங்கே இருக்கும் வயக் காட்டுக்குள் இறங்கி அவரவர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் . அப்படி அவர்களை விரட்டி அடித்தவர்கள் சேர்மன் தாத்தாவும் அவரது பஞ்சாயத்து போர்டு நண்பர்களும் தான்.
மாணவர்கள் ஊருக்குள் ஊர்வலம் போகும்போது எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் மற்றொரு இடத்திற்குச் சென்று ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று செய்கின்ற வேலை அவர்களுக்குப் பிடிக்காததால் அந்த மாதிரி ஒரு நிகழ்வு நடத்தினார்கள். வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள் நுழைந்ததும் சொந்தத் தாத்தாவிடம் அவனுக்குச் சரியான திட்டு . அன்று முழுக்க வெளியே போகவில்லை
மறுநாள் காலையில் குற்றாலத் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு கண்மாய்க்கு நடந்து போகும்போது போகிற வழியில் சேர்மன் தாத்தா ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்தார். அவனைப் பார்த்ததும் 'என்ன பேராண்டி ஹிந்தியை அழிக்கப் போறீங்களா போலீஸ் வந்து புடிச்சிட்டு போச்சுன்னா உங்க குடும்பம் என்ன ஆகும். உங்களைப் படிக்க வைக்கணும்னு நினைக்கிறவங்க , உங்க தாத்தாவுக்கு எல்லாம் எவ்வளவு வருத்தமா இருக்கும் . உங்க வாழ்க்கையே போயிரும் , புரியுதா, அதான் , அங்க வந்து அப்படி எல்லாம் பண்ணோம் ' என்று அன்போடும் அதட்டலோடும் அவர் சொன்னது அவனுக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது.
' சரி தாத்தா' என்று சொல்லிவிட்டு அவன் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்றான். அதற்குப் பிறகு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவன் கலந்து கொள்ளவில்லை . தேர்தலுக்குப் பிறகு, ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு , ஹிந்தியும், விருப்பப்பாடம் ஆகிவிட்டது. அவன் ஹிந்தியை படிக்கவில்லை.
ஆனால் பின்னால் வங்கியில் சேர்ந்த பிறகு இன்சென்டிவ் கிடைக்குமென்று ஹிந்தி ப்ராத்மிக் படித்ததும் ஜோத்பூரில் சென்று இந்தி படங்கள் பார்த்ததும் ,ஹிந்தி நண்பர்களுடன் சேர்ந்து இந்தி பாட்டுக்கள் பாட ஆரம்பித்ததும் பிறகு இசை புதிது குழுவில் இந்தி பாட்டு ஸ்ம்யூலில் பாடிக்கொண்டு இருப்பதும் அவன்தான்.
அன்று தனது படிப்பகம் மூலம் ஹிந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டிவிட்ட வரும் அந்த சேர்மன் தாத்தா தான். அதே நேரத்தில் 'அவர்கள் படிப்பை விட்டு விடக்கூடாது , வன்முறை நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது 'என்று மாணவர்களை வழிநடத்தி சென்றதும் அந்த சேர்மன் தாத்தா தான் .
இதுபோன்று அப்பொழுதெல்லாம் அங்கிருக்கும் பக்கத்து கிராமங்களில் எல்லாம் கூட அந்தந்த ஊருக்கு பெரிய மனிதர்கள் பலர் இருந்தார்கள் . ஊரில் கட்டுப்பாடுகள் விதித்து சண்டைகள் வராமல் காத்து வந்த சேர்மன் தாத்தா போன்றவர்கள் அந்த ஊரின் அரசர்கள். காவல் தெய்வங்கள். அவர்களில் மறக்க முடியாதவர் சேர்மன் தாத்தா அவர்கள்
பின்னால் ஒருமுறை உத்திரகோசமங்கை சென்ற பொழுது சேர்மன் தாத்தா வீட்டுப்பக்கம் அவனும் அவன் மனைவியுமாக சென்ற பொழுது அவர் வீடு பூட்டி இருந்தது .பெரிய வீடு, கம்பிகேட் போட்ட வீடு, பழமை மாறாமல் அப்படியே இருந்தது . அவரது மகள் அவனுடன் படித்தவர் . அவர் பெயரைக் குறிப்பிட்டு 'எங்கே' என்று கேட்ட பொழுது 'பக்கத்துத் தெருவில் மகள் வீட்டில் பேத்தியைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்' என்ற பதில் கிடைத்தது .'போய்ப் பார்க்கலாம் 'என்று அவன் மனைவி சொன்னதற்கு அவன் 'வேண்டாம்' என்று சொல்லிவிட்டு திரும்பி வந்து விட்டார்கள் .
---------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக