வெள்ளி, 1 மே, 2026

டெய்லர் அண்ணே -உத்திரகோசமங்கை உறவுகள் - 6



டெய்லர் அண்ணே -உத்திரகோசமங்கை உறவுகள் - 6 

--------

அவ்வப்போது வரும் அனுபவத் தொடர்

(படம் வரைந்து உதவியவர் : நன்றி உஷா பாரதி மேடம் )

-----------------

 மதுரை சித்திரைத் திருவிழா போல் உத்திரகோசமங்கையிலும் சித்திரைத்  திருவிழா அமோகமாக நடந்து , தொடர்ந்து அழகர் திருவிழா போல் அங்கு பெரிய கண்மாய் முக்கில் இருக்கும் கோவிந்தன் கோவிலில் அழகர் திருவிழா நடந்து மறுநாள் ஊருக்கே அன்னதானம் நடைபெறும். அன்று சாப்பிட்ட பூசணிக்காய்ச்  சாம்பாரின்  ருசி  தனி.  வடக்குத்தெரு , தெற்குத்தெரு, கிழக்குத் தெரு , மேலத்தெரு எல்லாம் சேர்ந்து நடத்தும் கோவிந்தன் கோயில் திருவிழாவில் தெற்குத்தெரு மக்களுக்கு விஷேச உரிமை உண்டு. அந்தத் தெற்குத் தெரு மக்கள் தான் உத்தரகோசமங்கை அம்மன் சாமி  வீதிஉலாவுக்கு தண்டு தாங்கி வரும் உரிமை பெற்றவர்கள். அந்தத் தெருவைச் சேர்ந்தவர்தான் 'டெய்லர் அண்ணே'..

 

அவன்  குடும்பத்திற்கு, சட்டை, ஜாக்கெட் தைப்பதற்கு இவரிடம் கொண்டுபோய்த் தான் கொடுப்பார்கள் தாத்தாவும் அப்பாவும். கூடப் போவான் அவன். அவர் கடையின் ஓரத்தில் குவிந்திருக்கும் வண்ண  வண்ணத் துணிகள் கண்கொள்ளாக் காட்சி . ஒரு ஓரத்தில் ஒரு பையன், சட்டைப் பித்தான் ஓட்டைக்கு காஜா போட்டுக் கொண்டு இருப்பான். கிழிக்கப்பட்டு சிறுசிறுதுண்டுகளாக கிடக்கும் வண்ணத் துணிகளை எடுத்து வந்து சேர்த்து வைத்து டிசைன் செய்து பார்க்கும்  பழக்கம் அவனுக்கு    இருந்தது. அவரிடம் அதிகம் பேசியது இல்லை.

 

வயது அவனை   விட கொஞ்சம்  தான் அதிகம்  இருந்தாலும், இளமையிலேயே டெய்லர் தொழில் பழகி  தனிக்கடை வைத்து நடத்தி வந்தார்.   கோயில் தட்ட ஓட்டில் இருந்து ஓடி வந்து அக்கினி  தெப்பக்குளத்தில் குதித்து நீச்சல் அடிப்பதிலும், கபடி விளையாட்டிலும் வல்லவர்.

 

ஒருமுறை அவன்  ஊர் கபடி டீமிற்கு  பக்கத்து ஊர் கபடி டீமோடு போட்டி  விளையாட்டு  ஏற்பாடு செய்திருந்தார் அவர் . அவன்  ஓரளவு கபடி விளையாடினாலும் , அந்த  போட்டியில் ஒரு பார்வையாளராகவே கலந்து கொண்ட ஞாபகம்  .  அவன் ஊர்  டீமில் டெய்லர் அண்ணனும்  , அவனது  பள்ளி நண்பன் ஒருவனும்  பிரமாதமான ஆட்டக்காரர்கள். ஒரு விஷயம்  அப்போது அவர்களுக்குத்  தெரியாது. பக்கத்து ஊர் ஆட்டக்காரர்கள் நன்றாக விளையாடினாலும் வெறி பிடித்தவர்கள். தோற்றால் இந்த ஊர் ஆட்டக்காரர்கள்  மண்டையை உடைப்பதெற்கென்று , பக்கத்துக் கருவக் காட்டில் கம்புகளைப் பதுக்கி வைத்து விட்டு வந்திருந்தார்கள் .

 

ஆட்டம் சூடாக நடந்து டெய்லர் அண்ணன், அவனது பள்ளி நண்பன் திறமையால், உத்தரகோசமங்கை   டீம் ஜெயித்தது. கோபத்துடன் இருந்த அந்த எதிர் டீம் ஆட்களை , தனது சாந்தப் பேச்சால் ஜெயித்து அவர்களைத்  திருப்பி அனுப்பி வைத்த டெய்லர்  திறமை பார்த்து அவனுக்கும் , அவன் பள்ளி  நண்பருக்கும் அந்த அண்ணனிடம் நட்பு இறுகியது .

 

மறு  நாள்   அவங்க  ஊர்  பஞ்சாயத்து போர்டு  சேர்மன் ('சேர்மன் தாத்தா' பின்னால் ' உறவுகள்' பகுதியில் வருவார் )   டெய்லர் அண்ணனின் அப்பாவை அழைத்து , அவனுங்க  சண்டைக்கு  கம்போட  வந்த விபரம் சொல்லி ,  இது பெரிதாகி ஊர்ச்சண்டை  ஆகியிருக்கும் என்று இனிமேல் பக்கத்து ஊரு பசங்களை விளையாட்டுக்கு கூட்டி வர வேண்டாம் என்று தடை விதிக்க, அதன் பின்  கோபுர வாசல் மண்ணு கிரௌண்டில் உள்ளூர் டீம்களோடு தொடர்ந்தனர் . இப்படி கண்மாயில் கபடியில் ஆரம்பித்த நட்பின் தொடர்பில் எத்தனை நினைவுகள்.

 

அந்தக் கபடிப்போட்டிக்குப் பிறகு அவர்களிடம் நெருக்கமான அவர் , அவர்கள்  எங்கே கூப்பிட்டாலும்  எப்போது கூப்பிட்டாலும் வேலையை விட்டு விட்டு வரத்  தொடங்கினார் .

 

வெடி தேங்காய் போடுவதற்கு தேங்காய், கடலை, சர்க்கரை, ஏலக்காய் சுக்கு, தீப்பெட்டி  எல்லாம் அவர் அப்பாவின் பலசரக்கு கடையில் இருந்து  எடுத்து வந்து விடுவார் .அவனும்  பள்ளி நண்பரும் முன் கூட்டியே நாட்டுக் கருவை காட்டுக்குள் போய் சுள்ளி  பொருக்கி கூட்டி சரியான இடம் பார்த்து அமர்ந்திருப்பார்கள் . அவர் வந்ததும் அந்த தேங்காயின் கண்களைத் திறந்து , உள்ளே, பொடியாக்கிய கடலை, சர்க்கரை , ஏலக்காய், சுக்கு எல்லாம் திணித்து , கண்களைக்  கடலைகள் கொண்டு மூடி , சுள்ளிகளில் தீப்பற்ற வைத்து,  அதற்குள் அந்த தேங்காயை வைத்து விட்டு தள்ளி வந்து விடுவார்கள் . சிறிது நேரம் கழித்து தேங்காய் ஓடு லேசாக வெடிக்கும் சப்தம் கேட்டதும்  குச்சி வைத்து அந்தத் தேங்காயை வெளியே தள்ளி விட்டு  பக்கத்து கண்மாய்த் தண்ணீர் ஊற்றி  சிறிது நேரம் கழித்து, பாதி உடைந்த ஓட்டைப் பிரித்து விட்டு அந்த  தேங்காயைப் பங்கு போட்டுத் தின்பார்கள் . கடலை , சர்க்கரை , ஏலம், சுக்கு கலந்த அந்த தேங்காய்ச் சில்லுகளின் ருசி தனி.

 

அதே போல் அவனது  பள்ளி  நண்பர் தேன் எடுப்பதில் வல்லவர், அவர்கள்  மூவரும் ,  தலை , முகம் மறைக்கும் துணிகளோடு , முகமூடி திருடர்கள் போல் அந்தக் காட்டுக்குள் நுழைந்து தேன்  அடைகளைக் கண்டுபிடித்து, ஒரு குச்சியால், அதன் நடுவில் தொடுவார்  நண்பர். தேனீக்கள் மேலே பறக்கும்  . ஓடிப்போய் தேன் அடை இருக்கும் குச்சியை கையாலோ, கத்தியாலோ ஒடித்து அந்த அடிப்பாக அடைக்கூடை ப் பிய்த்துத்   தூக்கி எறிந்து விட்டு தேன் இருக்கும் குச்சியோடு ஓடி வந்து விடுவார் . சில தேனீக்கள்  பாய்ந்து வந்து கொட்டும். கொஞ்சம் தடிப்பு வரும் . வலிக்கும். அப்புறம் சரியாகி  விடும். சில தேனீக்கள் பாவம் , அந்த அடிப்பாக அடைக்கூட்டில் போய் உட்கார்ந்து கொள்ளும். அவை சேமித்து வைத்திருந்த தேன்  எல்லாம் இவர்கள்  கையில் இருக்கும் குச்சியைச் சுற்றி மொத்தமாக தேனடையாக சொட்டிக் கொண்டு. பிறகென்ன , பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம். ஆம் வீட்டுக்கும் கொண்டு வந்து. . இது போன்று எத்தனை மரங்கள். கருவ மரம், முருங்கை மரம், வேப்ப மரம், ஒவ்வொரு மரத் தேனும் ஒவ்வொரு ருசி.

 

இவை மட்டுமா, அந்த கருவைக்  காட்டுக்குள். அது நாட்டுக்கருவை. இப்போது கிராமம் எல்லாம், பச்சையாக  படர்ந்து அடிநீரை உறிஞ்சிக் கொண்டு விவசாயத்தைப் பாதிக்கும்  காட்டுக் கருவை அல்ல. அது கொஞ்சம் சாம்பல் நிறத்தில் நாட்டுக் கருவை, நீள நீள முட்களோடு, அவற்றை  வைத்து பனை ஓலைக் கீற்றுகள்  இரண்டை குறுக்கு  நெடுக்காய் வைத்து, இந்த நாட்டுக்கருவை முட்களைத் குத்தி , காற்றாடி  செய்து, குச்சியில் மாட்டி ஓடுவார்கள் ,  ' காற்றில் அது சுற்றும் அழகை ரசித்தபடி. அந்த நாட்டுக்கருவைக் காட்டுக்குள் இன்னும் எத்தனை அட்டகாசங்கள் .

 

புறாக்களை பிடித்து புறாக்கறி  சமைத்துச் சாப்பிட்டது, ஆட்டைப் பிடித்து ,  ஆட்டுப்பால் பீய்ச்சிக்  குடித்தது . வேண்டாம்.  விளக்கமாகச்  சொன்னால் நன்றாய் இருக்காது.  இப்படி வயது வித்தியாசம் இல்லாமல் , அவர்களோடு  நண்பராய்த் திரிந்த அந்த  டெய்லர் அண்ணனிடம், இன்று  காலை அவன் போனில் பேசி ' உங்களை பற்றி எழுதப் போகிறேன் ' என்றதும்  மகிழ்வுடன்  பழைய நினைவுகள் இன்னும் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.  பேரன் பேத்தியுடன் நிறைவான வாழ்வு வாழ்ந்து கொண்டு , இப்போதும் அவரோட வயக்காட்டு வேலையை  மேற்பார்வை   பார்ப்பதையும் நல்ல விளைச்சலையும் , கோவிந்தன் கோவிலில் இன்று நடந்த திருவிழா விபரங்களையும் , டைலர் கடை இப்போது மகளின் டீக்கடையாக மாறியிருப்பதையும் சொல்லி மகிழ்ந்தார். அன்று  அவர்கள்  சுதந்திரமாக ஓடி ஆடி விளையாடிய அந்தக் கோயில் இன்று உலகப் புகழ் பெற்று மாறி இருப்பதையும் மகிழ்வோடு குறிப்பிட்டார். நன்றி கதிரேசன் . ஓ. டெய்லர் அண்ணன் பேரைச் சொல்லியாச்சா.

 ----------------நாகேந்திர பாரதி

My Poems/Stories/Articles in Tamil and English   








டெய்லர் அண்ணே -உத்திரகோசமங்கை உறவுகள் - 6

டெய்லர் அண்ணே -உத்திரகோசமங்கை உறவுகள் - 6  -------- அவ்வப்போது வரும் அனுபவத் தொடர் (படம் வரைந்து உதவியவர் : நன்றி உஷா பாரதி மேடம் ) --------...