தாய் உள்ளம் - சிறுகதை
-------------------------
எத்தனை முறை சொல்லி இருக்கிறாள் அம்மா, தான் வளர்ந்த கதையை. அவள் பெற்றோருக்கு ஒரே பெண்ணாக அவள் பிறந்தது முதல், அவள் மேல் பாசத்தைக் கொட்டி வளர்த்த அவர்கள் கூட்டிச் சென்ற இடங்கள் எத்தனை, வாங்கிக் கொடுத்த ஆடைகள் எத்தனை, தின்பண்டம் எத்தனை , பார்த்த திரைப்படங்கள் எத்தனை. கல்யாணம் ஆனது, கனவுகள் கலைந்தன .
அவள் அப்பாவும்தான் தனி ஆளாகச் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றினார். அம்மா மேல் ஆதிக்கம் செலுத்தியதே இல்லை. அன்பு ஒன்று தான் அவரின் ஒரே அடையாளம். இங்கே கணவன், தான் மட்டும் சம்பாதிக்கும் கர்வத்தில் இவளைப் படுத்திய பாடு. படிப்பை முடித்து வேலைக்குப் போயிருக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது வந்து என்ன பிரயோசனம். . குழந்தை ஆயிற்று. ஒரே மகன். அவனை வளர்க்கும் பொறுப்பு இவளுக்கு மட்டுமே என்று விட்டு விட்டு , தான் குடியில் மூழ்கி, ஆடம்பரச் செலவுகளில் மூழ்கி , கொடுக்கும் குறைந்த பணத்தில் மகனின் வாழ்வே முக்கியம் என்று அவனை வளர்த்து ஆளாக்கி இதோ வேலைக்கும் சென்று விட்டான்.
அப்பாவின் கொடுமை பொறுக்காத மகன், அம்மாவைத் தன்னிடம் கூட்டி வந்து , இதோ மருமகளும் வந்தாயிற்று. அம்மாவுக்குச் சிரமம் வைக்காமல் அவனே பார்த்து அமைந்த துணை. அவன் திருமணத்திற்குக் கூட வராமல் இன்னொருத்தியோடு வேறு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொண்ட தந்தை.
வாழ்வின் பல கொடிய பக்கங்களை அம்மா கூடவே இருந்து பார்த்து அனுபவித்த அவன் , பொறுமைக்கே முதலிடம் கொடுத்த , குணவதி ஒருத்தியையே மணமுடித்து அழைத்து வந்தான். அனாதை இல்லத்தில் வளர்ந்து படித்து இவனுடன் வேலை பார்ப்பவள்தான் அவள். அவளும் 'அம்மா, அம்மா' என்று தன் மாமியாரை அம்மாவாகவே நினைத்து உதவி செய்து வருவதில் அவனுக்கு மகிழ்ச்சியே . காலம் ஒரே போக்காகப் போவதில்லைதானே. ஒரு நாள் .
குளியலறையில் வழுக்கி விழுந்து அலறிய அம்மாவை ஆஸ்பத்திரி சென்று பரிசோதனைகள் செய்த போது தெரிய வந்தது. சர்க்கரை அளவு அதிகம். கல்லீரல் பிரச்னை. கிட்னியில் கோளாறு . தொடர்ந்து ஆஸ்பத்திரியில் கொடுத்த பல வித மருந்துகளில் இன்னும் பலவித கோளாறுகள் ஏற்பட்டு, தொடர்ந்து ஆறு மாதம் பெட்டில். அவனும், அவளும் மாறி மாறி லீவு போட்டு பார்த்துக் கொண்டு, நடுவில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதியைப் பயன் படுத்திக் கொண்டு காலம் ஓடினாலும் அம்மா தேறவில்லை.
இனி ஆஸ்பத்திரியில் பார்த்து பிரயோசனம் இல்லை, வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டார்கள். வீட்டில் ஒரு ரூம் ஆஸ்பத்திரி ஆனது. அவ்வப்போது வரும் டாக்டர் மாத்திரைகளை மாற்றி மாற்றி கொடுக்க , உடல் மெலிந்து , படுத்த படுக்கையாக இருக்க , உறவினர்கள் வற்புறுத்தலால் அப்பாவுக்குத் தகவல் சொல்ல , அவரும் வந்து பார்த்து விட்டு ' முடிந்த பின் தகவல் சொல் ' என்று சொல்லிச் சென்றார்.
அந்த வார்த்தைகள் படுத்திய பாட்டில் அம்மாவின் மூளை நரம்புகளில் ஏற்பட்ட கோளாறில் , ஏதேதோ புலம்ப ஆரம்பித்தாள். ' அம்மா, அப்பா ' என்ற வார்த்தைகள் மட்டுமே அவளிடம் இருந்து. பழைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருந்தாள்.
வந்து பார்த்த உறவினர்கள் ' எப்போ வீட்டுக்கு வந்தாலும் ' சாப்பிடுறியா ' என்ற வார்த்தை தான் முதல் வார்த்தை அம்மாவிடம் இருந்து. பெரும்பாலும் அடுப்படியில் இருந்து கொண்டு சமையல் வேலைதான். காய்கறி ,பருப்பு, சாம்பார் என்று என்ன வாசமான சாப்பாடு . இப்போது அவர்கள் சாப்பிடுவதே கொஞ்சம் கஞ்சி தானா' என்று கண்ணீர் விட்டுச் சென்றார்கள். ஆம் , சமைலறையும் , டிவி சீரியலும் தான் அம்மாவின் வாழ்க்கையாக இருந்தது என்று நினைக்க அவனுக்கும் கண்ணீர் . புரிந்து கொண்ட அவன் மனைவிக்கும் தான்.
படுத்த படுக்கையாக இருப்பவளை , இருவரும் தூக்கிச் சென்று , பாத் ரூமில் சேரில் சாய்த்து உட்கார வைத்து , குளிக்க ஊற்றும் போது நழுவும் கவுன் வழி வெளிப்படும் , அந்த வற்றிய மார்பின் காம்புகள், பிட்டங்கள் வழி வழியும் மலமும் சிறுநீரும். அவனும் அவளும் அவற்றைக் கழுவி , நீர் ஊற்றி குளிக்க வைக்கும் போது மலங்க மலங்க விழிக்கும் அம்மாவின் கண்களில் இருந்தும் திரளும் கண்ணீர். அதைத் துடைக்கும் தன் மனைவியின் கைகளை பிடித்து முத்தம் கொடுக்கும் அம்மாவின் செயல் அனிச்சைச் செயலா. இச்சைச் செயலா.
மனைவியைப் பார்க்க பார்க்க அவனுக்குப் பெருமையாக இருந்தது . இவள் எங்கிருந்து வந்தவள். எப்படி இவ்வளவு அன்பு இவளிடம். எனக்குத் தெரியும் அம்மா பட்ட கஷ்டங்கள். எங்கிருந்தோ வந்த இவளுக்கு எப்படி அம்மாவிடம் இவ்வளவு அன்பு . தாய்மையின் அழகு கனிந்து பொங்கும் இவளின் தூய்மையான முகத்தில் இருந்து தான் உலகில் அன்பும் பாசமும் உருவானதோ என்று ஏதோ ஒரு எண்ணம்.
இருவரும் சேர்ந்து அம்மாவைத் தூக்கி வந்து படுக்கையில் படுக்க வைத்து , சுற்றி வைத்திய உபகரணங்களை பொருத்தி வயிற்று நீர் போக ஒரு டியூப், சிறு நீர் போக ஒரு டியூப், மலம் போக ஒரு டியூப் , மூக்கில் கஞ்சி செலுத்த ஒரு டியூப் என்று எல்லாம் செலுத்தி , வைத்து திரும்பும் நேரம், இரு கை சேர்ந்து கும்பிட முயற்சிக்கும் அம்மாவின் கைகளை பிரித்து விட்டு , சிறிது நேரம் அமர்ந்து விட்டு , செல்லும் நேரம்.
' அம்மா , அப்பா ' என்ற முனகல் கண்கள் மூடிய படி. இது தொடரும். அது அவளின் பழைய உலகம். அந்த உலகத்தில் அவளை விட்டு விட்டு திரும்பிய இருவரும் , சென்று தங்கள் அறையில் அமரும் நேரம், அவள் மடியில் சாய்கிறான் அவன். ' இவளும் என் தாய், என் அம்மாவைப் போல இவளையும் நான் பார்த்துக் கொள்வேன் இறுதி வரை ' என்று அவன் எண்ணுவது புரிந்தது போல் , அவனைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்கிறாள் அவள்.
---------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English