புதன், 11 மார்ச், 2026

கல்கி ரமணன் சிறுகதை மதிப்புரை - அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வு

  கல்கி ரமணன் சிறுகதை மதிப்புரை - அழகியசிங்கரின் கதை  புதிது நிகழ்வு 

-----------------

'புதுச் செருப்பு காலைக் கடிக்கும்' என்பார்கள். ரமணன் அவர்களின் இந்தச் 'செருப்பு ' சிறுகதையோ நம் மனதைக் கடிக்கிறது. நாட்டின் நடப்பு உண்மை நிலவரங்கள் கதையாக உருவெடுத்து வரும்போது அவை காலத்தின் கண்ணாடியாக என்றுமே நிலைத்து நிற்கும். அது போன்ற ஒரு சிறுகதை தான் இந்த 'செருப்பு' சிறுகதை .

கணவனை இழந்து, மகனை வளர்த்து வரும் ஒரு ஏழைத் தாயின் டீக்கடையைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள். நம்மில் பலர் பார்த்திருக்கலாம். கதைக் களம் எனது சொந்த மாவட்டம் ராமநாதபுரத்தை ஒட்டிய நெடுஞ் சாலை ஒன்றில் நடப்பதால், என் மனக்கண் முன் இது போன்று அங்கே ரோட்டோரம் இருக்கும் பல டீக்கடைகள் கண் முன் வந்து போயின .

டீக்கடையில் வரும் குறைந்த வருமானத்தில் தங்கள் வாழ்வை ஓட்டி வரும் அந்த அம்மா, மகன் வாழ்வில் மகனுக்கு வரும் ' செருப்பு ' ஆசை கதையை ஆரம்பித்து வைக்கிறது. 'சீட்டுப் பணம் கட்ட வேண்டி இருக்குப்பா ,இன்று வரும் டீக்கடை வருமானத்தில் எப்படியும் வாங்கி விடலாம் ' என்று அவனுக்கு நம்பிக்கை கொடுக்கிறாள் தாய்.


பக்கத்தில் இருக்கும் தொழிற்சாலை த் தொழிலாளிகளுக்கு தினமும் கொடுக்கப் படும் டீ யோடு, சம்பள நாளன்று சில நேரம் விற்கப்படும் பலகாரம் சேர்ந்து குறைந்த வருமானம் தான் அந்தக் கடையில் .


அன்று திடீர் என்று ஒரே கூட்டம். பிளாஸ்கில் மகன் எடுத்துச் செல்லும் டீ கப்புகளோடு துரித விற்பனை. மகனுக்கு ஏக குஷி. தொடர்ந்து பல முறை அந்த பிளாஸ்க் நிரப்பட்டு ஒரு டீ அஞ்சு ரூபாயில் இருந்து ஆறு ரூபாய் என்று விற்று விட்டதாக பெருமைப் பட்டுக்கொள்கிறான் மகன். எப்படியும் செருப்பு வாங்கி விடலாம் என்ற உற்சாகம் அவன் குரலில்.


'இப்படி ஓடுகிற பையன் படிப்பில் மட்டும் ஏன் கோட்டை விடுகிறான் 'என்ற கவலை தாய் மனதில். இப்போது போலீஸ் பட்டாளம் வருகிறது . அந்த வழி செல்கிற மத்திய அமைச்சருக்கு வேறு கட்சியினர் கறுப்புக்கொடி காட்டிட கூடி இருக்கும் கூட்டம் என்று தெரிகிறது. போலீஸ் ஒழுங்குபடுத்த தடுப்புகளை நிறுத்தி , கட்சினரைத் தள்ள, தள்ளு முள்ளு.

இடையில் சைரன் ஒலிக்க அமைச்சரின் காரோடு பல கார்கள் பவனி. கடைசியில் வந்த கார் மீது ஏதோ ஒரு கல், பிறகு ஒரு செருப்பு வீசப்பட, போலீஸ் தடியடி . கலவரம். கட்சியினர் ஒட கீழே விழுந்த பையன் மிதிபட்டு அடிபட்டு மயங்க, அவன் பிளாஸ்க் உடைந்து சிதற மயக்கம் தெளிந்து எழுந்த பையன் பார்க்கும் இடத்தில ஒற்றைச் செருப்பு . அவன் பார்த்த பாணியில் புது செருப்பு .

அதை அவன் கையில் எடுக்க , ஆசையோடு பார்க்க ,அவன் மேல் விழுகிறது போலீஸ் கை. 'செருப்பு வீசியவன் இவன்தான்' என்று அடித்து இழுத்துச் செல்கிறது.. அழுது புலம்பும் தாயை ,போலீஸ் ஸ்டேஷன் வரச் சொல்லிப் போக, இவள் சென்று பார்க்கும் காட்சி. சட்டை ட்ரவுசர் உரியப்பட்டு ஜட்டியோடு அமர்ந்திருக்கும் பையனைப் பார்த்து இவள் கதற. அப்போது அங்கே வருகிறார் ஒரு பெரிய மனிதர். சமூக ஆர்வலர். வக்கீல்.

'இவனை ஏன் கிரிமினல் குற்றவாளி போல் நடத்துகிறீர்கள்' என்று அவர் இன்ஸ்பெக்டரிடம் கேட்க, இன்ஸ்பெக்டர் , 'இவன் கையில் செருப்பு

இருந்ததை பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள் ' என்று சொல்ல , 'பொய் சாட்சி' என்று கோபப்பட்டு செருப்பை வாங்கிப் பார்த்து . 'இது நம்பர் ஒன்பது . இந்தப் பையன் கால் அளவு அல்ல. இப்படி பொய்யாக கூப்பிட்டு வந்து இவனைக் கொடுமைப்படுத்தியதற்கும் . பொய்ச்சாட்சி சொன்னதற்கும் உங்கள் அனைவர் மேலும் கேஸ் போடப் போகிறேன், வந்து ஏறுங்கள் ஜீப்பிலே கோர்ட்டுக்கு போகலாம் 'என்று அதட்ட , இன்ஸ்பெக்டர் குரல் தணிந்து ,' பையனைக் கூட்டிப் போகச் 'சொல்ல, தாய் அந்தப் பெரிய மனிதருக்கு நன்றி சொல்ல, கிளம்பும் போது பையனிடம் சொல்கிறா ள் அம்மா ,. 'செருப்பு வாங்கிடுவோமடா' . அவன் சொல்கிறான். 'வேண்டாமம்மா. பிளாஸ்க் உடைஞ்சு போச்சு , அதை வாங்குவோம்' என்று சொல்ல உருக்கமாக முடிகிறது கதை.

------

கதையின் வேகமும் விறுவிறுப்பும் அது ஏற்படுத்தும் கோபமும் இரக்கமும் கதையைப் படிக்கும் போது உங்களால் உணர முடியும். என்னை மிகவும் கவர்ந்த ஆசிரியரின் எழுத்து நடைக்கு சில உதாரணங்களை மட்டும் இங்கே சொல்லுகிறேன்.

---------------

'வீட்டு வேலை , கட்டிட வேலை எனப் பல அவதாரங்கள் எடுத்ததில் எங்கும் தன் பெண்மைக்குப் பாதுகாப்பில்லை என்பதால் , இறுதியாக அவள் செய்த துணிவான முடிவுதான். இந்தச் சொந்தப் பலகாரக் கடை .பேர் தான் பலகாரக் கடையே தவிர பெரும்பாலும் விற்பது டீ, காபி தான் '


'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் ' என்ற சிலப்பதிகார வரிகளுக்கு எடுத்துக்காட்டான அந்த அபலைப் பெண்ணின் அவல நிலை இங்கே அவளுக்குக் 'காட்டுவது டீக்கடையை '., ஆசிரியரின் இந்த வரிகளில் கதையின் ஆரம்பத்தில் .

---

அடுத்து


'அந்தக் கடையில் கஸ்டமர்கள் குறைவுதான் . என்றாவது கம்பெனி அல்லது ப்ராஜெக்ட் அதிகாரிகள் மீட்டிங் என்றால் கூடுதலாக இருபத்தைந்து கப் டீ விற்பனை ஆகும். காவேரியின் கடையில் வாங்கிய டீயை 'உங்களுக்காகவே ராமநாதபுரத்தில் இருந்து கொண்டு வந்தது ' என்று அழகான பீங்கான் கப்புகளில் கொடுத்து அந்த சைட்டின் காண்ட்ராக்டர் பாராட்டுக்களை வாங்கிக் கொள்வது காவேரிக்குத் தெரியாது. '


'பொய்மையும் வாய்மை இடத்த' என்ற குறளை ' பொய்மையும் வாழ்க்கை நடத்த ' என்று புரட்டிப் போடும் சிலரின் செயல்கள் இந்த வரிகளில்.


----------------

அடுத்து , கறுப்புக் கொடி காட்ட அங்கே கூட்டம் சேர்வதையும் அங்கே நேரம் கடப்பதையும், ஒரு அழகான உவமை மூலம் ஆசிரியர் இணைத்துக் காட்டும் இந்த இடம்.

'வெயிலைப் போலவே கூட்டமும் அதிகம் ஆகிக் கொண்டு இருந்தது . '

சூடான உவமை. நேரமும் சூடு ஏறுகிறது. கூட்டத்தின் சூடும் ஏறுகிறது . சூடான டீ விற்பனையும்ஏறுகிறது. மிகவும் ரசித்த உவமை,காட்சியின் உணர்ச்சியைக் கடத்தும் உவமை.

-----

அடுத்து அந்தத் தாயின் மன உணர்வையும் மகனின் மன உணர்வையும் எடுத்துக் காட்டும் வரிகள்

மகன் டீ விற்கும் வேகத்தைப் பார்த்து மகனின் சாமர்த்தியத்தைக் கண்டு மகிழ்ந்தாலும்., பின் ஏன் இந்தப் பையனுக்குப் படிப்பு ஏறவில்லை

என்ற வருத்தமும் எழுந்தது காவேரிக்கு .

ஒரு தாயின் ஏக்கம் இங்கே தெரிகிறது .

'தின்றத்துக்கு ஏதாவது பண்ணு, அதையும் வித்துடலாம்

. கணபதியின் கண்ணில் செருப்பின் விலைசீட்டு மின்னி மறைந்தது. '

மகனின் செருப்பு ஆசை பளிச்சிடும் வேகம் இங்கே .

இந்த இடத்தில் ஆசிரியர் எங்கள் ராம்நாட் வட்டார வழக்குப் பேச்சு ' தின்றத்துக்கு ' மிகவும் பொருத்தமாக போட்டுள்ளார். ரசித்த இடம்.

--

இப்போது தொடர்கிறது விறுவிறுப்பான காட்சிகள்.

ஸ்பீக்கர் வைத்த டிராபிக் க்ளீயரன்ஸ் ஜீப்பைப் பார்த்தவுடன் போலீசாரின் வேகம் அதிகம் ஆனது . கம்பித் தடுப்புக்குப் பின்னால் போகாதவர்களைப் பிரம்பால் அடிக்க ஆரம்பித்தார்கள் . களேபரமாகியது. அடி தாளாமல் தொண்டர்கள் ஓட, சிலர் அந்தத் தடுப்பின் மேல் விழுந்து மறுபக்கம் இருப்பவர்களை அது நசுக்கியதால் , வேதனையினால் அவர்கள் கத்த ஆரம்பித்தார்கள் . 'ஐயோ என் பிளாஸ்க் 'என கணபதி கத்த அவன் மேல் விழுந்த போலீஸ் அடியால் அவன் மயங்கி தரையில் விழுந்தான் . கிழிந்த கருப்புகொடிகள். அறுந்த செருப்புகள். ஒரு போர் நிகழ்ந்த இடம் போல் மாறி இருந்தது அந்த இடம்.

நான் சில வரிகளை மட்டும் இங்கே சொல்லி உள்ளேன். நீங்கள் முழுவதும் . படிக்கும் போது அந்தக் காட்சியின் வேகத்தை அவர் வரிகளில் கொண்டு வந்திருப்பதை வியந்து படிப்பீர்கள் .

---

தொடர்ந்து மயக்கம் தெளிந்து அவன் பக்கத்தில் கிடந்த புதிய செருப்பைக் கையில் எடுத்துப் பார்க்க , அவனை அறைந்து இழுத்துச் செல்லும் போலீஸ்.

---

போலீஸ் ஸ்டேஷன் நிகழ்ச்சிகளும் தத்ரூபம்..

அடுத்து அங்கே வருபவர். மாவட்ட கோர்ட்டுகளில் மனித உரிமை, சிறுகுழந்தை நலம், பெண் பாதுகாப்பு, சமூக நீதி ' விஷயங்களுக்காக வழக்கு போடும் சமூக ஆர்வலர். வக்கீல் .


ஒவ்வொரு சட்ட பாயிண்டுகளாக எடுத்துச் சொல்லி இறுதியில் 'சட்டங்களைத்தான் மறந்துட்டீங்க , சொந்தமா சிந்திக்கிறதையும் மறந்துட்டீங்களா ' என்று அந்தச் செருப்பு ஒன்பதாம் நம்பர் செருப்பு என்பதையும் இவன் சிறுபையன் என்பதையும் சுட்டிக்காட்டி அதட்ட , அந்த இன்ஸ்பெக்டர் 'மேட்டரைப் பெருசு பண்ணாதீங்க சார்' என்று கெஞ்சி , பையனை விடுவிக்க , தாய் கண்ணீருடன் நன்றி சொல்லிவிட்டு செல்லும்போது மகனிடம் ' நாளைக்கு உனக்கு செருப்பு வாங்கலாம் ' என்றதும் அவன் பொறுப்போடு ' பிளாஸ்க் வாங்கலாம் , செருப்பு வேண்டாம் ' என்று பதில் அளிக்க ,மகன் கணபதியைக் கட்டி அணைத்துக் கொண்டார் காவேரி என்று முடிகிறது கதை.

-------------

நான் மேலே விவரித்தது போல் காட்சிகளைக் கண் முன்னே கொண்டு வர வைக்கும் வர்ணனைகள், வசனங்கள். அதோடு சேர்ந்து அந்தத் தாயின் பாசமும், மகனின் செருப்பு ஆசையும் , அரசியல்வாதிகள் , காவல் துறையினர் , சமூக ஆர்வலர்கள் போன்றவர்களால் அவர்கள் எப்படிப் பாதிக்கப் படுகின்றனர் , பாதுகாக்கப் படுகின்றனர் என்றவற்றையும் விவரித்து , காலத்தின் கண்ணாடியை நம் பக்கம் திருப்பி வைத்துக் காட்டி, 'முடிவில் நல்லதே நடக்கும்' என்ற நம்பிக்கையும் கொடுத்து முடியும் சிறப்பான கதை.


என் மனதைக் கடித்த இந்தச் ‘ செருப்பு’ படிக்கும் போது உங்கள் மனதையும் கடிக்கும்


ஆசிரியர் ரமணன் அவர்கட்கு வணக்கங்கள். அழகியசிங்கருக்கு நன்றிகள். அனைவர்க்கும் நன்றி. வணக்கம்.


-----------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கல்கி ரமணன் சிறுகதை மதிப்புரை - அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வு

  கல்கி ரமணன் சிறுகதை மதிப்புரை - அழகியசிங்கரின் கதை  புதிது நிகழ்வு  ----------------- 'புதுச் செருப்பு காலைக் கடிக்கும்' என்பார்கள...