வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

அவளா இவள் - சிறுகதை ( நன்றி : நவீன விருட்சம் )

 அவளா இவள்  - சிறுகதை ( நன்றி : நவீன விருட்சம் )

---------------------------------


அந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான் அவன் . அதில் இருப்பது போல் தான் இருந்தாள் அவள் அப்போது . அப்போது இருவரும் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்கள். அவன் வரைந்த முதல் ஓவியம் அதுதான். ' நான் இப்படியா இருக்கேன் ' என்று அவள் அடம் பிடித்து அழுத ஞாபகம் வருகிறது. அப்போது மறைத்து வைத்த அந்த ஓவியம், பின்னால் அவளோடு சேர்ந்து இருந்த காலத்திலும் அவளுக்குக் காண்பிக்க வில்லை அவன். இப்போது அவள் பிரிந்த பின் தான் எடுத்துப் பார்க்கிறான் இப்போது . அவளா இவள்.


ஆரம்பப் பள்ளிப் பருவத்தோடு, அவள் அப்பாவின் வேலை மாறுதலோடு, அவர்கள் நட்பு அப்போதைக்கு முடிந்தது. ஆனால் அதன் நினைவுகள் பசுமையாக எப்போதும் . இப்போதும் தான். மோசமான நினைவுகளை அவள் விட்டுச் சென்று விட்ட இப்போதும் தான். அந்த ஆரம்பப் பள்ளிப் பருவத்திலே அவர்கள் சேர்ந்து சென்ற ஊருணிப் பூந்தோட்டம். கோயில் பிரகாரப் பேச்சு. மறக்க முடியாது.


மறக்க முடியாததால் தான், அவளை , இளமை பொங்கும் மங்கையாக , ஆரம்பப் பள்ளிப்பருவ நினைவுகளின் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, ஐந்து வருடங்களுக்கு முன்பு , ஒரு ஆங்கில இலக்கிய நிகழ்வில் சந்தித்தபோது , அவளது அறிமுகத்தை , அமைப்பாளர் சொன்னவுடன் புரிந்து கொண்டு, அவளின் ஆங்கிலப் பேச்சைக் கேட்டு அசந்து போய் நின்ற தருணம். சாக்ரடீஸ் முதல் பீத்தோவன் வரை அவள் எடுத்துக் காட்டிய, அலசிய தத்துவ , இசை விளக்கங்கள் அவனை அவளிடம் ஈர்த்தன. அதன் பின் அவளிடம் அறிமுகம் செய்து கொண்ட போது அவள் முகத்தில் தெரிந்த மலர்ச்சி. அதில் ஏமாந்து போன தருணம் அது.


பிறகு அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். இருவரின் பெற்றோர்களும் மறைந்து விட்ட காரணத்தால், அவர்கள் தனித்தனித் துறைகளில் , பிரபலமாக ஆகிக் கொண்டு இருந்த காரணத்தால், அவர்களைத் தடுப்பதற்கு யாருமில்லை. ஆனால், பின்புறம் பேசுபவர்கள் பலர். அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை ,


அவன் ஓவியத் திறமை பற்றி அவளுக்கு இன்னும் சந்தேகம் தான். அவன் அவளை வரைந்த அந்த முதல் ஓவியத்தால் ஏற்பட்ட சந்தேகம். இன்னும் மாறவில்லை .


ஒரு படத்தைப் பார்த்துக் கேட்டாள்

'இதனால் என்ன சொல்ல வருகிறாய் '

. 'ஏதாவது சொல்லணுமா' என்றான்

' எனக்குப் புரியலையே'

'உனக்குப் புரியணுமோ'


'அப்புறம் எதுக்குப் படம் வரையிறே '

'எனக்குப் புரியுது , வரையிறேன் '.

' யாரும் வாங்க வேண்டாமா'

' பலர் வாங்குகிறார்கள். பாராட்டுகிறார்கள் . உன்னை வாங்கச் சொல்லலையே '


அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை

ஆனால் அவளுக்கு அவனிடம் பிடித்தது இந்தத் திமிர் .


அவனுக்கும் அவளைப் பிடிக்கும்.

அவளது திமிர் வேறு மாதிரி.


'நமது தமிழ்ப் படைப்புகளை படித்ததில்லை' என்று சொல்லிக் கொள்வாள் .

'இசை என்றால் பீத்தோவன்

தத்துவம் என்றால் சாக்ரடீஸ்

ஓவியம் என்றால் பிக்காஸோ

கதை என்றால் ஓட் ஹவுஸ் ' .

என்று அவர்களைப் பற்றியே பேசிக் கொண்டு இருப்பாள். அவன் கேட்டுக் கொண்டு இருப்பான். அது அவளுக்குப் பிடித்து இருந்தது


ஒரு நாள் அவளிடம் கேட்டான்.

'திருக்குறள் பிடிக்காதா, பி சுசிலா பிடிக்காதா, சித்தன்ன வாசல் பிடிக்காதா, சுஜாதா பிடிக்காதா 'என்று

'பிடிக்காது என்று சொல்லவில்லையே'

'பின் ஏன் அவர்களைப் பற்றிச் சொல்லாமல் அந்த அயல்நாட்டுப் படைப்பாளிகளை மட்டுமே சொல்கிறாய் .அதிகம் படித்திருக்கிறாய் என்று காட்டிக் கொள்ளும் ஆசையா. '

'அப்படி ஒன்றும் இல்லையே'

அந்தத் திமிர் அவனுக்குப் பிடித்திருந்தது.

அவனுக்கு அது பிடிக்கிறது என்பதால் அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது .


அன்று ஒரு நாள் அவர்கள் இணைந்த நேரம். அதில் அவளுக்கு பிக்காஸோவின் புதுமை இருந்தது , பீத்தோவனின் உருக்கம் இருந்தது. சாக்ரடீஸி ன் உணர்வு இருந்தது . ஓட் ஹவுஸின் சிரிப்பு இருந்தது . அவளுக்குப் பிடித்து இருந்தது .


'இவ்வளவு இருக்கிறதா இதில்' என்றாள்

'இன்னும் இருக்கிறது ' என்றான்.

அன்று முதல் அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கினர்.


கால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள் . அவன் ஓவியத்தின் திறமையால் உலகப் புகழ் பெற்று அவன் ஓவியங்களை வைத்து 'மிலானில் 'நடந்த ஓவியக் கண்காட்சிக்கு அவனுடன் சென்றிருந்தாள்.

அங்கே அவனுடன் நெருங்கிப் பழகுவதில் ஆர்வம் காட்டிய அந்த வெள்ளைக்காரப் பெண்களை அவளுக்குப் பிடிக்கவில்லை.


அவளின் ஆங்கிலப் பேச்சுகளுக்கு கூடிய கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்திருந்த நேரம். அவளின் உருவத்திலும் , முகத்திலும் கூடுகின்ற வயதின் தளர்ச்சி தெரிய ஆரம்பித்த நேரம். தன் பேச்சை விட, தன்னைப் பார்க்க வந்த கூட்டமே அதிகம் முன்பு என்று அவளுக்குப் புரிய வந்த நேரம். அடிக்கடி அவனுடன் தகராறு .


ஒருமுறை அவன் மேல் அவள் வீசி எறிந்த சில்வர் பிளேட்டின் குறி தப்பியதால் அவன் கண் தப்பித்தது. ஓவியனான அவன் கண்ணை நோக்கி வைத்த குறி தவறி விட்டதே என்று அவள் அலறியபோது தான், அவளின் மனநோயின் தீவிரம் அவனுக்குப் புரிந்தது. இருந்தும் அவளைப் பிரிய அவனுக்கு விருப்பம் இல்லை.


அந்தக் கிராமத்துக் கோயில் பிரகாரத்தில் அவன் கையைப் பிடித்து நடந்து வந்த அந்தப் பெண்ணின் உருவம். விரித்த முடியோடு, விழித்த கண்ணோடு , முழங்கால் வரை மறைத்த ஸ்கர்டோடு அவன் கையைப் பிடித்து நடந்து வந்த அவள் . அவன் ஓவியத் திறமையை, அந்த வயதிலேயே அவனுக்கு உணர வைத்த அந்தப் பெண் அல்லவா அவள் .


நெருங்கிய நண்பர் , நரம்பியல் நிபுணர், டாக்டர் பாஸ்கரனிடம் அழைத்துச் சென்று காண்பித்தும் பயனில்லை. 'சிறிது நாட்கள் பிரிந்து இருக்க முயற்சி செய்யலாம் ' என்றார். மருந்துகளின் மயக்க நிலையில் அவளே ஒரு முறை சொன்னாள் . 'என்னால் உனக்கு எப்போதும் ஆபத்துதான். நாம் பிரிவதே ஒரே வழி' . பிரிந்தார்கள்.


குற்றாலத்தில் அவளின் நெருங்கிய தோழியின் வீட்டில் அடைக்கலம். மறுபடி பேச்சுப் பயிற்சி. இப்போது தமிழில். தேவாரம், திருவாசகம். என்று தமிழ்ப் பக்தி இலக்கியத்தில் பயிற்சி. ஆன்மீகக் கூட்டங்களில் அவளுக்கென்று ஒரு தனி அங்கீகாரம் . தனிக் கூட்டம். தமிழ் நாட்டின் பல கோயில் விழாக்களில் அழைப்பு. பக்தி மயமான வாழ்வில், திருநீற்று நெற்றியோடு அவள் தோற்றத்தைப் பார்ப்பவர்கள் அவள் வரும்போது, எழுந்து நின்று வணங்கினார்கள். அவள் அவனிடம் பேசுவதில்லை. அவர்கள் சந்திக்கவில்லை .


ஒரு நாள் அவளிடம் இருந்து போன் வந்தது

'நான் இப்போது சென்னை வந்திருக்கிறேன் ' .

' ஏதோ பார்க்க வேண்டும் என்று தோன்றியது. முடிந்தால் சந்திக்க வா , முகவரி இது '

'வரமாட்டேன் 'என்று பதில் அளித்தான் .


மற்றும் ஒரு முறை வாட்சப் செய்தி ' நியூ யார்க்கில் , புதிதாகக் கட்டியுள்ள சிவன் கோயிலில் ' திருவாசகம் ' பற்றிய சொற்பொழிவு . தொடர்ந்து ஒரு மாதம் அங்கே தான். பாஸ்டன், சிகாகோ , சான் பிரான்சிஸ்கோ என்று பல இடங்களின் கோயில்கள் . நாளை அமெரிக்கா செல்கிறேன் இன்று பார்க்கலாமா ' . முகவரியுடன் ஒரு புகைப்படம் அனுப்பி இருந்தாள். திருநீற்று நெற்றியோடு அவள் தோற்றம், வாட்சப் செய்தி .


அவன் வரைந்த அவளின் இளம் வயது ஓவியத்தைத்தான் இப்போது பார்த்துக் கொண்டு இருக்கிறான். அவளா இவள் . ' இது போதும் பெண்ணே எனக்கு . என் திறமையை நீ வெளிக்கொணர்ந்த தருணத்தை எனக்கு நினைவு படுத்தும் இந்த எனது முதல் ஓவியம் ,இது போதும் எனக்கு . '


அவளைப் பார்க்க அவன் போகவில்லை.அன்று இரவு நைட் டின்னருக்கு அழைத்திருந்தாள் அவனது இன்னொரு தோழி .இவளுக்கு இவன் ஓவியம் பிடிக்கும். .


---------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளா இவள் - சிறுகதை ( நன்றி : நவீன விருட்சம் )

 அவளா இவள்  - சிறுகதை ( நன்றி : நவீன விருட்சம் ) --------------------------------- அந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான் அவன் . அதில் ...