காத்திருப்பவள் - சிறுகதை ( நன்றி : நவீன விருட்சம் )
-------------------------------------
வழக்கம் போல் பரபரப்பான காலை நேரம் தான் அவளுக்கு. வீட்டில் நோய்வாய்ப்பட்டுப் படுத்திருக்கும் பெற்றோருக்கு வேண்டியன செய்து விட்டு , கையில் ஒலி எழுப்பும் செல்லில் அழைக்கும் அலுவலக அதிகாரியின் அவசரத் தொனிக்கு ஏற்றபடி பதில் அளித்து விட்டு, அந்த அவசரத்திற்குத் தான் செய்ய வேண்டிய வேலைகளை மனதில் அசை போட்டபடி கிளம்பிய அவள் தோளில் தொங்கும் லெதர் பேக்கின் சுமை கொஞ்சம் தான். ஒரு சிறிய கண்ணாடி, சின்ன செண்டு பாட்டில், ஸ்டிக்கர் பொட்டு அட்டை , ஒரு சிறிய பர்சில், கொஞ்சம் ரூபாயும், சில நாணயங்களும் இரண்டு வட்ட டிபன் பாக்ஸ் டப்பாக்கள். ஒன்றில் தயிர் சாதம், ஊறுகாய் , மற்றொன்றில் இரண்டு இட்லிகள், மிளகாய்ப் பொடியோடு, ஒரு சிறிய வாட்டர் பாட்டில் .
வாசலில் பூத்துக் குலுங்கித் தொங்கும் கொன்றைப்பூக்களின் மஞ்சள் நிறத்தில் கொஞ்சம் மயங்கி விட்டு தூரத்தில் இருந்து வரும் கோயில் மணி ஓசையின் இசையிலும் கொஞ்சம் தயங்கி விட்டு நடக்க ஆரம்பித்தாள் அவள். அந்தச் செயல்களுக்கு அவளின் மனச் சுமையைக் கொஞ்சம் இறக்கி விடும் சக்தி உண்டு என்பது அவள் உணர்ந்தது .
அவளுக்கு வாழ்த்துக் கூறி வழி அனுப்புவது போல் தன் பூக்களை ஆட்டும் கொன்றை மரம் அவள் கூடவே வளர்ந்த மரம். எதையும் எதிர்பாராமல் அவளுக்குத் துணையாக நிற்கின்ற மரம். அவள் சாதியில் சொந்தங்களுக்கு கிடைக்காத , அவளுக்கு மட்டும் கிடைத்த அந்த மஞ்சள் நிறம் கூட அவை கொடுத்தது தானோ என்ற பிரமை கூட அவளுக்கு சில சமயம் தோன்றுவது உண்டு.
அந்த நிறமும் அவளின் செழிப்பான உடலும் அவளுக்கு ஒரு சுமையோ என்று கூட சில சமயம் தோன்றியது உண்டு. ஏறிச் செல்லும் பேருந்து களிலும், இறங்கி நுழையும் அலுவலகத்திலும், தன் அறிவை விட இந்த அழகுக்குத் தான் அதிக மதிப்போ என்றும் அவள் எண்ணியது உண்டு. அப்போதெல்லாம், அழகில்லாத தன் சொந்தக்காரப் பெண்கள் மேல் அவளுக்கு ஒரு பொறாமை கூட ஏற்படுவது உண்டு .
எவ்வளவு சுதந்திரமாக நினைப்பதைப் பேசிக்கொண்டு, நினைப்பதைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். தான் செல்லும் இடங்களிலும் , பேசும் வார்த்தைகளிலும் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. அதில் தெரிகின்ற குறிப்பைத் தவறாகப் புரிந்து கொண்டு பழகத் துடிக்கின்ற எத்தனை ஆண்கள். அதைப் பார்த்து பொறாமையில் தெறிக்கும் சில பெண்களின் கண்கள். அதில் தெறிக்கும் நெருப்பு இவளைச் சுடும் உணர்வு . அத்துடன் அவளின் நடுத்தர ஏழ்மையையும் நோயுற்ற பெற்றோரையும் பற்றியும் அறிந்த அலுவலக நண்பர்களின் இரட்டைப் பேச்சுக்களை ஒதுக்கும் நிர்ப்பந்தம்.
இத்தனைக்கும் நடுவில் அவள் மனதில் ஒரு ராஜகுமாரன் இருந்தான். அவன் அந்தக் கொன்றை மரத்தடியில் இரவு நேரத்தில் அவளுக்காகக் காத்துக் கொண்டு இருப்பான். அவளைத் தீர்க்கமாகப் பார்த்து , அவளிடம் மென்மையாகப் பேசி அவளைக் கிறங்கடிப்பான். அவள் கையை இறுக்கப் பிடித்து இருப்பான்.
உள்ளிருந்து வரும் அம்மாவின் ' எங்கேடி போய்த் தொலைஞ்சே ' என்ற அம்மாவின் குரலுக்குப் பயந்து அவள் ஓட முயலும்போது, ' மெதுவாகப் போ, தரையில் கிடக்கும் கொன்றைப்பூ காலைக் குத்தி விடாமல் நடந்து போ ' என்று அவளை மெதுவாக அணைத்து விடுவித்து அனுப்பி வைப்பான். அவள் வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொண்டிருக்கும் அவனாலேதான் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
ஒவ்வொரு மாலையும் அவள் வேலை முடிந்து வேர்வையின் போர்வையில் விரைந்து வீடு திரும்பும் வேகத்திற்கு காரணமும் அவன்தான். அன்று மாலையும் அப்படித்தான். உள்ளே நுழைந்தவள் என்றும் இல்லாத அதிசயமாய் அவளது அம்மா, அடுப்படியில் தட்டுத் தடுமாறி காபி போட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு விரைந்தவள், ' விடும்மா , நான் பார்க்கிறேன் ' என்று விரைந்தாள் .
' யார் வந்திருக்காங்க தெரியுமா , நம்ம கிராமத்தில் இருந்து . இருபது வருஷமா விட்டுப் போன தொடர்பு திரும்ப வந்திருக்குடி , ஞாபகம் இருக்கா, உனக்கு எங்கே ஞாபகம் இருக்கப் போகுது . அப்ப உனக்கு அஞ்சு வயசுதான் . அவன்தான் உன்னை முதன்முதலா எலிமெண்டரி ஸ்கூல் கூட்டிப் போனான். . அவன் நாலாவது . நீ ஒண்ணாவது . பக்கத்து வீட்டுப் பரிமளம் , உசந்த சாதியா இருந்தாலும் , நம்ம கிட்ட நெருக்கமா பழகினவ . அவ மகன் . '
ஊரிலே நடந்த சாதிப் பிரச்சினையில் மனம் வெறுத்துப் போயி, டீச்சர் வேலையில் இங்கே ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு உன் அப்பா இங்கே சென்னைக்கு வந்த பிறகும் பரிமளம் புருஷன் மாணிக்கத்தோட மட்டும் அப்பா தொடர்பு வச்சிருந்தார். ஏதோ விஷயமா அவங்க பையன் இப்ப வந்திருக்கான். 'வந்து சொல்லுறேன்னு' சொல்லிட்டு இப்பதான் வெளியே போனான்.
அவன் முகம் மெதுவாக மனதில் மலர ஆரம்பித்தது. ஆம் , பிடித்த கையை விடாமல் பள்ளிக்கு கூட்டிச் செல்வான். ' டேய் வலிக்குதுடா, கையை விடு ' என்றாலும் விட மாட்டான். ' நீ பாட்டுக்கு ஓடுவே, அங்கெ பாரு எத்தனை மாடு திரியுது . முட்டிடும். அது தான் கொஞ்சம் அழுத்திப் பிடுச்சுட்டேன் வலிக்குதா, ' என்றபடி லேசாக கையைத் தடவி விட்டு , மறுபடி அதே போல் பிடித்துக் கூட்டிச் சென்று , அவள் வகுப்பில் சென்று பெஞ்சில் அமரும் வரை விட மாட்டான். இண்டெர்வெல்லில் பள்ளி வாசலுக்கு வரும் சவ்வு மிட்டாய் வாங்கி அவளுக்குப் பாதி கடித்துக் கொடுப்பான். திரும்பும் போதும், அதே விடாத கைப்பிடி.
வாசலுக்குப் போனாள் கோதை. மாதவன் சிரித்த முகத்தோடு , அப்போது கொன்றை மரத்தருகே வந்து கொண்டிருந்தான். கொன்றைப் பூக்கள் சில அவன் மேல் சரிந்து விழுந்தன. அவள் உடம்பு சிலிர்த்தது. அவன் கையில் மல்லிகைப் பூ சரம் உருண்டு தெரிகின்ற பையோடு . அந்தப் பைக்குள் அவனது திருமணப் பத்திரிகை .
-----------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக