பொம்மையோ பொம்மை - குறுங்கதை
-----------
இடுப்பில், சூலக் கையோடு பாப்பா. தலையில், பொம்மைகள் நிறைந்த கூடை. மாட வீதியில் மனோன்மணி.
இடப்புறச் சத்திரத்து ஏழைகளும் ,வலப்புற மாடிவீட்டுப் பணக்காரர்களும், வாங்கப் போவதில்லை. அடுத்தது கிழக்குத்தெரு. பண்டிகைகள் எல்லாம் பார்த்துப் பார்த்துக் கொண்டாடும் நடுத்தரவர்க்கம்.
கிருஷ்ண ஜெயந்திக்கு வீட்டை அலங்கரித்தும், வெண்ணையும், சீடையும் படைத்தும், கண்ணன் காலடித்தடத்தை, அரிசி மாவால் வீடெங்கும் வரைந்தும், கொண்டாடிக் கொண்டிருக்கும் அவர்கள் தான் வரப்போகும் கொலுவிற்கு வாடிக்கையாளர்கள். .
முன்பு இதே போல் தன்னை இடுப்பில் சுமந்து , கையில் ஒரு சூலத்தைக் கொடுத்து போக்கு காட்டி , கூடையில் பொம்மை சுமந்து சென்ற அம்மாவின் முகம் . ' அம்மா' . உன்னைத் தொடர்ந்து நான். அடுத்து கண்மணிப் பாப்பாவா. ' .
' பெண் பிள்ளை என்றாலே வீட்டு வேலைகள் என்ற தலைமுறையின் எச்சமாக என்னையும் பள்ளிக்கு அனுப்பாமல் , இழுத்து விட்டவள் நீ. இதைத் தொடர விட மாட்டேன்.'
' இவளைப் பள்ளியில் சேர்ப்பேன். பல கலைகள் கற்பிப்பேன். பொம்மைக் கலையும்தான் . வளர்வாள் சூலம் ஏந்திய சிங்கப் பெண்ணாக, பலருக்கு வாழ்வளிக்கும் தங்கப் பெண்ணாக ' . எண்ணம் கலக்க உரத்த குரல் எழுப்பி கிழக்குத் தெருவில் திரும்பினாள். ' பொம்மையோ பொம்மை , உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் வண்ண வண்ணப் பொம்மை '
------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக