புதன், 27 பிப்ரவரி, 2019

இருந்தும் இல்லை

இருந்தும் இல்லை
---------------------------------
முடி வெட்டிட்டு வந்த
முக்குக் கடை இருக்கு

முங்கிக் குளிச்சு வந்த
கண்மாயும் இருக்கு

சுத்தி சுத்தி வந்த
கோயிலும் இருக்கு

சும்மா படுத்திருந்த
திண்ணையும் இருக்கு

எல்லாம் இருக்கு
அவர் மட்டும் இல்லை
--------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

நரம்புகளின் நாட்டியம்

நரம்புகளின் நாட்டியம்
------------------------------------------
இதயத்தின் நரம்புகளில்
இன்னிசை ஓட்டம்

மூளையின் நரம்புகளில்
முக்கியக் குறிப்புகள்

கைகளின் நரம்புகளில்
கவிதையின் ஊற்று

கால்களின் நரம்புகளில்
நெருங்கிடும் வேகம்

அவளை பார்த்தவுடன்
நரம்புகளின் நாட்டியம்
-------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

வியாழன், 7 பிப்ரவரி, 2019

புலரும் பொழுது

புலரும் பொழுது
-------------------------------
இரவெல்லாம் தூக்கம் வராக் காரணத்தால்
ஏங்கிப் போய்க் கொக்கரிக்கும் கிழட்டுச் சேவல்
உறவாடித் தென்றலிட்ட முத்தத்தின்
பனிச்சாறைப் பார்த்தேங்கும் பசுஞ்   செடிகள்

அடங்கிவிட்ட அலைக்கூட்ட மேகங்கள்
ஆகாயக் கடலினிலே அமைதிக் காட்சி
அவசரமாய் மரத்தை விட்டு பறவைக் கூட்டம்
அணிவகுப்பை நடத்துகின்ற ஆர்ப்பாட்டம்

எங்கேயோ செல்லுகின்ற ரயிலின் ஓசை
பிரிந்தவளின் நினைவுக்குச்  சுருதி கூட்டும்
பால்கார மணியோசைச்   சப்தம் வந்து
பாதியிலே நினைவுகளை அறுத்துப் போடும்
-----------------------------------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book