புதன், 29 ஆகஸ்ட், 2018

ஞாபகம் இருந்தால் .

ஞாபகம் இருந்தால் ..
----------------------------------------
ஞாபகம் இருந்தால்
வந்து விடுவார்

முதுகைப் பார்த்து
நடந்தது ஞாபகம் இருந்தால்

விரலைப் பிடித்து
முத்தமிட்டது ஞாபகம் இருந்தால்

மடியில் படுத்து
அழுதது ஞாபகம் இருந்தால்

ஞாபகம் இருந்தால்
வந்து விடுவார்
--------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

மொழிப் பற்று

மொழிப் பற்று
-------------------------
ஆங்கிலமும் வேண்டாம்
அயல் மொழிகள் வேண்டாம்

வட மொழியும் வேண்டாம்
தென் மொழிகள் வேண்டாம்

தமிழொன்றே போதுமென்று
தன்முனைப்பில் முடிவெடுத்தால்

தன்னிறைவு பெற்றுவிட்ட
தமிழகத்தை உருவாக்க

என்னவிங்கு செய்கின்றோம்
எழுதுகிறோம் பேசுகிறோம்

நலமும் வளமுமாய்
தமிழர்கள்  எல்லோரும்

வாழ்கின்ற நாளொன்று
வருகின்ற வழி தேடி

திரைகடல் ஓடுவோம்
திரவியம் தேடுவோம்

எம்மொழியும் கற்று விட்டு
இனிதெங்கள் தமிழ் என்போம்

ஒன்றான உலகத்தில்
ஓங்கிய தமிழாவோம்

---------------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book

புதன், 8 ஆகஸ்ட், 2018

முத்தமிழ்க் கலைஞர்

முத்தமிழ்க் கலைஞர்
--------------------------------------
கடிதமும் கதையும்
இயலாய்ப்  பூக்கும்

கவிதையும் பாடலும்
இசையைச் சேர்க்கும்

கூத்தும் திரையும்
நாடகம் ஆக்கும்

இயலிசை நாடக
முத்தமிழ்க் கலைஞர்

தமிழர்  நினைவில்
தமிழாய்  வாழ்வார்
----------------------------------நாகேந்திர பாரதி
 Humor in Business - Poetry Book

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

முகமூடி மனிதர்கள்

முகமூடி மனிதர்கள்
-------------------------------------
அகமும் முகமும்
ஒன்றாம் குழந்தைக்கு

சிரித்த முகத்துக்குள்
சினத்தை ஒளிப்பதும்

அமைதி முகத்துக்குள்
ஆணவம் மறைப்பதும்

வளர்ந்த பின்னாலே
வாங்கிக் கொண்டவை

அகத்தின் அழகு
முகத்தில் தெரியட்டும்
---------------------------------நாகேந்திர பாரதி
Humor in Business - Poetry Book