செவ்வாய், 29 மே, 2018

இப்படியும் அப்படியும்

இப்படியும் அப்படியும்
-----------------------------------
இப்படித்தான் வர வேண்டுமென்று
அப்போதும் நினைத்ததுதான்

இப்படியும் அப்படியுமாய்
இருந்தாகி விட்ட பின்பும்

இப்படித்தான் வர வேண்டுமென்று
இப்போதும் நினைப்பதுதான்

இப்படியும் அப்படியுமாய்
இப்போதும் இருந்து விட்டால்

இப்படித்தான் வர வேண்டுமென்பது
எப்படித்தான் நடக்குமோ
------------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

திங்கள், 28 மே, 2018

ஐம்பூத ஆட்டம்

ஐம்பூத ஆட்டம்
-------------------------------
உடலை மண்ணென்று
உணர்ந்து கொண்டு

உயிரை விண்ணென்று
உணர்ந்து கொண்டு

இரத்தம் நீரென்று
உணர்ந்து கொண்டு

சூட்டை நெருப்பென்று
உணர்ந்து கொண்டு

மூச்சைக் காற்றென்று
உணர்ந்து கொண்டு

முதல்வன் இறையென்று
உணர்ந்து கொள்வோம்
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

புதன், 23 மே, 2018

விதையும் செடியும்

விதையும் செடியும்
----------------------------------
பழைய நினைவுகள்
புதைந்து  போகலாம்

மண்ணில் கலந்து
மக்கிப் போகலாம்

காற்று வீசும்போது
தூசி பறக்கலாம்

மழை பெய்யும்போது
முளைத்து வரலாம்

பழைய விதையின்
புதிய செடியாக
--------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

செவ்வாய், 22 மே, 2018

கண்மாய்க் கரை

கண்மாய்க் கரை
------------------------------------
கண்மாயைப் பற்றிக்
கவிதை எழுதச் சொன்னார் நண்பர்

முன்பு போல் இல்லை
கண்மாயும் கரையும்

சகதி இருந்திருந்தால்
வழுக்கி விழுந்திருக்கலாம்

தண்ணீர் இருந்திருந்தால்
முங்கி எழுந்திருக்கலாம்

மரங்கள் அடர்ந்திருந்தால்
தேனடையைத் தேடியிருக்கலாம்

கட்டாந் தரையாகக்
கிடக்கின்ற  கண்மாயைப்

பார்க்காமலே இருந்திருக்கலாம்
பழைய நினைவுகளோடு
-----------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

திங்கள், 21 மே, 2018

நீச்சல் குளம்

நீச்சல் குளம்
--------------------------
சின்ன மீன்களோடு சேர்ந்து கொண்டு
பெரிய மீன்கள் துள்ளிக் குதிக்கும்

வெளியேற்றும் தண்ணீரில்
சிக்கித் தவிக்கும் சின்ன மீன்கள்

பொறுமைக்கும் எல்லை உண்டாம்
புத்திசாலி சின்ன மீன்கள்

ஒன்றாகச் சேர்ந்து கொண்டு
ஓடி ஆடும் இங்கும் அங்கும்

போக வரப் பாதை இன்றி
வெளியேறும் பெரிய மீன்கள்
----------------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

சனி, 19 மே, 2018

கசங்கிய துணிகள்

கசங்கிய துணிகள்
-------------------------------
இங்கும் அங்கும்
இழுத்துப் போகும் குழந்தைகளும்

இதையும் அதையும்
போட்டுப் பார்க்கும் இளையோர்களும்

எடுத்துக் போட்டே
களைத்துப் போகும் பணியாளர்களும்

இடத்தை தேடி
அமரப் பார்க்கும் முதியோர்களும்

காசும் கார்டும்
கணக்குப் பார்க்கும் காசாளர்களும்

கலைத்துப்  போட்ட
துணிகள் போலே கசங்கிப் போவார்
-------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

வெள்ளி, 18 மே, 2018

உடைந்து போன உருவங்கள்

உடைந்து போன உருவங்கள்
----------------------------------------------------
சிலர் மண்டிய தாடியோடு
சிலர் மழித்த முகத்தோடு

சிலர் உடல் உப்பிப் போய்
சிலர் ஒல்லிக் குச்சியாக

பள்ளிப் பருவத்திலும்
கல்லூரிப் பருவத்திலும்

பழகிய உருவங்கள்
படங்களில் மட்டுமே

உடைந்து போனது
உருவங்கள் மட்டுமா
-----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

புதன், 16 மே, 2018

குவாலிடி மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை


குவாலிடி மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை 
------------------------------------------------------------------------------------------------------------------
நம்ம நண்பர் குவாலிட்டி விஷயத்திலே ரெம்பவே உஷார் பார்ட்டிங்க. எதையுமே ஒரு தடவைக்கு ரெண்டு தடவை இல்லே பத்து தடவையாவது சரி பார்த்துட்டுதான் வாங்குவாருங்க.

இவர் மனைவிக்கு நகை வாங்க போனா கூடவே ஒரு அப்ரைஸரையும் கூட்டிட்டு போவாரு. அவர் பார்த்து ஓகே சொன்னாதான் அந்தக் கடையிலே நகை வாங்கலாம். இல்லேன்னா அடுத்த கடை. ஒரு ஜோடி தோடு வாங்க எத்தனை கடை இப்படி நடக்கிறது. வெறுத்துப் போன இவரு சம்சாரம் இப்பல்லாம்  தனியாவே நகைக்கடைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. வேற என்னங்க பண்றது .

மளிகைக்கடைக்கு போனா , அங்கே பருப்பு , புளி , அரிசின்னு ஒவ்வொண்ணுக்கும் ஆயிரம் குறை சொல்லி அந்தக் கடைக்காரரை ஒரு வழி பண்ணிடுவாரு. இவரு சொல்றதை கேட்டு வந்திருக்கிற வாடிக்கையாளர்களும் நடையைக் கட்டுறாங்க. இப்பல்லாம், இவரு வந்தா கடைக்கார பையனே இவரை உள்ளே விடுறதில்லைங்க.

எலக்ட்ரானிக் கடையிலே வேற மாதிரி. ஒரு ஹெட் போன் வாங்கப் போனா அதிலே இருக்கிற ஒவ்வொரு பார்ட்டையும் பிரிச்சு போட்டு விளக்கம் சொல்லணும், அது தவிர கேட்டலாக் புத்தகம் முழுக்க படிச்சுக் காட்டணும் இவருக்கு. விளங்குமா .
  
வெளிக் கடைகளே இந்தப் பாடு படுதுன்னா, இவரு வேலை பார்க்கிற ஆபீஸ் எப்படி இருக்கும். இதிலே இவரு அந்த சாப்ட்வேர் கம்பெனியில் குவாலிட்டி மேனேஜர் வேற. இவர் கிட்ட வர்ற சாப்ட்வேர் கோட் எல்லாம் டெஸ்ட் முடிஞ்சு கஸ்டமர் கிட்டே போனதா சரித்திரமே இல்லைங்க. எல்லாம் டெவெலப்மெண்ட் டீமுக்கே திரும்பிடும். இதனாலே அந்தக் கம்பெனியோட   விற்பனை அளவும் லாபமும்  குறைஞ்சுக்கிட்டே போக ஆரம்பிச்சிடுச்சு .

காரணத்தை ஆராய்ச்சி பண்ணின  கம்பெனி தலைவரு கண்டு பிடிச்சாருங்க. நம்ம நண்பர் கம்பெனிக்கு வந்த நாள்லே இருந்து எந்த சாப்ட்வேரும் கம்பெனியை விட்டு கஸ்டமர் கிட்டே போகவே இல்லை. அப்புறம் என்னாச்சு. நம்ம நண்பரை கம்பெனியை விட்டு தூக்கிட்டாங்க. இப்ப வேற வேலை தேடி அலைஞ்சுக்கிட்டு இருக்காருங்க.

ஹலோ, உங்களுக்கு தெரிஞ்ச ஏதாவது கம்பெனியில் இவருக்கு வேலை கிடைக்குமாங்க. என்னங்க. ஓடாதீங்க. நில்லுங்க.
-------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 15 மே, 2018

காற்றில் காகிதம்

காற்றில் காகிதம்
------------------------------
இந்த மரக்கிளையில்
ஒட்டிக் கொண்டது காகிதம்

மடித்துக் கிடந்த
காப்பித்தூள் நினைப்போடு

கட்டிக் கிடந்த
மூட்டையின் நினைப்போடு

அமுங்கிக் கிடந்த
புத்தகப்பை நினைப்போடு

அச்சடித்து வெளிவந்த
அழகின் நினைப்போடு

கூழாய்ப் பிசைந்த
ஆலையின் நினைப்போடு

ஓங்கி வளர்ந்திருந்த
ஊட்டி மர நினைப்போடு

இந்த மரக்கிளையில்
ஒட்டிக்கொண்டது காகிதம்
------------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

வியாழன், 10 மே, 2018

இறை வெளி

இறை வெளி
-----------------------
உள்ளும் வெளியுமாய்
ஓடிக் கொண்டிருப்பது

நீரும் நெருப்புமாய்
ஆடிக் கொண்டிருப்பது

காற்றும் உயிருமாய்
கலந்து கொண்டிருப்பது

விண்ணும் மண்ணுமாய்
விளங்கிக் கொண்டிருப்பது

நானும் நீயுமாய்
நடந்து கொண்டிருப்பது
----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

ஞாயிறு, 6 மே, 2018

உறவின் பிரிவு

உறவின் பிரிவு
-------------------------
அக்கறையாய்ப் பேசும்
அன்புப் பேச்சில்
அறிவின் ஆழமிருக்கும்

எப்போதாவது நிகழும்
அபூர்வச் சிரிப்பில்
ஆயிரம் அழகிருக்கும்

கண்ணாடிக்கு உள்ளிருந்து
பாசம் மட்டும் அல்ல
கோபமும் எட்டிப் பார்க்கும்

மரியாதை கொடுப்பதில்
மாற்றுக் குறைந்தாலோ
மவுனம் தொடர் ஆகும்

ஒவ்வொரு புது வருடமும்
அவர் தரும் டைரியில் தான்
ஆரம்பம் ஆகும்

இனி வரும் வருடங்களில்
அந்த டைரிகளும் இல்லை
அவரும் இல்லை
-----------------------------------------நாகேந்திர பாரதி
 http://www.nagendrabharathi.com