சனி, 24 மார்ச், 2018

நொடிப் பொழுது

நொடிப் பொழுது
-----------------------------
பொங்குகின்ற பாலுக்கும்
நொடிப் பொழுதே

புலருகின்ற காலைக்கும்
நொடிப் பொழுதே

மலருகின்ற மொட்டுக்கும்
நொடிப் பொழுதே

மயங்குகின்ற காதலுக்கும்
நொடிப் பொழுதே

நொடிப் பொழுதில்
நேருவதே இயற்கை

படிப் படியாய்ச்
சேருவதே வாழ்க்கை
----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

திங்கள், 19 மார்ச், 2018

பேர் தெரியாப் பெரியவர்கள்

பேர் தெரியாப் பெரியவர்கள்
--------------------------------------------------
தொப்பியோடும் பூட்ஸோடும்
போலீஸ் உடுப்போடும்
ஏட்டுத் தாத்தா

அம்மன் சாமி தெரு உலாவில்
முன்னாடி நடந்து வரும்
பேஷ்கார் தாத்தா

மதுரைக்கும் சிவகங்கைக்கும்
கிரிமினல் கேஸ் கட்டோடு
வக்கீல் தாத்தா

கனத்த சிரிப்போடும்
கலகலப்புக் குரலோடும்
மீசைக்காரத் தாத்தா

நெல்லு வண்டி ஏத்தி
பக்கத்தூரு சந்தை போகும்
நெல்லுத் தாத்தா

சிக்கல் ஊரில் இருந்து
விடுமுறைக்கு வருவதனால்
சிக்கல் தாத்தா

கையை வீசி வீசி
வேகமாக நடப்பதால்
கைவீச்சுத் தாத்தா

கணக்கு வழக்கைக்
கணக்காகப் பார்ப்பதால்
கணக்குத் தாத்தா

சிரிக்கப் பேசி
விளையாட்டுத் தோழனாய்
காமெடித்  தாத்தா

அடையாளப் பட்டத்தால்
தாத்தாக்கள்  தெரிந்தாலும்
பேர் மட்டும் தெரியாது
------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

சனி, 17 மார்ச், 2018

கால எந்திரம்

கால எந்திரம்
-------------------------
பின்னாலே ஓடிப்
போகலாம் என்றால்

செய்த சிலதைச்
செய்யாமல்  விடலாம்

செய்யாத சிலதைச்
செய்து விடலாம்

முன்னாலே ஓடி
வந்து பார்த்தால்

முதலில் இருந்ததே
நன்றாக இருக்கலாம்
-------------------------------நாகேந்திர பாரதி 
http://www.nagendrabharathi.com

செவ்வாய், 6 மார்ச், 2018

கோயில் மணியோசை

கோயில் மணியோசை
-------------------------------------------
உச்சிக்கால பூஜையை
உச்சரிக்கும் மணியோசை

மாடப் புறாக்களை
இடம் பெயரச் செய்யும்

படுத்திருந்த முதியோரை
நடை பயிலச் செய்யும்

மூடி மூடிக் காண்பித்த
பிரசாதத் தட்டுக்கள்

பெரிய தீப ஆராதனை
முடிந்தவுடன் திறக்கும்

முதியோர் வாய் ஒலிக்கும்
பிரசாத ஓசையினைக்

கேட்டபடி அடங்கும்
கோயில் மணியோசை
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

திங்கள், 5 மார்ச், 2018

சப்தத்தின் அர்த்தங்கள்

சப்தத்தின் அர்த்தங்கள்
-------------------------------------------
வயக்காட்டு வெளியில்
தவளைகள் சப்தம்

வாசற் புறத்தில்
காக்கைகள் சப்தம்

மரத்தின் கிளைகளில்
கிளிகளின் சப்தம்

கோபுர வாசலில்
புறாக்கள் சப்தம்

சப்தத்தின் அர்த்தங்கள்
புரியா விட்டாலும்

உள்ளுக்குள் எழுப்பும்
உணர்ச்சிகள் வேறு
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

ஞாயிறு, 4 மார்ச், 2018

பாரம்பரியம்

பாரம்பரியம்
-----------------------------
இட்டிலியும் சோறும்
பாரம்பரியம்

சட்டினியும் குழம்பும்
பாரம்பரியம்

வேட்டியும் சட்டையும்
பாரம்பரியம்

பாவாடை தாவணியும்
பாரம்பரியம்

உணவிலும் உடையிலும்
பாரம்பரியம்

மாறினாலே மாறிவிடும்
பாரம்பரியம்
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

சனி, 3 மார்ச், 2018

வேர்வைக் கோலங்கள்

வேர்வைக் கோலங்கள்
----------------------------------------------
சமையல் செய்யும்போது
வேர்க்கிறது

வெயிலில் அலையும்போது
வேர்க்கிறது

உடற்பயிற்சி செய்யும்போது
வேர்க்கிறது

வேர்ப்பது என்னமோ
நல்லதுதான்

துடைப்பது மட்டும்தான்
கஷ்டம்
--------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

வெள்ளி, 2 மார்ச், 2018

தெப்பக் குளம்

தெப்பக் குளம்
-------------------------
ஒரு காலத்தில்
ஓடியதாம் தெப்பம்

இப்போது வெறும் குளம்
தண்ணீரும் இல்லை

வரிசை வரிசையாக
வண்ணக் குடங்கள்

ஓரத்துக் கிணற்றில்
ஊறும் நீருக்காக

காத்திருந்து கழிகிறது
பகலும் இரவும்
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com