வியாழன், 15 பிப்ரவரி, 2018

கிராமத்தை விட்டு ..


கிராமத்தை விட்டு ..
--------------------------------------
தாவிக் குதிக்க வழியின்றி
காய்ந்த சகதிக்குள் தவளைகள்

மேய்ச்சல் நிலத்தைக் காணாமல்
வீடு திரும்பும் ஆடுகள்

மரத்தில் பழுத்த இலைகளை
தூற்றிச் செல்லும் காற்று

குடிசை ஓலை ஓட்டைகளை
அடைக்கப் பார்க்கும் வெயில்

வெறித்துக் கிடக்கும் வானத்தோடு
கிராமத்தையும் விட்டு விட்டு ..
---------------------------------------------நாகேந்திர பாரதி 
http://www.nagendrabharathi.com

புதன், 14 பிப்ரவரி, 2018

காதலர் தினம்

காதலர் தினம்
-------------------------
பார்க்கும் பொழுதெல்லாம்
பரவசம் பற்றிக் கொண்டால்

கேட்கும் பொழுதெல்லாம்
கிளர்ச்சியும் தொற்றிக் கொண்டால்

தொடும் பொழுதெல்லாம்
தொலைந்தே போய் விட்டால்

எல்லா நாட்களும்
காதலர் நாட்கள் தான்

இருவர் மனங்களும்
ஒன்றில் ஒன்று தான்
----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

பறவைப் பார்வை

பறவைப் பார்வை
----------------------------
மாடியில் இருந்து பார்க்கும் போது
வேறு மாதிரி தெரிகிறது

மனிதர்கள் குச்சி குச்சிகளாக
நடந்து கொண்டு இருக்கிறார்கள்

மரங்கள் முட்டி மோதிக் கொண்டு
மேலே வர முயற்சிக்கின்றன

தரை மட்டும் எப்போதும் போல
கீழேயே இருக்கிறது

ஆகாயமும் எப்போதும் போல
மேலேயே இருக்கிறது

இடையில் இருப்பவைகள் தான்
வேறு மாதிரி தெரிகின்றன
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

திங்கள், 5 பிப்ரவரி, 2018

குளிர் கோலம்

குளிர் கோலம்
-----------------------
விசிறிகளுக்கு விடுமுறை
வியாதிகளுக்கு பலமுறை

கொசுக்களுக்கு உற்சாகம்
கூடுதலாய் ரத்த தானம்

போர்வைகளின்  புறப்பாடு
பஜனைகளின் வழிபாடு

சீக்கிரமாய்த் திரும்புகின்ற
பறவைகளின் சிணுங்கல் ஒலி

காற்றுக்குள் குளிர் வைத்து
கடவுளின் விளையாட்டு
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com