வியாழன், 30 நவம்பர், 2017

உணவு உடை வீடு

உணவு உடை வீடு
-----------------------------------------------
கிராமத்து விவசாயம்
விட்டு விட்டு வந்து

நகரத்து பிஸ்ஸாவை
மென்றபடி உணவு

கிராமத்து பாவாடை
விட்டு விட்டு வந்து

நகரத்து டைட்ஸிலே
வெந்தபடி உடை 

கிராமத்து கண்மாய்
விட்டு விட்டு வந்து

நகரத்து ஏரியிலே
மிதந்தபடி வீடு 
--------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

வெள்ளி, 3 நவம்பர், 2017

மழைக் காலம்

மழைக் காலம்
---------------------------
காலம் ஓடும் போது
சில நினைவுகளை உதிர்த்து விட்டு
பல உறவுகளைக் கடத்திப் போகலாம்

புதிய உறவுகளின் படபடப்பில்
பழைய நினைவுகள் மக்கிப் போய்
மறைந்து போகலாம்

எப்போதாவது ஒரு மழைக் காலத்தில்
அப்போதுதான் முளைத்த
ஒரு பசுந்தளிரைப் பார்க்கும் போது
பழைய நினைவுகள் முட்டி வரலாம்
-------------------------------------------நாகேந்திர பாரதி 
http://www.nagendrabharathi.com

வியாழன், 2 நவம்பர், 2017

வாடகை வீடுகள்

வாடகை வீடுகள்
-------------------------------
வேறு வேறு
பக்கத்து வீடுகள்

வேறு வேறு
பக்கத்து கடைகள்

வேறு வேறு
பக்கத்து மனிதர்களோடு

வேறு வேறு
பக்கத்து அனுபவங்கள்

வேறு வேறு
வாடகை வீடுகள்
------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

கோயில் புறாக்கள்

கோயில் புறாக்கள்
------------------------------
ஏழு நிலைக் கோபுரத்தின்
இண்டு இடுக்குகளின்

வாசலில் தெரிகின்றன
குச்சிகளும் தானியங்களும்

எட்டிப் பார்க்கின்றன
புறாக்களும் குஞ்சுகளும்

பறந்து போகின்றன
திரும்பி வருகின்றன

இறந்து போன புறாக்கள்
உள்ளேயா வெளியிலா 
-------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

புதன், 1 நவம்பர், 2017

பெர்பெக்ட் பெருமாள் - நகைச்சுவைக் கட்டுரை

பெர்பெக்ட் பெருமாள்  - நகைச்சுவைக் கட்டுரை
-----------------------------------------------------------------------------------------------------------
பெர்பெக்ட் பெருமாளுக்கு அந்த அடை மொழி கச்சிதமா பொருந்துங்க. ஆளு எல்லாத்திலேயும் பெர்பெக்ட் தாங்க.

காலையிலே அஞ்சு மணிக்கு முழிக்கணும்னா கரெக்ட்டா அஞ்சு மணிக்கு அலாரம் வச்சிட்டுப் படுத்திடுவாருங்க .அலாரம் அடிச்சவுடனே முழிச்சுடுவாரு. உடனே அதை அமத்திட்டு தூங்கப் போறது வேற விஷயம். அலாரம் வச்சாரா , அடிச்சதும் முழிச்சு அமத்தினாரா. அது தாங்க முக்கியம். அது தாங்க பெர்பெக்ட் பெருமாள் ..

அதே மாதிரி புள்ளைங்க கூட ஏதாவது விளையாட்டு விளையாடணும்னு நினைச்சாருன்னு வச்சுக்குங்க. அந்த விளையாட்டுப் புத்தகத்தை முழுசா படிச்சப்புறம் தான் விளையாட ஆரம்பிப்பாரு .அதுக்குள்ளே   புள்ளைங்க போர் அடிச்சுப் போயி அதுங்களா விளையாட ஆரம்பிச்சுடுவாங்க. .இவரு புஸ்தகத்தைப் படிச்சுக்கிட்டுத்தாங்க இருப்பாரு. உடனே விளையாடுறதாங்க  முக்கியம். பெர்பெக்ட்டா புரிஞ்சு தானே விளையாடணும்.

ஆபீஸ் வேலைகளிலும் அப்படித்தாங்க. மனுஷன் கம்பியூட்டரை ஆன் பண்ணி வச்சுட்டு காப்பி சாப்பிட்டு வந்து பர்சனல் மெயில், ட்விட்டர், பேஸ்   புக்  எல்லாம் பார்த்திட்டு நிதானமாய் தான் ஆபீஸ் வேலை பார்க்க ஆரம்பிப்பார். இதுக்குள் லஞ்ச் டைம் வந்துடறதாலே சாப்பிட்டு வந்து மறுபடி பர்சனல் மெயில் எல்லாம் பார்த்திட்டு பதில் அனுப்பிட்டு அப்புறம் தான் ஆபிஸ் வேலை. என்ன ஒண்ணு. அதுக்குள் ஆபீஸ் டைம் முடிஞ்சுரும், வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்.

 நடுவிலே எந்த பர்சனல் தொந்தரவும்  இல்லாம ஆபீஸ் வேலை பார்க்கலாம்னு அவர் நினைச்சு அதை எல்லாம் முதல்லே முடிச்சுடலாம்னு நினைச்சாலும் இந்த யாஹூ , சோசியல் மீடியா எல்லாம் தொடர்ந்து ஏதாவது அனுப்பிக்கிட்டே இருக்காங்க. இவரு என்ன  செய்வாருங்க. பாவம் பெர்பெக்டான மனுஷங்க.

இவரு வீட்டிலே எப்படின்னு நினைக்கிறீங்க. இவரது சம்சாரம் சாமான்கள் லிஸ்ட் போட்டு கொடுத்து வாங்கிட்டு வரச் சொன்னா , இவரு அந்த லிஸ்ட் ஐட்டம் எல்லாம் படிச்சு கேள்வி கேட்பார் பாருங்க.  ' எள்ளுன்னு போட்டுருக்கே, வெள்ளை    எள்ளா, கருப்பு  எள்ளா, தேங்கா முத்தினதா , இளசா , ' ன்னு புத்திசாலித்தனமா  கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பாரு. அந்த அம்மா, பதில் சொல்ல மாட்டாம , அவங்களே போயி வாங்கிட்டு வந்துருவாங்க. . இவரு இப்பவும் இந்த லிஸ்டை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருப்பாரு. 'போதும் தாங்க' ன்னு அந்த அம்மணி லிஸ்டைப்  புடிங்கிட்டு போயிடுவாங்க. பாவங்க இவரு. பெர்பெக்ட்டா இருக்கிறது குத்தமாங்க.

இப்படித்தாங்க, இவரு ரிட்டையர்மெண்டு நாளன்னிக்கு மனுஷன் சீக்கிரமே எந்திருச்சு கோயில்கள் போயி சாமி கும்பிட்டு பிரசாதங்கள் வாங்கிட்டு ஆபீஸ் போனா ஆபிஸ் பூட்டிட்டு போயிட்டாங்க. வேற என்ன. எவ்வளவு நேரம்தான் அவங்களும் காத்திருப்பாங்க. இருட்டிப் போச்சு. போயிட்டாங்க. இவரோட நெருங்கின நண்பர் ஒருத்தர் மட்டும் காத்துக் கிடந்து ரிலீவிங் லெட்டரைக் கொடுத்தாராம். இவரு மனப்பாடம் பண்ணி வச்சிருந்த பிரிவு விழா நன்றி உரையை அந்த ஒரே ஒரு மனுஷன்கிட்டே ஒப்பிச்சிட்டு கிளம்பினார். என்னங்க . பெர்பெக்ட்டா இருக்கிறது தப்பாங்க. பாவங்க நம்ம பெர்பெக்ட் பெருமாள் .
-------------------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி