புதன், 19 ஜூலை, 2017

மாலு.. மாலு.. மாலு ..- நகைச்சுவைக் கட்டுரை

மாலு.. மாலு.. மாலு ..- நகைச்சுவைக் கட்டுரை
--------------------------------------------------------------------------------------------------------------
கிராமத்திலே, திருவிழா சமயம், கோயிலைச் சுத்தி திடீர் புடவைக் கடை, திடீர் வளையல் கடை, திடீர் திண்பண்டக் கடைன்னு ஏகப் பட்ட கடைகள் முளைச்சு  ஒரு பத்து நாட்கள் ஒரே கலகலப்பாய் இருக்கும்.
அது மாதிரி ஆனா நிரந்தரமா இன்டர்நேஷனல் கடைகள் எல்லாம் ஒரே இடத்திலே ரெண்டு மூணு மாடிகளிலே சேர்ந்தாப்பலே இருக்கிறது தான் இந்த நகரத்து மால்னு சொன்னாங்க. என்ன ஒண்ணு. கிராமத்து திருவிழாவில் வியாபாரம் நடக்கும். இந்த நகரத்து மால்லே எல்லாம் சும்மா பாத்துட்டு போய்கிட்டே இருப்பாங்கன்னு சொன்னாங்க.
சரி, நம்மளும் தான் போய் பார்த்துட்டு வரலாம்னு போனேங்க.உண்மைதாங்க. ஒரு காபி இருநூறு ரூபாய்ன்னா  எவன் வாங்குவான். ஒரு நாள் மூணு வேளை சாப்பாடே அதிலே முடிச்சுடலாமே. என்னங்க. காப்பித்தூளையும் சக்கரையையும் சுடுதண்ணியிலே போட்டுக் கலக்கிறது தானுங்களே காபி.. இதிலே என்னமோ எச்பிரஸோவாம் , லாட்டேயாம், என்னென்னமோ வாய்க்குள்ளேயே நுழையாத    பேரு சொல்றாய்ங்க,. இந்த காபி நம்ம வாய்க்குள்ளே நுழைஞ்சா என்ன ஆகுமோன்னு ஒண்ணும் வாங்கலீங்கோ.
அப்புறம், இந்த ஜவுளிக் கடை, இல்லை இல்லை, ஜவுளி சமுத்திரத்துக்குள்ளே நுழைஞ்சா, அப்பப்பா , நமக்குத் தெரிஞ்சு ஏதோ கருப்பு வெள்ளை, சிவப்பு பச்சை ஊதா ன்னு தான் கலர் இருக்கு. இங்கே என்னடான்னா ஏதோ அட்டாமிக் ப்ளூ வாம். பொட்டானிக் க்ரீனாம். என்னென்னமோ சொல்றாய்ங்க.
அப்புறம் இந்த வீட்டு சாமான் கடை - இல்லை கடல். என்னங்க. ஏதோ வீடுன்னா மிக்ஸி , பேன், கட்டில், ஸ்டவ் போதாதா . இங்கே இருக்கிற சாமான்களை வைக்க  வீடு போதாதே  .சாமான்களை எல்லாம் உள்ளே வச்சிட்டு நாம வெளியே வந்து நிக்க வேண்டியதுதான்.
மேல் மாடியிலே கான்டீன் ஏரியா. இங்கே தான் சனங்க கூட்டம் ஏதோ வாங்கி சாப்பிடுது. அதுவும் என்ன மாதிரி ஐட்டங்கள். எண்ணையில் ஊறிப் போயி கரும் பச்சை, அரக்கு சிவப்பு கலரில் வித விதமான சைஸ், வித விதமான பேரிலே ஏதோ பர்கர் , பிஸ்சா, நூடுல்ஸாம், அப்புறம் ஏன் தெருவுக்கு தெரு அஞ்சாறு கிளினிக்  இருக்காது.
தியேட்டருக்குள் போகணும்னா பாப் கார்ன் வாங்கிட்டு தான் போகணும் போல இருக்கு. அதோட விலை சினிமா டிக்கெட் விலையை விட ரெண்டு மடங்கு.
ஏதோ மாலு மாலுன்னு சொல்றாங்களேன்னு போயி பாத்துட்டு வந்தப்புறம் தான்  நாம ஊரு திருவிழா எப்படா வரும்னு இருக்கு. சீனி சேவு சாப்பிட்டு சிவப்பு குத்தாலத் துண்டு வாங்கிட்டு ஓபன் ஸ்டேஜ் ட்ராமா பாத்துட்டு , ஒயிலாட்டம் ஆடிட்டு வரணும் போல இருக்குங்க .
----------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 13 ஜூலை, 2017

காலக் கடவுள்

காலக் கடவுள்
----------------------------
இளமை என்றும்
முதுமை என்றும்

பிறப்பு என்றும்
இறப்பு என்றும்

இன்பம் என்றும்
துன்பம் என்றும்

காதல் என்றும்
நட்பு என்றும்

கடமை என்றும்
உரிமை என்றும்

நன்மை என்றும்
தீமை என்றும்

உண்மை என்றும்
பொய்மை என்றும்

இயற்கை என்றும்
செயற்கை என்றும்

கிராமம் என்றும்
நகரம் என்றும்

வீடு என்றும்
நாடு என்றும்

இரவு என்றும்
பகல் என்றும்

நேற்று என்றும்
நாளை என்றும்

இன்று என்றும்
இப்போது என்றும்

இரண்டு இரண்டாய்ப்
பிரித்துப் போட்டு

காட்டிச் செல்லும்
காலக் கடவுள்
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

செவ்வாய், 11 ஜூலை, 2017

காதல் ஊஞ்சல்

காதல்  ஊஞ்சல்
--------------------------------------
ஆல மரக் கிளைகளில்
தொங்கிக் கிடக்கிறது

காற்று மட்டும் வந்து
ஆட்டி விட்டுப் போகிறது

உந்தித் தள்ளிய
ஜோடிக் கால்கள்

மாறு பட்ட  பாதைகளில்
போய் விட்டதை   அறியாது

காத்துக் கிடக்கிறது
காதல்  ஊஞ்சல்
-----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com