வெள்ளி, 9 ஜூன், 2017

பூங்காவா? பார்க்கா? - நகைச்சுவைக் கட்டுரை

பூங்காவா? பார்க்கா? - நகைச்சுவைக் கட்டுரை
-------------------------------------------------------------------------------------------------
புது  வீட்டுக்கு குடி போன அன்று மாலை, பக்கத்து தெரு நண்பர் வந்து 'வாங்க சார் , நம்ம ஏரியா பூங்காவுக்குப் போய் வரலாம்என்று  கூப்பிட்டார் .'ஆஹா, பூங்காவா, மரம் செடி கொடி , பூக்களை ரசிக்கலாம், சிறுவர்கள் சறுக்கு விளையாட்டை பார்க்கலாம், வாக்கிங் கூடப் போகலாம் ' என்று ஆசையோடு அவர் கூடப் போனேன்.

கொஞ்ச தூரம் போனதும், ஒரு வட்ட வடிவப் பொட்டலில், சிமெண்ட்டுப் பெஞ்சுகளில் நாலைந்து பெரியவர்கள் அமர்ந்திருக்க , குச்சிகள் நட்டிருந்த ஒரு கேட்டைத் திறந்து கொண்டு அவர் உள்ளே நுழைந்தார் . நம்மையும் உள்ளே வரச் சொன்னார்.

'சார், ஏதோ பூங்கான்னு சொன்னீங்க, இது யாரோ ஒருத்தரோட பிரைவேட் பிராபர்ட்டி மாதிரி தெரியுதே' ன்னு கேட்டேன். 'என்ன சார் , விளையாடுறீங்களா, இது தான் பூங்கா' என்றார்.

'பூங்கான்னா ஏதாவது மரம் ,செடிகள்லாம் இருக்கும்னு நினைச்சேன்என்றேன். 'அங்கே பாருங்க ' என்று அவர் காட்டிய இடத்தில் நாலைந்து குழிகளில்   குச்சிகள் நடப்பட்டு இருந்தன. ' அது வேப்ப மரம், அது ஆல மரம் , நட்டு ஒரு மாசம் ஆச்சு, கொஞ்ச நாளிலே மரமா வளர்ந்துடும் ' என்றார். 'கொஞ்ச நாளா, கொஞ்ச வருஷமா ' என்று நினைத்துக் கொண்டேன்.

'சிறுவர்கள் விளையாட ஊஞ்சல், சறுக்கு ஒண்ணுமே இல்லையே ' என்றேன். ' அங்கே பாருங்க' என்ற இடத்தில் கொஞ்சம் மணல் குவித்து வைக்கப் பட்டு இருந்தது. அங்கே இரண்டு சிறுவர்கள் ' கிச்சு கிச்சு தாம்பாளம். கியா கியா தாம்பாளம்' என்று மண்ணுக்குள் கை விட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள்
'நம்ம கிராம விளையாட்டுகளை எல்லாம் பசங்க மறந்துடக் கூடாது சார்' என்றபடி பக்கத்தில் இருந்த மொட்டை சிமெண்டு பெஞ்சில் அமரச் சொன்னார். படக்கென்று உடகார்ந்தவன் ' ' என்று அலறியபடி எழுந்தேன். பகலில் சுட்டெரித்த சூரியனின் சூடு அந்த பெஞ்சில் இறங்கி இருந்தது. 'துண்டைப் போட்டு உக்காரணும்' என்றபடி அவர் கொண்டு வந்த துண்டை பெஞ்சு மேல் விரித்து விட்டார்.

அதில் அமர்ந்தபடி சுற்று முற்றும் பார்த்தேன். அந்த பூங்கா (?) வின் உள்ளே போட்டிருந்த ஒரு சிறிய சுற்று வட்டப் பாதையில் நாலைந்து பேர் இடித்துப் பிடித்தபடி போய்க் கொண்டு இருந்தார்கள். ' அவங்க, என்ன சார் பண்றாங்க' என்று கேட்டேன். ' என்ன சார் , இது கூடத் தெரியாதா, வாக்கிங் சார், வாக்கிங் போகிறாங்க , நம்மளும் போகலாமா ' என்று கேட்டார். 'வேணாம், வேணாம், இந்த பெஞ்சே சவுகரியமாக இருக்கு . அங்கே போயி, நடைப் பயிற்சியில் நகர்ந்து சென்று கொண்டு இருக்கும் அந்த நாலு பேர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் ' என்றேன்.

'எப்படி சார் நம்ம ஏரியா பூங்கா' என்று உற்சாகமாய்க் கேட்டவரிடம் சொன்னேன் . இதைப் பூங்கான்னு சொல்லுறது ரெம்பத் தப்புங்க, ஒரு பூ கூட இல்லாத இந்த இந்த இடத்தை வேணும்னா பூவை எடுத்துட்டு  'ங்கா ' ன்னு பாப்பா சொல்லுற மாதிரி சொல்லலாம்.

 இல்லே, ஆங்கிலத்திலே சொல்லுற மாதிரி ' பார்க் 'ன்னு சொல்லலாம். சிமெண்டு    பெஞ்சில் சில பேர் பார்க் ஆயி இருக்காங்க. வட்டப் பாதையில் வாக்கிங் கிற பேர்லே  சில பேர்   பார்க்கிங் ஆயி இருக்காங்க. மண் குவியலில் சிறுவர்கள் கைகள் பார்க் ஆயி இருக்கு .  மரங்களாகும்   ஆசையில் குழிகளில் குச்சிகள்    பார்க்கிங் ஆகியுள்ளன.  பார்க் என்று சொல்லிக் கொள்ளலாம் ' என்றபடி எழுந்தேன் , சரி தானே .
----------------------------------------------------நாகேந்திர   பாரதி

வியாழன், 8 ஜூன், 2017

ஓடும் மேகங்கள்

ஓடும் மேகங்கள்
----------------------------
ஓடும் மேகங்களாய்
உறவும் நட்பும்

காணாமல் போகின்ற
காட்சி வடிவங்கள்

நேற்று பார்த்ததை
இன்று காணோம்

இன்று பார்ப்பது
நாளை எங்கே

வருவதும் போவதுமாய்
வானத்தில் வாழ்க்கை
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

செவ்வாய், 6 ஜூன், 2017

மழைக் குறும்பு

மழைக் குறும்பு
-------------------------
காத்தும் தூறலுமாய்க்
காட்டி  விட்டு

காணாமல் போகின்ற
மழையின் குறும்பில்

காதல் பேசுவாளென்று
காத்துக் கிடப்பவனுக்கு

முகத்தைக் காட்டி விட்டு
முந்திப் போகின்ற

சிறுக்கி  குறும்பின்
சாயல் தெரிகிறது
--------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com