செவ்வாய், 31 ஜனவரி, 2017

காலக் கணக்கன்

காலக் கணக்கன்
---------------------------------
இல்லாதார் வறுமையை
இருப்பவர் பெருமையை

உடலின் இளமையை
உயிரின் வலிமையை

அஞ்ஞான இருளை
மெஞ்ஞான    ஒளியை

ஆக்கியும் அழித்தும்
கூட்டியும் கழித்தும்

காலக் கணக்கனின்
கடமை விளையாட்டு
----------------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/

திங்கள், 30 ஜனவரி, 2017

இரவுக் காதலி

இரவுக் காதலி
------------------------
இரவைப் புரிந்தவரிடம்
நிலவும் பேசும்

நட்சத்திர பூக்கள்
வாசம் வீசும்

மேகக் கூட்டம்
சிரித்துப் போகும்

விடியும் பொழுதில்
ஏற்படும் வெறுமை

காதலியைப் பிரிந்த
காதலன் தனிமை
----------------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/

புதன், 25 ஜனவரி, 2017

சக்கரைப் பொங்கல் - நகைச்சுவைக் கட்டுரை

சக்கரைப் பொங்கல் - நகைச்சுவைக் கட்டுரை
--------------------------------------------------------------------------------------------------------------------
தை முதல் நாள் தமிழர் பண்டிகைக்கு கோலம் போடுறதில் இருந்து  பொங்கல் வச்சு சாமி கும்பிடறது வரைக்கும் பெண்களுக்கு மட்டும்தான் ரெம்ப வேலைன்னு அலட்டிக்க கூடாதுங்க. நாங்க ஆண்களும்தான் ரெம்ப வேலை பாக்கிறோம் . கோலப் பொடியில் இருந்து பொங்கல் சாமான் , பூஜை சாமான் எல்லாம் போயிப் போயி வாங்கி வர்றது யாரு. நாங்கதானே.

அதுவும் இந்த சக்கரைப் பொங்கலுக்காக ஒரு லிஸ்ட் கொடுப்பாங்க பாருங்க. பச்சரிசி, வெல்லம், ஏலம் , முந்திரி, பருப்புன்னு  அதை எல்லாமே ஒண்ணொண்ணா பாத்து வாங்கி மூணு மாடி மூச்சு இறைக்க படி ஏறி வீட்டுக்குள் நுழைஞ்சா பைக்குள் இருந்து எடுத்து வச்சுக்கிட்டு சொல்லுவாங்க பாருங்க. ''ஏங்க , பொங்கலுக்கு பாசிப் பருப்போ கடலைப் பருப்போ வாங்கி வரச் சொன்னா துவரம் பருப்பை வாங்கிட்டு வந்திருக்கீங்க'.  நமக்கு என்னங்க தெரியும். தெளிவா பாசிப் பருப்புன்னு எழுதி இருக்கலாம்ல. கடையிலே எவ்வளவோ பருப்பு இருக்கு. உளுந்தம் பருப்பைக் கூட வாங்கி  வந்திருப்பேன். துவரம் பருப்பு வச்சு சாம்பார் வைக்கலாம்லே. இப்படியா பேசுறது.

சரி ன்னுட்டு மறுபடி கடைக்குப் போயி  பாசிப் பருப்பு வாங்கிட்டு படி ஏறி வீட்டுக்குள் நுழைஞ்சா ' சாரிங்க, முக்கியமா ஒண்ணை மறந்துட்டேங்க. முத்தின தேங்காயா ஒண்ணு வாங்கி வாங்க. தேங்காய்ச் சில்லு நறுக்கிப் போட்டா பொங்கல் இன்னும் ருசியா இருக்கும். ' சரி நல்ல ருசியான பொங்கல் கிடைக்கப் போகுதுன்னு மறுபடி போயி வாங்கி வருவோம், மூச்சு வாங்கிக்கிட்டே .

எல்லாம் வாங்கி வந்து கொடுத்தாச்சுங்க. அப்புறமும் சும்மா விடுவாங்களா. 'ஏங்க, இந்த தேங்காயை உடைச்சு சில்லு போட்டு  கொடுங்கநாம சில்லு போட்டுக் கொடுத்தவுடன் சொல்லுவாங்க . ' இவ்வளவு பெரிய சில்லு கடிச்சு சாப்பிடறதுக்கா. பொடி பொடியா நறுக்கிக் கொடுங்க,' கொடுத்திட்டு பொங்கல் சாப்பிட ஆசையா காத்துக்கிட்டு   இருப்போம்.

பொங்கல் பொங்கி இறக்கி வைச்சு சாமிக்கு முன்னாலே இலையில் படைக்கிறப்போ பாக்க பாக்க நாக்கிலே எச்சில் ஊறும். நெய், ஏலம் வாசனையோடு, முந்திரி, தேங்காய் சில்லு மிதக்க தள தளன்னு  மின்னும் பொங்கல். பூஜை முடிஞ்சு நம்ம இலைக்கு முன்னாலே உடகார்ந்தா நம்ம இலையில் வந்து விழும், ஒரு டீ ஸ்பூன் பொங்கல்

 'என்னம்மா இது ஒரே ஒரு ஸ்பூன்' . ன்னு கேட்டா பதில் வரும் . 'ரத்தத்தில் சக்கரை அளவு இருநூறுக்கு மேலே வச்சிக்கிட்டு, இதுக்கு மேலே கேட்கிறீங்களா, இந்த ஒரு ஸ்பூன் பொங்கலே ஜாஸ்தி உங்களுக்குஎன்ன பண்றது சொல்லுங்க.
----------------------------------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 19 ஜனவரி, 2017

சல்லிக் கட்டு

சல்லிக் கட்டு
--------------------------
சல்லிக் கட்டு
மையப் புள்ளிதான்

காற்றும் நீரும்
கவலை ஆனதும்

காடும் வயலும்
வீடாய் ஆனதும்

ஊரும் நாடும்
ஊழல் ஆனதும்

பற்ற வைத்திட்ட
சுற்று வட்டம்
-----------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/

செவ்வாய், 17 ஜனவரி, 2017

வயதான சத்திரம்

வயதான சத்திரம்
------------------------------
சிமிண்டுத் தரையெல்லாம்
சில்லு சில்லாய்ப் பெயர்ந்திருக்கும்

ஓரச் சுவரெல்லாம்
ஒருக்களித்துச் சாய்ந்திருக்கும்

படிக்கட்டுக் கிறுக்கல்களும்
பாதியாய்த்  தேய்ந்திருக்கும்

அடுப்படிச் சுவர் மட்டும்
அழியாமல் கறுத்திருக்கும்

வயதான சத்திரத்தின்
வயிறு மட்டும் வாழ்ந்திருக்கும்
----------------------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/
  

திங்கள், 16 ஜனவரி, 2017

பந்து முகங்கள்

பந்து முகங்கள்
----------------------------
ஒவ்வொரு நாளும்
எத்தனையோ முகங்கள்

ஏதோ சில முகங்கள்
திரும்பிப் பார்க்கச் சொல்லும்

எப்போதோ பழகிய
அந்த முகங்களா

அமுக்கும் போதெல்லாம்
எழும்பிப் பார்த்தபடி

ஆழ்மனத்தில் கிடக்கின்ற
அடையாளப் பந்துகள்
----------------------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

பேச்சுத் துணை

பேச்சுத் துணை
---------------------------
வீட்டுக்குள் இருந்து
பேசிய பின்பு

வாசலுக்கு வந்து
தொடரும் பேச்சு

வாசலில் இருந்து
பேசிய பின்பு

வீதிக்கு வந்து
தொடரும் பேச்சு

முடியாது பேச்சு
விடியாது இரவு
--------------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/

வெள்ளி, 13 ஜனவரி, 2017

பொங்குக பொங்கல்

பொங்குக பொங்கல்
------------------------------------
இல்லத்தில் இருக்கும்
உறவே பொங்கல்

உள்ளத்தில்  சுரக்கும்
பரிவே பொங்கல்

சுற்றமும் நட்பும்
சூழ்வது பொங்கல்

பக்கமும் மக்களும்
பகிர்வது  பொங்கல்

எங்கும் எப்போதும்
பொங்குக பொங்கல்
--------------------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/

புதன், 4 ஜனவரி, 2017

தாத்தாக்கள் காலம்

தாத்தாக்கள் காலம்
--------------------------------------
தேவாரப் பாட்டோடு
பேஷ்கார் தாத்தா

கைத்தடியின் வீச்சோடு
விவசாயி   தாத்தா

முறுக்கிய மீசையோடு
போஸ்ட்மாஸ்டர்   தாத்தா

தாத்தாக்கள் இல்லையென்று
நினைத்திருந்த  நேரம்

'தாத்தா' என்ற குரலுக்கு
திரும்பிப் பார்த்தோம்
------------------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/

செவ்வாய், 3 ஜனவரி, 2017

ஜனவரி சபதம்

ஜனவரி சபதம்
-------------------------
தினசரி அதிகாலை
தினசரி உடற்பயிற்சி

தினசரி தியானம்
தினசரி உதவி

தினசரி கவிதை
தினசரி நகைச்சுவை

தினசரி நினைத்து
தினசரி தவறும்

தினசரி சபதம்
ஜனவரி ஒன்றிலும்
----------------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/

திங்கள், 2 ஜனவரி, 2017

குழந்தைப் பருவம்

குழந்தைப் பருவம்
-------------------------------
இப்படித் தானே
ஆரம்பித்தோம் வாழ்க்கை

ஆடிக் கொண்டும்
பாடிக் கொண்டும்

அழுது கொண்டும்
சிரித்துக் கொண்டும்

மறந்து கொண்டும்
சேர்ந்து கொண்டும்

எப்போது எப்படி
இப்படி இறுகினோம்
------------------------------------நாகேந்திர பாரதி
http://nagendrabharathi.com/