சனி, 29 ஏப்ரல், 2017

தெரிந்ததும் தெரியாததும்

தெரிந்ததும் தெரியாததும்
------------------------------------------
அக்கினி வெயிலில்
வேர்வை ஆறோடு

வேதனை முகத்தோடு
வெற்றுப் பார்வையோடு

மஞ்சப் பையோடு
மந்த நடையோடு

போகிறவர் கதை
என்னவாக இருக்கும்

தெரிந்தால் மட்டும்
என்ன செய்யப் போகிறோம்
-------------------------------------நாகேந்திரபாரதி
http://www.nagendrabharathi.com

புதன், 26 ஏப்ரல், 2017

அடுப்படிப் பரிணாமம்

அடுப்படிப் பரிணாமம்
------------------------------------
ஏதோதோ இயந்திரங்கள்
ஏராளமாய் வந்த பின்னே

ஏற்றுவதும் இறக்குவதும்
எடுப்பதும் வைப்பதுமாய்

மாவாட்டும் செயலிலும்
கறியாக்கும் செயலிலும்

சோறாக்கும் செயலிலும்
சுத்தமாக்கும் செயலிலும்

அடுப்படியின் வேலைகளில்
பரிணாம வளர்ச்சி
----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

காதல் வேண்டுதல்

காதல் வேண்டுதல்
-----------------------------------
திருப்பதி சென்று
மொட்டை அடிப்பதாயும்

திருவேற்காடு போய்
தீக்குழி இறங்குவதாயும்

திருத்தணி செல்ல
காவடி எடுப்பதாயும்

தன்னோட தலைவலிக்காய்
வேண்டிக் கொண்டாள்

கணவனை வைத்து
காதல் மனைவி
----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

பைபாஸ் பயணம்

பைபாஸ் பயணம்
----------------------------
கதிரறுப்புப் பாட்டு
காத்தில் வரக் காணோம்

நெல்லுதிர்த்த தூசி
காத்தில் வரக் காணோம்

வைக்கோலோட வாசம்
காத்தில் வரக் காணோம்

மாட்டுவண்டி மணியும்
காத்தில் வரக் காணோம்

பைபாஸுப் பயணத்தில்
பழசு எல்லாம் காணோம்
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com 

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

உலக அமைதி

உலக அமைதி
------------------------
உலகப் போர்களின்
உண்மை மறந்ததால்

ஆதிக்க நாடுகள்
ஆயுதம் குவிக்கும்

அண்டை நாடுகள்
அஞ்சித் தவிக்கும்

பயத்தின் அமைதியோ
பதுங்கிப் பாயும்

அன்பின் அமைதியே
அகிலம் ஆளும்
------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

சனி, 15 ஏப்ரல், 2017

சாமி மரம்

சாமி மரம்
-----------------------------
அரச மரத்துக்கு
பிள்ளையார் சாமி

வேப்ப மரத்துக்கு
அம்மன் சாமி

புளிய மரத்துக்கு
கருப்ப சாமி

ஒவ்வொரு மரத்துக்கும்
சாமியைக் காவல் வைத்தும்

மரத்தை வெட்டுவதை
விடாத மக்கள்
---------------------------------நாகேந்திர பாரதி
 http://www.nagendrabharathi.com

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

‘இதயமே, ஓ, இதயமே’- நகைச்சுவைக் கட்டுரை

‘இதயமே, ஓ, இதயமே’- நகைச்சுவைக்   கட்டுரை
-----------------------------------------
தலைப்பைப் பாத்ததும் அந்தக் கால முரளி படம் மாதிரி  காதல் கட்டுரைன்னு நினைச்சுராதீங்க. இந்தக் கால இதயம் பத்திய கட்டுரை தாங்க.

கொஞ்ச நாளா மாடிப்  படி  ஏறுறப்போ தொண்டைக்குள் கீழே ஏதோ ஒரு மாதிரி சிரமமா இருந்துச்சுங்க, களைப்பா இருந்துச்சு. ஆஞ்சியோகிராம் பண்ண  சொன்னாங்க. டெலிகிராம் நிறுத்தினப் பிறகு இது  ஏதோ புது கம்யூனிகேஷன் போலிருக்கு. தகவல் அனுப்பினா பதில் வரும்னு நினைச்சு  போஸ்ட் ஆபீஸ் போனா  அவங்க  ஆஸ்பத்திரி போகச் சொன்னாங்க.

அங்கே போனா அவங்க நம்மளை படுக்கப்  போட்டு , ஏதோ பாதி கொண்டை ஊசி மாதிரி  மணிக்கட்டு  நரம்பில் குத்தி அது வழியா என்னமோ இதய நரம்புகளில் இறக்கி போட்டோ எடுத்து காமிச்சாங்க. இதயத்திலே அஞ்சு அடைப்பு இருக்காம். அந்தக் காலத்திலே நம்ம ஏழெட்டுப்     பொண்ணுங்களை லவ் பண்ணி இருக்கோமேஅஞ்சு தான் இருக்கான்னு சந்தேகமாக்   கேட்டா இது காதல் அடைப்பு இல்லையாம். இதய ரத்த நாளங்களில்  அடைப்பாம் .

நம்ம நண்பர்கள் ஒண்ணு ரெண்டு  பேருக்கு ஒரு அடைப்பு இருந்து ஆபரேஷன் பண்ணிய   ஞாபகம்  வந்துச்சு. நமக்கு அஞ்சு இருக்கிறதிலே ஒரு நிமிஷம் பெருமையா இருந்தாலும் ஆஹா ஆபத்துன்னு அப்புறம் தான் உறைச்சது.

அதிலேயும் மூணு அடைப்பு, எழுபது, எண்பது, தொண்ணுறு  பெர்ஸண்டாம். பள்ளிக்கூடத்தில் கிடைக்காத பெர்ஸன்டேஜ் இங்கே கிடைச்சதை எண்ணி சந்தோசப்   படுறதா . வருத்தப்  படுறதா  . அப்புறம் 'ஆபரேஷன் பண்ணுறதா ஸ்டென்ட்  வைக்கிறதா ன்னு  ' கண்ணகியா , மாதவியா ' ன்னு ஒரு பட்டி மன்றம்கடைசியிலே ஸ்டென்ட் வைக்கிறதுன்னு முடிவாச்சு .

நமக்கு ஸ்டென்டுன்ன உடனே அந்தக் காலத்திலே டூரிங் டாக்கீஸ் இல்  பார்த்த எம் ஜி ஆர் ஸ்டெண்டு தான் ஞாபகம் வரது. ஸ்டெண்டு வைக்க ஸ்டெண்டு மாஸ்டர் ஷ்யாம் சுந்தர் வருவாரோன்னு தோணுச்சு. அப்புறம் சொன்னாங்க. இது வேறயாம். வலை மாதிரி ஏதோ ஒண்ணை உள்ளே நுழைச்சு இதய நாளத்தை நிமித்தி இதை வச்சுருவாங்களாம்அடைப்பு சரியாகி ரத்த ஓட்டம் நல்லா ஆயிருமாம்.

சரின்னு போயி 'கேத்தோ லேப்' பிலே போயி படுத்தா ஒரு மணி நேரத்திலே மூணு அடைப்பிலேயும் ஸ்டென்ட் வச்சாச்சு. நடுவிலே அப்பப்போ ஏதோ 'டப்' 'டப்' புன்னு பலூன் வெடிக்கிற மாதிரி சத்தம் கேட்டுச்சு . அப்புறம் சொன்னாங்க. கை நரம்பு வழியா ஊசி வழி சின்ன வயர் நுழைச்சு இதய நரம்பு வரை போயி அதுக்கு  மேலே பலூன் நுழைச்சு அதை வெடிக்க வச்சு , அதுக்கு மேலே ஸ்டென்ட் வச்சு செட் பண்ணியாச்சாம். பலூன் கொஞ்சம் ஜாஸ்தி ஆச்சாம்.

நினைச்சுக்கிட்டேன். 'முன்னாலே சொல்லியிருந்தா பேரன் பேத்திக்கிட்டே இருந்து  கொஞ்சம் பலூன் வாங்கிக் கொண்டாந்து கொடுத்திருக்கலாமே ன்னு.' சொல்லலே. 'அது வேற பலூன் , இது வேற பலூன்' ன்னு வடிவேலு மாதிரி மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டு வாயை அடக்கிக்கிட்டேன் .

அப்புறம் என்னங்க. சி யு விலே ஒரு ராத்திரி . ரெண்டு கைகளிலேயும் நரம்புகளில் ஊசி மாட்டி விட்டு  மருந்து ஏறுது . திரவம் ஏறுது. அப்புறம் ஏதோ கருவிகள் மூலமா, ஆக்சிஜென் , மூச்சு, இதயத்துடிப்பு எல்லாம் நம்பர் நம்பரா தெரியுது. இந்த நேரம் பார்த்துதான் நமக்கு உச்சந் தலையிலே அரிக்குது. சிஸ்டர் கிட்டே சொல்லலாமான்னு பார்த்தா , அவங்களும் ரெம்ப பிசியா இங்கிட்டும் அங்கிட்டும் ஓடிக்கிட்டே டாக்டர் கிட்ட என்னென்னமோ நம்பர்களை சொல்லிக்கிட்டு இருக்காங்க. டாக்டரும் நோட் பண்ணிக்கிறாங்க.

 நம்ம கிட்ட வந்து ஏதோ கேட்கிறாங்க. நம்மளும் தலையாட்டுறோம். சிஸ்டர் சொல்லுறாங்க.  20 , 99 , 85  ன்னுஏதோ குறியீடுகள். நம்மளும் சும்மா ‘253’  சொல்லலாம்னு தோணுது. வாயை அடக்கிக் கிட்டேன் . எதுக்கு வம்பு. இந்த நம்பர் எதுக்கு குறியீடுன்னு கேட்டா என்ன சொல்றது.

மறு நாள் வார்டு  ரூமுக்கு மாத்தியாச்சு. காலை , மதியம், இரவு, சாப்பாட்டுக்கு முன்பு, சாப்பிட்டு பின்பு ன்னு மூணு வேளை  சாப்பாடு, ஆறு வேளை  மாத்திரைன்னு மூணு நாள் ஓடிச்சு.   அப்புறம் டயட்டீஷியன் வந்து இதய , சர்க்கரை நோயாளிகளுக்கு உரிய உணவு விவரம் சொல்றாங்க. ஆப்பிளாம். பாதாமாம். ஜூஸாம். சூப்பாம். காசு ? டெஸ்ட், ஆபரேஷன், சாப்பாடு எல்லாமே காசு தானே . சரி நமக்குபையன், பொண்ணு பார்த்துக்கிறாங்க. நாட்டிலே எவ்வளவு ஏழைகள். அவர்களோட உடல் நலத்திலே எவ்வளவு பிரச்சினைகள். எல்லாம் அரசாங்கம் தான் பாத்துக்கணும், சரிதானே.

சரி விடுங்க. நம்ம பிரச்சினையை நம்ம பாப்போம். நாட்டுப் பிரச்சினையை நல்ல தலைவர்கள்(!) பாத்துக்கிருவாங்கவீட்டுக்கு வந்தாச்சு. நண்பர்கள் உறவினர்கள் வருகை. நலம் விசாரிப்புஅவங்க, வேற படிப்பு படிச்சு, வேற வேலை பாக்கிறதாத் தான் இது வரை நினைச்சுக்கிட்டு இருந்தோம். இப்போ   தான் தெரியுது அவங்க ஒவ்வொருவரும் உள்ளுக்குள்ளே டாக்டருன்னுஹார்ட் பத்தியும்   ஸ்டென்ட் பத்தியும் எவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்காங்க. கூகிள் ஆண்டவரே இவங்க கிட்டே வந்து கேட்கலாம் போலிருக்கு.   என்ன ஒண்ணு, ஒரே மாதிரி சொல்லாம ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க.

சிலர் 'தும்மக் கூடாது. இருமக் கூடாதுங்' க்கிறாங்க. ஏங்க இதெல்லாம் நம்ம கையிலே- இல்லையில்லை- நம்ம மூக்கிலேயாங்க இருக்கு . அது பாட்டுக்கு வர்றது. அடக்க முடியுமா . சரி , அப்படியே மூக்கு வழி வந்துட்டாலும், அந்த 'ஸ்டென்ட் ' எப்படித்தான் இருக்குன்னு நம்மளும் பாத்துக்கிடலாம் இல்லையா .சில பேர் ஒரு மாதம் கழித்து ' ஸ்விம்மிங்' கே   போகலாம்னு சொல்றாங்க. அது சரி, அதுக்கு நம்ம முதல்லே 'ஸ்விம்மிங்' கத்துக்கணுமே. இவங்க கத்து தருவார்களா .

என்னமோ போங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க. பேசாம டாக்டர் கிட்டேயே போயி கேட்டுரலாம்னு அவர் முன்னாலே போய் உக்காந்தா அவர் சொல்லுறதுக்கு எல்லாம் ' எஸ் சார்' ஓகே சார் ' ன்னு சொல்லுக்கிட்டு இருக்கோம். நம்ம கேக்க வந்தது எல்லாம் மறந்து போயிடறது. வீட்டுக்கு வந்த பிறகு தான் ஒண்ணொண்ணா ஞாபகம் வரது. டோஸ்ட் மாஸ்டர் மீட்டிங்கில் டேபிள் டாபிக் பேச்சு பேசப் போயி ஒண்ணுமே ஞாபகம் வராம சீட்டிலே வந்து உக்காந்ததும் ஒண்ணொண்ணா ஞாபகம் வருமே , அது மாதிரி.

சரி விடுங்க. பகவான் சொன்ன மாதிரி ' நடந்ததெல்லாம் நல்லதே , நடப்பதும் நல்லதே, நடக்கப் போவதும் நல்லதே ' ன்னு நினைச்சுக்கிட்டு நம்ம பாட்டுக்கு வழக்கம் போல நிதானமா நம்ம வேலைகளைப் பாத்துக்கிட்டு இருக்க வேண்டியதுதான், என்ன நான் சொல்றது .
------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதிஞாயிறு, 19 மார்ச், 2017

அவரவர் கவலை

அவரவர் கவலை
------------------------------
சில பேருக்கு
தூக்கமே வரலைன்னு கவலை

சில பேருக்கு
கனவா வருதுன்னு கவலை

சில பேருக்கு
சாப்பாடே இல்லைன்னு   கவலை

சில பேருக்கு
ருசியா இல்லைன்னு கவலை

அவரவர் கவலை
அவரவர் வாழ்க்கை
---------------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

வியாழன், 16 மார்ச், 2017

வாட்ஸ் அப் புரணிகள்

வாட்ஸ் அப்  புரணிகள்
-------------------------------------
வீட்டுப் புரணியெல்லாம்
விசேஷமாய் இருந்துச்சு

உள்ளூர்ப் புரணியும்
உற்சாகமாய் தெரிஞ்சிச்சு

நாட்டுப் புரணியோ
நச்சுன்னு அமைஞ்சுச்சு

வாட்ஸ் அப்  புரணிகளோ
வத வதன்னு வந்த பின்னே

எல்லாப் புரணிகளும்
புரளிகளாய்ப் போயாச்சு  
---------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

புதன், 15 மார்ச், 2017

பழுத்த இலைகள்

பழுத்த இலைகள்
-----------------------------
பருத்த மரங்களின்
புடைத்த வேர்களை

மூடிக் கிடக்கும்
பழுத்த இலைகள்

காற்றின் துணையால்
மேலே பறந்து

பச்சை இலைகளைத்
தடவிப் பார்த்து

பழைய வாழ்க்கை
உணர்ந்து திரும்பும்
----------------------------------நாகேந்திர பாரதி
 http://www.nagendrabharathi.com

ஞாயிறு, 12 மார்ச், 2017

வாழ்க்கைப் பயணம்

வாழ்க்கைப் பயணம்
--------------------------------------
வளைந்தும் நெளிந்தும்
வளரும் மரம்

வளைந்தும் நெளிந்தும்
ஓடும் ஆறு

வளைந்தும் நெளிந்தும்
வீசும் காற்று

வளைந்தும் நெளிந்தும்
போகும் பாதை

வளைந்தும் நெளிந்தும்
வாழ்க்கைப் பயணம்
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

வெள்ளி, 10 மார்ச், 2017

நெடுவாசல் நடுவயிறு

நெடுவாசல் நடுவயிறு
-----------------------------------------
நிலமென்னும் நல்லாளின்
உளம் மகிழப் பாடுபட்டு

வயலுக்கு நீர் பாய்ச்சி
உரமிட்டு களையெடுத்து

பயிராக்கி நெல்லாக்கி
அரிசியாக்கி சோறாக்கி

வீட்டுக்கு உணவு தரும்
விவசாயி விடுவாரா

நாட்டுக்கு நல்லதென்று
நடு வயிற்றில் குத்த வந்தால்
-------------------------------------நாகேந்திர பாரதி
 http://www.nagendrabharathi.com

புதன், 8 மார்ச், 2017

பெண் என்றால் பெண்

பெண் என்றால் பெண்
-------------------------------------
பெண் என்றால் பெண்
அவ்வளவே பெண்

அன்பின் உருவமா -
அவசியம் இல்லை

அழகின் பருவமா  -
அவசியம் இல்லை

அடக்கத்தின் கருவமா -
அவசியம் இல்லை

அவசியம் இல்லை - பெண்
அதிசயம் இல்லை

பெண் என்றால் பெண்
அவ்வளவே பெண்
-------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

ஞாயிறு, 5 மார்ச், 2017

இரவுப் பொழுது

இரவுப் பொழுது
------------------------
வெயிலில் வேர்த்து
விறைத்த வானம்

நிலவில் குளித்து
நெளியும் நேரம்

நட்சத்திரக் கூட்டம்
நறுமணம் வீச

மேகக் கூட்டம்
மென்புகை பூச

வானப் பெண்ணின்
வசந்தப் பொழுது
----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

சனி, 25 பிப்ரவரி, 2017

ஐம்பொறி அமைதி

ஐம்பொறி அமைதி
-----------------------------
காற்றின் பாட்டுக்கு
தலையாட்டும் செடிகள்

செடிகளின் நடனத்திற்கு
இசை கூட்டும் பறவைகள்

இசைக்கும் பாட்டுக்கும்
மலர்கின்ற பூக்கள்

பூக்களின் வாசத்தில்
புலன்களின் மகிழ்ச்சி

ஐம்பொறியின் அமைதியிலே
அதிகாலைப் பொழுது
----------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

காலை நேரத்துக் கலக்கம் -நகைச்சுவைக் கட்டுரை

காலை நேரத்துக் கலக்கம் -நகைச்சுவைக் கட்டுரை 
-----------------------------------------------------------------------------------------------------------------
அதிகாலை நேரத்திலே எந்திரிக்கறது  நமக்கு ஒண்ணும் விருப்பமான  விஷயம் இல்லைங்க. அன்னிக்கு என்னமோ அதிகாலையிலே விழிப்பு வந்துடுச்சு . தூக்கம் வரலே. சரி வெளியே போய்த்தான் பார்ப்போமேன்னு தெருவிலே வந்து பார்த்தா ஆஹா ஆஹா என்ன அருமையான காட்சி.

மெல்லிய காத்துக்குத் தலை ஆட்டி ஆடும் மரங்கள். தங்களுக்குள் அரட்டை அடித்துக் கொள்ளும் பறவைகளின் சங்கீதம் . அப்போது தான் மலர்ந்த மொட்டுக்களில் இருந்து வரும் வாசம்பக்கத்து டீக்கடையில் இருந்து வரும் டீயின் வாச ருசிக்கு ஏங்கும் நமது நாக்கு சுவை மொட்டுக்கள். காற்றில் நிரம்பி இருக்கும் ஆக்சிஜென் , பெட்ரோல் , டீசல் வாசம் இன்றி நமது நுரையீரலை நிரப்பும் உணர்வு . ஆஹா ஆஹா

அதை அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது திடீர் என்று விழிப்பு வந்து விட்டது . அடடே  எல்லாம்  கனவா. வழக்கம் போல் மணி ஒன்பது. அவசர அவசரமாக காலை வேலைகளை முடித்து விட்டு அலுவலகம் சேரும் பொழுது வழக்கம் போல் அரை மணி நேரம் லேட்டு.

அந்த மேனேஜரும் நாம் வருவதற்கு அஞ்சு நிமிஷம் முன்னால் தான் வந்திருப்பார். வழக்கம் போல் அதை காட்டிக் கொள்ளாமல் நமக்கு நேரத்தின் அருமை பற்றி லெக்ச்சர் எடுக்க ஆரம்பிப்பார். அவர் கூப்பிடுற மீட்டிங்குக்கு எல்லாம் நாம் ஒழுங்கா போகாததால் இந்த நேரத்தை பயன்படுத்தி நம்மை படுத்தி எடுப்பார். ப்ராஜெக்ட் சம்பந்தப்படட எல்லா விஷயங்களையும் பற்றி பாடம் நடத்த ஆரம்பித்து விடுவார். நாம், தலையை தொங்கப் போட்டுக் கொண்டு தூங்கி விடாமல் கேட்க வேண்டியதுதான்.

 ஆஃபிஸில் இப்படின்னா நம்ம கிளம்பிறப்போ வீட்டிலே நம்ம படுத்தின பாடு இருக்கே. அப்பப்பா . ' என் பேண்ட் எங்கே சட்டை எங்கே ' ன்னு மனைவியைப் போட்டு படுத்தி எடுப்போம். அவளும் அடுப்படி வேலையை அம்போன்னு போட்டுட்டு நமக்கு வந்து உதவி செய்வாள்.  பலன். நம்ம டைனிங் டேபிள் போய் அமர கிடைப்பது கருகிப் போன தோசை.  நம்ம தப்புக்கு தண்டனை.

நம்ம ஸ்கூல் காலம் மட்டும் எப்படி . வருஷம் முழுக்க ஒழுங்கா படிக்காம , ஸ்டடி லீவு வந்ததும் புத்தகத்தை எடுத்துப் பிரிப்போம்இதுவா நம்ம பரீட்சை எழுதப் போற பாடம்னு அப்பத்தான் சந்தேகம் வரும். மாங்கு மாங்குன்னு படிச்சாலும் ஒண்ணும் மண்டையில் ஏறாது. டியூஷன் , குரூப் ஸ்டடி ன்னு ஆரம்பிப்போம் .

இந்த குரூப் ஸ்டடி லே  பசங்க பித்தகோரஸ் தியரத்துக்கு ஆளாளாளுக்கு வேற வேற டெபினிஷன்  கொடுப்பாங்க. எதை எடுப்பதுன்னு புரியாம குழம்புவோம். தியரம் எல்லாம் துயரம் ஆகும்பயந்துகிட்டே போயி பரீட்சை எழுதி  பாதி பேரு பார்டரிலே பாஸ் ஆவோம்.

ஒழுங்கா அதி காலையிலே எழுந்து வேலைகளை நிதானமா பார்த்திருந்தா, பரீட்சையில் நல்ல மார்க் கிடைச்சிருக்கும். வீட்டிலேயும் நல்ல தோசை கிடைச்சிருக்கும். ஆபிஸிலேயும் ப்ரோமோஷன் கிடைச்சிருக்கும். காலை நேர கலக்கம் காணாமல் போயிருக்கும். அதிகாலை நேரம்  ஆனந்தமா இருந்திருக்கும்

நம்ம என்ன முயற்சி பண்ணாமையா இருக்கோம். ஜனவரி ஒண்ணாம் தேதி முடிவு எடுப்போம் சீக்கிரம் எந்திருக்கணும்னு. ரெண்டாம் தேதி காலை அலாரத்தை  மாத்திட்டு இழுத்திப் போத்திக்கிட்டு தூங்குவோம்என்ன காரணம்னு யோசித்தா ஒண்ணு புரியுதுங்க. படுக்க லேட்டாறதுனாலேதான் எந்திரிக்க லேட்டாறது .


என்ன பண்றது. நைட் பனிரெண்டு  மணி வரைக்கும், வாட்ஸ் அப்  , பேஸ்   புக்  குன்னு கமெண்ட் போட வேண்டியதா இருக்கு. யாரும் படிக்குறாங்களோ இல்லையோ அரசியல், சினிமான்னு அத்தனையைப் பத்தியும் நம்ம அபிப்பிராயத்தை உலகத்துக்கு தெரிய படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். போனில் விரலை வச்சு தேய்ச்சு தேய்ச்சு  நம்ம ஆட்காட்டி விரலே சுண்டு விரல் மாதிரி தேய்ந்து போச்சு .

அந்த மரங்களின் ஆட்டம் , அந்த பறவைகளின் சங்கீதம், அந்த பூக்களின் வாசம் எல்லாம் கனவிலே தான் கிடைக்கும் போல இருக்கு. நமக்கு  படுத்து வச்சது , இல்லையில்லை ,கொடுத்து வச்சது அவ்வளவு தாங்கோ.

---------------------------------------------------------------------நாகேந்திர பாரதி