வியாழன், 31 மார்ச், 2016

மகிழ்வில் ஒற்றுமை

மகிழ்வில் ஒற்றுமை 
------------------------------------
ரப்பர் அரிசியை 
குழைய வடித்து 

வெந்நீர் ஊற்றி 
வெங்காயம் கடித்து 

சாப்பிடும் போது
போகின்ற பசியும் 

பிரியாணி அரிசியை 
பூவாக வடித்து 

கறியும் குழம்பும் 
கலந்து அடித்து 

சாப்பிடும் போது 
போகின்ற பசியும் 

தருகின்ற மகிழ்வில் 
வருகின்ற தொற்றுமை 
---------------------------------நாகேந்திர பாரதி 
 

புதன், 30 மார்ச், 2016

ஆற்று மனம்

ஆற்று மனம்
---------------------
தேங்கிக் கிடக்கும்
குளமல்ல அன்பு

திரண்டு ஓடும்
ஆறுதான் அன்பு

ஓடும் இடமெல்லாம்
உல்லாசம் பெருகட்டும்

வாடும் உயிர்கட்கு
வளர்ச்சியைக் கொடுக்கட்டும்

அன்பே ஆறாக
ஊறட்டும் ஓடட்டும்
----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

செவ்வாய், 29 மார்ச், 2016

கடவுள் நம்பிக்கை

கடவுள்   நம்பிக்கை
-------------------------------
படிப்புக்கு அடுத்து என்ன
கேள்வி எழும்போதும்

கடனை அடைப்பது எப்படி
கேள்வி எழும்போதும்

நோய் தீர்வது எப்போது
கேள்வி எழும்போதும்

இறப்புக்குப் பின் எங்கே
கேள்வி எழும்போதும்

எழுகிறது பதிலாக
இறைவன் மேல் நம்பிக்கை
-----------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வெள்ளி, 25 மார்ச், 2016

பறவைகள் ஒருவிதம்

பறவைகள் ஒருவிதம் 
-----------------------------------
காலையில் கிளம்பி 
எங்கோ செல்கின்றன 

மாலையில் திரும்பி 
மரத்திற்கு வருகின்றன 

சனியும் ஞாயிறும் 
விடுமுறை கிடையாது 

வேலைக்குப் போகின்றனவா 
விளையாடப் போகின்றனவா 

வேலையே விளையாட்டாய் 
விரும்பித்தான்  போகின்றனவா 
------------------------------------------நாகேந்திர பாரதி 
Click here to buy Nagendra Bharathi's poems

வியாழன், 24 மார்ச், 2016

மோட்டு வளை

மோட்டு வளை  
----------------------
மோட்டு வளையைப்
பார்த்துக் கிடந்தால்

உருவங்கள் மாறும்
காட்சிகள் தெரியலாம்

ஒன்றோ இரண்டோ
பூச்சிகள் ஓடலாம்

ஒட்டடை அடிக்கும்
ஞாபகம் வரலாம்

உறக்கமும் வந்து
கண்களை அமுக்கலாம்

மோட்டு வளையே
கனவிலும் வரலாம்

மோட்டு வளையைப்
பார்த்துக் கிடக்கலாம்
-------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

செவ்வாய், 22 மார்ச், 2016

வேர்வைக் கோலங்கள்

வேர்வைக் கோலங்கள்
----------------------------------------
குழந்தைப் பருவத்தில்
விளையாட்டு வேர்வை

வேலைப் பருவத்தில்
உழைப்பின் வேர்வை

இளமைப் பருவத்தில்
இன்பத்தின் வேர்வை

முதுமைப்   பருவத்தில்
துன்பத்தின் வேர்வை

வேர்வைக்குத் தெரியுமா
காலத்தின் கோலம்
---------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வெள்ளி, 18 மார்ச், 2016

பிரியப் பிராயம்

பிரியப் பிராயம்
---------------------------
பேத்திக்கோ பேரனுக்கோ
பிரியத்தோடு வாங்கும்போது

அப்பா வாங்கி வந்த
அரை டிரவுசர் தெரிகிறது

அப்பத்தா போட்டு விட்ட
அரை ஞாணும் தெரிகிறது

பிள்ளைப் பிராயத்து
பிரியங்கள் எல்லாமே

பெரியவர் ஆனபின்னால்
புதிதாகப் புரிகிறது
------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வியாழன், 17 மார்ச், 2016

விடியும் பொழுது

விடியும் பொழுது
----------------------------
மெள்ள மெள்ளத் தான்
புலர்கிறது  பொழுது

அதிகாலை   நேரத்தில்
அலாரத்தை நிறுத்தி விட்டு

காலை நேரத்தில்
கண்களை இறுக்கிக் கொண்டு

சூரியக் கதிர்கள்
சுடுகின்ற போது தான்

வேக வேகமாய்
விடிகிறது பொழுது
--------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

திங்கள், 14 மார்ச், 2016

இயற்கை அழகு

இயற்கை அழகு
----------------------------
பஞ்சுப் பொதியாக
மிதக்கும் மேகங்கள்

வாயில் நுரை தள்ளி
கரை மோதும் கடல் அலைகள்

பச்சை இலை தாங்கி
தலை ஆட்டும் தாவரங்கள்

வண்ணமாய் வாசமாய்
பூத்திருக்கும் மலர்கள்

இயற்கை அழகாம்
இலக்கணத்தின் இலக்கியங்கள்
------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

ஞாயிறு, 13 மார்ச், 2016

போக்கு வரத்து

போக்கு வரத்து
------------------------------
வலமும் இடமும் பார்த்து
வாகன வேகம் பார்த்து

தெருவைக் குறுக்கே
கடக்கும் போது

மேலே இருந்து
பறவை எச்சம்

உச்சந் தலையில்
'நச்'சென ஈரம்

ஆகாயப் போக்குவரத்தும்
அறிமுகம் ஆகிறது
------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வெள்ளி, 11 மார்ச், 2016

கோலத்தின் கோலம்

கோலத்தின் கோலம்
---------------------------------
சாணித் தண்ணீர் தெளித்து விட்டு
வாசலைப் பெருக்கி விட்டு

ஏழு புள்ளிக் கோலமொன்றை
இழுத்து விட்டு வரும்போது

வீட்டுக் கோழி ஓன்று
குஞ்சுகளைக் கூட்டி   வந்து

கோலத்தைக் கலைத்தபடி
கொத்திக் கொத்தி  இரை தேட

விரட்டுதற்கு மனமின்றி
வேடிக்கை பார்த்திடுவாள்
--------------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

செவ்வாய், 8 மார்ச், 2016

விதியும் மதியும்


விதியும் மதியும்
---------------------------
நல்ல குடும்பத்தில்
பிறப்பது விதிவசம்

நல்ல படிப்பை
முடிப்பது விதிவசம்

நல்ல துணையும்
அமைவது  விதிவசம்

நல்ல வேலையில்
அமர்வது விதிவசம்

மாறி நடந்தால்
மாற்றுவது மதிவசம்
-------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

ஞாயிறு, 6 மார்ச், 2016

கிராமக் காட்சி

கிராமக்  காட்சி
---------------------------------
ஒப்படி முடிஞ்ச
ஊரு வயக்காட்டில்

நாடா முடிஞ்ச
டவுசரைப் போட்டுக்கிட்டு

கருவக் குச்சியாலே
ஆடுகளை ஓட்டிக்கிட்டு

வீடு திரும்புகின்ற
விவசாயப்  பையனுக்கு

தூரத்து ரோட்டிருந்து
டீசல்  வாசத்தோடு

சேர்ந்து வருகின்ற
சினிமாப் பாட்டு

செலவு வைக்காத
பொழுது போக்கு
----------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

சனி, 5 மார்ச், 2016

உயர் தனிச் செம் மொழி

உயர் தனிச் செம் மொழி
-----------------------------------------
அகத்திற்கும் புறத்திற்கும்
மட்டும் அல்ல

ஆன்மாவுக்கும் இலக்கியம்
கண்ட தமிழ்

எழுத்துக்கும் சொல்லுக்கும்
மட்டும் அல்ல

பொருளுக்கும் இலக்கணம்
கண்ட தமிழ்

இலக்கியமும் இலக்கணமும்
மட்டும் அல்ல

இயற்கையும் இறைவனும்
இணைந்த தமிழ்
---------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வெள்ளி, 4 மார்ச், 2016

பேச்சுக் கலை

பேச்சுக் கலை
------------------------
எண்ணங்கள் எழும்பும்போது
வார்த்தைகள் சுரக்கும்

உணர்ச்சிகள் முட்டும்போது
உதடுகள் திறக்கும்

கேட்பவர் கிடைக்கும்போது
பேச்சுமே பிறக்கும்

சொல்பவர் சொல்லும்போது
சுகமாக இருக்கும்

இருவரும் இயைந்திருந்தால்
இன்பமே உருக்கும்
-----------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வியாழன், 3 மார்ச், 2016

விளம்பர நடிப்பு

விளம்பர நடிப்பு
---------------------------
பற்பசை விளம்பரம் செஞ்சு
பல்லெல்லாம் தேஞ்சாச்சு

சோப்புக்கு விளம்பரம் செஞ்சு
தோலெல்லாம்   கருப்பாச்சு

எண்ணைக்கு விளம்பரம் செஞ்சு
தலையெல்லாம் நரையாச்சு

மசாலா விளம்பரம் செஞ்சு
வயிறெல்லாம் புண்ணாச்சு

பொது மக்கள் புகார் செஞ்சு
ஜெயிலுக்குள் போயாச்சு
------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems