திங்கள், 29 பிப்ரவரி, 2016

வாழ்க்கை வட்டங்கள்

வாழ்க்கை வட்டங்கள்  
--------------------------------------
நீர் மேல் அழுத்தம்
நிகழ்த்தும் வட்டங்கள்

ஒன்றாய் இரண்டாய்
ஓடும் வட்டங்கள்

வாழ்க்கைப் பாதையின்
வளைவாய்  வட்டங்கள்

பிறந்து வளர்ந்து
பெரிதாய் மாறும்

கடைசி வட்டம்
காணாமல் போகும்
-----------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

ஆரோக்கிய வாழ்வு

ஆரோக்கிய வாழ்வு
--------------------------------
ஆரோக்கிய வாழ்வின்
அடிப்படை   மூன்று

உடலின் பயிற்சி
ஓட்டமும் நடையும்

மனதின் பயிற்சி
கேட்டலும் பார்த்தலும்

ஆன்மாவின் பயிற்சி
அடக்கமும் அமைதியும்

உடலும் மனதும்
ஆன்மாவும் ஆரோக்கியம்
-------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வியாழன், 25 பிப்ரவரி, 2016

சரக்கடிக்கும் சமூகம்

சரக்கடிக்கும் சமூகம்
----------------------------------
எழுத்துக்கும் சொல்லுக்கும்
மட்டும் அல்ல

பொருளுக்கும் இலக்கணம் கண்ட
ஏற்றமிகு தமிழ்க் குடி

தாய் வழிச் சமூகமாய் இருந்து
குழு வழிச் சமூகமாய் மாறி

அரசர் வழிச் சமூகமாய்  இருந்து
மக்கள் வழிச் சமூகமாய் மாறி

சரக்கு வழிச் சமூகமாய் ஆகிச்
சறுக்கிய தமிழ்க் குடி (?)
-----------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

புதன், 24 பிப்ரவரி, 2016

காதலின் வடிவங்கள்

காதலின் வடிவங்கள்
---------------------------------
கடமை வேறு
காதல் வேறல்ல

கடமையே காதல்
காதலே கடமை

கடவுள் வேறு
காதல் வேறல்ல

கடவுளே காதல்
காதலே கடவுள்

கடமையும் கடவுளும் 
காதலின் வடிவங்கள்
-------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

திங்கள், 22 பிப்ரவரி, 2016

பயன் தராப் பயம்

பயன் தராப் பயம்
-----------------------------
ஆரம்ப பயத்தை
ஆராய்ந்து பார்த்தால்

அடுத்தவர் சொல்லி
வந்ததே பயம்

நாமே உணர்ந்தது
எல்லாமே பயன்

மற்றவர் சொன்னதை
மறந்து போவோம்

மனமது சொல்வதை
உணர்ந்து வாழ்வோம்
----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

ஆசையின் அளவு

ஆசையின் அளவு
-----------------------------
ஆசைகள் இருந்தால்தான்
வாழ்கையில் ஆர்வம்

ஆர்வமும் இருந்தால்தான்
செயலினில் வெற்றி

வெற்றிகள் வேண்டும்தான்
வீட்டுக்கும் நாட்டுக்கும்

அளவான ஆசையால்
அழகாகும் எல்லாம்

அளவில்லா ஆசையால்
அழிவாகும் எல்லாம்
-------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

கோபம் தொ(ல்)லை

கோபம்   தொ(ல்)லை
-------------------------------------
எல்லா வினைகட்கும்
எதிர்வினை ஒன்றுண்டு

கோபத்தின் எதிர்வினை
லாபத்தில் முடிவதில்லை

தன்னுயிர் உடலுக்கும்
தாங்கொணா வேகம்

மற்றுயிர் மனதிற்கும்
மறக்கவொண்ணா  சோகம்

துன்பத்தைத்   தொடராக்கும்
கோபத்தைத் தொலைத்திடுவோம்
--------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வியாழன், 18 பிப்ரவரி, 2016

நேரப் பார்வை

நேரப் பார்வை
-----------------------------
பிறக்கும் போது மட்டும்
பத்து மாதப் பொறுமை

வளர்ந்த   பின்னாலே
வந்து விடும் அவசரம்

நாளைக்கு முடிவது
நேற்றே முடியுமா

இன்றைக்கு விதைத்தால்
இனிமேல்தான் முளைக்கும்

நேரப் பார்வையிலே
தூரப் பார்வை வேண்டும்

கடமையைச்    செய்திருப்போம்
காலம் வரும் காத்திருப்போம்
-------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems 

புதன், 17 பிப்ரவரி, 2016

பள்ளிப் படிப்பு

பள்ளிப் படிப்பு
---------------------
பதினேழாம் வாய்ப்பாடு
மறந்து போயாச்சு

பானிப்பட்டு யுத்தமும்
மறந்து போயாச்சு

ஊசியிலைக் காடுகளும்
மறந்து போயாச்சு

உருப் போட்டதெல்லாமே
மறந்து போயாச்சு

செய்முறைப் பயிற்சி மட்டும்
சிந்தையிலே நின்னாச்சு
----------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

காவியக் குழந்தை

காவியக் குழந்தை
----------------------------------
வியப்பதற் கென்றே
விரியும் இமைகள்

சிரிப்பதற் கென்றே
விரியும் இதழ்கள்

உதைப்பதற் கென்றே
விரியும் கால்கள்

அணைப்பதற் கென்றே
விரியும் கைகள்

ரசிப்பதற்  கென்றே
விரியும் காவியம்
---------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

புத்தாண்டு சபதம்

புத்தாண்டு சபதம்
-------------------------------------------------------------------------------------------
ஜனவரி ஒண்ணாம் தேதி புத்தாண்டு சபதம் எடுத்துட்டு ரெண்டாம் தேதியே அதை காப்பாத்த முடியாதவங்க  ரெம்பப் பேரு இருக்காங்க. அதுக்காக அவங்களை குத்தம் சொல்றது ரெம்பத் தப்புங்க. அவங்க சூழ்நிலையை யோசிச்சுப் பாக்கணும்.

இப்ப பள்ளிக்கூடப் பையன் ஒருத்தன் இனிமே அன்னன்னிக்கு பாடத்தை அன்னன்னிக்கே படிச்சுடணும்னு  முடிவு பண்றான்னு வச்சுக்குங்க. அன்னைக்கு பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடனே அவன் தெருப் பசங்க எல்லாம் அவனை கிரிக்கெட் விளையாடக் கூப்பிட்டா அவன் என்ன பண்ணுவான் பாவம். விளையாண்டு  முடிச்சு வந்தவுடனே டிவியிலே நல்ல படமா போட்டுத் தொலைக்கிறாங்க. குடும்பமே உட்கார்ந்து பாக்கிறப்போ இவன் மட்டும் தனியா போயி உட்கார்ந்து படிக்க முடியுமா . அவனைக் குத்தம் சொன்னா எப்படி.

அப்புறம் ஆபீசிலே வேலை பாக்கிறவங்க சில பேரு இனிமே ஆபீசுக்கு கரெக்ட் டயத்துக்கு போகணும்னு உறுதி எடுக்கிறாங்க. ஆனா புத்தாண்டு பார்ட்டி மறுநாள் அதி காலை ரெண்டு மணி வரைக்கும் நீண்டுக்கிட்டே போகுது . அதுக்குப் பிறகு வீட்டுக்கு வந்து எட்டு மணி நேரம் தூக்கமாவது போட வேண்டியிருக்கு.   பத்து மணிக்குத்தான்    முழிப்பே வர்றது  . அப்புறம் எப்படி பத்து மணிக்கே ஆபீசிலே இருக்க முடியும். குளிக்க வேணாமா. சாப்பிட வேணாமா. நல்ல டிரெஸ் போட்டு ஆபீஸ் போகணுமா இல்லையா. அப்புறம் எப்படி கரெக்ட் டயத்துக்கு ஆபீஸ் போக முடியும். அவங்களைப் போயி குத்தம் சொல்லலாமா.
  
இந்த குடும்பத் தலைவர் ஒருத்தர் கணவரா பொறுப்பா மனைவியை இனிமே மாசம் ஒரு தரம் சினிமா கூட்டிட்டுப் போகணும்னு புத்தாண்டு உறுதி எடுத்துக் கிறாரு  . நல்ல படத்திற்கு ஒரு வாரம் முன்னாலே ரிசர்வ் பண்ண வேண்டியதா இருக்கு. இந்த தியேட்டர் ஓனர்கள் இவரு உறுதியைத் தெரிஞ்சுக்கிட்டு இவருக்கு ரெண்டு சீட்டு வச்சிருக்க வேணுமா வேணாமா. பண்ண மாட்டேங்கிறாங்க. டிக்கெட் தீர்ந்து போச்சுங் கிறாங்க  .  இவர் என்ன பண்ணுவாரு சொல்லுங்க. பாவம்.

இப்படியே தாங்க புத்தாண்டு சபதம் எடுத்துக்கிறவங்க   எல்லாம்   சூழ்நிலை சந்தர்ப்பங்களாலே அதை நிறைவேத்த   முடியாம தவிக்கிறாங்க. அவங்களைப் போயி குத்தம் சொல்றது ரெம்ப ரெம்ப தப்புங்க.
----------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


ஆர்வத்தின் அடிப்படை

ஆர்வத்தின் அடிப்படை
----------------------------------------
ஒவ்வொரு வயதிலும்
ஒவ்வொரு ஆர்வம்

ஆர்வத்தின் அடிப்படை
ஆராய்ந்து பார்த்தால்

புதியன புரிந்திடப்  
புறப்படல் புரியும்

தனித்துத் தெரிந்திடத்
தவிப்பது தெரியும்

அவரவர் வழியில்
அவரவர் ஆசை
--------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வியாழன், 4 பிப்ரவரி, 2016

இன்பத்தின் வெற்றி

இன்பத்தின் வெற்றி
--------------------------------
கண்களை மூடிக்கொண்டு
காலத்தின் பின்னோக்கி

பிள்ளைப் பிராயத்தின்
பிரியத்து வேலைகளை

அலசி ஆராய்ந்தால்
அங்கே ஒளிந்திருக்கும்

உண்மை ஆர்வத்தின்
உருவம் தெரிய வரும்

எடுத்து உழைத்திட்டால்
இன்பத்தின் வெற்றி தரும்
----------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

செயலும் சிந்தனையும்

செயலும் சிந்தனையும்
----------------------------------------
கல்விப் பருவத்தில்
கண்ட கனவுகளை

குடும்பப் பருவத்தில்
கூட்டும் நனவுகளாய்

செயலும் சிந்தனையும்
சேர்ந்தால் சிறப்புத்தான்

செயலில்லா சிந்தனை
சிதைகின்ற மனக்கோட்டை

சிந்தனையில்லா செயல்
சேருமிடம் சேர்க்காது
-----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems