ஞாயிறு, 31 ஜனவரி, 2016

இட மாற்றம்

இட மாற்றம்
-----------------------
எத்தனை வருடங்களாய்
வந்து போன இடம்

எத்தனை பேச்சாளர்களை
வளர்த்து விட்ட இடம்

அடுத்த வாரம் முதல்
அடுத்த இடம் என்றால்

சுவற்றையும் கதவையும்
சொந்தம் போல் பார்த்து விட்டு

சொல்லி விட்டுப் போகும் போது
சோகம் சுமந்திருக்கும்
------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வெள்ளி, 29 ஜனவரி, 2016

நிலம் பெயர்தல்

நிலம் பெயர்தல்
-------------------------
நஞ்சை மேட்டில்
நெல்லுப் பயிரும்

புஞ்சைக்  காட்டில்
மிளகாய்ச் செடியும்

போட்டு வளர்த்து
அறுத்துக் காசாக்கி

வீட்டுச் செலவும்
விருந்துச் செலவும்

செஞ்சது போக
மிச்சமும் இருக்கும்

காஞ்சும் பேஞ்சும்
கெடுத்த மழையால்

காட்டையும் மேட்டையும்
வித்துக் காசாக்கி

பட்டணம் வந்து
பழசை மறந்தாச்சு
--------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

விதியின் வழி

விதியின் வழி
---------------------------
ஏதோ இடத்தில்
பிறந்து இருந்ததும்

ஏதோ இடத்தில்
வளர்ந்து இருந்ததும்

ஏதோ இடத்தில்
பிரிந்து இருந்ததும்

ஏதோ இடத்தில்
சேர்ந்து இருந்ததும்

இறைவன் விதித்த விதி
இயற்கை வகுத்த வழி
------------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems 

சனி, 23 ஜனவரி, 2016

சிறுவர் உலகம்

சிறுவர் உலகம்
-------------------------
கடலை மிட்டாய் முறுக்கு
விற்கின்ற சிறுவர்கள்

காப்பி டீ ஊற்றி
எடுத்து வரும் சிறுவர்கள்

கார் முழுக்க துடைத்து விட்டு
கை ஏந்தும் சிறுவர்கள்

கொஞ்ச நேரம்தான்
நிறுத்திப்  போகின்றோம்

ரெம்ப நேரமாய்
நிற்கின்றார் மனதுக்குள்
---------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

வெள்ளி, 22 ஜனவரி, 2016

ஓடும் ரெயிலில் ஓசிப் பேப்பர்

ஓடும் ரெயிலில் ஓசிப் பேப்பர் 
------------------------------------------------------------------------------------------------------------
சில பேர் ஓடுற ரெயிலிலே ஒத்தைக் கையிலே தொங்கிக்கிட்டு இன்னொரு கையிலே எட்டா மடிச்ச நியூஸ் பேப்பரை படிச்சுக்கிட்டு வருவாங்க. நடுவிலே பக்கத்தை மடிச்சு மாத்தி  படிப்பாங்க  .ஏதோ மேஜிக் மாதிரி இருக்கும் .

நம்மளாலே அது மாதிரி எல்லாம் படிக்க முடியாததாலே கூட்டம் கொஞ்சம் குறைஞ்ச ரெயில் பெட்டியாப்  பாத்து ஏறுவோம். இடம் பாத்து உட்கார்ந்து பேப்பரை   விரிச்சு படிக்க ஆரம்பிப்போம். நம்ம ரெண்டு தோள்லேயும் உஷ்ணமா   மூச்சுக் காத்து வரும்நமக்கு ரெண்டு பக்கத்திலேயும் உட்கார்ந்திருக்கிறவங்க நம்ம தோள்லே முட்டுவாயை  வைக்காத குறையா நெருக்கி உட்கார்ந்து நம்ம பேப்பரை படிச்சுக்கிட்டு இருப்பாங்க.

இதுக்கு நடுவிலே ஒரு குரல் எதிர் சீட்டிலே இருந்து. 'சார். கொஞ்சம் பேப்பரை தூக்கிப் பிடிங்க. சரியாத் தெரிய மாட்டேங்குது.  ' எதிர் பக்கம் இருந்து படிக்கிறதுக்கு அவருக்கு வசதி பண்ணிக் குடுக்கணுமாம் .

அடுத்த பக்கம் திருப்பப் போனோம்னா அதிகாரக் குரல் ஒண்ணு கேட்கும். 'நாங்க இன்னும் படிக்கலைல . அதுக்குள்ளே திருப்புறீங்க' . இடது பக்கத் தோளர்இடது தோள் பக்கம் இருக்கிறதாலே அவரு தோளர் தானே.

நம்மளும் கொஞ்ச நேரம் பொறுத்து அவரு  சரின்னு சொன்ன பிறகு தான் அடுத்த பக்கம் பிரிக்க முடியும். இதுக்குள்ளே எதிர் சீட்டிலே இருக்கிறவர், ' சார் சார் ' அந்த சீட்டைப் பிரிச்சுக் குடுத்திட்டு   நீங்க பாட்டுக்கு ப்ரீயா படிங்க' .

                யாரு ப்ரீயாப்  படிக்கிறதுன்னு நமக்கே சந்தேகம் வந்துடும். இப்படி பாதிப் பேப்பர் சீட்டு சீட்டாய்ப் பிரிஞ்சு  பல பேர் கைக்குப் போயிடும். நம்ம ஒரே சீட்டைப் ப்ரீயாப் படிச்சுக்கிட்டு இருப்போம்  .

அதிலே ஒரு   செய்தி முடிவிலே 'எட்டாம் பக்கம் பார்க்கவும் ' ன்னு போட்டு இருக்கும். எட்டாம் பக்கம் யார் கிட்டே இருக்கோ. எல்லாரும் சீரியஸ் ஆக படிச்சுட்டு இருப்பாங்க. தொந்தரவு பண்ண தயக்கமா இருக்கும். 

இதுக்குள்ளே நம்ம இறங்கிற ஸ்டேஷன் வந்துடும். எத்தனை பேர் கிட்டே பேப்பரைக் கேட்டு வாங்கிறது. நம்ம கையிலே இருக்கிற அந்த ரெண்டு பக்கப் பேப்பரோட இறங்க வேண்டியது தான்.
-------------------------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 21 ஜனவரி, 2016

தமிழ் வாத்தியார்

தமிழ் வாத்தியார் 
---------------------------------
எல்லாத் தமிழ் வாத்தியார்களும் இப்படி இல்லைங்க. ஆனா இவரு, இந்த தமிழ் வாத்தியார் ரெம்ப படுத்துறாருங்க  .

இப்ப இலக்கணத்திலே ஏதாவது சந்தேகம் வந்தா இவரு கிட்டே கேட்போமுல்லே. 'ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்' னா என்னன்னு கேட்டா ' டே கூறு கெட்ட பயலே, இலக்கணப் புத்தகத்தை பிரிச்சு படிடா' ங்கிறாரு . நம்ம அதைக் கண்டுபிடிக்க ,அந்தப் புத்தகத்திலே கடைசியிலே இருக்கிற இன்டெக்ஸ் ஸிலே போயி முதல்லே 'எச்சம்'   னு பார்க்கணும் . அப்புறம் அதுக்குள்ளே பெயரெச்சம் , அப்புறம் எதிர்மறைப் பெயரெச்சம். அதுக்குள்ளே ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ன்னு  கண்டுபிடிச்சு அந்தப் பக்கம் போறதுக்குள்ளே  எச்சம்னாலே நமக்கு அச்சமா யிடும்.  

இலக்கியப் பாடமும் அப்படித்தாங்க. திடீர்னு ' தன்னரிய திருமேனி'ன்னு ஆரம்பிக்கிற செய்யுளை மனப்பாடம் பண்ணிட்டு வாங்கன்னு' சொல்லிட்டுப் போயிடுவாரு. நம்ம அந்த செய்யுள் கம்ப ராமாயணத்திலா      , பெரிய புராணத்திலா , ன்னு தேடிக் கடைசியா ' இரட்சணிய யாத்ரிகத்திலேன்னு  கண்டு பிடிச்சு  மனப்பாடம் பண்ணிட்டுப் போகணும்.

அப்புறம் உரைநடைப் பாடம் நடத்துறப்போ   இவரு மட்டும் சின்ன சின்ன வாக்கியங்களா சொல்வாரு. 'அவன் கோவிலுக்குப் போனான். அவள் சமையல் செய்தாள் ' . இப்படின்னு. ஆனால் நம்மளை மட்டும் பெரிய பெரிய வாக்கியங்களா சொல்லச் சொல்வாரு. 'அந்த ஆரணங்கு அன்ன நடை பயின்று நடந்து வந்து அடுப்படிக்குப் போனாள் '   இந்த மாதிரி. அந்த ஆரணங்கு நடந்து போயிருவாள். நமக்கோ  சின்ன '' வும் பெரிய '' வும் நம்ம நாக்குலே நடந்து வராது.

எல்லாத்துக்கு  மேலே இவரு பாடம் நடத்துறப்போ   புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து புரட்டிப் பார்த்து நடத்துவாரு. ஆனா நம்ம கிட்டே இவரு கேள்வி கேட்கிறப்போ, நம்ம பதிலைப் பார்க்க புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கக் கூடாதாம். இது எந்த ஊரு நியாயங்க. ரெம்ப ஒரு தலைப் பட்சமா இருக்குங்க.

என்ன ஒண்ணு. இந்த மாதிரி எல்லாமே நம்மளா ஒண்ணொண்ணா கஷ்டப் பட்டுச் செஞ்சு செஞ்சு, சுயமாக் கத்துக்கணும்கிற      ஒரு வேகம்  வந்துடுச்சுங்க  .  இது நம்ம வாத்தியாரு தெரிஞ்சு செஞ்சாரா, தெரியாம செஞ்சாரான்னு தெரியலீங்க.   

---------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


செவ்வாய், 19 ஜனவரி, 2016

வித்துவான் வேகராகன்

வித்துவான் வேகராகன்
------------------------------------------------------------------------
நம்ம வித்துவான் வேகராகன் இப்பதான் கொஞ்சம் ப்ரீயா இருக்கான்ஒரு மாசமா இந்த சபாவிலே கச்சேரி, அந்த சபாவிலே கச்சேரி ன்னு ஓடிக்கிட்டே இருந்தான்.

                போன வருஷம் ஒரு சபாவிலே கூட கச்சேரி கிடைக்காதவன்  இந்த வருஷம் எப்படி இத்தனை சபாவிலே பாடுறான்னு விசாரித்துப் பார்த்ததிலே தெரிய வந்தது . இந்த வருஷம் பிரபல வித்வான்கள்  பலர் வெள்ள சேதத்துக்கு அனுதாபம் தெரிவிச்சு பாடாததாலே இவனுக்கு அடிச்சது சான்ஸ்.

என்ன ஒரு பிரச்சினை. இந்த சங்கீத விமர்சகர்கள் எல்லாம் இவன் கச்சேரிகளைக் கேட்டு கிழி கிழி ன்னு கிழிச்சதிலே   அடுத்த வருஷம் ஒரு சபாவிலே யாவது இவனைக் கூப்பிடுவாங்களாங்கிறது  சந்தேகம் தான். அது தவிர இவன் சபாக்கள்ளே அடிச்ச கூத்து இருக்கே.

வேற என்னங்க. கச்சேரிக்கு நடுவிலே இண்டர்வல் விட்டுட்டு சபா காண்டீன்லே போயி முதல் ஆளா உட்கார்ந்து ஓசியிலே ஸ்வீட்,    காரம், காப்பி சாப்பிட்டு வர்றது. அப்புறம் பாடுற சங்கதியிலே எல்லாம் ஒரே ஏப்பம்   தான்.   

முன்னாலே பாடினது மட்டும் என்ன வாழ்ந்துச்சுன்னு கேட்கிறீங்களா. அதுவும் சரிதான். வித்தியாசமா பாடுறேன் பேர்வழின்னு சொல்லிட்டு கல்யாணி ராகத்துக்கு நடுவிலே  கால பைரவியை சாரி பைரவி ராகத்தை கலந்து அடிக்கிறது. கேட்டா ராக மாலிகையாம்அதுக்கு கண்றாவி மாலிகையின்னு ஒரு விமர்சகர் பேரே வைச்சுட்டார்.

அப்புறம் தனி ஆவர்த்தனத்துக்கு பெருந்தன்மையா நேரம் கொடுக்கிறேன் பேர்வழின்னு பாதி நேரம் சும்மாவே உட்கார்ந்து வெத்தலையைக் குதப்பிக்கிட்டு தப்புத் தாளம் போட்டுக்கிட்டு இருக்கிறது.

கடைசியிலே மங்களம் பாடுறப்போ இவன் அடிக்கற கூத்து இருக்கே . ஈவ்  டீசிங்  எல்லாம்  ஒண்ணும்  இல்லைங்க , மங்களம்னு யாரும் இல்லைங்க, இவன்தான் கச்சேரியை முடிக்க  மங்கலம் பாடுறப்போ பாட்டையும் நடனத்தையும் கலந்து செய்யிறேன்னு சொல்லிப்புட்டு எந்திரிச்சு   டான்ஸ் ஆடுறது.

இவன் டார்ச்சர் தாங்க முடியாம சில சபாக்கள்ளே ஏற்கனவே புக் பண்ணியிருந்த தையும் கேன்சல் பண்ணிட்டாங்க. இவன் பாட்டைக் கேட்காத சில சபாக்கள்   தான் மாட்டிக்கிட்டு முழிச்சுச்சு .

சீசன் முடிஞ்சாச்சு . இப்ப 'வித்துவான் வேகராகன்' 'கத்துவான் சோகராகன்' ன்னா ஆகிப் போயி உட்கார்ந்து இருக்கான்.
--------------------------------------------------------------நாகேந்திர பாரதி


சனி, 16 ஜனவரி, 2016

சர்க்கரைப் பொங்கல்

சர்க்கரைப் பொங்கல் 


வீட்டுக்காரம்மா கொடுத்தனுப்பிய லிஸ்டிலே   இருக்கிறதை- அண்ணாச்சி கடையிலே பச்சரிசி, பருப்பு, வெல்லம் - பூக்காரம்மா கிட்டே பூ, பழம்,   தேங்காய் , வெத்திலை - ரோட்டோரக் கடையிலே கரும்பு , கிழங்கு, காய்கறி   - எல்லாம் வாங்கிட்டு  ரெண்டு கனத்த பைகளோடு  ரெண்டு மாடி படியேறி வீட்டுக்குள்ளே நுழைஞ்சவுடனே 'முக்கியமான ஒண்ணை லிஸ்டிலே போட மறந்துட்டேங்க. உப்பு இருக்குதுன்னு நினைச்சு இருந்துட்டேன். வாங்கிட்டு வாங்க' ம்பாங்க. 

மறுபடி ரெண்டு மாடி இறங்கி உப்பு பாக்கெட்டோட ஏறி வந்தா ' என்னங்க. செல போன் அடிச்சா கேக்க மாட்டீங்களா . எத்தனை தடவை போன் பண்றது' ன்னதும், போனை எடுத்துப் பாத்தா அதுலே சார்ஜ் போயிருக்கும். பத்து வருஷத்துக்கு முந்தி வாங்கின போன் . செங்கல் மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கு. ஸெல்ப் டிபென்சுக்கும் உபயோகப் படும். எதுக்கு மாத்தணும். என்ன, ரெண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சார்ஜ் ஏத்தணும். சவுண்டும் கொஞ்சம் கம்மியா இருக்கும். பேசறது கொஞ்சம் சத்தமா பேசணும். பக்கத்திலே இருக்கிறவங்க ' 'தம்பி ,போனைக் காதிலே இருந்து எடுத்துட்டே பேசலாம். அடுத்த ஊருக்கே நேரே கேட்டுடும் '   ன்னு  கிண்டல் செய்வாங்க.

'இப்ப எதுக்கு போன் பண்ணினே ' னாக்க  இன்னும் ரெண்டு லிஸ்டிலே விட்டுப் போச்சாம். மறுபடி மாடி  இறங்கி ஏறி மூச்சு வாங்க உள்ளே நுழைவோம். இதுக்குள்ளே காலையிலே பொங்கல் வைக்கிற நல்ல நேரம் முடிஞ்சு போயிருக்கும். இனிமே சாயந்திரம் தான் ன்னு சொல்லிட்டு டிவி பார்க்க ஆரம்பிப்போம்  .  வழக்கம் போல சேனல்லை மாத்தி மாத்தி பாப்போம்  .
  
 'பொங்கலுக்கு முக்கியத் தேவை அரிசியா சர்க்கரையா' ன்னு ஒரு பட்டி மன்றம்.
 'வெளியாகி ஒரே நாளில் தியேட்டரை விட்டு ஓடிய புத்தம் புதிய திரைப் படம் '
 ''அவசரமாக் கூப்பிட்டதாலே , குளிக்கப் போறதுக்குப் போட்ட உடுப்போடு    நடிகைங்க வந்து உட்கார்ந்து இருக்கிற அவார்ட் பங்ஷன்
'கிராமத்துக் கலாச்சாரம்னு பொய் சொல்லிக்கிட்டு நடத்துற  பீப் சாங் குத்தாட்டம்'
  'வயசுக்கு மீறிப் பேசுற ஆடுற  சின்னப் புள்ளைங்களை பெருமையாப்   பாத்துக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டு இருக்கிற  அப்பா அம்மா கூட்டம் '
  ' மது குடிப்பதின் அவசியத்தை இளைஞர்களுக்கு அறிவுறுத்தும் புதுத் திரைப்படங்களின், பாடல்களின்  முன்னோட்டம் '
   இப்படி ஒண்ணொண்ணா பாத்து முடிக்கிறதுக்கு சாயந்திரம் ஆயிடும்.     

பொங்கல் பொங்கி சாமி கும்பிட்டு சாப்பிட   உட்கார்ந்தா நம்ம தட்டிலே வெண் பொங்கல் மட்டும்   தான் விழும். விசாரிச்சா நமக்கு சர்க்கரை   வியாதியாம். சக்கரை   பொங்கல் சாப்பிடக் கூடாதாம்ரெண்டு மாடி, மூணு முறை ஏறி இறங்கி வாங்கிட்டு வந்ததுக்குப் பரிசு.

'ஏதோ சாஸ்திரத்துக்கு கொஞ்சம் எனக்கும் வைங்க. இல்லைன்னா சாமி கோவிச்சுக்ரும்' ன்னு சொன்னதும் வைப்பாங்க. சர்க்கரைப்   பொங்கல் இல்லே .சர்க்கரைப் பருக்கைகள். நம்மளும் ஒண்ணொண்ணா எண்ணிப் பார்த்துச் சாப்பிட்டு சர்க்கரைப்  பொங்கல் கொண்டாடிட வேண்டியதுதான்.
------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


வெள்ளி, 15 ஜனவரி, 2016

வாசமான வாழ்த்துக்கள்

வாசமான வாழ்த்துக்கள்
---------------------------------------
பொங்கல் வாழ்த்தில்
சர்க்கரை வாசம்

கிறிஸ்துமஸ் வாழ்த்தில்
கேக்கின் வாசம்

ரம்ஜான் வாழ்த்தில்
மட்டன் வாசம்

ஒவ்வொரு வாழ்த்திலும்
உணவின் வாசம் வேறு

எல்லா வாழ்த்திலும்
இறைவன் வாசம் ஒன்று
-------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

வியாழன், 14 ஜனவரி, 2016

அகர முதல

அகர முதல
---------------------------------------------------------------------------------------
'அகர முதல ' ன்னு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சா ' இது என்ன முட்டுக்காட்டு முதல மாதிரி அகரத்திலே இருக்கிற முதலையா ' ன்னு கேட்கிறாங்க. 'இல்லீங்க. இது முதலை இல்ல . முதல . அதாவது முதல். எழுத்துக்களுக்கு எல்லாம் முதல் எழுத்து ' ன்னு சொன்னா ' அது எப்படிங்க. என் பேர் கந்தசாமி. தானே முதல் எழுத்து' ன்னு விதண்டா வாதம் செய்வாங்க.

இந்த மாதிரி ஏடாகூட ஆளுங்களுக்கு திருக்குறள் வகுப்பு எடுக்கச் சொன்னாங்க. ' சரி, அகர முதல சொல்லுங்க' ன்னா ' ஆகார முதல' ன்னு ஆரம்பிப்பாங்க. ' உங்களுக்கு வேணும்னா ஆகாரம் முதலா இருக்கலாம். ஆனா எழுத்துக்களுக்கு அகரம் தான் முதல்என்று சொன்னால் ' அது எப்படி உங்களுக்குத் தெரியும்' ம்பாங்க.

ஒரு வழியா தமிழ் உயிர் எழுத்து , மெய் எழுத்து விவரம் எல்லாம் சொல்லி கொடுத்து ஆரம்பிப்போம். அறத்துப் பால், பொருட் பால், இன்பத்துப் பால் ன்னு மூணு பால் இதிலே இருக்குன்னு சொன்னதும், - ஆமாங்க. நீங்க நினைக்கிறது சரிதான் - ஆட்டுப் பால் , பசும் பால், ஒட்டகப் பால் மாதிரியா ன்னு கேட்பாங்க. நல்ல வேளை. லிட்டர் என்ன விலைன்னு கேட்காம விட்டாங்க.

இந்த ஒண்ணும் தெரியாதவங்களை யாவது  ஒரு மாதிரி சமாளிச்சுடலாம் . ஆனா அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு கேள்வி கேட்கிறாங்க பாருங்க. அவங்க கிட்டேதான் ரெம்ப கஷ்டம். அது மாதிரி ஒருத்தர்   ' சார், இந்த ஆயிரத்து ஐநூத்து ஐம்பது குறளையும் சொல்லிக் கொடுப்பீங்களா' ன்னு கேட்டார். என்ன இது . காணாமப் போனதாச் சொல்லிக்கிற அதிகப் படி குறள் இவருக்கு எப்படித் தெரியும்னு"  கேட்டா சொல்றாரு . ' ஆயிரத்து சொச்சம்னு தெரியும் . ஒரு குத்து மதிப்பா  ஐநூத்து ஐம்பது சேர்த்துக் கிட்டேன் ' ம்பாரு. ஒரே குத்தா குத்தணும் போல இருக்கும். 'அகர முதல' ஒரு குறளை ச் சொல்லிக் குடுக்கிறதுக் குள்ளேயே    நமக்கு ' தலை முதலா' கிறு கிறுக்குது . அத்தனை குறளுமா  .  

இதிலே இன்னொருத்தர் ' சார், இந்தத் திருக்குறளை அப்படியே இங்கிலீஷிலே  மொழி பெயர்த்துச் சொல்லுங்க' ம்பார். தமிழுக்கே தகிந்திணதொம் . இவருக்கு இங்கிலீஷ் கேட்குதான்னு கேட்டா ' இல்லே உங்களுக்கு இங்கிலீஷ் தெரியுமான்னு தெரிஞ்சுக்கதான் ' ம்பாரு. ரெம்ப முக்கியம்.

ஒரு வழியா சில பேர் ' இன்னைக்குப் போதும் சார், நாளைக்குத் தெருக்குறளைக்   கத்துக்குறோம் ' ம்பாங்கதெருவுக்குத் தெரு திருக்குறளைப் பரப்பணும்னு   நம்ம  நினைச்சா இவரு   திருக்குறளையே தெருக்குறளா மாத்துறது ரெம்ப  அதிகங்க  .
----------------------------------------------------------------------நாகேந்திர பாரதி