திங்கள், 30 நவம்பர், 2015

வங்கிச் சேவை வளர்ச்சி

வங்கிச் சேவை வளர்ச்சி 
--------------------------------------------------------------------------------------
இந்த 'வங்கி'ன்னதும்  ' சேவை' ன்னதும்  ஏதோ சாமிக்குச் சாத்துற வங்கி கவசம்ன்னோ , சாப்புடுற  சேவை இடியாப்பம்ன்னோ நினைச்சுடக் கூடாதுங்க. எதுக்கு வம்பு. பேசாம கரெக்ட்டான தமிழ்லே   பேங்கிங் செர்விஸ் ன்னு  சொல்லிப் புடலாம்.
அந்தக் காலத்திலே இந்த பேங்கு    கிளார்க் முன்னாடி பெரிய பெரிய கியூவிலே நின்னதும், அவரு லெட்ஜரை   இழுத்துத் தள்ளி டெபிட் கிரெடிட் போட்டு பாஸ் புக்கையும் செக்கையும் பின்னாலே அனுப்பி அது பல ஆபீசர் வழியா பிரயாணம் பண்ணி ஒரு வழியா கேஷியரை அடைஞ்சதும் அவரு அழுக்கு நோட்டா பாத்து நமக்கு    எண்ணிக் கொடுத்ததும் ஞாபகத்துக்கு வர்றது. அப்பல்லாம் இந்த டிரான்சாக்சன் நேரம் நமக்கும் ஸ்டாப்புக்கும் இருக்கிற உறவைப் பொறுத்து இருந்துச்சு .
அப்புறம் வந்துச்சுங்க கம்ப்யூடர். அதைக் கத்துக்கிட்டு அவங்க வேலை பார்க்க கொஞ்ச அதிக நேரம் ஆச்சு. நம்மளும் பின்னாடி என்னன்னமோ பெருசா வரப் போகுதுன்னு பொறுத்துக் கிட்டோம். அந்த நேரத்திலே டிரான்சாக்சன் நேரம் ஸ்டாப்புக்கும்  கம்ப்யூட்டருக்கும் இருக்கிற உறவைப் பொறுத்து இருந்துச்சு.
அப்புறம் டி எம் வந்துச்சு. பிராஞ்சுக்கு போயி  காத்திருக்க வேணாம். நம்ம பணத்தை நம்மளே உடனே எடுத்துடலாம். பீஸ் கிடையாதுன்னாங்க  .  அப்புறம் என்னடான்னா திடீர்னு அஞ்சு தடவைக்கு மேலே எடுத்தா சார்ஜ் பண்ணுவோம்னாங்க. அப்ப நம்ம டிரான்சாக்சன் நேரம் நமக்கும் கம்ப்யுட்டருக்கும் அதாங்க  டி எம் முக்கும் இடையே இருக்கிற உறவைப் பொறுத்து இருந்துச்சு.
 அப்புறம் உலக மயமாக்கல் அது இதுன்னு பாரின் பேங்கு எல்லாம் வந்துச்சு . சம்பளம் வாங்கிற குரூப் எல்லாம் பாரின் பேங்கு ப்ரைவேட் பேங்குன்னு   போயிட்டாங்க.    அங்கே என்னடான்னா எல்லாம் கம்ப்யூட்டர் மயம் தான். இன்டர்நெட் பேங்கிங் மொபைல் பேங்கிங் ன்னு எல்லாத்தையும் நம்மளையே பண்ணிக்க சொல்லிட்டாங்க. இப்ப நம்ம டிரான்சாக்சன் டயம் நம்ம மொபைலுக்கும் அவங்க கம்ப்யுட்டருக்கும் இடையே இருக்கிற உறவை பொறுத்து வந்தாச்சு.
                     இப்படி கஸ்டமர், ஸ்டாப் புன்னு ஆரம்பிச்சு, ஸ்டாப் கம்ப்யூடர் ன்னு மாறி கஸ்டமர் கம்ப்யூடர் ன்னு ஆகி கம்ப்யூடர் கம்ப்யூடர் ன்னு ஆகிப் போச்சு. அந்தக் காலத்திலே கியூவிலே நின்னுக்கிட்டு இருந்தப்போ வாவது ஏதோ எக்செர்சைஸ்  மாதிரி இருந்துச்சு. இப்ப உட்காந்துக்கிட்டே 'டைம் அவுட் ' ' சிஸ்டம் நாட் அவைலபிள் ' ன்னு வர்றதை பாத்துக்கிட்டு திரும்பி   திரும்பி அழுத்திக்கிட்டு விரல்   தேய்ந்து போயி எப்படா டிரான்சக்சன் முடியும்னு காத்துக் கிடக்க வேண்டியதாயி ருக்கு .

------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 27 நவம்பர், 2015

ரெயில் பயணங்களில்

ரெயில் பயணங்களில் 
--------------------------------------------------------------------------------------
இந்த எலெக்ட்ரிக் டிரெயின்லே தாம்பரத்தில் இருந்து பீச் போறது ஒரு சுகமான அனுபவந்தாங்க. ஆனா கூட்டமா இருந்து உட்கார இடம் கிடைக்கலேன்னா உடம்பு ஒரு வழி ஆயிடுங்க. ஒரே வலியா ஆயிடுங்க. கும்பல்லே மாட்டிகிட்டு நசுங்க வேண்டியதுதான்.   

அதனாலே ஸ்டேசனுக்குள்ளே நுழைஞ்சதுமே    பிளான் பண்ணணும்முதல் வேலையா பிளாட்பாரத்திலே எந்த இடத்திலே நிக்கணும்ன்னு முடிவு பண்ணணும். இல்லைன்னா வண்டி வர்றப்போ கரெக்டா லேடீஸ் கம்பார்ட்மெண்ட்  நமக்கு முன்னாலே வந்து நிக்கும். நம்ம முன்னாலே ஓடுறதா பின்னாலே ஓடுறதான்னு முடிவு பண்ணுறதுக்குளே   கூட்டம் ரெம்பிடும். இடிச்சு பிடிச்சு ஏறணும்.

ஒரு மாதிரி பாதி உடம்பை உள்ளே நுழைச்சு மீதி உடம்பை காத்தாட வெளியே விட்டுக்கிட்டு போக வேண்டியதுதான். உள்ளே ஆடிக்கிட்டு இருக்கிற தொங்கு வட்டத்தையோ சதுரத்தையோ புடிக்க என்னதான் முயற்சி பண்ணினாலும் நம்ம கைக்கு மாட்டாது. நம்ம கால்களும் சுத்தி நெருக்கி அடிச்சு நிக்கிற மக்களோட சப்போர்டிலே ஒரு மாதிரி ஸ்டெடி ஆயிரும்கூட்டமான ரெயிலிலே இது ஒண்ணுதான் உபயோகமான விஷயம். கீழே விழ மாட்டோம்.

ஆனா இந்த கர்சீப்பு, மேப்பு விக்கிற பசங்க எல்லாம் எப்படியோ காலுக்கும் கைக்கும் நடுவிலே புகுந்து முன்னேறி கம்பார்ட்மெண்டை ஒரு சுத்து சுத்தி கையிலே இருக்கிறதை எல்லாம் வித்துபுடுவாங்க. அது என்ன மாயமோ தெரியலீங்க. நம்ம நகர முடியாம நின்னுக்கிட்டு இருப்போம்.


ஒரு மாதிரி உள்ளே முழு உடம்பும்   நுழைஞ்ச அப்புறம் இந்த ஓர சீட்டிலே   உட்கார இடம் பிடிக்கிறது ஒரு உலகப் போர் மாதிரிங்க. ஒரே அடி இடிதான், அவ்வளவு பேர் போட்டி போடுவாங்க. கஷ்டப்பட்டு இடம் புடிச்சுட்டா நகர்ந்து நகர்ந்து ஜன்னல் சீட்டையும் புடிச்சு புடலாம். ஆஹா . அப்ப கிடைக்கிற காத்து சுகம் இருக்கே . அது . ஆனா காத்தோடு சேர்ந்து சில சமயம் வெத்திலைச் சாறும் சேர்ந்து வர்ற அபாயக் கூறு அதிகம் இருக்கு. அதனாலே கொஞ்சம் விழிப்போட இருக்கணும். இல்லைன்னா ஆபீசுக்குப் போனதும் முதல் வேலை முகம் கழுவுறதா தான் இருக்கும்

அப்புறம் இந்த நடு வழியிலே  ஸ்டேஷன்னிலே இறங்கிறது ரெம்ப ஈசிங்க. நம்ம பாட்டுக்கு நின்னுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். ஆட்டோமேட்டிக்கா மக்கள் கூட்டமே நம்மைத் தள்ளிக்கிட்டே போயி ஸ்டேஷன்னிலே தள்ளி விட்டுரும்.

கடைசி ஸ்டேஷன்னிலே இறங்கிறது அதை விட சவுகரியம். கூட்டமே இருக்காதா. கையை காலை நீட்டி அந்த பாகங்களை  அதோட ஒரிஜினல் இடத்திற்கு கொண்டு வந்துட்டு ஆற அமர இறங்கலாம்

                என்னதான் அப்போதைக்கு கஷ்டப்பட்டு பிரயாணம் பண்ணினாலும், பின்னாலே யோசிச்சுப் பாக்கிறப்போ அந்த கூட்டம் , அந்த அடிதடி , அந்த பேச்சு, அந்த பாட்டு , அந்த புரணி  எல்லாமே அது ஒரு சுகமாத் தாங்க இருக்கு
-----------------------------------------------------------------நாகேந்திர பாரதி


வியாழன், 26 நவம்பர், 2015

வாகன வாழ்க்கை

வாகன வாழ்க்கை
---------------------------------------
வாக்கிங் போறது உடம்புக்கு நல்லது தாங்க. அதுக்காக பத்து கிலோ மீட்டெரிலே இருக்கிற ஆபீசுக்கு தினசரி  நடந்தே போறது அவ்வளவா நல்லது இல்லைங்க. இதை அனுபவிச்சு புரிஞ்ச பிறகுதான் சைக்கிள் வாங்கினேன்.

ஆனா இந்த சைக்கிள் சக்கரங்கள் நம்ம வெயிட்டைத் தாங்க முடியாம அடிக்கடி காத்து போயி, பஞ்சரா ஆகி ரெம்பவே படுத்துச்சுங்க .. பல சமயம், நானும் சைக்கிளும் சேர்ந்து ஆபிசுக்கு வாக்கிங் போக வேண்டியதாச்சு. முடியலே.

அதனாலே ஸ்கூட்டருக்கு மாறிட்டேன். உடனே திடீர்னு மனைவி குழந்தைகளுக்கு எல்லாம் ஊரிலே இருக்கிற மால்களுக்கு எல்லாம் அடிக்கடி போகணும்கிற ஞானோதயம் வந்துடுச்சுங்க. பெட்ரோல் செலவு, ரிப்பேர் செலவுன்னு கொஞ்ச நாள்லேயே ஸ்கூட்டர் விலையை விட தாண்டிப் போயிடுச்சுங்க.

சம்பளமும் கூடுச்சு., குழந்தைகள் எண்ணிக்கையும் கூடுச்சு. ஸ்கூட்டெரிலெ ஆறு பேரா உட்கார்ந்து போயி அபராதம் கட்டி கட்டி அலுத்துப் போச்சுங்க. என்ன பண்றது. நாலு சக்கர வண்டிக்கு மாறியாச்சு. ஆமாங்க. கார் வாங்கியாச்சு. காரோடு சேர்த்து டிரைவர் சம்பளம், டீசல் செலவு, வாஷிங் செலவுன்னு ஏகப்பட்ட செலவு சேர்ந்தாச்சு.

சொந்த ஊருக்குப் போறதுக்கு பஸ் ரெயிலிலே செகண்ட் ஏசி புக் பண்ணி போயிட்டு வந்தா அரை  மாச சம்பளம் அவுட்டுங்க. ஆபீசிலே ஒழுங்கா வேலை பார்த்து புரோமோஷன் எல்லாம் கிடைச்சதாலே ஒரு மாதிரி இந்த லைப் ஸ்டைல்லை சமாளிக்க முடிஞ்சுதுங்க. அப்புறம் என்ன, ஒரு நாள் அட்லாண்டிக் கடலைத் தாண்டி அமெரிக்காவுக்கே அனுப்பி வச்சுட்டாங்க. ஆச்சு . பிளைட்டிலேயும் போயாச்சு.  
  
பிளைட்டிலே அடிக்கடி போயிட்டு வரப்போ  தான் ஒரு விஷயம் புரிஞ்சுசுங்க. உலகம் எவ்வளவு சிறுசுன்னு. உலகம் மட்டும்   இல்லே   .பாத் ரூமும் எவ்வளவு சிறுசுன்னு. உடம்பை வளைச்சு நெளிச்சு எப்படி வாழ்க்கையிலே அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்கிற தத்துவமும் புரிஞ்சு போச்சுங்க.

இப்படியே காலம் ஓடுச்சுங்க  .   வயசாயிடுச்சு. வீட்டுக்குப் போகலாம்னு அனுப்பி வச்சிட்டாங்க. இந்த ரிட்டயர்டு ஆசாமிகளுக்குன்னே பக்கத்திலே ஏதாவது ஒரு பார்க் கட்டி வச்சிருக்காங்களா .அதுக்கு வாக்கிங் போக ஆரம்பிச்சுட்டேன். என்ன ஒண்ணு. பெரிய பார்க்கு ஒண்ணு ஒரு ரெண்டு கிலோ மீட்டர் தூரத்திலே இருக்கு. அதான் சைக்கிள் வாங்கலாம்னு யோசிக்கிட்டு இருக்கேன்.  என்ன சொல்றீங்க .
----------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


புதன், 25 நவம்பர், 2015

மழைக் கோலங்கள்

மழைக் கோலங்கள்  
----------------------------------------------------------------
மழைக் காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுக்குதுங்க.

நம்ம பள்ளிக்கூடம், கல்லூரிக் காலத்தை நினைச்சுப் பாருங்க. மழையிலே நனைஞ்சுக்கிட்டே போயி கல்லூரி காம்பௌண்ட் பிளாக் போர்டிலே ' தொடர் மழையால் தொடர்ந்து கல்லூரி லீவு ' என்ற மந்திர வாசகத்தைப் படித்து நம் மனம் அடைந்த சந்தோஷத்தை மறக்க முடியுமா. அப்படியே தொப்பலா நனைந்தபடி பக்கத்துக்கு தியேட்டரிலே போயி பார்த்த படத்தை தான் மறக்க முடியுமா.

ஆனா இப்பல்லாம் டிவியிலே ' மழை வந்தாலும் வரும்; வராமல் போனாலும் போகும் ' என்று தெளிவாக சொல்வதை வைத்து முன்கூட்டியே விடுமுறை அறிவித்து விடுகிறார்கள். பழைய சஸ்பென்ஸ் போயே போச்சு.,

அப்புறம் ஆபீஸ் போக ஆரம்பிச்ச உடன் நிலைமை மாறிடுச்சு . கொட்டும் மழையிலும் நீச்சல் அடிச்சாவது ஆபிஸ் போக வேண்டிய நிலைமைஎன்ன ஒரு சவுகரியம். எப்ப வேணும்னாலும் போகலாம். எப்ப வேணும்னாலும் திரும்பலாம். மூணு மணிக்குப் போயிட்டு நாலு மணிக்கு திரும்பிடலாம். அட்டெண்டன்ஸ் கொடுக்கணும். அவ்வளவுதான்.
          
சில பேர் வீட்டிலே இருந்து வேலை பாக்கிற ஆப்சனை உபயோகப் படுத்தலாமான்னு கேட்கிறாங்க. அய்யயோ வேணாங்க. அப்புறம் வீட்டுக்குள்ளேயே ராத்திரி பகலா வேலை பாத்துக்கிட்டே   இருக்க வேண்டியதுதான். மழையிலே வெளியேறி வாகனத்திலே ஊர்ந்து ஊர்ந்து போயி  ஆபிஸ் சேர்ந்து உடனே திரும்பி வர்ற அந்த ஒர்கிங் டே அனுபவம் வேண்டாமா. வேலைக்குப் போனாம். ஆனா வேலை பாக்க முடியலைங்கிறது  அயல் நாட்டிலே இருக்கிற கஸ்டமருக்கு   தெரிய வேண்டாமா.

ஆனா இந்த வயசானவங்க பாடுதான் ரெம்ப கஷ்டங்க. எல்லா வியாதிகளும் அப்படியே எந்திருச்சு அவங்களைப் படுக்க வச்சிருதுங்க. . இருமல், தும்மல்னு அவங்க படுற பாடு ரெம்ப மோசங்க.

அப்புறம், இந்த தாழ்வான இடங்கள்லே  வீடு கட்டுனவங்க பாடு ரெம்ப மோசம். முழங்கால் தண்ணியிலே அவங்க உட்கார்ந்து இருக்கிறதைப்       பாக்கிறப்போ ரெம்ப கஷ்டமா இருக்கு. குடிசை வீடுகள் எல்லாம் மழைக் காத்திலே பறந்து போயி அதுவரை போகாத ஸ்கூல்லே அந்த ஏழைங்க  போயி உட்கார்ந்து இருப்பதைப் பார்க்க ரெம்ப கஷ்டமா இருக்கு.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுன்னு அப்பவே சொல்லிட்டாங்க. மழைக்கும் அது பொருந்துங்கநம்ம தாகத்தையும் பசியையும் தீர்க்கிற  ' துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை ' இப்படி துப்புக் கேட்ட தனமா தண்ணீரைத் துப்பித் தொலைக்கிறது ரெம்ப துன்பங்க.
-------------------------------------------------------------------------------நாகேந்திர பாரதி


செவ்வாய், 24 நவம்பர், 2015

மதுரை மண்

மதுரை மண்
----------------------
மடிச்சுக் கட்டிய வேட்டி
மல்லிப் பூவு மனசு

கடிச்சுப் போடுற கோபம்
கருத்த மேனித் தங்கம்

வெடிச்சுப் பேசுற பேச்சு
விருந்து வைக்கிற பிரியம்

முடிச்சுப் போட்ட வாழ்க்கை
முதலும் முடிவும் குடும்பம்

பிடிச்சுப் போகும் மதுரை
பிறந்து வளர்ந்து இருந்தா
----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems 

வியாழன், 19 நவம்பர், 2015

பர்கரும் பீஸ்ஸாவும் - நகைச்சுவைக் கட்டுரை

பர்கரும் பீஸ்ஸாவும் - நகைச்சுவைக் கட்டுரை 
------------------------------------------------------------------------------------------------------------
வாய் முழுக்க பர்கரை மொக்கிகிட்டும் , பல் முழுக்க பீஸ்ஸாவை கடிச்சுக்கிட்டும், காலை, மதியம் , இரவுன்னு பல பேருக்கு எல்லா    நேர உணவாயும்  இருக்கிற பெருமை வாய்ந்த பண்டங்க  இது

பர்கரிலே பல வகை இருக்குங்க. சிக்கன் பர்கர் , சீஸ் பர்கர், வெஜிடபிள் பர்கர், லேம்ப்  பர்கர் ன்னு வித விதம்மா இருக்குங்க. என்ன, ரெண்டு பன்னு ரொட்டித் துண்டுகளுக்கு நடுவிலே மாட்டுற விஷயம் தாங்க வித்தியாசம். ஆடு , மாடு, பன்னியோ அல்லது கோழி, வாத்து, கொக்கோ கொஞ்சம் இலை  தழைகளோடு நடுவிலே மாட்டிக்கிரும்  . அதுக்கு ஏத்த    மாதிரி பேரும் மாறிரும். அம்புட்டுதான்.

 பர்கரிலே உள்ளுக்குள்ளே சொருகி இருக்கிறதை மேலே எடுத்து பரப்பிப்  போட்டா பீஸ்ஸாங்கோ  . கொஞ்சம் விரைப்பா இருக்கும். பன்னு ரொட்டித் துண்டு வட்ட சைசும் கொஞ்சம் பெருசா இருக்கும். டாப் அப்பும் கலர் கலரா இருக்கும். அவ்வளவுதான்  

     பர்கர் எல்லாக் கலரையும் உள்ளுக்குள்ளே ஒளிச்சு வச்சிருக்கு. பீஸ்ஸாவோ வெளிச்சம் போட்டுக் காட்டுது. பச்சை மஞ்சள் கலரிலே ஒண்ணு ரெண்டு  துண்டு    பர்கருக்கு நடுவிலே இருந்தும்  கொஞ்சம் தலையை நீட்டிப் பாக்கும். ஆனா பீஸ்ஸா அளவு தைரியம் இல்லைங்க   . 

இதுங்களை சாப்பிடறப்போ காப்பியோ ஜூஸோ கை வசம் கட்டாயம் இருக்கணுங்கபர்கரும் பீஸ்ஸாவும் தொண்டைக்குள்ளே நற நறன்னு இறங்கிறப்போ அங்கெ கொஞ்சம் தண்ணி   விட்டு வழியை  வளவளப்பாக்கணும் இல்லையா . இல்லைன்னா இருமல்தான்.

ஆனா நம்மளை மாதிரி இட்லி தோசைக்கே வாயைத் திறக்க வருத்தப் படுறவங்களுக்கு இந்த பர்கருக்காக வாய் முழுக்கத் திறக்கிறதும், பீஸ்ஸாவுக்காக பல் முழுக்க காட்டுறதும்  ரெம்பக் கஷ்டங்க.

என்ன பண்றது. யாரோ சொன்ன மாதிரி ரோமிலே இருக்கிறப்போ ரோமன் மாதிரி இருக்கணுமாம். இல்லன்னா உயிர் வாழ முடியாதே. அதனாலே ஊரிலே சாப்பிட்ட ஊறப் போட்ட மிளகாயையும் பழைய சாதத்தையும் நினைச்சுக்கிட்டு பர்கரையும் பீஸ்ஸாவையும் கடிச்சுக்க வேண்டியது தான்.
----------------------------------------------------------------------நாகேந்திர பாரதி