வெள்ளி, 31 ஜூலை, 2015

மாலை சூடும் நேரம்

மாலை சூடும் நேரம்
---------------------------------
ஒற்றைச் சிவப்பொன்று
ஓடி மறைகிறது

கற்றை நிலவொன்று
காணக் கிடைக்கிறது

ஞாயிறின் மறைவினில்
திங்கள் பிறக்கிறது

கவியும் இருளினைக்
கலைக்கப் பார்க்கிறது

புவியும் வானத்தின்
மாலையை ஏற்கிறது
----------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

வியாழன், 30 ஜூலை, 2015

எங்கள் கலாம்

எங்கள் கலாம்
------------------------
இன்னும் கொஞ்ச காலம்
இருந்திருக் கலாம்

இளைஞர்களின் எழுச்சியை
ரசித்திருக்  கலாம்

ஊழலற்ற சமுதாயத்தை
உருவாக்கியிருக் கலாம்

இந்தியாவை வல்லரசாய்ப்  
பார்த்திருக் கலாம்

எங்களின்  தலைவரே
அப்துல் கலாம்
----------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

புதன், 29 ஜூலை, 2015

பயிற்சியும் முயற்சியும்

பயிற்சியும் முயற்சியும்
-----------------------------------
நடக்கும் தூரம்தான்
எல்லா இடங்களும்
பயிற்சி இருந்தால்

கிடைக்கும் தூரம்தான்
எல்லா வெற்றிகளும்
முயற்சி இருந்தால்

பயிற்சியின் வெற்றியில்
உடலுக்கு வலிமை

முயற்சியின் வெற்றியில்
மனதிற்கு வலிமை
----------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

செவ்வாய், 28 ஜூலை, 2015

அழகான கோழி

அழகான கோழி
----------------------------
அழுக்கில் புரண்டு வந்தாலும்
அழகான கோழி

தவுட்டுப் பானைக்குள் தவமிருந்து
பொரிக்கும் போதும்

கொத்தவரும் பறவைகளை
விரட்டும் போதும்

தரை தடவி இரை தேடி
கொடுக்கும் போதும்

அழுக்கில் புரண்டு வந்தாலும்
அழகான கோழி
----------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

ஞாயிறு, 26 ஜூலை, 2015

பழம் பெருமை

பழம் பெருமை
------------------------
எல்லா ஊர்களிலும்
சில பழைய இடங்கள்    இருக்கின்றன

கோட்டை  களாகவோ
கோயில் களாகவோ

அதைப் பார்ப்பதற்கென்றே
பல புதிய மனிதர்கள் வருகிறார்கள்

பழைய நினைவுகளைத்
தாங்கிக் கொண்டு

புதிய நினைவுகளை
வாங்கிக் கொண்டு
-------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

வெள்ளி, 24 ஜூலை, 2015

இணைந்த எண்ணங்கள்

இணைந்த எண்ணங்கள்
---------------------------------------
உள்ளங்கள் சேர்ந்து விட்ட
உல்லாச  வெளியினில்

உடல்கள் பிரிவது
ஒரு பொருட்டேயல்ல

எண்ணங்கள் எப்போதும்
இணைந்தே இருக்கும்

சேர்ந்தே சிரிக்கும்
சேர்ந்தே அழும்

இருந்தாலும் சரி
இறந்தாலும் சரி
---------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

கடந்த காலம்

கடந்த காலம்
-----------------------
கடந்த காலம் வந்து
கதவைத் தட்டிக் கேட்கிறது

ஏறி விளையாடிய
மரங்களை மறந்து விட்டாயா

இறங்கிக் குளித்த
குளங்களை மறந்து விட்டாயா

அவை இன்னுமா
இருக்கின்றன என்கிறாய்

காணாமல் போனது
நீ மட்டும் தான் என்கிறது
-------------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

வியாழன், 23 ஜூலை, 2015

நன்மையின் தன்மை

நன்மையின் தன்மை
--------------------------------
எண்ணத்தில் தூய்மை
எழுத்தினில் வாய்மை

பார்வையில் கூர்மை
பழக்கத்தில் நேர்மை

சொல்லினில் இனிமை
செயலினில் வலிமை

உள்ளத்தில் தனிமை
உறவினில் தாய்மை

உண்மையில் இருந்தால்
ஊருக்கு நன்மை
------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

செவ்வாய், 21 ஜூலை, 2015

இயற்கையின் ரகசியம்

இயற்கையின்  ரகசியம்
---------------------------------------
இறப்பும்  பிறப்பும்
இயற்கையின்  அதிசயம்

பிறந்தவர் எல்லாம்
இறந்து போகிறார்

இறந்தவர்  எல்லாம்
பிறந்து  வருகிறார்

எங்கே போகிறார்
எங்கே வருகிறார்

என்பது  மட்டும்
இயற்கையின் ரகசியம்
--------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

நிறம் மாறும் வாழ்க்கை

நிறம் மாறும் வாழ்க்கை
-------------------------------------
பச்சையாக இருந்தபோது
எத்தனை கொண்டாட்டம்

காற்று   வந்துவிட்டால்
ஆடிய ஆட்டமென்ன

பழுப்பாக ஆனபின்பு
பயம் வந்து விடுகிறது

வேகமாக காற்றடித்தால்
விழுந்து விடுமோ என்று

பச்சையுமாய் பழுப்புமாய்
நிறம் மாறும் வாழ்க்கை
--------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

ஞாயிறு, 19 ஜூலை, 2015

சத்திர சரித்திரம்

சத்திர சரித்திரம்
----------------------------
யாரோ ஒரு ராஜாவால்
கட்டப் பட்டதாம்

அடுத்து வந்த அரசர்கள்
ஆதரித்தார் களாம்

ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு
உத்தரவாதமாம்

வந்து போகின்ற
வழிப் போக்கர்களை விட

உள்ளூர் சோம்பேறிகள் தான்
உட்கார்ந்திருக் கிறார்களாம்
---------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

விதியும் வீதியும்

விதியும் வீதியும்
-------------------------
ஒவ்வொரு நிறத்துக்கும்
ஒவ்வொரு விதியிருந்தும்

ஒவ்வொரு கோட்டுக்கும்
ஒவ்வொரு விதியிருந்தும்

ஒவ்வொரு வாகனத்திற்கும்
ஒவ்வொரு விதியிருந்தும்

ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒவ்வொரு விதியிருப்பதால்

ஒவ்வொரு வீதியிலும்
ஒவ்வொரு விபத்து
---------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

வெள்ளி, 17 ஜூலை, 2015

கவிதைத் தோற்றம்

கவிதைத் தோற்றம்
------------------------------
பார்த்ததும் பார்ப்பதும்
கண்களில்  தோற்றம்

படித்ததும் படிப்பதும்
மூளையில் தோற்றம்

பழகியதும் பழகுவதும்
இதயத்தில் தோற்றம்

கண்களும் மூளையும்
இதயமும் சேர்ந்து

கற்பனை கலந்ததும்
கவிதையின் தோற்றம்
---------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's Poems

வியாழன், 16 ஜூலை, 2015

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்
--------------------------------------
உடலின் வியாதிக்கு
உணவே மருந்து

மனதின் வியாதிக்கு
உழைப்பே மருந்து

உழைத்துக் களைத்தால்
மறந்து போகும்

பயமும் கவலையும்
பறந்து போகும்

உணவும் உழைப்பும்
இயற்கை மருத்துவம்
------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

வரப்புச் சண்டை

வரப்புச் சண்டை
-------------------------
வரப்பு என்பது
பொது நடைப் பாதை

பரப்பு வயலைப்
பெரிது படுத்த

வரப்பைச் சுருக்கி
வளரும் சண்டை

வரப்பே இல்லாப்
பொது வயல் ஒன்று

பூக்கும் வரைக்கும்
தொடரும் போலும்
---------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

புதன், 15 ஜூலை, 2015

பெரியவர் இழப்பு

பெரியவர் இழப்பு
-----------------------------
பெயரைச் சொல்லி
அழைப்பது  ராகம்

தோளைத் தொட்டு
அணைப்பது  தாளம்

பேசிக் கொண்டு
இருப்பது பல்லவி

பழகும் தன்மை
பாசப் பாடல்

பெரியவர் இழப்பு
பெரும் இழப்பு
-----------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

செவ்வாய், 14 ஜூலை, 2015

நடையோசை

நடையோசை
------------------------
ஒவ்வொரு நடையிலும்
ஒவ்வொரு ஓசை

கோப ஓசை
கவலை ஓசை

அவசர ஓசை
அமைதி ஓசை

ஓசை உணர்ந்து
நெருங்கும் போது

நமது நடையில்
நாகரிக ஓசை
-----------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

ஞாயிறு, 12 ஜூலை, 2015

அலை பாயும் நினைவுகள்

அலை பாயும் நினைவுகள்
---------------------------------------
பொருட்களால் மட்டுமல்ல
நினைவு களாலும்
நிரம்பிக் கிடக்கிறது வீடு

வீட்டைக் காலி செய்யும் போது
விட்டுச் செல்லும் நினைவுகள்

மறுபடி பார்க்கும்போது
குதித்து எழுகின்றன

ஆழத்தில் அடங்கிய
அலைகளின் கூட்டம்

கரையைப்   பார்த்ததும்
குதித்து எழுவது போல
---------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

சனி, 11 ஜூலை, 2015

பூ உறங்குது பொழுதும் உறங்குது

பூ உறங்குது பொழுதும் உறங்குது
--------------------------------------------------------
இயற்கைப் பொருட்கள்  எல்லாம்
இன்ப உறக்கத்திலாம்

நிலவும் இவளும் மட்டும்
நீண்ட இரவினிலாம்

தோழியான நிலவுமே
தொந்தரவு செய்கிறதாம்

தென்றல் வேறு சுடுவதால்
தேய்ந்து போன மேனியாம்

காதலனை நினைத்துருகும்
காதலியின் கண்ணீர்ப்பா

'பூ உறங்குது பொழுதும் உறங்குது '
'தாய் சொல்லைத் தட்டாதே '
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

தண்ணீர்த் தோற்றம்

தண்ணீர்த் தோற்றம்
------------------------------
தேங்கிக் கிடக்கும்
குளத்தின் நீரும்

திரண்டு ஓடும்
ஆற்றின் நீரும்

விரிந்து பரந்த
கடலின் நீரும்

வானம் பார்த்துக்
கிடக்கும் தோற்றம்

தாயைப் பார்க்கும்
சிசுவின் தோற்றம்
------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

வெள்ளி, 10 ஜூலை, 2015

உயிர் மேகங்கள்

உயிர் மேகங்கள்
-------------------------------
ஓடித் திரியும்
உயிர் மேகங்கள்

உற்றுப் பார்க்கும்
நிலத்தின் நிலையை

உற்ற சமயம்
நிறத்தை மாற்றும்

மழையாய்ப் பொழிந்து
மண்ணில் இறங்கும்

விண்ணும் மண்ணும்
இயற்கைப் பெற்றோர்
----------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

வியாழன், 9 ஜூலை, 2015

நம்பினார் கெடுவதில்லை

நம்பினார் கெடுவதில்லை
------------------------------------------
சிதாரில் விரல் ஓட
சிந்தனையில் காதல் ஓட

கடவுளைப் புகழ்ந்து
காதலனை இகழ்ந்து

காதலில் வாடுகின்ற
கண்ணீரில் பாடுகின்ற

காதலியைப் பார்த்து
காதலனின் கலக்கம்

'நம்பினார் கெடுவதில்லை'
'பணக்காரக் குடும்பம் '
-----------------------------------நாகேந்திர பாரதி

செல்லக் கிளியே மெல்லப் பேசு

செல்லக் கிளியே மெல்லப் பேசு
--------------------------------------------------
நோய் வாய்ப் பட்டவனிடம்
காதல் வயப் பட்டவள்

உள்ளத்தில் இருப்பதெல்லாம்
உறக்கத்தில் ஓதிவிட்டு

நெற்றியிலே முத்தமிட்டு
நெஞ்சினிலே அணைத்தபடி

காதலனுக்குப் பாடுகின்ற
தாலாட்டுப் பாட்டு

'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
'பெற்றால்தான் பிள்ளையா'
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

வான வேடிக்கை

வான வேடிக்கை
-----------------------------
நீல வானத்தில்
நித்தமும் விளையாட்டு

பகலும் இரவும் என்று
பந்தை உருட்டி விடும்

சூரியக் கதிர் ஒன்று
சுற்றிச் சுற்றி வரும்

சந்திரப் பிறை ஒன்று
தேய்ந்து வளர்ந்து வரும்

கறுப்பும் வெள்ளையுமாய்
காட்சி நடந்து வரும்
---------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

ஞாயிறு, 5 ஜூலை, 2015

நாட்டுக்கு நாடு

நாட்டுக்கு நாடு
--------------------
விரிந்திருக்கும் வீதிகளும்
விண்முட்டும் வீடுகளும்

சுகாதாரக்   காற்றும்
சுற்றுப்புறச் சுத்தமும்

இருந்தும் இல்லாதது
எத்தனையோ இருக்கிறது

கோயில் தேர்கள் இல்லை
கோலத் தெருக்கள் இல்லை

வாய்க்கால் வரப்பு இல்லை
வழுக்கும் கண்மாய் இல்லை
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

வெள்ளி, 3 ஜூலை, 2015

இயற்கைக் கடவுள்

இயற்கைக் கடவுள்
--------------------------------
இயற்கைச் சாவி கொண்டு
இதயத்தைத் திறந்து வைப்போம்

இசையின் துணையைக் கொண்டு
இறைவனைப் புகழ்ந்து வைப்போம்

பூவினமும் புள்ளினமும்
தாளங்கள் தட்டட்டும்

ஆகாயம் வரை சென்று
மேகத்தில் வீற்றிருப்போம்

இயற்கையே கடவுள் என்போம்
இனிமையே வாழ்க்கை என்போம்
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

குறும்புக் குருவி

குறும்புக் குருவி
---------------------------
குருவிக் கென்று ஒரு
குறும்பு இருக்கிறது

நாம் கூப்பிடும்போது
அது வருவதில்லையாம்

அது வரும்போது
இரை  வைக்க வேண்டுமாம்

அதன் விளையாட்டைப்
பார்த்து ரசிக்க வேண்டுமாம்

காதலியுடன் பழகியது
இங்கேயும் கை கொடுக்கிறது
--------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

புதன், 1 ஜூலை, 2015

நெடுஞ்சாலைப் பார்வை

நெடுஞ்சாலைப் பார்வை
------------------------------------
அதோ அங்கே ஒரு
அமைதிப் பூங்கா

மதங்களைத் தாண்டி
சாதிகளைத் தாண்டி

கடவுளின் துணையோடு
இயற்கையின் இணையோடு

காதற் பறவைகளின்
கீதம் ஒலிக்கிறது

இதோ இங்கே
இரைச்சல் வாகனங்கள்
---------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

உயிர் மரங்கள்

உயிர் மரங்கள்
-----------------------
வெட்டாதீர் மரங்களை - அதன்
வேர்கள் நம் முன்னோர்கள்

விட்டிருக்கும்   கிளைகளில் - நம்
உலகம் ஒளிந்திருக்கும்

பழுப்பும் பச்சையுமாய்
இலைகளில் நிலையாமை

வண்ண வண்ண மலர்களில் - நம்
வாழ்க்கைச் சக்கரங்கள்

உயிர் கொடுக்கும் மரங்களின்
உயிர் எடுக்க வேண்டாமே
----------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com