செவ்வாய், 30 ஜூன், 2015

தலைவிதி வாழ்க்கை

தலைவிதி வாழ்க்கை  - நன்றி 'குங்குமம்' வார இதழ் 25/09/2015
----------------------------------
தலையாட்டி வாழ்க்கை
வெறும் வாழ்க்கை

தன்மான வாழ்க்கை
அரும் வாழ்க்கை

தலையாட்டி வாழ்க்கைக்கு
தலை மட்டும் போதும்

தன்மான வாழ்க்கைக்கு
தலைக்குள்ளும் வேண்டும்

வேண்டுதல் வேண்டாமை
அவரவர் தலைவிதி
--------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

ஞாயிறு, 28 ஜூன், 2015

குழந்தை உலகம்

குழந்தை உலகம்
----------------------------
எல்லாக் குழந்தைகளும்
ஒரே மாதிரி அழுகின்றன

எல்லாக் குழந்தைகளும்
ஒரே மாதிரி சிரிக்கின்றன

எல்லாக் குழந்தைகளும்
ஒரே மாதிரி அடம் பிடிக்கின்றன

எல்லாக் குழந்தைகளும்
எல்லா இடங்களிலும்

பெரியவர்கள் ஆனபின்தான்
வேற வேற மாதிரி
------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

புதன், 24 ஜூன், 2015

பொய் முகங்கள்

பொய் முகங்கள்
-------------------------
புதிய முகங்களில்
பழைய முகங்கள்

கடவுளின் குறும்பா
கண்களின் குழப்பமா

புதைந்து கிடக்கும்
பழைய நினைவுகள்

வெளியே வந்து
வேடிக்கை பார்த்து

பூசிக் கொண்ட
பொய் முகங்களா
------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

செவ்வாய், 23 ஜூன், 2015

கண் நிறை காதல்

கண் நிறை காதல்
----------------------------
ஓரத் தெருவிருந்து
உற்றுப் பார்த்ததுவும்

காலின் தடமறிந்து
கடந்து சென்றதுவும்

ஊறும்  கூட்டத்தில்
ஒளிந்து திரிந்ததுவும்

காதல் புரிந்தவரின்
கருத்தில் மறைந்திருக்கும்

காலம் கடந்த பின்னும்
கண்ணில் நிறைந்திருக்கும்
-----------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

திங்கள், 22 ஜூன், 2015

ரெயில் பயணங்கள்

ரெயில் பயணங்கள்
-------------------------------
பார்த்தும் பாராத
ரெயில் பயணங்கள்

பேசியும் பேசாத
ரெயில் பயணங்கள்

தொட்டும் தொடாத
ரெயில் பயணங்கள்

முடிந்தும் முடியாத
ரெயில் பயணங்கள்

காதலன் காதலி
ரெயில் பயணங்கள்
------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

ஞாயிறு, 21 ஜூன், 2015

யோக வாழ்க்கை


யோக வாழ்க்கை
--------------------------------
உழைப்பின்  வழியே
கர்ம யோகா

உணர்வின்  வழியே
பக்தி யோகா

உடலின் வழியே
ராஜ யோகா

உயிரின் வழியே
ஞான யோகா

அவரவர் வழியில்
யோக வாழ்க்கை
-----------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

சனி, 20 ஜூன், 2015

ஆலய தரிசனம்

ஆலய தரிசனம்
--------------------------
தீபத்தின் ஒளியில்
கண்ணிற்கு அமைதி

நாமத்தின் மொழியில்
காதிற்கு அமைதி

தீர்த்தத்தின் சுவையில்
நாவிற்கு அமைதி

நெய்மணப் புகையில்
நாசிக்கு அமைதி

நெடுஞ்சாண் கிடையில்
மேனிக்கு அமைதி

ஆலய தரிசனம்
ஐம்பொறி அமைதி
--------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

வீட்டுப் பாடம்

வீட்டுப் பாடம்
-----------------------
கழுத்தைத் தேய்க்கும்
முடியை ஒதுக்கும்

ஊக்கை ஒடிக்கும்
பென்சில் சீவும்

ரப்பர் தேய்க்கும்
முறைத்துப் பார்க்கும்

எழுதி முடிக்க
இருட்டிப் போகும்

என்னம்மா இப்பிடிப்
பண்றீங்   களேம்மா
--------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

வியாழன், 18 ஜூன், 2015

வாழ்க்கை வடிவங்கள்

வாழ்க்கை வடிவங்கள்
------------------------------------
சுற்றி ஓடுகின்ற
வட்ட வாழ்க்கை

முட்டி மோதுகின்ற
முக்கோண வாழ்க்கை

சிறிதும் பெரிதுமாய்
செவ்வக வாழ்க்கை

சமமாய்ச் செல்லும்
சதுர வாழ்க்கை

வடிவங்கள் மாறும்
வாழ்க்கையும் மாறும்
-----------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

செவ்வாய், 16 ஜூன், 2015

பழைய வீடு

பழைய வீடு
------------------
அன்றைக்கும் இன்றைக்கும்
எத்தனை வித்தியாசம்

காரை பேர்ந்து
சுவர் இடிந்து

தாவரம் மண்டி
பாசி படர்ந்து

வயதும் வறுமையும்
கூடிய சோகத்தில்

பயந்து நிற்கும்
பழைய வீடு
---------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

திங்கள், 15 ஜூன், 2015

உயிர்க் காதல்

உயிர்க் காதல்
----------------------
எத்தனை காலம்
ஆனால் என்ன

எத்தனை தூரம்
போனால் என்ன

கண்களை மூடினால்
காதல் முகம்

கனவில் என்றுமே
காதல் பேச்சு

உயிர் உள்ளவரை
வாழும் காதல்
-----------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com  

ஞாயிறு, 14 ஜூன், 2015

பேய்ப் படங்கள்

பேய்ப் படங்கள்
--------------------------
அருவச் சேட்டைகளே
பேய்ப் படங்களா

அருவாள் வீசுவதும்
பேய்ப் படங்கள்தான்

ஆபாச வசனங்களும்
பேய்ப் படங்கள்தான்

அரைகுறை ஆடைகளும்
பேய்ப் படங்கள்தான்

அமைதியைக் குலைப்பதெல்லாம்
பேய்ப் படங்கள்தான்
----------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

ஓய்வு நாட்கள்

ஓய்வு நாட்கள்
-------------------------
ஓய்வு என்பது
உடலுக்கா மனத்திற்கா

உடலுக்கு என்றால்
படுத்தா கிடப்பீர்

மனத்திற்கு என்றால்
யோசிக்க   மாட்டீரா

அவசரம் தவிர்த்து
அமைதியில் இயங்கும்

ஒவ்வொரு நாளும்
ஓய்வு நாளே
---------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com

சனி, 13 ஜூன், 2015

இயற்கை வைத்தியம்

இயற்கை வைத்தியம்
---------------------------------
வரப்புத் தகராறில்
வளர்ந்த சண்டையால்

வடக்குத் தெருவுக்கும்
தெக்குத் தெருவுக்கும்

வரத்தும் இல்லை
பேச்சும் இல்லை

மூணு நாட்களாய்
பெய்த மழையில்

கண்மாய் உடைந்தது
கைகள் சேர்ந்தன
-----------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

வெள்ளி, 12 ஜூன், 2015

பார்புகழ் வெற்றி

பார்புகழ் வெற்றி
-------------------------------
கையும் காலும்
இறுக வேண்டும்

மூளையும் இதயமும்
உருக வேண்டும்

முனைப்பும் முயற்சியும்
பெருக வேண்டும்

கவலையும் பயமும்
கருக வேண்டும்

பார்புகழ் வெற்றியைப்
பருக வேண்டும்
-------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

புதன், 10 ஜூன், 2015

ஓடும் வாழ்க்கை

ஓடும் வாழ்க்கை
-----------------------------
ஓடும் வெளியில்
ஓடும் காலம்

ஓடும் காலத்தில்
ஓடும் உணர்ச்சி

ஓடும் உணர்ச்சியில்
ஓடும் உயிர்கள்

ஓடும் உயிர்களில்
ஓடும் வாழ்க்கை

ஓடும் வாழ்க்கை
மூடும், திறக்கும்
------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

திங்கள், 8 ஜூன், 2015

குடிசைக் குரல்கள்

குடிசைக் குரல்கள்
--------------------------------
பட்டிணத்து அய்யா
எப்ப வந்தீக

பாட்டியைப் பாக்க
புறப்பட்டு வந்தீகளா

கிழவி முகத்திலே
பூரிப்பை பாருங்கோ

இன்னும் ரெண்டு நா
இருந்துட்டுப் போங்க

பிரியம் பொங்கும்
குடிசைக் குரல்கள்
---------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

சனி, 6 ஜூன், 2015

நூற்றுக்கு நூறு

நூற்றுக்கு நூறு
-------------------------
குப்தர்களின்  பொற்காலம்
கேள்விக்கு பதில்

சாலையின் இருபுறமும்
மரங்கள் நட்டார்

ஆலமரம் நட்டார்
அரசமரம் நட்டார்

வேப்ப மரம் நட்டார்
புளிய மரம் நட்டார்

நட்ட மரங்களுக்கு
நூற்றுக்கு நூறு மார்க்
-------------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

தகுதி மாற்றம்

தகுதி மாற்றம்
-----------------------
அவர் என்று புலவரையும்
அவன் என்று அரசனையும்

அழைத்த  காலம்
அது சங்க காலம்

அவர் என்று ஆள்பவரையும்
அவன் என்று கவிஞனையும்

அழைக்கும் காலம்
இது   எங்க காலம்

விகுதியை மாற்றிய
தகுதி மாற்றம்
--------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

வியாழன், 4 ஜூன், 2015

ஆபீஸ் பொறுப்பு

ஆபீஸ் பொறுப்பு
--------------------------
எம்.டி வரலேன்னா
மேனேஜர் லீவு

மேனேஜர் வரலேன்னா
ஆபீசர்  லீவு

ஆபீசர்  வரலேன்னா
கிளார்க் லீவு

கிளார்க் வரலேன்னா
டைபிஸ்ட் லீவு

பியூன் வரலேன்னா
ஆபீசே லீவு
-------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

பேய்களின் உலகம்

பேய்களின் உலகம்
--------------------------------
உடம்பு இருக்கும்போது
மனம் பேய்

ஆட்டம் ஆடி
அவஸ்தைப் படும்

உடம்பு இல்லாதபோது
உயிர் பேய்

ஓட்டம் ஓடி
அவஸ்தைப் படும்

பேய்களின் உலகம்
அவஸ்தை உலகம்
---------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

செவ்வாய், 2 ஜூன், 2015

காடும் கழனியும்

காடும் கழனியும்
-------------------------
கண்மாய்க் கரை தாண்டி
கருவக் காடு

வெட்டவும் முடியாம
விளைச்சலும்   இல்லாம

வித்துப் போட்டவருக்கு
அலைச்சல் மிச்சம்

வாங்கிப் போட்டவருக்கு
விறகு மிச்சம்

புஞ்சை நஞ்சை ஆச்சு  
காடு கழனியாச்சு
--------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

அவளும் அவனும்

அவளும் அவனும்
-------------------------------
'வர வேண்டாம் என்றேனே '
வாய் பேசியது

'வந்ததற்கு நன்றி '
கண்ணீர் பேசியது

மொட்டைத் தலையோடு
வற்றிய உடம்போடு

திரும்பிப் போனால்
திரும்பப் பார்க்க முடியாது

அமர்ந்திருந்தான் அவன்
அது போதும் அவளுக்கு
--------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com