ஞாயிறு, 31 மே, 2015

சனிக்கிழமைச் சடங்குகள்

சனிக்கிழமைச்   சடங்குகள்
---------------------------------------------
நல்லெண்ணெய் சீயக்காய்
வெந்நீர்க் குளியல்

வெந்தயக் களி நடுவே
வெல்லமும் எண்ணையும்

சாயந்திரம் வந்தா
சனீஸ்வரன் கோயில்

எள்ளு விளக்கோடு
ஒன்பது சுற்று

சனிக் கிழமைச்
சடங்குகள் முடியும்
---------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

வெள்ளி, 29 மே, 2015

உற்சாக ஊற்று

உற்சாக ஊற்று
-------------------------
பொங்கி வரும் அலைகளின்
பூரிப்பைப் பார்

காற்றசைக்கும் கிளைகளின்
களியாட்டம் பார்

பறந்து செல்லும் பறவைகளின்
வேகத்தைப் பார்

மிதந்து செல்லும் மேகங்களின்
நிதானத்தைப் பார்

உள்ளத்தில் உற்சாகம்
ஊறுவதைப் பார்
----------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

வியாழன், 28 மே, 2015

காட்டு வழி

காட்டு வழி
--------------------
மரத்தின் வேர்கள்
புடைத்துக் கிடக்கும்

வெளிச்சப் பூக்கள்
சிதறிக் கிடக்கும்

புதரின் மறைவில்
உறுமல் அசையும்

அருவிச் சப்தம்
இசையைப் பொழியும்

காட்டு வழியில்
கடந்த காலம்
-----------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

ஆர்வம் தரும் அமைதி

ஆர்வம் தரும் அமைதி
-----------------------------------
கடவுள் மேல் ஆர்வம்
கலைகள் மேல் ஆர்வம்

பேச்சின் மேல் ஆர்வம்
எழுத்தின் மேல் ஆர்வம்

உறவின்  மேல் ஆர்வம்
நட்பின்  மேல் ஆர்வம்

வழங்கும் ஆர்வம்
வளமும் நலமும்

கடைசிக் காலத்திலும்
கவலைகள் இல்லை
----------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

புதன், 27 மே, 2015

காட்சியும் சாட்சியும்

காட்சியும் சாட்சியும்
--------------------------------------
ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு நினைவு

கோயில், குளக்கரை
மண்டபம், சத்திரம்

பள்ளிக்கூடம், மைதானம்
தேநீர்க்கடை, திண்ணைவீடு

இடத்தைச் சார்ந்த
நினைவு காட்சி

நினைவைச் சார்ந்த
இடம் சாட்சி
------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

அறுசுவை உணவு

அறுசுவை உணவு
----------------------------
இட்லி இப்போ
பர்கர் ஆச்சு

தோசை மாறி
பிஸ்ஸா ஆச்சு

சட்டினி இப்போ
சாஸாய் ஆச்சு

துவையல் மாறி
மஸ்டர்ட் ஆச்சு

அறுசுவை உணவிலும்
அயல்நாட்டு முதலீடு
------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

சனி, 23 மே, 2015

வங்கி வரிசை

வங்கி வரிசை
------------------------
தனியார் வங்கியில்
காத்துக் கிடப்பார்

அரசாங்க வங்கியில்
அவசரப் படுத்துவார்

தனியார் வங்கியில்
அமைதி காப்பார்

அரசாங்க வங்கியில்
அலம்பல் செய்வார்

வங்கியில் கூட
வலியோர் எளியோர்
---------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

வெள்ளி, 22 மே, 2015

அவசர வாழ்க்கை

அவசர வாழ்க்கை
-----------------------------
அவசரமாய் எழுந்திருந்து
அவசரமாய்க் குளித்து

அவசரமாய்ச் சாப்பிட்டு
அவசரமாய் உடை மாற்றி

அவசரமாய் ஆபீஸ் போய்
அவசரமாய் திரும்பி வந்து

அவசரமாய்ச் சாப்பிட்டு
அவசரமாய்ப் படுத்தாலும்

நிதான மாகத்தான்
நித்திரை வருகிறது
------------------------- நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com

வாயும் வயிறும்

வாயும் வயிறும்
---------------------------
நாவின் சுவை மொட்டு
நன்றாக இருந்த போது

மூக்கின் முகர் நரம்பு
மூச்சோடு இருந்த போது

கண்ணின் கரு விழிகள்
கருத்தோடு இருந்த போது

சாப்பிட்ட உணவெல்லாம்
வாய்க்கு உணவு

வயதான   காலத்தில்
வயிற்றுக்கு உணவு
------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

வியாழன், 21 மே, 2015

குழந்தையின் அழுகை

குழந்தையின் அழுகை
--------------------------------------
ரெம்ப நேரம் வெள்ளாடினா
திட்டக் கூடாது

ரெம்ப நேரம் குளிச்சா
முறைக்கக் கூடாது

ரெம்ப நேரம் டிவி பாத்தா
அமத்தக்   கூடாது

ரெம்ப நேரம் படிக்கச் சொல்லி
படுத்தக் கூடாது

ரெம்ப நேரம் பெரியவங்க
பொறுமையா இருந்தா

ரெம்ப நேரம் அழாம
இருப்பேன் சமத்து
------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

புதன், 20 மே, 2015

ஆமாம் சாமிகள்

ஆமாம் சாமிகள்    
--------------------------
அதிகாரிக்கு ஆமாம் போட்டார்
பண உயர்வு பெற்றார் 

அரசியல்வாதிக்கு ஆமாம் போட்டார் 
பதவி உயர்வு பெற்றார் 

நண்பருக்கு ஆமாம் போட்டார் 
நல்ல பெயர் பெற்றார் 

மனைவிக்கு ஆமாம் போட்டார் 
மன அமைதி பெற்றார் 

இறைவனுக்கு ஆமாம் போட்டார் 
எல்லாமே பெற்றார் 
-----------------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com 

செவ்வாய், 19 மே, 2015

நடுத்தர வர்க்கம்

நடுத்தர வர்க்கம்
--------------------------
சம்பளப் பணத்தில்
சரிபாதி கடனுக்கு

வந்ததை எல்லாம்
வாங்கிப் போட்டதால்

வட்டி கட்டியே
வாழ்க்கை கழியும்

அப்படியே நிற்கும்
அசலைப் பார்த்து

நடுங்கிக் கிடக்கும்
நடுத்தர வர்க்கம்
--------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 

ஞாயிறு, 17 மே, 2015

முகநூல் முகங்கள்

முகநூல் முகங்கள்
-------------------------------
படிப்பில் வென்ற
பரிசு முகங்கள்

விளையாட்டில் வென்ற
விருது முகங்கள்

வேலையில் வென்ற
விருந்து முகங்கள்

வெளியே விழிக்கும்
முகநூல் முகங்கள்

உள்ளே ஒளிக்கும்
அகநூல் முகங்கள்
-----------------------------நாகேந்திர பாரதி
 http://www.businesspoemsbynagendra.com

இலக்கியப் பிழை

இலக்கியப் பிழை
----------------------------
அவ்வை சொன்னது
அய்யன் சொன்னது

கம்பன் சொன்னது
இளங்கோ சொன்னது

கருத்தைப் பிடித்து
சொல்லை மாற்றிய

கவிதைப் புத்தகம்
ஆயிரம் விக்குது

சங்க இலக்கியம்
காத்து வாங்குது
--------------------------நாகேந்திர பாரதி
 http://www.businesspoemsbynagendra.com

அன்பு வித்தியாசம்

அன்பு வித்தியாசம்
-----------------------------
தண்ணியைக் கொட்டி
தரையே வழுக்குது

சுவத்தைச் சுரண்டி
சுண்ணாம்பு உதிருது

பொம்மையை உடைச்சு
பொடிப்பொடி ஆக்குது

மண்ணுலே புரண்டு
அழுக்கா வர்றது

அடுத்த பிள்ளைன்னா
அடங்காப் பிடாரி

நம்ம பிள்ளைன்னா
நாலும் தெரிஞ்சது
-------------------------------நாகேந்திர பாரதி
 http://www.businesspoemsbynagendra.com

சனி, 16 மே, 2015

செல்பிச் சுற்றுலா

செல்பிச் சுற்றுலா
-----------------------------
அருவியின் அருகே
எடுத்தாச்சு செல்பி

பூங்காவின் உள்ளே
எடுத்தாச்சு  செல்பி

படகுத் துறையில்
எடுத்தாச்சு செல்பி

செல்பிச்  சுற்றுலா
முடிந்து போச்சு

சென்ற இடம்தான்
மறந்து போச்சு
------------------------நாகேந்திர பாரதி
 http://www.businesspoemsbynagendra.com

வியாழன், 14 மே, 2015

நிமிடத்தில் வாழ்க்கை

நிமிடத்தில் வாழ்க்கை
----------------------------------
முதல் நிமிடத்தில்
காலை வணக்கம்

அடுத்த நிமிடமே
மாலை வணக்கம்

இமைக்கும் பொழுதில்
இரவாகும் பகல்

வருடம் என்பது
வருவது போவது

நிமிடத்தில் இருக்கிறது
நிம்மதி வாழ்க்கை
-------------------------நாகேந்திர பாரதி
 http://www.businesspoemsbynagendra.com

புதன், 13 மே, 2015

நீல வானம்

நீல வானம்
--------------------
ஆகாயக் கடலில்
அலை பாயும் மேகங்கள்

வட்டப் பாறை நிலா
வளரும் தேயும்

மின்னித் தாவும்
மீன்கள் நட்சத்திரங்கள்

கடற் பறவைகள்
கத்தித் திரியும்

நீலக் கடலின்
நிழலாக வானம்
----------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com

செவ்வாய், 12 மே, 2015

செவிலியர் தினம்

செவிலியர் தினம்
------------------------------
புண்ணை ஆற்றும்
புன்னகை முகங்கள்

காய்ச்சல் போக்கும்
கருணை மனங்கள்

வெள்ளை உடையில்
வெளிச்சப் பூக்கள்

துன்பம் தீர்க்கும்
தூய்மைத் தாய்மை

செவிலியர் தினம்
சேவையர் தினம்
------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com

சனி, 9 மே, 2015

ஆகாயக் கழுகு

ஆகாயக் கழுகு
----------------------------
அசைந்தபடி நிற்கிறது
ஆகாயக் கழுகு

உயரத்தில் இருந்தபடி
உற்றுப் பார்க்கிறது

அடியில் பறக்கின்ற
பறவைக் கூட்டத்தை

கீழே கிடக்கின்ற
இயற்கைக் கூட்டத்தை

இரையைத் தேடுதற்கு
இறங்கத்தான் வேண்டும்
---------------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com

இலவச ஈரம்

இலவச ஈரம்
-------------------------
தலையில் சூட்டைத்
தாங்கிக் கொண்டு

நிழலில் குளுமை
தருகின்ற மரங்கள்

வயிற்றில் சமாதி
ஆகிக் கொண்டு

உடலின் கொதிப்பைத்
தணிக்கின்ற தண்ணீர்

இயற்கைத் தாயின்
இலவச ஈரம்
---------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com

சினிமா வெற்றி

சினிமா வெற்றி
------------------------
கோடிகளில் செலவு செய்து
நாடுகளில் பயணம் செய்து

எடுத்த படங்கள் எல்லாம்
ஏழெட்டு நாள் ஓட்டம்

சிக்கனமாய் செலவு செய்து
சிறப்பான கதையை வைத்து

உழைத்த படங்கள் எல்லாம்
நூறு நாள் ஆட்டம்

கண்ணாம்பாள் காலம் முதல்
கார்த்திகேயன் காலம் வரை

மாறுகின்ற ரசனைக்கு
மாறினால்தான் வெற்றி
-----------------------------------நாகேந்திர பாரதி
 My Book: http://www.businesspoemsbynagendra.com 

வெள்ளி, 8 மே, 2015

காதல் கண்மணி

காதல் கண்மணி
---------------------------
கண்கள் பேசி
காதல் பேசி

விரல்கள் பேசி
விருப்பம் பேசி

கடமை பேசி
கல்யாணம் பேசி

உடலும் பேசி
உள்ளம் பேசி

காதல் கண்மணி
குடும்பப் பெண்மணி
---------------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com

வியாழன், 7 மே, 2015

அடிதடி வாழ்க்கை

அடிதடி வாழ்க்கை
-----------------------------
தாத்தாவை பேத்தி அடிக்க
பேத்தி தாத்தாவை அடிக்க

பாட்டியை பேரன் அடிக்க
பேரன் பாட்டியை அடிக்க

ஓடிப் பிடிக்க
ஒளிந்து பிடிக்க

அதட்டிப் பிடிக்க
அடித்துப் பிடிக்க

அடிதடி வாழ்க்கை
அது ஒரு இனிமை
-----------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com 

தேர்வுத் தோல்வி

தேர்வுத் தோல்வி
----------------------------
தேர்வுத் தோல்வி
திறமைத் தோல்வி அல்ல

மதிப்பெண் குறைவு
மரியாதைக் குறைவு அல்ல

இடறி விழுவது
எழுந்து நடப்பதற்கு

கல்லை முள்ளைக்
கவனித்து நடப்பதற்கு

விருப்பப் பாதையில்
வேகம் பிடிப்பதற்கு
----------------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com

திரைப்படத் தொண்டு

திரைப்படத் தொண்டு
-----------------------------------
கொடுக்கிற உணவைச்
சாப்பிட்டுக் கொண்டு

கொடுக்கிற பணத்தை
வாங்கிக் கொண்டு

கொடுக்கிற வேலையைப்
பார்த்துக் கொண்டு

புகழையும் பணத்தையும்
நினைத்துக் கொண்டு

பொழுதைக் கழிக்கும்
திரைப்படத் தொண்டு
---------------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com

செவ்வாய், 5 மே, 2015

பருவ மாற்றம்

பருவ மாற்றம்
------------------------
அப்பா அம்மா
வருகை பார்த்து

ஏங்கும் பருவம்
குழந்தை உருவம்

மகன் மகள்
வருகை பார்த்து

ஏங்கும் பருவம்
முதுமை உருவம்

பருவ மாற்றம்
பாதுகாப்பும் மாற்றம்
-------------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com

திங்கள், 4 மே, 2015

உணர்ச்சியின் மலர்ச்சி

உணர்ச்சியின் மலர்ச்சி
-------------------------------------
பிம்பங்கள் காட்டும்
உணர்ச்சிகள் ஒருவகை

பேச்சுகள் மீட்டும்
உணர்ச்சிகள் ஒருவகை

எழுத்துகள் தீட்டும்
உணர்ச்சிகள் ஒருவகை

எண்ணங்கள் கூட்டும்
உணர்ச்சிகள் ஒருவகை

உணர்ச்சியின் மலர்ச்சியில்
உருவாகும் வளர்ச்சி
------------------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com

ஞாயிறு, 3 மே, 2015

ஏக்கக் குரல்கள்

ஏக்கக் குரல்கள்
------------------------
குக்கூ என்று குரல் கொடுத்தால்
திரும்பக் கூவும் குயில்

கா .. கா  என்று குரல் கொடுத்தால்
திரும்பக் கரையும் காகம்

மா .. மா என்று குரல் கொடுத்தால்
திரும்ப  முக்கும்  மாடு

மே .. மே என்று குரல் கொடுத்தால்
திரும்பக் கத்தும் ஆடு

கொடுத்து வாங்கும் குரலில்
கூட்டம் தேடும் ஏக்கம்
----------------------------------------நாகேந்திர பாரதி
My Book:  http://www.businesspoemsbynagendra.com 

சனி, 2 மே, 2015

நண்பர்கள் தேவை

நண்பர்கள் தேவை
-------------------------------
பெருமை பேச
பேஸ்புக் நண்பர்கள்

புரணி பேச
அலுவலக நண்பர்கள்

காதல் பேச
கல்லூரி நண்பர்கள்

பழைமை பேச
பள்ளி நண்பர்கள்

ஒவ்வொரு பேச்சுக்கும்
ஒவ்வொரு நண்பர்
--------------------------நாகேந்திர பாரதி
My book: http://www.businesspoemsbynagendra.com

வெள்ளி, 1 மே, 2015

உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினம்
--------------------------------
முக்குக் கடையில்
வடையும் டீயும்

மூணு மணிவரை
தாங்கும் பசி

குளத்து வேலையில்
குளிச்ச வேர்வையோடு

சாயந்திரம் வரை
சாயா போதும்

குளிச்சு முடிச்சு
கும்பிட்டு வந்தா

கூட்டும் குழம்புமாய்
குமிச்ச சோறு

சாப்பிட்டுப் படுத்தா
சவமாய்த் தூக்கம்
---------------------------நாகேந்திர பாரதி
My book: http://www.businesspoemsbynagendra.com