வியாழன், 30 ஏப்ரல், 2015

காலக் கோலம்

காலக் கோலம்
-------------------------
இரும்புத் தண்டாய்
நிமிர்ந்த ஆண்களும்

வாழைத் தண்டாய்
வளர்ந்த பெண்களும்

கிழங்குத் தண்டாய்
கீரைத் தண்டாய்

உண்ணும் உணவு
மாறிய காலம்

உடலின் உழைப்பும்
மாறிய கோலம்
-------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com

புதன், 29 ஏப்ரல், 2015

வாழ்க்கைச் சக்கரம்

வாழ்க்கைச் சக்கரம்
--------------------------------
எத்தனை சூரியன்
எத்தனை சந்திரன்

எத்தனை பார்த்தனர்
எந்தன் முன்னோர்

வாழ்க்கைச் சக்கர
வட்டத்தில் சிக்கி

வந்தனர் போயினர்
வாழ்வாய் சாவாய்  

ஓடும் வாழ்க்கை
ஒளியும் இருளுமாய்
--------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com 

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

ஆறாம் அறிவு

ஆறாம் அறிவு
-----------------------
பார்த்தும் கேட்டும்
பழகியும் வளர்ந்த

பாதிப்பின் விளைவில்
சரியென்ன தவறென்ன

அடுத்தவர் பார்வையில்
தவறெனத் தெரிவது

அவரவர் பார்வையில்
சரியெனத் தோன்றலாம்

ஆறாம் அறிவும்
அவரவர் பதிவு
------------------------------நாகேந்திர பாரதி
My Book : http://www.businesspoemsbynagendra.com

வியாழன், 23 ஏப்ரல், 2015

கண்மாய் மீன்கள்

கண்மாய் மீன்கள்
-------------------------------
கண்மாய் அழியுதுன்னு
தண்டோரா போட்டாச்சு

கூடையும் வலையுமா
கூட்டம் குவிஞ்சாச்சு

கொடியைக் காட்டினதும்
குளத்திலே குதிச்சாச்சு

கெண்டையும் கெளுத்தியும்
அயிரையும் அள்ளியாச்சு

கிராமத்து வீடெல்லாம்
மீன்குழம்பு மணமாச்சு
-----------------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com 

புதன், 22 ஏப்ரல், 2015

பொருளாதார முன்னேற்றம்

பொருளாதார முன்னேற்றம்
--------------------------------------------
இட்லிக்கு சட்னிக்கு
கடலை தேங்காய்ச் சில்லு

காப்பிக்குத் தேவையான
கருப்பட்டி காப்பித் தூளு

ஒத்தை ரூபாயிலே
ஓரணா மிச்சம்

அம்பது வருஷத்துக்கு
அப்புறம் வாங்கிறப்போ

அம்பது ரூபாய்க்கு
அஞ்சு  ரூபா அதிகமாச்சு
-------------------------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

தலைமுறைக் கடமை

தலைமுறைக் கடமை
----------------------------------
பேத்தியை அம்மாச்சி
கூட்டிப் போவது பேரங்காடி

அம்மாச்சியை அம்மாச்சி
கூட்டிப் போனது பெரிய கோயில்

பேரனுக்கு  தாத்தா
வாங்கிக் கொடுப்பது பிஸ்ஸா

தாத்தாவுக்கு தாத்தா
வாங்கிக் கொடுத்தது பிஸ்கட்

தலைமுறைக் கடமையிலும்
தலையிடும் உலகமயம்
---------------------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com

திங்கள், 20 ஏப்ரல், 2015

சன்னல் வெளி

சன்னல் வெளி
------------------------
சன்னல் வெளிக் காட்சியில்
எத்தனை மாற்றம்

மரங்களுக்கு நடுவே
கட்டிடங்கள் அன்று

கட்டிடங்களுக்கு நடுவே
மரங்கள் இன்று

பறவைகளின் கூடுகள்
மனிதர்களின் வீடுகளாய்

பறவைகள் விண்ணில்
பறந்தபடி திரிகின்றன
----------------------------------நாகேந்திர பாரதி
My book: http://www.businesspoemsbynagendra.com

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

புறாக் காலம்

புறாக் காலம்
--------------------------
எல்லாப் புறாக்களுமே
ஒரே மாதிரி இருக்கின்றன

பள்ளிப் பருவத்தில்
பார்த்த புறாவும்

இந்தப் புறாவும்
ஒன்று தானோ

அடையாளம் தெரியாததில்
ஒரு வசதி இருக்கிறது

அந்தக் காலத்துக்கே
அழைத்துப் போகிறது
---------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com

சனி, 18 ஏப்ரல், 2015

காபி நேரம்

காபி   நேரம்
------------------
காதல் வரும்
நேரத்தை விட

கல்யாணம் வரும்
நேரத்தை விட

கடமை வரும்
நேரத்தை விட

காசு வரும்
நேரத்தை விட

காபி  வரும்
நேரம் சுகம்
---------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com 

மெய்யும் பொய்யே

மெய்யும் பொய்யே
------------------------------
சேர்ந்து திரிந்தும்
சேர்ந்து சிரித்தும்

சேகரித்த நினைவுகள்
சிதறி விழுகின்றன

இருந்தவரின் சிறப்பு
இறந்தபின் எழுகிறது

மெய்யும் பொய்யென்று
மறுபடியும் புரிகிறது

திருக்குறளைப் படித்து
தேற்றிக் கொள்ள வேண்டியது தான்
-------------------------------நாகேந்திர பாரதி
My Book: http://www.businesspoemsbynagendra.com

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

ஐம்பொறிக் கோலம்

ஐம்பொறிக்  கோலம் 
----------------------------------
ஐம்பொறிகள் அறிவது 
குழந்தைக் காலம் 

ஐம்பொறிகள்  உணர்வது 
சீரிளமைக் காலம் 

ஐம்பொறிகள்  வலிப்பது 
பேரிளமைக் காலம் 

ஐம்பொறிகள்  தளர்வது 
முதுமைக் காலம் 

ஐம்பொறிக்  கோலம் 
வாழ்க்கைக் காலம் 
-----------------------------நாகேந்திர பாரதி 

திங்கள், 13 ஏப்ரல், 2015

ஆசை மேகங்கள்

ஆசை மேகங்கள் 
--------------------------------
அலையின் நுரைக்கு 
ஆகாய ஆசை 

முத்துப் பாறைக்கு 
முக்காட்டு ஆசை 

பாலாடைக் கட்டிக்கு
பந்தலாக ஆசை 

பனியின் பொழிவுக்கு
பறப்பதற்கு ஆசை 

ஆகாய வீதியில் 
ஆசை மேகங்கள் 
-----------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

ஏமாற்று மழை

ஏமாற்று மழை
--------------------------
வருகிற காலத்தில் 
வராமல் இருந்துவிட்டு 

வராத காலத்தில் 
வருவது போல்  காட்டி 

ஊதல் காற்றைக் 
கொஞ்சம் விசிறி விட்டு

தூறல் துளிகளைக் 
கொஞ்சம் தெளித்து விட்டு 

எங்கேயோ போகும் 
ஏமாற்று மழை 
--------------------------நாகேந்திர பாரதி 

சோம்பேறிக் காதல்

சோம்பேறிக் காதல் 
--------------------------------
படுக்கையை விட்டு 
எந்திரிக்கப் பிடிக்காது 

எந்த வேலையும் 
செய்யப் பிடிக்காது 

யார் கூடவும் 
பேசப் பிடிக்காது 

வெளியே தெருவில் 
போகப் பிடிக்காது 

சோம்பேறித் தனமும் 
காதலும் ஒன்றே 
------------------------------------நாகேந்திர பாரதி 

காலத்தின் வேகம்

காலத்தின் வேகம்
--------------------------------------
சில விஷயங்களை 
நம்பவே முடிவதேயில்லை 

இப்போதுதான் 
பிறந்தது போல் இருக்கிறது 

அதற்குள் 
அம்பதைத் தாண்டியாச்சா 

காலத்தின் வேகத்தில் 
ஓடிப் போனது 

வயது மட்டுமா 
வாழ்க்கைக் கனவுகளும்தான் 
-----------------------------------நாகேந்திர பாரதி 

சனி, 11 ஏப்ரல், 2015

காற்று வரும் நேரம்

காற்று வரும் நேரம் 
-------------------------------
எங்கிருந்து வருகிறது 
இந்தக் காற்று 

இசையாய் இதமாய் 
இன்பம் தருகிறது 

மெல்லிய இறகாய் 
மெதுவாய்த் தடவுகிறது 

உடலில் நுழைந்து 
உயிரைத் தொடுகிறது 

உணர்வை இளக்கி 
உறக்கம் தருகிறது 
-----------------------------------நாகேந்திர பாரதி 

திங்கள், 6 ஏப்ரல், 2015

அடுப்படி வைத்தியம்அடுப்படி வைத்தியம்

----------------------------------

அடுப்படியில் இருக்குது
ஆயிரம் மருந்து

இஞ்சியும் சுக்கும்
எள்ளும் மிளகும்

தயிரும் மோரும்
தண்ணீரும் தேனும்

கடுக்காயும் தேங்காயும்
காய்கறியும் பழமும்

பக்குவம் தெரிஞ்ச
பாட்டிகள் போயாச்சு
---------------------------------நாகேந்திர பாரதி

My Book: http://www.businesspoemsbynagendra.com

வியாழன், 2 ஏப்ரல், 2015

இயற்கைக் கோடுகள்

இயற்கைக் கோடுகள் 
------------------------------------
படுத்த கோடு 
கடலாம்  

நிமிர்ந்த கோடு 
மரமாம் 

வட்டக் கோடு 
நிலவாம்

புள்ளிகள் எல்லாம் 
நட்சத்திரங்களாம்

குழந்தையின் கையில் 
இயற்கை 
----------------------------நாகேந்திர பாரதி 

புதன், 1 ஏப்ரல், 2015

மழைக் காலம்

மழைக் காலம் 
-------------------------
மழைக் காலம் என்றொரு 
காலம் இருந்தது 

ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டும் 
ஓட்டமாய் ஓடிக் கொண்டும் 

சகதி அடித்துக் கொண்டும் 
குடையை விரித்துக் கொண்டும் 

தலையைத் துவட்டிக் கொண்டும் 
தடுமன் பிடித்துக் கொண்டும் 

மழைக் காலம் என்றொரு 
காலம் இருந்தது 
------------------------------------நாகேந்திர பாரதி