செவ்வாய், 31 மார்ச், 2015

நட்பின் இலக்கியம்

நட்பின் இலக்கியம்
---------------------------------
கோயில் மொட்டையென்று 
கோட்டி செய்தபோது 

உதிர்ந்த முடியென்று 
உண்மை சொல்லவில்லை 

நிறைமதி முகத்தை 
நினைவில் நிறுத்திவிட்டு 

முற்றிய புற்றுநோயின் 
முகத்தைக் காட்டவில்லை 

நட்பின் இலக்கிய 
நாட்கள் நினைவிருக்கும் 
--------------------------------நாகேந்திர பாரதி 

ஊறுகாய் உலகம்

ஊறுகாய் உலகம் 
------------------------------
ஒரு தட்டு  சோறுக்கு 
ஒரு துண்டு ஊறுகாய் 

இளவட்ட வயசிலே 
மாங்காய் ஊறுகாய் 

நடுத்தர வயசிலே 
எலுமிச்சை ஊறுகாய் 

வயசான பின்னாலே  
நார்த்தங்காய் ஊறுகாய் 

ஊறின வாயோடு 
ஊறுகாய் உலகம் 
-------------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 29 மார்ச், 2015

மாமன் மச்சான் உறவு

மாமன் மச்சான் உறவு 
------------------------------------
பட்டணம் வந்தால் மாமனுக்கு 
கறியும் சோறும் தான்

செகண்ட் ஷோ சினிமாதான் 
சர்க்கஸ், கோயில் தான் 

கிராமம் வந்தால் மச்சானுக்கு 
நுங்கும் பதினியும் தான் 

முளக்கொட்டு மரியாதை தான் 
கருவாடு, மீனு தான் 

மாமன் மச்சான் உறவு 
மறக்க முடியாது தான் 
----------------------------நாகேந்திர பாரதி 

சைக்கிள் ஓட்டி

சைக்கிள் ஓட்டி 
-----------------------------
ராத்திரியும் பகலும் 
ரெகார்ட் முழங்கும் 

ஒரு வாரமா 
சைக்கிள் ஓட்டம் 

இயற்கைத் தேவைக்கு 
இடைவேளை கொஞ்சம் 

இறுதி நாளில்  
தீப்பந்தச் சுற்று 

எங்கே போனார் 
சைக்கிள் ஓட்டி 
-------------------------நாகேந்திர பாரதி

ஒற்றைச் சொல் கவிதை

ஒற்றைச் சொல் கவிதை 
---------------------------------------
பத்து வரியெல்லாம் 
படிக்க மாட்டாங்கன்னு 

ரெண்டே வரியிலே 
சொன்னார் அய்யன் 

ரெண்டு வரி கூட 
படிக்க மாட்டாங்கன்னு 

ஒத்தை வரியிலே 
சொன்னார் அவ்வை 

ஒத்தை வரியும் 
படிக்க மாட்டாங்கன்னா 

ஒற்றைச் சொல்லிலே 
சொல்லணும் கவிதை 
---------------------------நாகேந்திர பாரதி 

பேச்சைத் தொலைத்தவர்கள்

பேச்சைத் தொலைத்தவர்கள் 
---------------------------------------------------
கோயில் மண்டபத்திலும் 
குளத்தங்  கரையிலும் 

பேசிப் பேசியே 
திரிந்த தோழிகள் 

குடும்பம்  ஆனபின் 
குழந்தைகள் பெற்றபின் 

இடுப்பிலும் கையிலும் 
இழுத்துக் கொண்டபடி 

பார்வையால் பேசிவிட்டு 
பயணம் போகிறார்கள் 
--------------------------------------நாகேந்திர பாரதி 

சனி, 28 மார்ச், 2015

காப்பி அடிப்பது

காப்பி அடிப்பது 
-------------------------
காப்பி அடிப்பது 
நல்ல பழக்கம் 

நல்ல எண்ணங்களைக் 
காப்பி அடிக்கலாம் 

நல்ல வார்த்தைகளைக் 
காப்பி அடிக்கலாம் 

நல்ல செயல்களைக் 
காப்பி அடிக்கலாம் 

எது நல்லது 
என்பதில்தான் குழப்பம் 
---------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 24 மார்ச், 2015

ஏட்டுச் சுரைக்காய்

ஏட்டுச் சுரைக்காய்
-----------------------------------------------
பிரிசத்தின் நிறப்பிரிகை உதவவில்லை 
பித்தகோரஸ் விதியும் உதவில்லை 

ஊசியிலைக் காடுகள் உதவவில்லை 
அசோகரின் பொற்காலம் உதவவில்லை 

தவளையின் உணவுப்பாதை உதவவில்லை 
செம்பருத்தி இதழ்களும் உதவவில்லை 

ஆங்கில இலக்கணம் உதவவில்லை 
தமிழின் இலக்கியம் உதவவில்லை 

ஓவியம் வரைந்தது 
உதவுது வாழ்க்கைக்கு 
-------------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 22 மார்ச், 2015

சிறு தானிய உணவு

சிறு தானிய உணவு 
---------------------------------
அந்தக் கால உணவு 
அருமையான உணவு 

நம்ம ஊரு உணவு 
நாட்டுப்புற உணவு 

சத்து உள்ள உணவு 
சமைக்க எளிய உணவு 

கடைக்குப் போயி வாங்க 
காசு கொஞ்சம் அதிகம் 

வீட்டுப் பண்ணை வச்சா 
விலையும் குறைஞ்சு போகும் 
------------------------------------நாகேந்திர பாரதி
 

கடற்கரைக் காட்சி

கடற்கரைக் காட்சி 
---------------------------------
உப்புக் காற்று 
உடலைத் தழுவ 

அலையும்  நுரையும் 
காலைக் கழுவ 

மணலின் தரையோ  
பாதம் நழுவ 

நீரின்  வெளியில் 
கண்கள் மகிழ 

வானும் கடலும் 
சேரும் காட்சி 
---------------------------நாகேந்திர பாரதி 

சனி, 21 மார்ச், 2015

கவிதைத் தினம்

கவிதைத் தினம் 
----------------------------
வாழ்க்கைத் தினமெல்லாம் 
கவிதைத் தினம்தான் 

இயற்கைத் தினமெல்லாம் 
கவிதைத் தினம்தான் 

கற்பனைத் தினமெல்லாம் 
கவிதைத் தினம்தான் 

காதல் தினமெல்லாம் 
கவிதைத் தினம்தான் 

காலம் தினம் தினம் 
கவிதைத் தினம்தான் 
---------------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 20 மார்ச், 2015

வாரக் கடைசி

வாரக் கடைசி 
-----------------------
வாரக் கடைசிக் கென்று 
வழக்கம் ஒன்று உண்டு 

சீக்கிரம் கிளம்பி 
வீட்டுக்குப் போகணும் 

சேர்ந்து வெளியே 
சுற்றித் திரியணும் 

அதிகாலை தூங்கி 
மதியம் எழணும் 

திங்கட் கிழமையைத் 
தள்ளிப் போடணும் 
-------------------------------நாகேந்திர பாரதி
 

சும்மா இருப்பது

சும்மா இருப்பது 
---------------------------------
சும்மா இருப்பது 
சுகமென்று சொன்னார்கள் 

சும்மா இருந்து 
பார்த்தால் தெரியும் 

சும்மா இருப்பதின் 
கஷ்டம் புரியும் 

சும்மா சும்மா 
எண்ணங்கள் வந்து 

சும்மா இருக்க 
விடவே விடாது 
-------------------------------நாகேந்திர பாரதி

கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து 
--------------------------------
உண்ண உணவளித்த 
கடவுளுக்கு நன்றி 

உடுக்க உடையளித்த 
கடவுளுக்கு நன்றி 

இருக்க இடமளித்த 
கடவுளுக்கு நன்றி 

வாழ வழியளித்த  
கடவுளுக்கு நன்றி 

போக புகலளித்த   
கடவுளுக்கு நன்றி 
------------------------நாகேந்திர பாரதி 
 

காக்க வைக்கும் கடவுள்

காக்க வைக்கும் கடவுள் 
---------------------------------------
பசியின் அழுகையா 
தூக்க அழுகையா 

தாய்க்குத் தெரியும் 
குழந்தையின் அசைவு 

வறுமை அழுகையா 
நோயின் அழுகையா 

தெய்வம் அறியும் 
பக்தனின் அசைவு 

வலியைப் போக்கும் 
வழிமுறை செய்வதில் 

தாயோ உடனடி 
தெய்வம் படிப்படி 
----------------------------நாகேந்திர பாரதி 

வியாழன், 19 மார்ச், 2015

ஓடிப் போன சிட்டுக் குருவி

ஓடிப் போன சிட்டுக் குருவி 
-----------------------------------------------
கோரைப் பாயில் 
காயும்  நெல்லை 

கொத்தித் தின்னும் 
உரிமை உண்டு 

ஈர முற்றத்தில் 
இறையும் நீரை 

எத்திக் குடிக்கும் 
உரிமை உண்டு 

கடமை மறந்து 
காற்றைக் கெடுத்ததால் 

உரிமை துறந்து 
ஓடிப் போனது 
-----------------------------நாகேந்திர பாரதி 

புதன், 18 மார்ச், 2015

கோப அழகு

கோப அழகு 
---------------------
அன்பானவர்கள் கோபப்பட்டால் 
அருமையாக இருக்கிறது 

திறமைசாலிகள் கோபப்பட்டால் 
பெருமையாக இருக்கிறது 

பொறுமைசாலிகள் கோபப்பட்டால் 
பயமாக இருக்கிறது 

காதலர்கள் கோபப்பட்டால் 
லயமாக இருக்கிறது 

கோபப்படுபவர் கோபப்பட்டால் 
அழகாக  இருக்கிறது 
-------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 17 மார்ச், 2015

காதல் மாறிப் போச்சு

காதல் மாறிப் போச்சு 
-----------------------------------
கல்லூரிக்  காதல் 
பள்ளிக்கூடக் காதல் ஆச்சு 

காகிதக் காதல் 
கம்ப்யூடர் காதல் ஆச்சு 

உள்ளூர்க் காதல் 
வெளிநாட்டுக் காதல் ஆச்சு 

கண்ணீர்க் காதல் 
காமத்துக் காதல் ஆச்சு 

காலத்தின் மாற்றத்தில் 
காதலும் மாறிப் போச்சு 
------------------------------------நாகேந்திர பாரதி 

திங்கள், 16 மார்ச், 2015

வாழ்க்கைச் சோதனை

வாழ்க்கைச் சோதனை 
--------------------------------------
இயற்கை என்பது 
செய்முறைக் கூடம் 

வாழ்க்கை என்பது 
வழிமுறைப் பாடம் 

இளமையும் முதுமையும் 
இயங்கிடும் காலம் 

இன்பமும் துன்பமும் 
மயங்கிடும் கோலம் 

சோதனை முடியும் 
மறுபடி விடியும்  
---------------------------நாகேந்திர பாரதி 

வடக்கும் தெற்கும்

வடக்கும் தெற்கும் 
-------------------------------
சட்டினியும் சாம்பாரும் 
சப்பாத்தியோடு சேரட்டும் 

கிழங்கும் கேரட்டும் 
கிச்சடியோடு சேரட்டும் 

வலது முந்தானையும் 
இடது முந்தானையும் 

உதறிய வேட்டியும் 
உருட்டிய வேட்டியும் 

வளரட்டும் சேர்ந்து 
வடக்கும் தெற்கும் 
--------------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 15 மார்ச், 2015

புதிய தலைமுறை

புதிய தலைமுறை 
---------------------------------
பேஸ்ட்டும் பிரஷ்ஷூமாய் 
பொழுதைத் தொடங்கி 

சோப்பும் ஷாம்புமாய் 
குளித்து முடித்து 

ப்ரெட்டும் சிக்கனுமாய் 
ப்ரன்சை சாப்பிட்டு 

கம்ப்யூட்டரும் மொபைலுமாய் 
காரியம் நடத்தும் 

புதிய தலைமுறை 
பூத்துக் குலுங்குது 
-----------------------------நாகேந்திர பாரதி 

பழைய தலைமுறை

பழைய தலைமுறை 
----------------------------------
வேப்பங் குச்சியில் 
பல்லைத் துலக்கி 

சீயக்காய்த்  தூளைத் 
தேய்த்துக் குளித்து 

கருவாடும் கஞ்சியும் 
கலந்து சாப்பிட்டு 

வயலும் கண்மாயுமாய் 
வாழ்க்கை நடத்திய 

பழைய தலைமுறை 
படுத்துக் கிடக்குது 
-------------------------------நாகேந்திர பாரதி 

ஹார்மோன் கவிதை

ஹார்மோன் கவிதை 
----------------------------------
பார்த்துக் கொண்டே 
இருக்கத் தோன்றும் 

பழகிக் கொண்டே
இருக்கத் தோன்றும் 

பேசிக் கொண்டே
இருக்கத் தோன்றும் 

பெண்ணும் ஆணும் 
காதல் தோற்றம் 

ஹார்மோன் செய்யும் 
கவிதைத் தோற்றம் 
-------------------------------நாகேந்திர பாரதி
 

நாய்களின் நாகரிகம்

நாய்களின் நாகரிகம்
------------------------------------
அழுக்கு வேட்டிக்காரனை
அரட்டுகின்ற நாய்கள் 

வெள்ளை வேட்டிக்காரனை 
விட்டு விடுகின்றன 

பகல் திருடர்களுக்கு 
பாரா முகம் காட்டி விட்டு 

இரவுத் திருடர்களை 
இரைந்து விரட்டும்

நாய்களுக்கென்று ஏதோ 
நாகரிகம் இருக்கிறது
---------------------------நாகேந்திர பாரதி 
 

தெப்பக் குள நீச்சல்

தெப்பக் குள நீச்சல் 
----------------------------------
படியைப் பிடிச்சு 
அடிச்சுப் பழகணும் 

வழுக்கி விட்டால் 
வாயில் தண்ணி

கையும் காலும் 
கணக்கா உதறணும் 

தண்ணியில் மிதக்கும் 
தத்துவம் புரிந்தபின் 

பல்டியும் அடிக்கலாம் 
படுத்தும் நீந்தலாம் 
-------------------------------------நாகேந்திர பாரதி 

கராத்தே பயிற்சி

கராத்தே பயிற்சி 
----------------------------
தண்டால் எடுத்து 
தடந்தோள் வலி 

மூட்டையை  எத்தி 
முழங்கால் வலி

விரல் மடக்கிக் குத்தி 
விரிச்சால்  வலி 

நடு வயித்தில் அடி வாங்கி 
நாலு நாளா வலி 

அடிக்கப் பழகணும்னா 
அடி வாங்கிக் பழகணுமாம் 
--------------------------------நாகேந்திர பாரதி 
 

சனி, 14 மார்ச், 2015

சைக்கிள் சவாரி

சைக்கிள் சவாரி 
-----------------------------
பழைய சைக்கிள் தான் 
பழகத் தருவாய்ங்க 

பாதி நாள் வாடகை 
பத்தே பைசாதான் 

உட்கார வச்சவனே 
உருட்டிக்கிட்டு வரணும் 

கொஞ்சம் விட்டாலும் 
குடை சாயும் சைக்கிள் 

பிரேக்கு பிடிப்பது 
பெரிய விஷயம் 

கழலும்  செயின் மாட்டி 
கரியாகும் கை விரல்கள் 

பட்ட முட்டியிலே 
படுகின்ற காயங்கள் 

கத்து முடிச்சாச்சு 
கால் மாத்தி ஓட்டியாச்சு 
-------------------------------------நாகேந்திர பாரதி 
 

வியாழன், 12 மார்ச், 2015

மெல்லிசா ஒரு கோடு

மெல்லிசா ஒரு கோடு 
-------------------------------------
நட்புக்கும் காதலுக்கும் நடுவிலே 
மெல்லிசா ஒரு கோடு 

தொட்டுப் பேசினா நட்பு - கண்கள் 
பட்டுப் பேசினா காதல் 

தெரிஞ்சு சுத்தினா நட்பு - பெற்றோருக்கு 
தெரியாம சுத்தினா காதல் 

சேர்ந்து போனா நட்பு - தியேட்டருக்கு 
போய்ப் பின் சேர்ந்தா காதல் 

பேஸ் புக்கில் போட்டா நட்பு - ஸ்டேட்டஸ் 
வாட்ஸ் அப்பில் போட்டா காதல் 
--------------------------------------------நாகேந்திர பாரதி 

பாப்பாவின் தூக்கம்

பாப்பாவின் தூக்கம் 
----------------------------------
படுக்கப் போடுவதே 
படாத பாடுதான் 

வந்து படுத்தாலும் 
வாக்கு வாதம்தான் 

பாட்டைப் பாடினால் 
கதையைக் கேட்கும் 

கதையைச் சொன்னால் 
பாட்டைக் கேட்கும் 

இங்கும் அங்குமாய்ப் 
புரண்டு படுக்கும் 

எப்போது தூங்கியது 
தெரியாது தூங்கிவிடும் 
---------------------------------நாகேந்திர பாரதி