வியாழன், 30 அக்டோபர், 2014

வெயிலின் இலைகள்

வெயிலின் இலைகள் 
-----------------------------------
வெளியில் ஆடும் 
வேம்பின் இலைகள் 

வெளிச்சத் திரட்டை
இறுத்து வடித்து 

சன்னல் வழியே 
சுவற்றில் சாய்க்க 

உள்ளே ஆடும் 
வெயிலின் இலைகள் 

நிஜமும் நிழலும் 
நெளியும் வளையும்
------------------------------------நாகேந்திர பாரதி 
 

புதன், 29 அக்டோபர், 2014

முயற்சியின் மகிழ்ச்சி

முயற்சியின் மகிழ்ச்சி 
------------------------------------
ஓடிச் செல்லும் அணிலுக்கு 
ஒரு பொந்து இருக்கிறது 

ஊர்ந்து செல்லும் எறும்புக்கு 
ஒரு புற்று இருக்கிறது 

பறந்து செல்லும் புறாவுக்கு 
ஒரு மாடம் இருக்கிறது 

பாடிச் செல்லும் கிளிக்கு 
ஒரு மரமும் இருக்கிறது 

முயற்சி செய்யும் யாவர்க்கும் 
ஒரு பயணம் இருக்கிறது 

பயணம் செய்து முடித்தவுடன் 
ஒரு பரிசு இருக்கிறது 

பரிசு ஒன்று கிடைத்தவுடன் 
ஒரு அமைதி இருக்கிறது 
------------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 28 அக்டோபர், 2014

சாமியார் சங்கதி

சாமியார் சங்கதி 
--------------------------
கோபுர வாசலில்
முளைத்த சாமியார்

வடக்கே இருந்து 
வந்தவர் என்றார்கள் 

ஜெயிலில் தப்பிய 
கைதி என்றார்கள் 

ஒன்றுமே பேசாத 
சாமியாரைப் பற்றி 

ஊரே பேசியது 
கும்பிட்டுப் போனது 
-------------------------நாகேந்திர பாரதி 
 

திங்கள், 27 அக்டோபர், 2014

காதற் கோலங்கள்

காதற் கோலங்கள்
--------------------------------
பார்த்துக் கொண்டே இருந்து 
பயப்படுவது ஒரு காலம் 

பேசிக் கொண்டே இருந்து 
பிரியப்படுவது  ஒரு காலம் 

தொட்டுக் கொண்டே இருந்து 
துயரப்படுவது  ஒரு காலம் 

அணைத்துக் கொண்டே இருந்து 
ஆசைப்படுவது  ஒரு காலம் 

நினைத்துக்கொண்டே இருந்து
நெருக்கப்படுவது  ஒரு காலம்  
--------------------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

வயசுக் கோளாறு

வயசுக் கோளாறு 
---------------------------
கண்டதும் காதல் 
கல்யாணம் ஆகணும் 

வேலை பிடிக்கலை 
விலகிப் போகணும் 

சரியில்லை சமுதாயம் 
சண்டை போடணும்

அவசர  வயசு 
அபாய வயசு 

தாண்டிப் போனதும் 
தயக்க வயசு 
-----------------------நாகேந்திர பாரதி 

சனி, 25 அக்டோபர், 2014

மேகக் கூட்டம்

மேகக் கூட்டம் 
--------------------------
எண்ணிக் கொண்டே 
இருக்கும் போதே 

கலைந்தும் போகும் 
சேர்ந்தும் போகும் 

காற்றிடம் சொல்ல வேண்டும் 
கலைக்காதே என்று 

மேகத்திடம் சொல்ல வேண்டும் 
ஓடாதே என்று 

எப்படித்தான் எண்ணுவதாம் 
மேகக் கூட்டத்தை 
-----------------------------நாகேந்திர பாரதி 

வடக்குத் தெரு

வடக்குத் தெரு - நன்றி - குங்குமம் இதழ் -  31/8/15 
------------------------
ஊராட்சி வானொலி 
கிளை நூலகம் 

வாணக் கிடங்கு 
வடக்கு வாசல்  

சத்திர ஸ்டாப் 
பேஷ்கார் வீடு 

அடையாளங்கள் தொலைந்தாலும் 
பேர் மட்டும்  தொலையாமல்  

கிடக்கிறது அங்கே 
வடக்குத் தெரு 
--------------------------நாகேந்திர பாரதி 

புதன், 22 அக்டோபர், 2014

பழைய தலைமுறை

பழைய தலைமுறை 
-------------------------------------
வானம் பார்த்து 
பயிர் வளர்த்த தலைமுறை 

சாணித் திண்ணையில் 
புரணி பேசிய தலைமுறை 

மாட்டு வண்டியில் 
மதுரை போன தலைமுறை 

மூன்று இடைவேளையில் 
சினிமா பார்த்த தலைமுறை 

கோபமும் துக்கமும் 
கொண்டாடித் திரிந்த தலைமுறை 

இயற்கையைச் சேர்த்து 
எடுத்துப் போன  தலைமுறை 
--------------------------------நாகேந்திர பாரதி 
 

ஏழைத் தீபாவளி

ஏழைத் தீபாவளி 
------------------------------
கடலை மிட்டாயின் 
இனிப்பு தீபாவளி 

கடை முறுக்கின் 
காரம் தீபாவளி 

வெடிச் சத்தம் 
கேட்டல் தீபாவளி 

வாண வேடிக்கை
பார்த்தல்   தீபாவளி 

ஏழைத் தீபாவளி 
எளிமை இனிமை 
-------------------------நாகேந்திர பாரதி 

திங்கள், 20 அக்டோபர், 2014

இணைக்கும் தீபாவளி

இணைக்கும்  தீபாவளி 
-------------------------------
காலைக்கும் இரவுக்கும் 
கார்த்திகைக்கும் என்று  

மூன்றாகப் பிரியும் 
மத்தாப்பும் பட்டாசும் 

முறுக்கும் சுவியமும் 
மணக்கும் இரவில் 

எண்ணையும் நெய்யும் 
இனிக்கும் வாசம் 

இட்டிலியும் கறியும் 
மழையும் சினிமாவும் 

இனிப்பும் புகையும் 
இணையும் தீபாவளி 
---------------------நாகேந்திர பாரதி 

வியாழன், 16 அக்டோபர், 2014

இலட்சிய வெற்றி

இலட்சிய வெற்றி 
------------------------------
எத்தனை நேரம் 
ஆனால் என்ன 

எத்தனை தூரம் 
போனால் என்ன  

எத்தனை இடம் 
கழன்றால்  என்ன 

எத்தனை  நடம் 
சுழன்றால் என்ன 

இலட்சியம் பற்றி 
நிச்சயம் வெற்றி 
------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

கலைத் திருவிழா

கலைத் திருவிழா 
-------------------------------------------
பறவைகளின் சப்தமும் 
பாப்பாக்களின் சப்தமும் 

கலந்து ஒலிப்பது 
கர்நாடக சங்கீதம் 

செடிகளின் ஆட்டமும் 
குழந்தைகளின் ஆட்டமும் 

சேர்ந்து நடப்பது 
பரத நாட்டியம் 

எல்லா மாதங்களும்
கலைத் திருவிழாதான் 

இயற்கைத் தாயின் 
பூங்கா மேடையில் 
------------------------நாகேந்திர பாரதி 
 

சனி, 11 அக்டோபர், 2014

பூங்காப் பார்வை

பூங்காப் பார்வை 
---------------------------
கொக்கைப் போல் 
காத்திருக்கும் பெண்களும் 

குரங்கைப் போல் 
பார்த்திருக்கும் ஆண்களும் 

கூடி இருக்கின்ற  பூங்காவில் 

பூவைப் போல் 
காத்திருக்கும் பெண்களும் 

புறாவைப் போல் 
பார்த்திருக்கும் ஆண்களும்

இருப்பதால் இனிக்கிறது பூங்கா 
--------------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 10 அக்டோபர், 2014

இருட்டுக் காகம்

இருட்டுக் காகம் 
-------------------------
இருட்டிய பின்பும் 
பறந்து கொண்டிருக்கிறது 
ஒற்றைக் காகம் 

வழியைத் தொலைத்து விட்டதா 
பார்வைக் கோளாறா 
சொந்த சோகமா 

கூடுதல் இருட்டில் 
காணாமல் போனது 

எங்கே போயிருக்கும் 
இருட்டுக் காகம் 
-------------------------நாகேந்திர பாரதி 

புதன், 8 அக்டோபர், 2014

ஜோடிப் பொருத்தம்

ஜோடிப் பொருத்தம் 
--------------------------------------
மொச்சைக் குழம்புக்கு  
வாழைத் தண்டு கூட்டு 

புளிக் குழம்புக்கு 
புடலங்காய்ப்  பிரட்டல் 

சாம்பார் சாதத்துக்கு 
உருளைக்  கிழங்கு வறுவல் 

புளிச் சாறு,  ரசத்துக்கு 
கருவாட்டுப் பொரியல் 

சோற்றுக்கும் தேவை 
ஜோடிப் பொருத்தம் 
----------------------------நாகேந்திர பாரதி  
 

சனி, 4 அக்டோபர், 2014

எண்ணங்களின் இடைவெளி

எண்ணங்களின் இடைவெளி 
-----------------------------------------------
எண்ணங்களே இல்லாத 
இடைவெளிகள் வாய்க்‌குமானால் 

என்னென்ன எண்ணங்களை 
இட்டு நிரப்பலாம் என்ற 

எண்ணங்களின் எண்ணிக்கை 
ஏராளம் ஆனதால் 

இடைவெளியே இல்லாத 
எண்ணங்களின் குப்பையை 

எப்படித்தான் அகற்றுவது 
என்பதே எண்ணம் 
-----------------------------நாகேந்திர பாரதி

காற்று மேகம்

காற்று மேகம் 
------------------------
பூமிக்கும் வானுக்கும் 
இடைப்பட்ட இடத்தை 

நிரப்பும் காற்றின் 
வேகத்தில் மேகம் 

பிய்ந்தும் போகும் 
சேர்ந்தும் போகும் 

சில நேரம் நடக்கும் 
சில நேரம் ஓடும் 

காற்றும் மேகமும் 
நடத்தும் நாடகம் 
---------------------------நாகேந்திர பாரதி
 

தொலை பேசி எண்கள்

தொலை பேசி எண்கள்
---------------------------------------
தொடர்பு எல்லைக்கு 
அப்பால் போய் விட்ட 
தொலை பேசி எண்கள் 

வேறு ஒருவருக்கு 
மாற்றப் பட்டு இருக்கலாம் 

தவறான எண் என்று 
தகவலும் வரலாம் 

தொலை பேசி எண்கள்
தொலைந்து போனாலும் 

நினைவு அலை வரிசையில் 
நீண்ட நாட்கள் 
----------------------------நாகேந்திர பாரதி 

வாழையிலைக் கவலை

வாழையிலைக் கவலை 
----------------------------------------
யாரோ ஒருவர் 
வாழையிலை ரெண்டை 
வாங்கிப் போகிறார் 

விருந்தாளி வருகையா 
வீட்டில் விசேஷமா 

சைவ விருந்தா 
அசைவச் சாப்பாடா 

நமக்கு இருக்கின்ற 
நாலு குழித்  தட்டில்

ஏதோ ஒன்று 
விழுகின்ற வரைக்கும் 

நமக்கேன் இந்த 
வாழை இலைக் கவலை 
--------------------------நாகேந்திர பாரதி 
 

காலைக் கடன்

காலைக் கடன் 
--------------------------
காலை வந்தாச்சி 
கவலை வந்தாச்சி 

என்ன காயி 
என்ன கொழம்பு 

கறியும் மீனும் 
கணக்கிலே வந்தாச்சு 

எல்லாக் காயும் 
வட்டம் வந்தாச்சு 

புளிச்சாறும் துவையலும் 
போதும் இன்னைக்கி 
-------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 3 அக்டோபர், 2014

பறவைகளின் மரங்கள்

பறவைகளின் மரங்கள் 
----------------------------------------
காலைப் பறவைகளின் 
பூபாளத்தில்  கண் விழித்து 
மாலைப் பறவைகளின் 
நீலாம்பரிக்குக்  காத்திருக்கும் 
நாள் முழுக்க மரங்கள் 

இரவுப் பறவைகள் 
இலைகளுக்குள் மயங்க 
தாயின் மகிழ்ச்சியோடு 
தடவிக் கொடுத்தபடி 
தானும் உறங்கும் மரங்கள் 
-----------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com


ஐம்பூத வாழ்க்கை

ஐம்பூத வாழ்க்கை 
-----------------------------
சுற்றத்தைத் தாங்கும் 
நிலமாக வாழ்வோம் 

குடும்பத்தை வளர்க்கும் 
நீராக வாழ்வோம் 

பகைவரைப் பொசுக்கும் 
நெருப்பாக வாழ்வோம் 

நண்பரைக் குளிர்விக்கும் 
காற்றாக  வாழ்வோம் 

நமக்குள் ஒளிரும் 
விண்ணாக வாழ்வோம் 
-----------------------------நாகேந்திர பாரதி 

வியாழன், 2 அக்டோபர், 2014

ஒளித் தருணம்

ஒளித் தருணம் 
--------------------------
மேகத்தைக் கிழிக்கின்ற 
ஒரு ஒளித் தருணத்தில் 

முக்காடு போட்டிருக்கும் 
மரக் கூட்டங்களையும் 

தூரத்தில் குவிந்திருக்கும் 
கட்டிட மௌனங்களையும்

ஒரு பெரு மழை வந்து 
கலைக்கப் போவதை 

இரவோடு சேர்ந்து 
உணர்ந்து கொள்ள முடியும் 
-----------------------------நாகேந்திர பாரதி 

புதன், 1 அக்டோபர், 2014

உள்ளக் காதல்

உள்ளக் காதல் 
-----------------------------
இளமைக் காதல் 
இயலும் இசையும் 

குடும்பக் காதல் 
அறமும் பொருளும் 

முதுமைக் காதல் 
அன்பும் துணையும் 

பருவக் காலக் 
காட்சிகள் மாறும் 

உள்ளக் காதல் 
என்றும் நட்பே 
------------------நாகேந்திர பாரதி