செவ்வாய், 30 செப்டம்பர், 2014

கிழவியின் இடுப்பு

கிழவியின் இடுப்பு 
------------------------------------
இடுப்பில் ஏற்றி 
இறக்கிய சிறுசுகள் 

படிப்பாய் வேலையாய் 
பட்டணம் போனபின் 

திரும்பி வருவதற்கு 
நேரமில்லை மனமில்லை 

தூரத்தில் வருகின்ற 
தாயம்மா இடுப்பிலே 

தொத்திக் கிடக்கின்ற 
பிள்ளையைப் பார்க்கையிலே 

சிரிப்பும் அழுகையும் 
சேரும் கிழவிக்கு 
-------------------------------நாகேந்திர பாரதி 

புதன், 17 செப்டம்பர், 2014

முக வரிகள்

முக வரிகள் 
--------------------------
நாம் பார்த்த முகங்கள்தான் 
எத்தனை எத்தனை 

பள்ளியில் பார்த்ததும் 
கல்லூரியில் பார்த்ததும் 

வேலையில் பார்த்ததும்
வெளியில் பார்த்ததும் 

பார்த்த அம் முகங்கள் 
மறந்து போனாலும் - நாம் 

காட்டிய நம் முகங்கள் 
நமக்குள் நினைவிருக்கும் 
------------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

மனிதர் மனம்

மனிதர் மனம் 
-------------------------------
சிரிப்பில் தெரியாத 
மனிதர் மனம்
அழுகையில் தெரிந்து விடும் 

செழிப்பில் தெரியாத 
மனிதர் மனம் 
வறுமையில் தெரிந்து விடும்

உடையில் தெரியாத
மனிதர் மனம் 
உரையில் தெரிந்து விடும் 

உறவில் தெரியாத 
மனிதர் மனம் 
பிரிவில் தெரிந்து விடும் 

பகலில் தெரியாத 
மனிதர் மனம் 
இரவில் தெரிந்து விடும் 

இளமையில் தெரியாத
மனிதர் மனம் 
முதுமையில் தெரிந்து விடும் 
-------------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

போர் நிறுத்தம்

போர் நிறுத்தம் 
------------------------
தொடர் மின்னலில்  
பகலாகும் இரவு 

தொடர் இடியில் 
துடிக்கும் பூமி 

குழந்தைகள் எல்லாம் 
குழம்பிக் கிடக்கும் 

ஆகாய வெளியில் 
அது  என்ன சண்டை 

அம்மா அப்பா போய் 
நிறுத்துங்கள் போரை  
---------------------------நாகேந்திர பாரதி 

திங்கள், 1 செப்டம்பர், 2014

பழைய செருப்பு கடிக்கும்

பழைய செருப்பு கடிக்கும் 
---------------------------------------
பழைய ஓட்டு வீட்டில் 
பார்த்த பழைய செருப்பு 

அடி தேய்ந்து போன 
அப்பாவின்  செருப்பு 

எத்தனை வயல்கள் 
எத்தனை வரப்புகள் 

பாதத் தடங்கள்  இங்கே 
பாதங்கள் எங்கே 

பழைய செருப்பு 
கடிக்கும் மனத்தை
---------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com