வியாழன், 31 ஜூலை, 2014

வினையும் விளைவும்

வினையும் விளைவும்
----------------------------------
விளை நிலங்கள் வீடானால் 
வீடெல்லாம் விழுந்து விடும் 

விண் வெளியும் புகையானால் 
வீழ் மழையும் பொய்த்து விடும் 

கடலெல்லாம் கழிவானால் 
கண்மாய்கள் கரிசல்  ஆகும் 

அலைவரிசை அதிகமானால் 
அரும் உயிர்கள்   அருகி விடும் 

தெரிந்த பின்னும் நிறுத்தா  விட்டால் 
தெருவினிலே  நிறுத்தி விடும் 
------------------------------------நாகேந்திர பாரதி 

புதன், 30 ஜூலை, 2014

இயற்கைப் பகை

இயற்கைப் பகை 
-----------------------------
நதியோரம் கடலோரம் 
நடந்த நாகரிகம் 

காட்டோரம்  மலையோரம் 
கலந்து மெருகேறி 

கூட்டமாய் குடும்பமாய் 
வீரமாய் ஈரமாய்  

முன்னோரால் வளர்ந்து 
இந்நேரம் வந்தபின் 

இயற்கையைப் பகைத்தால் 
இயற்கையால் பாடு படும் 
-------------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 27 ஜூலை, 2014

பூங்காவின் கோபம்

பூங்காவின் கோபம் 
--------------------------------
சின்னப் புள்ளைங்க 
சிரிப்பைக் கேக்கலை 

கிழட்டுப் புள்ளைங்க 
அலுப்பைப் கேக்கலை 

வயசுப் புள்ளைங்க 
காதலைக் கேக்கலை 

ஒன்றரை மாசமா 
மூடிப்  போட்டீங்க 

எப்படா முடிப்பீங்க 
மராமத்து வேலைய 
----------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com 

வெள்ளி, 25 ஜூலை, 2014

அகமும் புறமும்

அகமும் புறமும் 
-------------------------------
அகத்தைப் பெண்மைக்கும் 
புறத்தை ஆண்மைக்கும் 

அடையாளம் காட்டியது 
அந்தக் காலம் 

அகத்தில் புறம் பேசி 
புறத்தில் அகம் செய்து 

அடையாளம் காட்டுவது 
இந்தக் காலம் 

அகமும் புறமும் 
ஆனந்த வீரத்தில் 

அடைக்கலம் ஆனால் 
இன்பக் காலம் 
-------------------------------------நாகேந்திர பாரதி 
 

வியாழன், 24 ஜூலை, 2014

விளையாட்டுப் பருவம்

விளையாட்டுப் பருவம் 
-------------------------------------
குனிந்து பார்த்தால் 
தரை அருகில் இருந்த காலம் 

கிளித்  தட்டு, கோலிக் குண்டு 
பல்லாங்குழி  விளையாட்டு  

வயது ஏற ஏற 
வானம் பார்த்த படி 

வாலி பால் , கிட்டிப் புள் 
கிரிக்கெட் விளையாட்டு 

மீண்டும் தரையில் அமர்ந்து 
தரையைப் பார்த்த படி 

ஆடு புலி ஆட்டம் ஆடும் போது 
அவருக்குள் சிரிப்பான்  சிறுவன் 
-----------------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 22 ஜூலை, 2014

அறுபது வயது

அறுபது வயது 
------------------------------
இளமைக்கும் முதுமைக்கும் 
இடைப்பட்ட வயது 

பழமைக்கும் புதுமைக்கும் 
பாலத்தில் வயது 

உழைப்புக்கும் ஓய்வுக்கும் 
குழப்பத்தில் வயது 

களைப்புக்கும் சோர்வுக்கும் 
காரணத்தில் வயது 

அழைக்கின்ற அடுத்த 
பிறவிக்கு வயது 
----------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 18 ஜூலை, 2014

ஒரு சாண் வயிறு

ஒரு சாண் வயிறு 
-----------------------------
கருப்பு வெள்ளையாய்க் 
கடந்த காலமும் 

கலர்க் கலராய் 
எதிர் காலமுமாய் 

அவர் அவர் வாழ்வில் 
ஆயிரம் உலகம் 

நிகழ் காலத்தை 
நினைத்துப் பார்த்தால் 

ஒரு சாண் வயிற்றில் 
உறங்கும் உலகம் 
--------------------------நாகேந்திர பாரதி

சனி, 12 ஜூலை, 2014

அனாதை உலகம்

அனாதை உலகம் 
--------------------------
அனாதையாய் அலைவது
அவன் தப்பு  இல்லை 

தெரியாத பெற்றோரைத் 
திட்டிப் பிரயோசனம் இல்லை 

உடலும் உயிருமாக 
ஓடிக் கொண்டு இருக்கிறான் 

அவனுக்கும் வாழ்க்கை 
அமைகின்ற காலம் வரும் 

அப்போது பெற்றோரை 
நினைக்கின்ற நேரம் வரும் 
--------------------------------நாகேந்திர பாரதி

சீரிளமைத் தமிழ்

சீரிளமைத் தமிழ்
----------------------------
கல்லூரிப் படிப்பு
ஆங்கிலம் மறந்தாச்சு 

வட நாட்டு வேலை 
இந்தி மறந்தாச்சு 

ஆரம்பப் பள்ளி 
ஆத்தி சூடி மறக்கலை  

உயிரோடு கலந்த 
உணர்ச்சித் தமிழ் 

என்றும் இளமையாய் 
இருக்கும் இனிக்கும் 
-----------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 11 ஜூலை, 2014

சங்க காலம்

சங்க காலம் 
--------------------
வீட்டைக் காக்க 
அக வாழ்க்கை அமைத்து 

நாட்டைக் காக்க 
புற வாழ்க்கை அமைத்து 

தொழிலைக் காக்க 
திணை வாழ்க்கை அமைத்து 

தமிழைக் காக்க 
சுக வாழ்க்கை அமைத்த 

சங்க காலம் 
தங்க காலம் 
-----------------------நாகேந்திர பாரதி 
 

வியாழன், 10 ஜூலை, 2014

அனாதைச் சாலை

அனாதைச் சாலை 
----------------------------
அகலமாய் இருவழிப் பாதை 
அடுத்தாற் போல் வந்த பின்பு 

கலகலப்பைத் தொலைத்து விட்ட 
பழைய தார்ச் சாலை 

தவறிப் போய் வந்து விடும் 
வாகனத்திற்கு வழி சொல்ல 

அழுக்கடைந்து நிற்கின்ற
ஐந்தாறு மைல் கற்கள் 

சூரியனோடும் சந்திரனோடும் 
சோகக் கதைச் சொற்களோடு 

அண்ணாந்து பேசிக் கொண்டு 
அனாதைச் சாலை 
---------------------------நாகேந்திர பாரதி

புதன், 9 ஜூலை, 2014

மனிதக் கோலம்

மனிதக் கோலம் 
---------------------------
இலையாட்டம் உடம்பு 
பிள்ளைக் காலம் 

சிலையாட்டம் உடம்பு 
இளமைக் காலம் 

நிலை ஆட்டம் உடம்பு 
குடும்பக் காலம் 

தலை ஆட்டம் உடம்பு 
முதுமைக் காலம் 

அலை ஆட்டம் போடும் 
மனிதக் கோலம் 
---------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 8 ஜூலை, 2014

பேத்தியின் குரல்

பேத்தியின் குரல் 
---------------------------
'ஏய் தாத்தா'
இழுக்கும் குரல் 

'ஓய் தாத்தா'
உலுக்கும் குரல் 

'டேய் தாத்தா'
கலக்கும் குரல் 

பேத்‌தியின் குரலில் 
பிரியம் புரளும் 

தாத்தாவின் கண்ணில் 
தண்ணீர் திரளும் 
--------------------------------நாகேந்திர பாரதி