சனி, 21 ஜூன், 2014

கிராமக் கருப்பு

கிராமக் கருப்பு 
------------------------
கருப்பு நூல்களும் 
கருகுமணி மாலைகளும் 

தொட்டில் வேண்டுதல்களும் 
தொங்கும் மரத்தடியில் 

நட்டு வைத்த சூலங்களின் 
நடுவே முளைத்திருக்கும் 

கிராமக் கருப்பின் 
குங்குமப் பார்வைக்கு 

சூறைத் தேங்காயும் 
மாலையும் போதும் 
--------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 20 ஜூன், 2014

ஊர்க் கட்டுப்பாடு

ஊர்க் கட்டுப்பாடு 
--------------------------
சாதிச் சண்டையில் 
துடிக்கும் கிராமம் 

விடுப்பில் வந்த 
வீட்டுப் பையன் 

திரும்பும் போது 
திகைத்துக் கேட்கும் 

'படிக்கப் போறிகளா  
பயந்து போறிகளா ' 

தலைமுறை கடந்த 
ஊர்க் கட்டுப்பாடு 
--------------------------------நாகேந்திர பாரதி 

வியாழன், 19 ஜூன், 2014

பச்சைப் புல் பருவம்

பச்சைப்  புல் பருவம் 
----------------------------------
பூக்களும் செடிகளும் 
புதிதாகத்  தெரிந்த காலம் 

வெயிலும் மழையும் 
விளையாட்டாய் இருந்த காலம் 

தாவணியும் டவுசரும் 
காதலிக்கத் தயங்கிய காலம் 

கண்மாயும் ஊருணியும் 
கடலாகத்  தெரிந்த காலம் 

பச்சைப் புல்லாக 
பள்ளிப் பருவக் காலம் 
-----------------------------------நாகேந்திர பாரதி 
 

வெள்ளி, 13 ஜூன், 2014

கோயில் பழக்கம்

கோயில் பழக்கம் 
---------------------------
மஞ்சள்  சந்தனம் 
குங்குமம் விபூதி 

மணக்கும் கர்ப்பக் 
கிரகத் தரிசனம் 

அம்மன் சாமியின் 
அருட் பார்வையில் 

அத்தனை துன்பமும் 
அகன்று  போகும் 

கோயில் பழக்கம் 
ஆயுள் வளர்க்கும் 
----------------------------நாகேந்திர பாரதி 

வியாழன், 12 ஜூன், 2014

சின்னச் சின்ன ஆசை

சின்னச் சின்ன ஆசை 
---------------------------------
காய்ச்சல் அடிக்கும் போது 
கருவாடு மேல் ஆசை 

ஜலதோஷம் பிடிக்கும் போது 
ஐஸ்கிரீம் மேல் ஆசை 

சொந்த ஊரில் இருக்கும் போது 
சுற்றுலா போக ஆசை 

சுற்றுலா போகும் போது 
சொந்த ஊர் திரும்ப ஆசை 

அங்கிருக்கும் போது தான் 
இங்கு வரும் ஆசை 
---------------------------------நாகேந்திர பாரதி 

புதன், 11 ஜூன், 2014

பாதரசக் கண்ணாடி

பாதரசக்  கண்ணாடி 
-------------------------------
பாதரசம் பூசிய 
பழைய கண்ணாடியில்

பார்த்துப் பழகிய 
இளமை முகம் 

உதிர்ந்த பாதரச 
ஓட்டை வழியே 

உலகம் தெரியும் 
முதுமை முகம் 

கால ஓட்டத்தைக் 
காட்டும் கண்ணாடி 
-------------------------------நாகேந்திர பாரதி 
  

செவ்வாய், 10 ஜூன், 2014

மரத்தின் கண்ணீர்

மரத்தின் கண்ணீர் 
-----------------------------
சின்னத்  தூறலாக 
விழுந்த போது 

சிலிர்த்து விளையாடிய 
கிளைகள்  

பெரிய மழையாகக் 
கொட்டும் போது 

பிய்ந்து விழுகின்ற 
கொடுமை 

மரத்தின் கண்ணீர் 
மழையின் தண்ணீரோடு 
---------------------------------நாகேந்திர பாரதி 


திங்கள், 2 ஜூன், 2014

செங்கல் வீடு

செங்கல் வீடு 
-----------------------
அப்பத்தா சிலுக்கெடுத்த 
முற்றத்தைக் காணோம் 

அம்மாச்சி தோசை சுட்ட 
அடுப்படியைக் காணோம் 

தாத்தா படுத்திருந்த 
படுக்கையறை காணோம் 

சின்னம்மாக்கள் விளையாடிய 
திண்ணையைக் காணோம் 

உறவுகளால் கட்டிய 
செங்கல் வீடு 

உடைந்து போய் இப்போது 
சிமெண்டு வீடாய் 
--------------------------நாகேந்திர பாரதி