செவ்வாய், 20 மே, 2014

சாலை வழிக் காளை

சாலை வழிக் காளை
-----------------------------------
வாலைச் சுழற்றி 
கொம்பை நிமிர்த்தி 

துரத்தி வந்து 
மல்லுக் கட்டும் காளையரை 

மறித்து  ஓடும் 
ஜல்லிக்கட்டுக் காளைகள் 

வெறித்த பார்வையுடன் 
லாரியில் பயணம் 

கோ சாலைக்கா 
கொலைச் சாலைக்கா
-------------------------------நாகேந்திர பாரதி 

புதன், 14 மே, 2014

காலத் தடங்கல்

காலத் தடங்கல்
-------------------------
குளத்தின் படியில்
வழுக்கும் பாசி 

காலை நனைக்கும் 
காரியம் பயந்து 

உள்ளங்கை நீரை 
உச்சியில் தெளித்து 

உள்ளே நடக்கும் 
காலின் தடங்கள் 

காரணம் மறந்த 
காலத் தடங்கல்
-----------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 13 மே, 2014

பஞ்சம் இல்லை

பஞ்சம் இல்லை 
--------------------------
பூக்கள் இருக்கும் வரை 
பரிசுக்குப் பஞ்சமில்லை 

புன்னகை இருக்கும் வரை
நன்றிக்குப் பஞ்சமில்லை 

நேரம் இருக்கும் வரை 
பேச்சுக்குப்   பஞ்சமில்லை 

இரவு  இருக்கும் வரை 
இனிமைக்குப்  பஞ்சமில்லை 

காலம்  இருக்கும் வரை 
காதலுக்குப்   பஞ்சமில்லை 
-------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 12 மே, 2014

வயலும் வாழ்வும்

வயலும் வாழ்வும் 
----------------------------
எத்தனை மூடை ஆனாலும் 
'இம்'மென்று தூக்கிக்  கொண்டு 

மாட்டு வண்டி வேகம் 
மதுரை வண்டி வேகம் 

ராம்நாட்   சந்தையிலே 
நெல்லு வித்துப் போகும் 

வானம் கறுத்திருந்தா 
வாழ்க்கை வெளுப்பாகும் 
 
வானம் வெளுத்திட்டா 
வாழ்க்கை கறுத்து விடும்  
--------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 8 மே, 2014

கிழவியின் நடை

கிழவியின் நடை 
--------------------------
முகத்தின் சுருக்கத்தில் 
வருடத்தின் முத்திரை 

அகத்தின் ஆழத்தில் 
அனுபவத்தின் நித்திரை 

கால்களோடு சேர்த்து 
கம்போடு நடக்கும் 

கிழவியின் வாயைக் 
கிண்டினால் தெரியும் 

நடந்தது என்ன 
நடப்பது என்ன 
----------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com 


புதன், 7 மே, 2014

திகில் பயணங்கள்

திகில் பயணங்கள் 
----------------------------
எந்தப் பெட்டி 
வேட்டி துண்டுப்  பெட்டி

எந்தப் பெட்டி 
வெடி குண்டுப் பெட்டி 

எந்தப் பிரயாணி 
ஊரை விட்டுப் போக 

எந்தப் பிரயாணி 
உலகை விட்டுப் போக 

எந்தத் தண்டவாளத்தில் 
என்ன வண்டவாளம் 

ரெயில் பயணங்கள் 
திகில் பயணங்கள் 
------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com  

வெள்ளி, 2 மே, 2014

மனைவி சொல் மந்திரம்

மனைவி சொல் மந்திரம் 
------------------------------------------
சார்ந்தே இருந்து 
சேர்ந்தே சிரித்து 

உழைப்பைச் செய்ய 
ஊக்கம் கொடுத்து 

களைப்பைப்  போக்க
கனிவைக் கொடுத்து 

சமையலும் செய்து 
மையலும் செய்யும் 

மனைவியின் சொல்லே 
மந்திரம் ஆகும் 
---------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com 

வியாழன், 1 மே, 2014

முடி திருத்தும் நிலையம்

முடி திருத்தும் நிலையம் 
-----------------------------------------
மூக்குறிஞ்சிக் கொண்டு 
வருவோரும் உண்டு 

முட்டக் குடித்துவிட்டு 
வருவோரும் உண்டு 

வேர்வை வழிய விட்டு  
வருவோரும் உண்டு 

எல்லாம் தாங்கிக் கொண்டு  
முடியைத் திருத்தும் கலைஞன்   

தலையைக் கொஞ்சம் சற்று 
திருப்பச்  சொன்னால் மட்டும் 
கழட்டித் தரவா கையிலென்று
கலாட்டா செய்வோரும்  உண்டு 
--------------------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com