ஞாயிறு, 30 மார்ச், 2014

இருளும் ஒளியும்

இருளும் ஒளியும்
---------------------------
இருளும் ஒளியும் 
இணையும் முக்தி 

வெளியும் உள்ளும் 
விளையும் பக்தி 

இமைகள் மூடியும் 
வெளிச்சம் வீசும் 

இமைகள் திறந்தும் 
இருட்டைப் பேசும் 

உலகின் உயிரின் 
ஒன்றாம் சக்தி 
---------------------------நாகேந்திர பாரதி

புதன், 26 மார்ச், 2014

சுற்றுப் பிரகாரம்

சுற்றுப் பிரகாரம் 
-------------------------
கர்ப்பக் கிரகத்தை விட 
சுற்றுப் பிரகாரம் சுகமானது 

காற்றும் அதிகம் 
கடவுளரும் அதிகம் 

உள்ளிருக்கும் கடவுளுக்கு 
தீப ஒளி அவசியம் 

வெளியிருக்கும் கடவுளர்க்கு 
வெளிச்சமெல்லாம் போதும்  

உரசாமல் கொள்ளாமல் 
உட்கார்ந்தும் கும்பிடலாம் 
-------------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 25 மார்ச், 2014

பரிணாம முகங்கள்

பரிணாம முகங்கள் 
--------------------------------
பறவையும் விலங்கும் 
பரிணாம வளர்ச்சியில் 

மனிதனாய் மாறியதை 
மறுக்க முடியாத 

அங்க அடையாளமாய் 
அவரவர் முகங்கள் 

நரியாய்ச் சிங்கமாய் 
நாயாய் ஆண்கள் 

குருவியாய்க் கழுகாய்  
கோழியாய்   பெண்கள்  
-------------------------நாகேந்திர பாரதி 

நிமிடங்களில் வாழ்க்கை

நிமிடங்களில் வாழ்க்கை 
-------------------------------------
நிமிடங்களில் இருக்கிறது வாழ்க்கை 

குளித்து விட்டுத்  தலை துவட்டும் 
நிமிடத்திலும் 

படித்து விட்டுக்  கண் அயரும் 
நிமிடத்திலும் 

பேசி விட்டுச் சிரிக்கின்ற 
நிமிடத்திலும் 

பிரிந்து விட்டு அழுகின்ற 
நிமிடத்திலும் 

கடந்து விட்ட அனுபவத்தின்  
கசப்பாக இனிப்பாக 

நிமிடங்களில் இருக்கிறது வாழ்க்கை 
-------------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 23 மார்ச், 2014

காம்பும் பூவும்

காம்பும் பூவும் 
--------------------------
பூவைச் சுமையாய் 
நினைத்திருந்தால் 

காம்பும் பூவைச் 
சுமந்திருக்காது

காம்பை முள்ளாய் 
நினைத்திருந்தால்  

மொட்டும் காம்பில்
மலர்ந்திருக்காது 

காம்பாய்ப் பூவாய்க்  
காதலர் உறவு 
-----------------------நாகேந்திர பாரதி 

ஒத்தையடிப் பாதை

ஒத்தையடிப் பாதை 
------------------------------
கருவச் செடிகளும் 
கண்மாய்த் தண்ணியுமாய் 
மழைக் காலத்தில் 

கால்கள் போட்டுவிட்ட 
கருப்புத்  தடங்களாய் 
கோடைக் காலத்தில் 

ஊருக்குப் போகும் பாதை 
ஒழுங்காய் வருவதற்கு 

ஒருவர் அடி மேலே 
மற்றவரும்  அடி வைத்த
ஒற்றுமைப் பாதை 
-------------------------நாகேந்திர பாரதி 

சனி, 22 மார்ச், 2014

காதல் பேய்

காதல் பேய்
----------------------
பார்த்தும் பார்க்‌காமல் 
போவதில் ஆரம்பித்து 

பேசியும் பேசாமல் 
போவதில் தொடர்ந்து 

பார்த்துக் கொண்டே 
இருக்க  வேண்டுமென்றும் 

பேசிக் கொண்டே 
இருக்க வேண்டுமென்றும் 

பிடித்து  ஆட்டும் 
காதல் பேய் 
---------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 21 மார்ச், 2014

வண்ணக் காட்சி

வண்ணக் காட்சி
---------------------------
வாய்க்கால் தண்ணியில் ஓடும் 
வெள்ளை மீன்கள் 

வரப்பில் பூத்துக் கிடக்கும் 
சிவப்புச் செடிகள் 

வயலில் முளைத்துக் கிளம்பும் 
பச்சை நாத்து 

வட்டம் அடிக்கும் பழுப்புச் 
சிட்டுக் குருவிகள்  

வண்ணம் குழைத்துச்  சிரிக்கும்   
கிராமக் காட்சி 
-------------------------நாகேந்திர பாரதி

புதன், 19 மார்ச், 2014

விளையாட்டுப் பாப்பா

விளையாட்டுப் பாப்பா 
-----------------------------------
ஓடும் மட்டும் 
ஓட விட்டும் 

ஆடும் மட்டும் 
ஆட விட்டும் 

பாடும் மட்டும் 
பாட விட்டும் 

படிக்க மட்டும் 
எழுத மட்டும் 

பாவம் போலப் 
பார்க்கும் பாப்பா 
-------------------------நாகேந்திர பாரதி 

உயிரின் வலி

உயிரின் வலி 
----------------------
உறவோ நட்போ 
பிரியும் நேரம் 

உயிரின் ஓரம்   
கிழியும் வலி 

சேர்ந்து இருந்த 
வாழ்க்கைத் தருணம் 

வளர்த்து  வந்த 
உயிராம்  மரத்தின் 

இலைகள் உதிரும் 
வலியும் தெரியும் 
------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com 

செவ்வாய், 18 மார்ச், 2014

கருத்து விதை கவிதை

கருத்து விதை கவிதை 
---------------------------------------
இலக்கியமும் இலக்கணமும் 
இணைந்த சோலை 

கலக்கியதில் புகுந்திட்ட 
தமிழாம்  காற்றின் 

மலர்க்கூட்ட மணத்துக்குள் 
மயங்கி விட்ட 

மனதுக்குள் கருத்துக்கள் 
விதையாய் மாறி 

வளர்ந்திட்ட  கவிதைகளில்  
வாழ்ந்து பார்ப்போம்   
--------------------------நாகேந்திர பாரதி 

நட்பு நடப்பு

நட்பு நடப்பு 
----------------------
அந்த நடைதான் - அவரை
அடையாளம் காட்டியது 

விலகிய வலக் கையும் 
உந்திய உள்ளங் காலுமாய் 

பேண்டு சட்டை 
வேட்டி துண்டாகி உள்ளது 

தொப்பை கரைந்து 
ஒட்டிய வயிற்றோடு 

விசாரிக்க ஆசைதான் 
வேண்டாம் விட்டு விடலாம் 
-------------------------------------நாகேந்திர பாரதி 
http://www.businesspoemsbynagendra.com 

சனி, 15 மார்ச், 2014

வடக்கும் தெற்கும்

வடக்கும் தெற்கும் 
----------------------------
இருந்த மலை இமய மலை 
புயலிலும் மழையிலும்

புரண்டு ஓடி வந்து 
விழுந்த மலை வேறு மலை 

வெட்டுண்டு சிலை ஆகி 
கோயிலுக்குள் வந்த பின்பு 

கும்பிட்டு வருகின்ற 
பக்தர்கள் கூட்டத்தில் 

வடக்கென்ன தெற்கென்ன 
வெளுப்பென்ன  கருப்பென்ன
-------------------------------------நாகேந்திர பாரதி 
 

ஞாயிறு, 9 மார்ச், 2014

மகளிர் தினம்

மகளிர் தினம் 
---------------------
ஒவ்வொரு பருவத்திலும்  
ஒவ்வொரு உருவம் 

குழந்தைப் பருவத்தில் 
தாயின் உருவம் 

இளமைப் பருவத்தில் 
காதலியின் உருவம் 

குடும்பப் பருவத்தில் 
மனைவியின் உருவம் 

முதுமைப் பருவத்தில் 
சக்தியின் உருவம் 

ஒவ்வொரு தினமும் 
மகளிர் தினமே 
------------------------நாகேந்திர பாரதி 
  

வெள்ளி, 7 மார்ச், 2014

வேண்டுதல் வேண்டாமை

வேண்டுதல் வேண்டாமை 
-----------------------------------------
மண்ணும் நீரும் தீ 
விண்ணும் காற்றும் சேர்ந்த 

உடம்பு  வளர்வதற்கு  - நல்ல 
உணவு வேண்டும் 

உள்ளம் வளர்வதற்கு  - நல்ல 
உணர்வு வேண்டும் 

இன்னும் வேண்டுமென்று  
எண்ணம் தூண்டி  விட்டால் 

இன்பம் சீண்டாமல்   - துன்ப 
இருட்டு தீண்டிவிடும் 
--------------------------------நாகேந்திர பாரதி 

மலர்மிசை ஏகினான்

மலர்மிசை ஏகினான் 
--------------------------------
உள்ளமெனும்    மலரின் 
உதிராத  இதழ்களாய் 

கள்ளமிலா வாழ்வும் 
கருணையுள்ள வடிவும் 

நல்லவர்க்கு நேரும் 
நன்மையெல்லாம் சேரும் 

இல்லையென்ற சொல்லே 
இறந்த பின்பும் இல்லை 

உண்டென்ற புகழே 
உயர்ந்தவர்க்கு அழகே 
------------------------------நாகேந்திர பாரதி 

கற்றதனால் ஆய

கற்றதனால் ஆய 
-----------------------------
எம் பி பி எஸ் படிச்சுட்டு 
எல்லாமே அறுத் தாச்சு 

எம் எஸ் ஸி படிச்சுட்டு 
எல்லாமே சிறுத் தாச்சு 

எம் பி ஏ படிச்சுட்டு 
எல்லாமே கருத் தாச்சு 

என்னென்னமோ  படிச்சுட்டு 
எல்லாமே நிறுத் தாச்சு

ஏறுமூச்சு நேரத்திலே 
எல்லாமே வெறுத் தாச்சு  
-------------------------------நாகேந்திர பாரதி 
 

அகர முதல

அகர முதல 
--------------------
'அம்மா' என்று  
அசைத்துப் பழகியதால் 

'அ' னா எழுத
அழகாக வருகிறது 

'அப்பா' என்று 
ஆடிப் பழகியதால் 

அன்பே உலகம் 
அன்றே தெரிகிறது 

போகப் போகத்தான் 
புரியாமல் போகிறது 
------------------------நாகேந்திர பாரதி 

சனி, 1 மார்ச், 2014

சன்னல் வழி உலகம்

சன்னல் வழி உலகம் 
--------------------------------
அந்த சன்னல்கள்தான் உலகை 
அறிமுகம் செய்து வைத்தன 

இயற்கையின் எளிமையை
வாழ்க்கையின் வலிமையை 
உறவின் கனத்தை 
இரவின் மௌனத்தை 
அர்த்தம் புரிய வைத்தன 

சிலருக்கு பெற்றோராய் 
சிலருக்கு ஆசிரியராய் 
சிலருக்கு நண்பராய் 
சிலருக்கு யாரோ சிலராய் 
அந்த சன்னல்கள்தான் 
----------------------------நாகேந்திர பாரதி