வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

காதல் கோயில்

காதல்  கோயில் 
---------------------------
கர்ப்பக் கிரகத்தை விட 
சுற்றுப்  பிரகாரமே பிடிக்கிறது 

அம்மனும் சாமியும் 
அமர்ந்திருக்கும் இடம் அதுவே 

பக்தர்கள் பார்வையில் 
படாமல் இருக்கவே விருப்பம் 

அர்த்த சாமம்  வரை 
அரட்டைக் கச்சேரி தொடர்கிறது 

நடைக் கதவைச் சாத்தும் போது 
நடைப் பயணம் ஆரம்பம் 
-----------------------------------நாகேந்திர பாரதி 

புதன், 26 பிப்ரவரி, 2014

கடற்கரைக் காதலர்கள்

கடற்கரைக் காதலர்கள் 
-------------------------------------------
வீட்டுக்குப் போவதற்கு 
விருப்பம் இல்லாதவர்கள் 

நேரத்தைக் கோபிக்கும் 
நிலைமையில் இருப்பவர்கள் 

பேசுவதே புரியாமல்    
பேசிக் கொண்டிருப்பவர்கள் 

கடலையும் பார்க்‌காமல் 
கடலையும் கொறிக்காமல்

கடலை போட்டுக்கொண்டு 
கடற்கரைக் காதலர்கள் 
----------------------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

கவிதைக் கருப் பொருள்

கவிதைக் கருப் பொருள்  
---------------------------------------
கவிதைக்குக் கருப்பொருளாய்க் 
காதலினை வைத்து விட்டால் 

காகித மை ஆறும் முன்னே 
கணக்கில்லாக் கருத்துக்கள் 

பண்பாடு, பசிக் கொடுமை 
பாதகங்கள் பற்றி எல்லாம் 

வரிந்து கட்டி எழுதினாலும் 
வரி ஒன்றும் வாராது 

என்றைக்கும் இளமைக்குக் 
கருப்பொருளே காதல்தான் 
------------------------------நாகேந்திர பாரதி 
http://www.nagendrabharathi.com

பாதியிலே போனவள்

பாதியிலே போனவள் 
---------------------------------
சேதியிலே   செல்லம் வைத்து 
செந்தமிழைச் சேர்த்து வைத்து 

காதினிலே ஓதி வைத்து 
காதலினை ஊற வைத்து

மீதியினை முடிக்காமல் 
மேனியினைத் தவிக்க விட்டு

ஊதி விட்ட கங்காக  
உள்ளத்தை எரிய விட்டு 

பாதியிலே போனவளைப்
பார்த்தால் சொல்லுங்கள் 
------------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

இலக்கியத்திற்கு இலக்கணம்

இலக்கியத்திற்கு இலக்கணம் 
---------------------------------------------
அகநானூற்றின் உட்புற வாழ்க்கை 
பேஸ்புக் ஆயாச்சு 

புறநானூற்றின் வெளிப்புற வாழ்க்கை 
லிங்க்டுஇன் ஆயாச்சு 

திருக்குறள் நூலின் சுருக்கச் செறிவு 
ட்விட்டர் ஆயாச்சு 

தமிழின் இலக்கிய 
அடிப்படை எல்லாம் 

உலகின் இலக்கண 
வெளிப்படை ஆச்சு 
-------------------------------நாகேந்திர பாரதி 

வியாழன், 13 பிப்ரவரி, 2014

குழந்தை விளையாட்டு

குழந்தை விளையாட்டு 
-----------------------------------
கற்பனை விளையாட்டில் 
கதையைச் சேர்த்து 

தொலைக்காட்சி உருவங்களைத்  
துணைக்கு அழைத்து 

விளையாட்டுப் பொம்மைகளை 
வீடெங்கும்  இறைத்து 

அங்கும் இங்கும் 
ஆட்டம் போட்டு 

அம்மா மடியில் 
அடைக்கலம் ஆகும் 
----------------------------நாகேந்திர பாரதி 

புதன், 12 பிப்ரவரி, 2014

வார இறுதிகள்

வார இறுதிகள் 
----------------------
குழந்தைப் பருவத்தில் 
பேசி விளையாட 
பெற்றோருக்காக

கன்னிப் பருவத்தில் 
சினிமாவுக்குச் செல்ல 
தோழிக்காக 

குடும்பப் பருவத்தில் 
ஊருக்குத் திரும்பும் 
கணவனுக்காக 

முதுமைப் பருவத்தில் 
ஆஸ்பத்திரி  போக 
பிள்ளைக்காக 

வாழ்வின் இறுதி வரை 
காத்துக் கிடக்கும் 
வார இறுதிகள் 
----------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

காதல் என்பது

காதல் என்பது 
-------------------------
காதல் என்பது 
கடவுள் படைத்தது 

மனிதர் பார்த்து 
மயங்கி வளர்த்தது 

உயிரும் உடலும் 
உள்ளம் ஆவது 

அன்பும் பண்பும் 
ஆட்சி புரிவது 

ஆணும் பெண்ணும் 
அமைதி அடைவது 
---------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

போதும் என்ற முதுமை

போதும் என்ற முதுமை 
------------------------------------
வேட்டியும் துண்டும் 
குடையும் செருப்பும் போதும் 

குளமும் கோயிலும் 
வீடும் திண்ணையும் போதும் 

துகையலும்  தோசையும் 
பழையதும் ஊறுகாயும் போதும் 

சுற்றமும்  நட்பும் 
பக்கமும் மக்களும் போதும் 

இரவும் பகலும் 
இளமையும் முதுமையும் போதும் 
------------------------------------நாகேந்திர பாரதி