செவ்வாய், 30 டிசம்பர், 2014

கார்த்திக் தீபம்

கார்த்திக் தீபம் 
-------------------------
சுற்றம் என்பது 
சுற்றி இருப்பது 

நட்பு என்பது 
நடுவில் நிற்பது 

கார்த்திக் என்றொரு 
கார்த்திகை தீபம் 

நடுவில் நின்று 
நா நயம் காட்டியது 

வெளிச்சம் தந்து 
விண்ணில் மறைந்தது 
---------------------------------நாகேந்திர பாரதி 

திங்கள், 29 டிசம்பர், 2014

குளிரும் கொசுவும்

குளிரும் கொசுவும் 
---------------------------------
குளிரும் கொசுவும் 
கூடப் பிறந்தவர்கள் 

போர்வைக்குள் படுத்தாலும் 
புகுந்து விடுவார்கள் 

உடலோடு உறவாடி 
உபத்திரவம் கொடுப்பார்கள் 

வலியும் காய்ச்சலும் 
வரவழைத்து விடுவார்கள் 

வெயில் காலமே 
விரைந்து ஓடி வா 
----------------------------நாகேந்திர பாரதி

சனி, 27 டிசம்பர், 2014

இயக்குனர் சிகரம்

இயக்குனர் சிகரம் 
-----------------------------
'அச்சா' என்ற வார்த்தையில் 
ஆயிரம் அர்த்தங்கள் 

'குங்குமம்' குளோசப்பில் 
ஆயிரம் அர்த்தங்கள் 

'ஒரு சொட்டு' மழைத்துளியில் 
ஆயிரம் அர்த்தங்கள் 

தனி மனித வாழ்க்கை முதல் 
சமுதாய  வாழ்க்கை வரை 

வசனத்திலும் காட்சியிலும் 
வானுயர்ந்த சிகரம் 
---------------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 26 டிசம்பர், 2014

விளையாட்டும் வினையும்

விளையாட்டும் வினையும் 
----------------------------------------
ஆடிக் கொண்டும் 
ஓடிக் கொண்டும் 

பாடிக் கொண்டும் 
தேடிக் கொண்டும் 

திரிந்த இளமைப் 
பருவம் தேய்ந்து 

படித்துக் கொண்டும் 
எழுதிக் கொண்டும் 

வினையில் மூழ்கி 
வீணாய்ப் போகும் 
----------------------------நாகேந்திர பாரதி 

பேசும் காதல்

பேசும் காதல் 
-----------------------
கண்ணைப் பார்த்துப் 
பேசும் காதல் 

கையைத் தொட்டுப் 
பேசும் காதல் 

கன்னம் பட்டுப் 
பேசும் காதல் 

எண்ணம் விட்டுப் 
பேசும் காதல் 

பேச்சு உலகம் 
காதல் உலகம் 
---------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 23 டிசம்பர், 2014

பொம்மைகள் உலகம்

பொம்மைகள் உலகம் 
-------------------------------------
படிக்க வைக்கின்ற 
அம்மா ஒரு பொம்மை 

வெளியே கூட்டிச் செல்லும் 
அப்பா ஒரு பொம்மை 

சாப்பாடு ஊட்டுகின்ற 
பாட்டி ஒரு பொம்மை 

விளையாட்டுக் காண்பிக்கும் 
தாத்தா ஒரு பொம்மை 

குழந்தையின் உலகத்தில் 
எல்லோரும் பொம்மைகள் 
-------------------------------------------நாகேந்திர பாரதி
 

புதன், 17 டிசம்பர், 2014

மார்கழிக் காலை


மார்கழிக் காலை 
-----------------------------
மார்கழித் திங்கள் 
மதி நிறைந்த நன்னாளில் 

ஆதியும் அந்தமும் இல்லாத 
அரும் பொருளை 

பாடிக் களிக்க 
எழுந்து குளித்து 

பஜனைக் கூட்டத்தில் 
சேர்ந்து செல்வதாய்  

புரண்டு படுத்தபடி  
போர்வைக்குள் கனவு  
-------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 16 டிசம்பர், 2014

கச்சேரியும் கழுத்தும்

கச்சேரியும் கழுத்தும் 
------------------------------------
மாயா மாளவ 
கௌளையில் ஆரம்பித்து 

ராக மாலிகையில்
முடிந்த கச்சேரியில் 

கல்யாணி  மோகனா 
கரகரப் ப்ரியாவை 

நண்பரோடு சேர்ந்து 
ரசித்துத் தலையாட்டி 

கச்சேரி முடிந்தது 
கழுத்து வலித்தது 
-----------------------------------நாகேந்திர பாரதி 

திங்கள், 15 டிசம்பர், 2014

கதையே நாயகர்

கதையே நாயகர் 
-------------------------------
கதையே நாயகராய் 
மாறி விட்ட காலத்தில் 

கதா நாயகர்கள் 
பாடு கஷ்டம்தான் 

ரத்தமும் சதையும் 
எலும்பும் நரம்பும் 

உணர்ச்சியில் கலந்து 
உருவான கதையில் 

ஒன்றிக் கலந்தால் 
உருவாகும் வெற்றி 
-----------------------------நாகேந்திர பாரதி

காத்திருக்கும் கஷ்டம்

காத்திருக்கும் கஷ்டம் 
-------------------------------------
முகத்தைப் பார்க்கத்தான் 
கண்கள் திறந்திருக்கும் 

கன்னம் தடவத்தான் 
கைகள் துடித்திருக்கும் 

பொய்யைப் போர்த்தித்தான் 
மெய்யைப் பேசியிருக்கும் 

பைத்தியம் பிடிக்கத்தான் 
நேரம் பாக்கியிருக்கும் 

காத்திருக்கும் கஷ்டம்தான் 
காதலரின் உலகம் 
-----------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

தமிழ்த் தாத்தா வீடு

தமிழ்த் தாத்தா வீடு 
---------------------------------
ஊர் ஊராய்த் திரிந்து 
வீடு வீடாய்த் தேடி 

எடுத்து வந்த இலக்கியத்தை
இறக்கி வைத்த தாத்தா

தமிழ் படித்த வீடு 
தரை மட்டம் ஆனதைய்யோ 

மண்ணை மட்டுமேனும் 
மாலாக மாற்றிடாமல்

நூலகமாய் ஆக்கி விட்டால் 
நூல்கள் நன்றி சொல்லும் 
-------------------------------------நாகேந்திர பாரதி 

சனி, 13 டிசம்பர், 2014

இசைத் திருவிழா

இசைத்  திருவிழா 
------------------------------------
மேகத் திரையை 
மின்னல் கிழிக்கும் 

இடியின் மத்தள 
ஓசை முழங்கும் 

கொட்டும் மழையின் 
நாட்டியம் நடக்கும் 

கொடியும் செடியும் 
காற்றில்  ஆடும் 

இயற்கைத் தாயின் 
இசைத் திருவிழா 
-------------------------------நாகேந்திர பாரதி 

கட்டில் கிழவன்

கட்டில் கிழவன் 
----------------------------
கனத்த மீசை  முறுக்கிக்கிட்டு 
களத்து மேட்டில் நின்றதுவும் 

ஒரு மூடை நெல்லை 
உருட்டித் தூக்கியதும் 

வண்டி கட்டிச் சந்தையிலே 
வாய்ச் சவடால் பேசியதும் 

மீன் சோறு சாப்பிட்டு 
மேனியிலே சாஞ்சதுவும் 

கட்டில் கிழவனின் 
கண்களிலே முட்டும் 
----------------------------நாகேந்திர பாரதி 

காய்ச்சலின் கோபம்

காய்ச்சலின் கோபம் 
----------------------------------
எனக்கு வந்த காய்ச்சலுக்கு 
ஏகப்பட்ட கோபம் 

மாத்திரையும் சாப்பிடாம 
மருந்தும் குடிக்காம 

ஊசியும் போடாம 
ஒண்ணுமே செய்யாம 

சும்மாவே படுத்திருந்தா 
வராதா கோபம் 

போடா போன்னு
ஓடியே போயிடுச்சு 
------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 12 டிசம்பர், 2014

தும்மல் ஆண்டவர்

தும்மல் ஆண்டவர் 
---------------------------------
வெயிலில் திரிந்தால் 
வேர்வைத் தும்மல் 

குளிரில் அலைந்தால் 
கூதல் தும்மல் 

வீட்டைத் துடைக்க 
தூசித் தும்மல் 

சமையல் செய்ய  
புகையால் தும்மல் 

தூணிலும் துரும்பிலும் 
தும்மல் ஆண்டவர் 
-------------------------------நாகேந்திர பாரதி 

பரீட்சை பயம்

பரீட்சை பயம் 
-------------------------
புரிஞ்சு  படிச்சது 
மனசிலே பதிஞ்சாச்சு 

புரியாம படிச்சதை
மனப்பாடம் பண்ணியாச்சு 

ஒன்று ரெண்டு 
மூணு தடவையாச்சு 

தனியா உட்கார்ந்தும்
நினைச்சுப் பார்த்தாச்சு 

பரீட்சை வந்தாச்சு 
பயமும் வந்தாச்சு 
-----------------------------நாகேந்திர பாரதி

காய்ச்சல் சுகம்

காய்ச்சல் சுகம் 
------------------------
விட்டு விட்டு 
சுடுவது சுகம் 

உடம்பு முழுக்க 
வலிப்பது சுகம் 

புரண்டு புரண்டு 
படுப்பது சுகம் 

விடுமுறை எடுத்து 
இருப்பது சுகம் 

மருத்துவச் செலவு 
மட்டுமே சோகம் 
-------------------------நாகேந்திர பாரதி 

வியாழன், 11 டிசம்பர், 2014

காதல் வளர்ச்சி

காதல் வளர்ச்சி 
-------------------------
கண்களின் ஆர்வத்தில் 
ஆரம்பிக்கும் காதல் 

சொற்களின் சுவையில் 
சொக்கித் திளைத்து 

விரல்களின் விளையாட்டில் 
வெட்கிக் கலந்து 

உடல்களின் உணர்ச்சியில் 
ஒன்றிக் களைத்து 

உயிர்களின் ஒற்றுமை 
உணர்ந்து வளரும் 
------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

கட்டில் கிழவி

கட்டில் கிழவி 
-----------------------
எதிர் காலக் கனவுகளே 
இல்லாத நிலையிலே 

கடந்த கால நினைவுகளைக் 
கண்களுக்குள் கொண்டு வந்து 

இங்கிட்டும் அங்கிட்டும் 
புரண்டு படுக்கின்ற 

அந்தக் கால அழகி 
இந்தக் காலக் கிழவியின் 

கட்டிலுக்கும்  தெரியும் 
காலத்தின் கோலம் 
-----------------------நாகேந்திர பாரதி

சனி, 29 நவம்பர், 2014

ஆற்றின் போக்கு

ஆற்றின் போக்கு 
----------------------------
பாதி நாரும்
பாதிப் பூவுமாக

ஆடிப்  போகிறது
ஆற்றில் மாலை 

வரவேற்பு மாலையா 
வழியனுப்பு மாலையா 

ஏதேதோ நினைவுகளை 
எழுப்பிப் போகிறது  

சொன்னால் மட்டும் 
புரியவா போகிறது 

ஆற்றின் போக்கு 
அதன் போக்கு 
-------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 28 நவம்பர், 2014

வாரக் கடைசி

வாரக் கடைசி 
--------------------------
பனிரெண்டு மணி வரை 
படுக்கை வாசம் 

காலையும் மதியமும் 
கலந்த சாப்பாடு 

ஆறு மணி வரை 
அடுத்த தூக்‌கம் 

அதுக்கு அப்புறம்தான் 
ஆட்டமும் பாட்டமும் 

விடியப் போறப்போ 
தூங்கப் போகணும் 
----------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 25 நவம்பர், 2014

காதல் பொறுப்பு

காதல் பொறுப்பு 
---------------------------
காதல் என்பது 
வெறும் விருப்பம் அல்ல 
பெரும் பொறுப்பு 

பேசும் நேரம் எல்லாம் 
பிரியம் இழைய வேண்டும் 

தனிமை கேட்கும் போது 
தள்ளி நிற்க வேண்டும் 

கண்ணீர் வடியும் போது 
கன்னம் துடைக்க வேண்டும் 

உள்ளம் சொல்லுவதை 
உடனே அறிய வேண்டும் 

சொல்லில் மட்டும் அல்ல 
செயலில் காதல் வேண்டும் 
------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 22 நவம்பர், 2014

விதவைக் கிழவி

விதவைக் கிழவி 
---------------------------
சொந்தக்காரர் வீட்டுக்கே 
வேலைக்காரியாய் வந்தவள் 

வயதின் திருப்பங்களை 
வலியோடு கடந்தவள் 

சமையலும் குழந்தை வளர்ப்புமே 
கதியாகக் கிடந்தவள் 

வளர்த்து மணமாக்கி 
வழியனுப்பி வைத்ததெல்லாம் 

கொள்ளி வைக்கக் கூட 
வாராத குழந்தைகள் 
----------------------------------நாகேந்திர பாரதி 

வெள்ளி, 21 நவம்பர், 2014

காலை வணக்கம்

காலை வணக்கம் 
------------------------------
சீக்கிரம் எழுந்திருப்பதில் - சில 
சிரமங்கள் இருக்கின்றன

கனவைக் கலைக்க வேண்டும் 
போர்வையைப் போக்க வேண்டும் 

இங்கும் அங்குமாக 
புரண்டு படுக்க வேண்டும் 

சோம்பல் முறிக்க வேண்டும் 
கண்ணை விழிக்க வேண்டும் 

எல்லாவற்றிற்கும் மேலாக 
எழுந்திருக்க வேண்டும் 
---------------------------------நாகேந்திர பாரதி 

வியாழன், 20 நவம்பர், 2014

ஆற்றுப் படுகை

ஆற்றுப் படுகை 
--------------------------
ஆற்றுப் படுகை - ஒரு 
அடையாளச் சின்னம் 

அங்கங்கே ஊற்றாக
உட்கார்ந்து இருக்கும் ஆறு 

தண்ணீரும் தாவரமும் 
போட்டு வைத்த கோலங்கள் 

காற்றாலும் கால்களாலும் 
கலைந்து போயிருக்கும் 

மறுபடியும் தண்ணீர் 
ஓடி வரும் போது 

ஆற்றுப் படுகை 
ஆறாக மாறி விடும் 
-----------------------------நாகேந்திர பாரதி 

மண்ணும் விண்ணும்

மண்ணும் விண்ணும் 
--------------------------------------
மண்ணைத் தாய் என்போம் 
விண்ணைத் தந்தை என்போம் 

மண்ணுக்கும் விண்ணுக்கும் 
மகவை மனிதர் என்போம் 

விண்ணில் இருந்து வந்து 
மண்ணில் வாழ்ந்து விட்டு 

விண்ணுக்குத் திரும்புகின்ற 
தண்ணீர் வாழ்க்கையிலே 

உயிர்கள் செழிக்க வைப்போம் 
ஓடிக் கடல் அடைவோம் 
---------------------------நாகேந்திர பாரதி 

தெப்பக் குளம்

தெப்பக் குளம்  -நன்றி குங்குமம் இதழ் 20/07/2015
--------------------------------------------------------------------------
ஒவ்வொரு கோயிலின் 
தெப்பக்குளப்  படிக்கட்டுகளில் 

ஏதோ ஒரு கதை 
ஓடிக்  கொண்டு இருக்கிறது 

கடவுளைப் பற்றியிருந்தால் 
காட்சி கொடுத்தது 

முனிவரைப் பற்றியிருந்தால் 
முக்தி அடைந்தது 

காதலரைப் பற்றியிருந்தால் 
கடைசிச் சந்திப்பு 
-------------------------------நாகேந்திர பாரதி 

புதன், 19 நவம்பர், 2014

அறுவடைத் திருவிழா

அறுவடைத் திருவிழா
------------------------------------
அடிச்சுத் தூத்தி 
நெல்லைப் பிரிக்கையிலே 

வைக்கோல் படப்பு 
வாகா எழும்பையிலே 

ஏறிக் குதிக்க 
இறங்கி மிதிக்க 

அவிச்ச பயறும் 
வறுத்த கடலையும்

அதக்கிக் கடிக்க 
அறுவடைத் திருவிழா 
--------------------------------நாகேந்திர பாரதி 

செவ்வாய், 18 நவம்பர், 2014

முத்தப் போராட்டம்

முத்தப் போராட்டம் 
---------------------------------
சந்து முத்தமா 
சந்தி முத்தமா 

அன்பு முத்தமா 
ஆசை முத்தமா 

கன்ன முத்தமா 
உதட்டு முத்தமா  

காதல் முத்தமா 
காம முத்தமா 

உணவுப் போராட்டம் 
ஓயாத நாட்டில் 

முத்தப் போராட்டம் 
முக்கிய முயற்சிதான் 
-------------------------நாகேந்திர பாரதி 

திங்கள், 17 நவம்பர், 2014

இருளும் ஒளியும்

இருளும் ஒளியும் 
-------------------------------
வெளியிருட்டுப் போக்குதற்கு 
வெண்மையொளி  பாய்ச்சி விட்டால் 

காற்று வெளியில் இருட்டு 
கரைந்து போய் விடும் 

உள்ளிருட்டுப் போக்குதற்கு 
உண்மையொளி பாய்ச்சுகையில் 

ஒவ்வொருவர் வாழ்க்கையிலே 
ஒட்டியுள்ள அழுக்கெல்லாம் 

கனத்த இருட்டாகி 
கஷ்டப் படுத்தி விடும் 

தொடர்ந்து பாய்ச்சி வந்தால் 
துன்பிருட்டுக்  கரைந்து விடும் 
இன்ப ஒளி நிறைந்து விடும் 
--------------------------------நாகேந்திர பாரதி 

ஞாயிறு, 16 நவம்பர், 2014

இசையின் இயக்கம்

இசையின் இயக்கம் 
----------------------------------
ஆர்ப்பரிக்கும் இசைக்கு 
ஆட்டம் போடும் மனது 

அமைதியான இசைக்கு 
அடங்கிப் போகும் மனது 

இசைக்கு ஏற்றபடி 
இயங்குகின்ற மனத்தை 

மனத்துக்கு  ஏற்றபடி 
இசையால் மயக்கி 

ஆட்டமும் போடலாம் 
அமைதியும் காணலாம் 
----------------------------------நாகேந்திர பாரதி 

சனி, 15 நவம்பர், 2014

முயற்சி திருவினை

முயற்சி திருவினை 
---------------------------------
சொல்லுக்குள் சுவையிருந்தால் 
சுவருக்கும் காது வரும் 

பழக்கத்தில் பணிவிருந்தால் 
பக்கத்தில் உலகம் வரும் 

உள்ளத்தில் உரமிருந்தால் 
உடலுக்கும் உறுதி வரும் 

எண்ணத்தில் தெளிவிருந்தால் 
இயக்கத்தில் வலிவு வரும் 

விட்டுவிடா  முயற்சிக்கு 
வெற்றியென்றும் தேடி வரும் 
-------------------------------நாகேந்திர பாரதி
 

வெள்ளி, 14 நவம்பர், 2014

அறுந்த பட்டம்

அறுந்த பட்டம் 
-------------------------------
அறுந்த பட்டத்தை 
அலைக்கழிக்கும் காற்று 

அங்குமிங்கும் தள்ளி 
ஏதோ ஒரு மரத்தின் 

இருண்ட கிளைக்குள் 
குத்திவிட்டுப் போகும் 

காக்கைகள் கொத்திய 
காகிதக் குப்பை 

கீழே விழுந்து 
வானம் பார்க்கும்
------------------------------நாகேந்திர பாரதி