புதன், 31 அக்டோபர், 2012

கடலின் வலி

கடலின் வலி


-----------------------

அலையை உயர்த்தி

ஆகாயத்திடம் சொல்கிறது

கரையில் மோதி

தரையிடம் சொல்கிறது

ஆழத்துக்குப் போகிறது

அங்கே அமைதி

தாவரங்களும் மீன்களும்

தடவிக் கொடுக்கின்றன

கடலின் வலி

காணாமல் போகிறது

----------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 26 அக்டோபர், 2012

கப்பலோட்டிய காலம்

கப்பலோட்டிய காலம்


-----------------------------------------

வாய்க்கால் தண்ணியில்

வரிசையாய்க் கப்பல்கள்

சில மூழ்கிப் போகும்

சில சீறிப் பாயும்

கப்பலோடு சேர்ந்து

வரப்போரம் ஓடி

வழுக்கி விழுந்து

அடிபட்ட காயங்கள்

காகிதக் கப்பலின்

அடையாளச் சின்னங்கள்

-----------------------------------நாகேந்திர பாரதி


அரங்கேற்ற இடங்கள்

அரங்கேற்ற இடங்கள்


------------------------------------------

ஒவ்வொரு கடற்கரையிலும்

ஒவ்வொரு ஆற்றங்கரையிலும்

ஒவ்வொரு கண்மாய்க்கரையிலும்

ஒவ்வொரு அருவி ஓரத்திலும்

ஏதாவது ஒரு காதல் கதை

அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது

கண்ணீரைத் தண்ணீரில்

கரைத்துக் கொண்டு

-----------------------------------------நாகேந்திர பாரதி


புதன், 24 அக்டோபர், 2012

இட்லி அதிகாரம்

இட்லி அதிகாரம்


------------------------------

குண்டாச் சட்டியில் அவிச்சு

கோரைப் பாயை விரிச்சு

ஆறப் போட்ட நெல்லை

அரிசி மில்லில் அரைச்சு

தவிடு உமியை நீக்கி

கல்லு மண்ணைப் பொடச்சு

ஊறப் போட்ட அரிசியில்

உளுந்தம் பருப்பும் சேர்த்து

ஆட்டுக் கல்லில் அரைச்சு

பொங்கி வந்த மாவில்

பூவுப் பூவாய் இட்டிலி

பூக்கும் வாசம் தூக்கும்

--------------------------------------நாகேந்திர பாரதி

பட்டணம் போன கிராமம்

பட்டணம் போன கிராமம்


--------------------------------------------

நாலு கல்லு வச்சாச்சு

கோயில் இன்னும் கட்டலை

மொட்டைக் கோபுரம்

முழுசா எழும்பலை

காஞ்சு போன கண்மாயை

கருமேகம் பார்க்கலை

ஓஞ்சு போன வயலிலே

ஒத்தைப் பயிரும் இல்லே

ஊரு சனம் எல்லாம்

பட்டணம் பறந்தாச்சு

------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 22 அக்டோபர், 2012

சமரச நிலை

சமரச நிலை


----------------------

அறிவுச் சக்தியை

அன்புச் சிவத்தில்

அடங்கச் செய்தால்

அமைதி ஆகும்

பிறவிச் சக்தியை

படைப்புச் சிவத்தில்

பாயச் செய்தால்

பரவசம் ஆகும்

சக்தியும் சிவமும்

சமரசம் ஆகும்

------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 19 அக்டோபர், 2012

காலமும் காதலும்

காலமும் காதலும்


----------------------------------

அசைந்து அமர்ந்து

பார்த்த காதல்

இசைந்து இணைந்து

சிரித்த காதல்

கட்டிப் பிடித்து

சுழலும் காதல்

விட்டுப் பிரிந்து

வேறொரு காதல்

காலம் மாறுது

காதலும் மாறுது

---------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 17 அக்டோபர், 2012

பாட்டி படும் பாடு

பாட்டி படும் பாடு


------------------------------

படிச்சு விளையாண்ட

காலம் போயாச்சு

பட்டமும் பதவியும்

குடும்பமும் ஆயாச்சு

வருஷம் ஒரு தடவை

வந்து தான் போறே

ஒண்ணுக்கு ரெண்டுக்கு

எடுத்த பாட்டியை

ஒப்புக்கு பாத்திட்டு

உடனே கிளம்புறே

கண்ணிலே வச்சிட்டுக்

காத்துக் கிடக்கிறேன்

மாசம் ஒருவாட்டி

வந்துட்டுப் போயேன்

------------------------------------------நாகேந்திர பாரதிதிங்கள், 15 அக்டோபர், 2012

அமாவாசை வெளிச்சம்

அமாவாசை வெளிச்சம்


---------------------------------------------

ஒவ்வொரு பெயரைச்

சொல்லும் போதும்

ஒவ்வொரு உருவம்

கண்ணில் நிறையும்

ஊட்டி வளர்த்த

கைகள் தெரியும்

தூக்கி வளர்த்த

தோள்கள் தெரியும்

அமாவாசை நாளில்

அன்பின் வெளிச்சம்

-----------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

குருவக் களஞ்சியம்

குருவக் களஞ்சியம்


-----------------------------------

உலக்கையில் குத்திய

குருவக் களஞ்சியம்

பாதி அவிச்சு

பதினியைச் சேக்கலாம்

முழுசா அவிச்சு

குழம்பில் முக்கலாம்

மொக்கை மொக்கையா

சிவப்பும் ருசியுமா

சிரிச்ச அரிசி

ஆளையே காணோம்

------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 12 அக்டோபர், 2012

உலக அரட்டை

உலக அரட்டை


---------------------------------

சைக்கிள் கடையிலும்

காப்பிக் கடையிலும்

அரசியல் சினிமா

உள்ளூர் அரட்டை

கம்ப்யூட்டர் முன்னே

பேஸ்புக் டிவிட்டரில்

அடிக்கும் அரட்டை

உலக அரட்டை

கலகமும் நேருது

காதலும் சேருது

-----------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

குழந்தையின் குரல்

குழந்தையின் குரல்


-------------------------------------

சாப்பிட்டு முடிக்க

நேரம் தான் ஆகும்

தண்ணியில் அடிச்சு

ஆடத்தான் வேணும்

எல்லாப் பொருளையும்

எடுத்துத்தான் பார்க்கணும்

தினசரி வெளியே

தூக்கிட்டுப் போகணும்

குழந்தையின் குரலைக்

கேட்டுத்தான் ஆகணும்

-------------------------------------நாகேந்திர பாரதிசெவ்வாய், 2 அக்டோபர், 2012

முதியவர் தினம் தினம்

முதியவர் தினம் தினம்


-----------------------------------------------

ஏதாவது ஒரு குறிக்கோளை

எப்போதும் வைத்துக் கொண்டு

ஏதாவது ஒரு செயலை

எப்போதும் செய்து கொண்டு

ஏதாவது ஒரு நம்பிக்கையை

எப்போதும் வைத்துக் கொண்டு

ஏதாவது ஒரு உதவியை

எப்போதும் செய்து கொண்டு

இருந்தால் இளமைதான்

எப்போதும் முதியவர்க்கும்

------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 1 அக்டோபர், 2012

காதல் பொறிகள்

காதல் பொறிகள்


------------------------------

மூக்கிலே முன்கோபம்

வாயிலே வசைப் பேச்சு

கண்களோ கனல் வீசும்

காதுகள் சினந்திருக்கும்

உடலோ சிலிர்த்திருக்கும்

உள்ளமோ களித்திருக்கும்

ஐம்பொறியின் தீப்பொறியில்

அகப்பட்ட காதலர்க்கு

இதுவெல்லாம் வேடிக்கை

இன்பமே வாடிக்கை

---------------------------------------------நாகேந்திர பாரதி