சனி, 29 செப்டம்பர், 2012

புரணிப் பாட்டி

புரணிப் பாட்டி


-----------------------------

அடுப்படியில் ஒரு காது

முற்றத்தில் ஒரு காது

அறையினிலே ஒரு காது

ஹாலிலே ஒரு காது

எப்படித்தான் வைக்கிறாளோ

இத்தனை இடங்களிலும்

இரண்டே காதுகளை

ஒட்டுக் கேட்கும் பாட்டி

இத்தனைக்கும் பாட்டிக்கு

காது சரியாய் கேட்காது

---------------------------------------------நாகேந்திர பாரதி

இட்லியும் இளமையும்

இட்லியும் இளமையும்


-------------------------------------------

சட்னியோ பொடியோ

சாம்பாரோ துகையலோ

தொட்டுச் சாப்பிட்டா

துரத்தும் இட்லி

பத்தோ இருபதோ

பறக்கும் வயிற்றுக்குள்

இரண்டுக்கு மேல்

இறங்க மாட்டேங்குது

இட்லி மாறிருச்சா

இளமை மாறிருச்சா

-----------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

முறைப்பு முகங்கள்

முறைப்பு முகங்கள்


-------------------------------------

காலையில் பார்க்கும் போதும்

முறைப்பு முகம்

மாலையில் பார்க்கும் போதும்

முறைப்பு முகம்

நம்ம முகத்தை

நம்ம கண்ணாடியில்

பார்க்கும் போதுமா

முறைச்சுப் பார்க்கணும்

சிரித்துப் பார்ப்போம்

சிரிக்கும் கண்ணாடி

------------------------------------------------நாகேந்திர பாரதி

பூரண வாழ்வு

பூரண வாழ்வு


------------------------------

இருப்பு நிலையில்

பூரணம் ஆகவும்

இயக்க நிலையில்

உயிரினம் ஆகவும்

தாவரம் தொடங்கி

தாத்தா வரைக்கும்

ஐந்து அடர்த்திகளும்

ஐந்து உணர்வுகளாய்

வளரும் நிலையை

வணங்கி வாழ்வோம்

------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 27 செப்டம்பர், 2012

உண்மை விழிக்கும்

உண்மை விழிக்கும்


-----------------------------------

எல்லாம் தெரியும்

என்ற எண்ணத்தில்

எழுதும் போதும்

பேசும் போதும்

என்ன தெரியும்

என்ற கேள்வி

உள்ளே தோன்றி

உசுப்பும் போது

ஒன்றும் தெரியா

உண்மை விழிக்கும்

------------------------------நாகேந்திர பாரதி

மனித மரங்கள்

மனித மரங்கள்


----------------------------

கூரையைப் பிய்த்தும்

மரங்களைச் சாய்த்தும்

மண்ணை வாரியும்

எறிந்தது காற்று

தென்றலும் அதுவே

புயலும் அதுவே

மனித மரத்தின்

உள்ளே இருந்து

ஆட்டும் மூச்சை

அறிந்து வாழ்வோம்

-------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 26 செப்டம்பர், 2012

காதல் கொலைகள்

காதல் கொலைகள்


---------------------------------

காதல் என்பது

கருணை, கண்ணியம்

காதல் என்பது

அன்பு, அரவணைப்பு

காதல் என்பது

பண்பு, பந்தம்

இந்தக் கால

மோக வேகத்தில்

காதல் என்பது

கொலையில் தொலையும்

-----------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 24 செப்டம்பர், 2012

இரவின் அமைதி

இரவின் அமைதி


-------------------------------

கவியும் இருளில்

கனக்கும் வானம்

கிழித்துப் பார்த்து

சிரிக்கும் சுடர்கள்

பாலில் தோய்ந்த

பளிங்காய் நிலவு

மரத்தின் பறவைக்

குரலும் குறையும்

மனத்தில் அமைதி

மலர்ந்து நிறையும்

----------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

காகிதக் கப்பல்கள்

காகிதக் கப்பல்கள்


------------------------------------

சாதியும் மதமும்

மொழியும் நாடும்

அடையாளம் ஆகிவிட்ட

சமுதாயத் தீவுகளில்

சாதி சமத்துவமும்

மத ஒற்றுமையும்

மொழி இணக்கமும்

உலக அமைதியும்

கரை சேர முடியாத

காகிதக் கப்பல்கள்

------------------------------------நாகேந்திர பாரதி

மக்கள் அரசு

மக்கள் அரசு


-------------------

படித்தவர் சில பேர்

எழுதி ஓய்ந்தார்

படிக்காதோர் சில பேர்

பேசி ஓய்ந்தார்

கையும் வாயும்

காய்ந்து தேய்ந்தார்

சரின்னு பல பேர்

சாய்ந்து மேய்ந்தார்

மக்கள் எவ்வழி

மன்னர் அவ்வழி

-------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

கருவக் காட்டுச் சிறுவர்கள்

கருவக் காட்டுச் சிறுவர்கள்


-----------------------------------------------

கருவ முள் -

ஓலையிலே குத்தினா காத்தாடி

காலிலே குத்தினா ஆத்தாடி

கருவ மரம் -

வெட்டி விறகாக்கி உழைப்பு

விறகைக் கரியாக்கி பொழைப்பு

முள்ளு மரமாகி

சிறுசு பெருசாகி

கட்டைச் சுமந்தது

கரியை மூட்டும்

----------------------------------------நாகேந்திர பாரதி

சுடுகாட்டுப் பக்கம்

சுடுகாட்டுப் பக்கம்


----------------------------------

ஒவ்வொரு நாளும்

ஏதாவது ஒரு உடல்

எரிந்து கொண்டு இருக்கிறது

கண்மாய்க் கரையில்

சேலையும் வேட்டியும்

காய்ந்து கொண்டு இருக்கின்றன

ஈரத்தைக் காய வைக்க

காற்று போதும்

இதயத்தைக் காய வைக்க

காலம் வேண்டும்

------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 20 செப்டம்பர், 2012

வந்தியத் தேவன் வரவு

வந்தியத் தேவன் வரவு


-------------------------------------------

வெண்ணாறும் வெட்டாறும்

குடமுருட்டி ஆறும்

தஞ்சையும் நாகையும்

கும்ப கோணமும்

கோயிலும் குளமும்

பிரசாத அமுதும்

வயலும் வரப்பும்

வாய்க்கால் தண்ணியும்

வந்தியத் தேவன்

வரவுக்குக் காத்திருக்கும்

இன்னொரு கல்கி

எப்போது பிறப்பார்

--------------------------------------------------நாகேந்திர பாரதிபுதன், 19 செப்டம்பர், 2012

மழைக் காலம்

மழைக் காலம்


---------------------------

மழையில் விளையாடி

மகிழ்வது ஒரு காலம்

குடையைப் பிடித்து

தும்முவது ஒரு காலம்

பயந்து வீட்டில்

பதுங்குவது ஒரு காலம்

இடியும் மின்னலுமாய்

சிரிக்கும் மழை

நம்மைப் பார்த்து

நகைத்துப் போகிறதோ

-------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

தொண்டர்தம் துன்பம்

தொண்டர்தம் துன்பம்


------------------------------------------

வரப்புச் சண்டையில்

வழுக்கி விழுந்து

சாதிச் சண்டையில்

சறுக்கி விழுந்து

கட்சிச் சண்டையில்

கலந்து விழுந்து

பழியும் பயமும்

தொடர்ந்து சுமக்கும்

தொண்டர்தம் துன்பம்

சொல்லவும் பெரிதே

--------------------------நாகேந்திர பாரதி

அடுப்படி உழைப்பு

அடுப்படி உழைப்பு


--------------------------------------

மிளகு ரசத்தின் பின்

எவ்வளவு உழைப்பு இருக்கிறது

கத்திரிக்காய்க் கூட்டின் பின்

எவ்வளவு உழைப்பு இருக்கிறது

அவசரம் அவசரமாய்

அள்ளிப் போட்டுக் கொண்டு

அலுவலகம் சென்று

அரட்டை அடிப்போர்க்கு

அடுப்படி உழைப்பின்

களைப்பு தெரியுமா

---------------------------------------நாகேந்திர பாரதிதிங்கள், 17 செப்டம்பர், 2012

மக்கள் அலை

மக்கள் அலை


---------------------------------------------

இந்த நொடியில்

வந்த அலையும்

அடுத்த நொடியில்

ஆடும் அலையும்

ஒன்றா வேறா

ஒரே நீரா

வந்து போகும்

மக்கள் அலையும்

ஒன்றா வேறா

ஒரே பேரா

----------------------------நாகேந்திர பாரதிசனி, 15 செப்டம்பர், 2012

கடலும் குளமும்

கடலும் குளமும்


-------------------------------

வாழ்வின் ஆதாரம்

வளைஞ்சி போறப்போ

கோட்டும் சூட்டும்

குனிஞ்சு போயிரும்

வேட்டியும் வெத்துடம்பும்

வெறிச்சுப் பாக்கும்

உணர்ச்சியைச் சேத்து

வளர்ச்சியைப் பாத்தா

கடலும் குளமும்

கண்ணீர் ஆகாது

------------------------------------ நாகேந்திர பாரதி

பாட்டியின் புடவை

பாட்டியின் புடவை


------------------------------

அவரு வாங்கிக் கொடுத்த

அரக்குக் கலர் புடவையாம்

பண்டிகை விஷேசங்கட்கு

பதவிசாய் உடுத்துவாங்க

மத்த நாட்கள்லே

மடிச்சு மஞ்சப் பைக்குள்

பாடையிலே போகும் போதும்

பாத்து உடுத்தியாச்சு

முன்னாடி போனவரு

மூஞ்சி நிறைஞ்சிருக்கும்

-------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 13 செப்டம்பர், 2012

ஆணும் பெண்ணும்

ஆணும் பெண்ணும்


---------------------------------------

அப்பத்தா அம்மாச்சி

வளர்த்த காலம் போய்

அத்தை சின்னம்மா

வளர்த்த காலம் ஆய்

மனைவி மகள்

வளர்க்கும் காலம் வந்து

ஆணுக்கு எப்போதும்

வளரும் காலம்தான்

பெண்ணுக்கு எப்போதும்

வளர்க்கும் காலம்தான்

--------------------------------------------நாகேந்திர பாரதிஅவரவர் வேலை

அவரவர் வேலை


----------------------------------

நல்லவர்களைக் காப்பதுவும்

தீயவர்களை அழிப்பதுவுமாய்

ஆண்டவருக்கு எத்தனையோ

அவசர வேலைகள்

காலம் பார்த்து

கணக்காய் முடிக்கிறார்

காத்துக் கிடந்து

கடவுளைப் படுத்தாமல்

நம்ம வேலையை

நல்லதாய்ப் பாப்போம்

-----------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 10 செப்டம்பர், 2012

அவசர உலகம்

அவசர உலகம்


------------------------------

பக்கத்தூருச் சந்தைக்கு

பாதையிலே நடந்து போயி

ஒடிச்சுக் கடிச்சு

ஒழுங்கான காய் வாங்கி

விறகடுப்பு சமையல்

வேகறதுக்கு காத்திருந்து

நொறுங்கத் தின்னு

நூறு வரை இருந்தாங்க

செல்போனில் ஆர்டர் பண்ணி

சீக்கிரமாய்   வீடு வரும்

அவசரமாய்ச் சாப்பிட்டு

அம்பதிலே போனாங்க

-------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

பஞ்சு மிட்டாய்ப் பாப்பா

பஞ்சு மிட்டாய்ப் பாப்பா


-----------------------------------------

பஞ்சு மிட்டாய்க்கு

கையும் காலும் முளைச்சிருக்கு

இங்கிட்டும் அங்கிட்டும்

ஓடிக்கிட்டே இருக்கும்

ஒண்ணுக்கும் ஆயும்

ஓயாம போகும்

சாப்பிட தூங்க வைக்க

பாடாய்ப் படுத்தும்

தூங்க வச்சுட்டா

'அப்பாடா'ன்னு இருக்கும்

எப்படா முழிக்கும்னு

'ஏக்கமா'வும் இருக்கும்

-----------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

வேதனை வெடிகள்

வேதனை வெடிகள்


------------------------------

எத்தனை உடல்கள்

எரிந்து பறந்தன

மருந்து நெருப்பு

பரந்து விரிந்து

தீயின் நாக்கும்

புகையின் போக்கும்

அலறல் சப்தம்

கருகும் காற்று

அய்யோ வேண்டாம்

வேதனை வெடிகள்

--------------------------நாகேந்திர பாரதி

புதன், 5 செப்டம்பர், 2012

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தினம்


---------------------------

பானிப்பட்டு யுத்தமும்

ஊசியிலைக் காடுகளும்

பதினாறாம் வாய்ப்பாடும்

பாஸ்பரஸ் நெருப்பும்

மனப்பாடத் திருக்குறளும்

பில் அப் தி ப்ளாங்க்சும்

மறந்து போனாலும்

பள்ளிக்கூடம் மறக்காது

வருஷம் ஒரு தடவை

வாத்தியாரை நினைப்போம்

---------------------------------------------நாகேந்திர பாரதி

உலக இருதய தினம்

உலக இருதய தினம்


-----------------------------------

இருதய தினத்தில்

இலவச சிகிச்சையாம்

கொழுப்பு கூடினால்

மருந்து கிடைக்குமாம்

அழுத்தம் கூடினால்

மருந்து கிடைக்குமாம்

சக்கரை கூடினால்

மருந்து கிடைக்குமாம்

காதல் கூடினால்

காதலி கிடைப்பாளா

---------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 3 செப்டம்பர், 2012

கல்யாண வரிசை

கல்யாண வரிசை


------------------------------

வரிசையில் நின்னு

பரிசைக் கொடுத்திட்டு

வரிசையில் நின்னு

விருந்தைச் சாப்பிட்டு

வரிசையில் நின்னு

தாம்பூலம் வாங்கிட்டு

வரிசையில் நின்ன

களைப்பைப் போக்க

வரிசையில் இருந்து

டாக்டரைப் பாக்கணும்

-----------------------------------நாகேந்திர பாரதி


காரியக் காரர்கள்

காரியக் காரர்கள்


------------------------------------

வந்திருக்கும் பெருசுகட்கு

காபி கொடுத்தாச்சு

அழற குழந்தைகட்கு

இட்லி கொடுத்தாச்சு

காரியம் செய்பவர்க்கு

காசு கொடுத்தாச்சு

சோக வீட்டுக்குள்

சுறுசுறுப்பாய் சில பேர்

அழறவங்க அழட்டும்

ஆக வேண்டியதை பாக்கணுமே

-----------------------------------------------நாகேந்திர பாரதி


ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

விரதக் கிழமைகள்

விரதக் கிழமைகள்


-------------------------------------

ஞாயிற்றுக் கிழமை

சூரியனுக்கு விரதம்

திங்கட் கிழமை

சிவனுக்கு விரதம்

செவ்வாய்க் கிழமை

ஆஞ்சநேயர் விரதம்

புதன் கிழமை

பெருமாள் விரதம்

வியாழக் கிழமை

குருவுக்கு விரதம்

வெள்ளிக் கிழமை

அம்மன் விரதம்

சனிக் கிழமை

சனீஸ்வரர் விரதம்

எந்தக் கிழமை

கறி , மீன் சாப்பிடறது

--------------------------------------நாகேந்திர பாரதி


காலத்தின் பேச்சு

காலத்தின் பேச்சு


---------------------------

பத்து வருடங்களுக்குப் பின்

பழைய கம்பெனிக்கு

சிலருக்கு கல்யாணம் ஆகிவிட்டது

சிலர் இறந்து போய் விட்டார்கள்

சிலர் பேசவில்லை

சிலர் காணவில்லை

நம்மைப் பற்றியும்

யாரோ பேசிக் கொள்கிறார்கள்

நல்லதோ கேட்டதோ

நாம் பேசியது போல

--------------------------------------நாகேந்திர பாரதி


சனி, 1 செப்டம்பர், 2012

கம்ப்யூட்டர் உலகம்

கம்ப்யூட்டர் உலகம்


----------------------------------

வீட்டு வாடகையை

ஏத்தி விட்டுட்டு

விலை வாசியை

உசத்தி விட்டுட்டு

பீரு பிஸ்ஸாவை

பெருக்கி விட்டுட்டு

கவுந்து கிடக்குது

கம்ப்யூட்டர் உலகம்

அமெரிக்கா ஐரோப்பா

ஆட்டம் குறைஞ்சதால்

-----------------------------நாகேந்திர பாரதி