ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

காரண காரியம்

காரண காரியம்


--------------------------------

எழுத்தில் இருந்து பொருள்

பொருளில் இருந்து வாழ்க்கை

வாழ்க்கையில் இருந்து இயக்கம்

இயக்கத்தில் இருந்து இன்பம்

இன்பத்தில் இருந்து துன்பம்

துன்பத்தில் இருந்து பாடம்

பாடத்தில் இருந்து கண்ணீர்

கண்ணீரில் இருந்து கவிதை

கவிதையில் இருந்து காரணம்

காரணத்தில் இருந்து காரியம்

--------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 28 ஏப்ரல், 2012

மௌனங்கள் பேசும்

மௌனங்கள் பேசும்


------------------------------------

அந்தந்த வயதில்

அந்தந்த உணர்ச்சிகள்

அவனுக்கு ஒரு அவள்

அவளுக்கு ஒரு அவன்

காலங்கள் மாறிப் போகும்

கனவுகள் ஆறிப் போகும்

கணவனுக்கு மனைவி ஆகும்

மனைவிக்கு கணவன் ஆகும்

மறுபடி பார்க்கும் நேரம்

மௌனங்கள் பேசிப் போகும்

----------------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

இயற்கை இயக்கம்

இயற்கை இயக்கம்
------------------------------------
நிலம் நீர்
நெருப்பு காற்று
விண் கலந்து
விளங்கும் உலகம்
சுவை ஒளி
ஊறு ஓசை
மணம் கலந்து
 மகிழும் மனிதன்
இரண்டும் கலந்து
இயங்கும் இயற்கை
-------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 14 ஏப்ரல், 2012

ஜோடிப் பொருத்தம்

ஜோடிப் பொருத்தம்
-------------------------------
இடியாப் பத்திற்கு
தேங்காய்ப் பால்தான்
வெந்தயக் களிக்கு
வெல்லம், எண்ணை
இட்லி, தோசைக்கு
சட்னி, மிளகாய்ப்பொடி
உப்புமா, அடைக்கு
சீனிதான் பொருத்தம்
ஜோடிகள் மாறினால்
வயிற்றுக்கு வருத்தம்
-------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

உள்ளே வெளியே

உள்ளே வெளியே
-----------------------------------
உள்ளே இருந்து
வெளியே வந்து
உள்ளும் புறமும்
உணர்ந்து அறிந்து
இருந்து வருந்தி
இறக்கும் முன்னே
உள்ளுக் குள்ளே
ஒன்றாய்க் கலந்து
உருகிப் பிரிய
பிறவி போகும்
----------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 5 ஏப்ரல், 2012

நாயும் அவனும்

நாயும் அவனும்
-----------------------------
கிழிந்த கோணிப்பை
கீறல் தட்டு
கடித்த சப்பாத்தி
கறுப்புக் குவளை
அவனை மட்டும்
அங்கே காணோம்
பசியின் கண்ணோடு
பார்க்கும் நாய்
கவலை யோடு
காத்துக் கிடக்கிறது
----------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

மயான வைராக்கியம்

மயான வைராக்கியம்
----------------------------------
வளர்த்த சொந்தத்திற்கு
வாய்க்கரிசி போட்டு விட்டு
கடைசி முறையாக
முகம் பார்த்து அழுது விட்டு
காடு விட்டு வீடு வந்து
கடந்ததெல்லாம் நினைத்துப் பார்த்து
காசெல்லாம் தூசென்று
பாசம் பொங்குகையில்
சிங்கப்பூர் மச்சான்
கேதம் கேட்பதற்கு
வளு வளு காரினிலே
வந்து இறங்கியதும்
பாசக் கணக்கெல்லாம்
பஞ்சாய்ப் பறந்து விடும்
வேதாளம் மறுபடியும்
காசு மரம் ஏறி விடும்
-----------------------------------------------நாகேந்திர பாரதி