ஞாயிறு, 29 ஜனவரி, 2012

கால ஓட்டம்

கால ஓட்டம்
-----------------------
கடந்து வந்த
கால ஓட்டத்தில்
நடந்து வந்த
நட்பும் காதலும்
இருந்து தந்த
இரவும் பகலும்
பிரிந்து தந்த
பித்தும் கண்ணீரும்
மறந்தும் போகா
இறந்தும் சாகா
----------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

கலப்பு மணம்

கலப்பு மணம்
--------------------------
மழையின் மணமும்
மண்ணு மணமும்
களையின் மணமும்
நாற்று மணமும்
காய்க்கும் மணமும்
பழுக்கும் மணமும்
நெல்லு மணமும்
படப்பு மணமும்
தூற்றும் மணமும்
அவிக்கும் மணமும்
காயும் மணமும்
அரைக்கும் மணமும்
தவிடு மணமும்
உமியின் மணமும்
அரிசி மணமும்
கொதிக்கும் மணமும்
குழையும் மணமும்
சோறின் மணமும்
ஒன்றில் ஒன்றாய்
கலந்த மணமே
-----------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 19 ஜனவரி, 2012

காலத்தின் கால்கள்

காலத்தின் கால்கள்
--------------------------
நாலு வீட்டுக்குச் சொந்தக்காரன்
நடை பாதையில் பிச்சைக்காரனாய்

ஆளு முழுகக் கடன் வாங்கியவன்
அயல் நாட்டிலே வியாபாரியாய்

உயர்ந்த படிப்பை முடித்து விட்டவன்
உள்ளூர்க் கடையில் வேலைக் காரனாய்

ஒன்றாம் வகுப்பைத் தாண்ட முடியாதவன்
உலகப் பெரும் பணக்காரனாய்

கோலத்தைக் கலைத்துப் போகும்
காலத்தின் கால்கள்
----------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 18 ஜனவரி, 2012

சிரிப்பும் அழுகையும்

சிரிப்பும் அழுகையும்
----------------------------------------
வலித்து அழுதால்
வாரியணைக்கத் தோன்றும்
வம்புக்கு அழுதால்
வசைபாடத் தோன்றும்
குறும்பாய்ச் சிரித்தால்
கொண்டாடத் தோன்றும்
குசும்புக்குச் சிரித்தால்
குறைசொல்லத் தோன்றும்
சிரிப்பும் அழுகையும்
சிறுசுக்குப் பலவிதம்
---------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

வயதும் வருடமும்

வயதும் வருடமும்
-------------------------------------
ஒவ்வொரு வருடத்திற்கும்
வயது உண்டு
ஒவ்வொரு வயதுக்கும்
உணர்ச்சிகள் உண்டு
ஒவ்வொரு உணர்ச்சிக்கும்
காரியம் உண்டு
ஒவ்வொரு காரியத்திற்கும்
காரணம் உண்டு
இளமை வயதிற்கு
முதுமை வருடத்திற்கு
---------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 12 ஜனவரி, 2012

மதுரை மணம்

மதுரை மணம்
-------------------------------
வேகம் மட்டும் அல்ல
வேட்டியும் ஏறும்
அரசியல் மட்டும் அல்ல
சினிமாவும் ஊறும்
நகரம் மட்டும் அல்ல
கிராமமும் சேரும்
அங்கிட்டு மட்டும் அல்ல
இங்கிட்டும் வீரம்
கோயில் மட்டும் அல்ல
குடும்பமும் சாரம்
வெயிலு மட்டும் அல்ல
விருந்தும் காரம்
மல்லிகை மட்டும் அல்ல
இட்டிலியும் கூறும்
-----------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 10 ஜனவரி, 2012

கருத்துக் கவிஞர்

கருத்துக் கவிஞர்
----------------------------------
கருத்துகள் கனத்து
வார்த்தைகள் சிறுத்தால்
கவிஞர்
வார்த்தைகள் கனத்து
கருத்துகள் சிறுத்தால்
பேச்சாளர்
பேச்சாளர் பலர்
கவிஞர் சிலர்
----------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 9 ஜனவரி, 2012

காதல் மலர்

காதல் மலர்
---------------------------
அழும் ஆணைத் தேடும்
செல்வப் பெண்
சிரிக்கும் ஆணைத் தேடும்
ஏழைப் பெண்
கோப ஆணைத் தேடும்
வீட்டுப் பெண்
அமைதி ஆணைத் தேடும்
வேலைப் பெண்
காம்பைத் தேடும்
காதல் மலர்
-------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 6 ஜனவரி, 2012

காதலும் கல்யாணமும்

காதலும் கல்யாணமும்
-------------------------------------------
காதல் வந்தப்போ
கல்யாணம் வரலை
கல்யாணம் வந்தப்ப
காதல் வரலை
காதலும் வந்து
கல்யாணமும் வந்து
குடும்பம் வந்தப்ப
குணங்கள் சேரலை
மனங்கள் மாறலை
ரணங்கள் தீரலை
தினங்கள் போறலை
மணங்கள் தேறலை
----------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 5 ஜனவரி, 2012

மலரும் காதல்

மலரும் காதல்
-------------------------------
பார்த்துப் பார்த்து
மயங்கி நின்று
பேசப் பேசத்
தயங்கி நின்று
சிரித்துச் சிரித்துச்
சேர்ந்த பின்பு
தொட்டுத் தொட்டுத்
தொடர்ந்த பின்பு
மொட்டு விட்டு
மலரும் காதல்
--------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 3 ஜனவரி, 2012

தொலைந்த காதல்

தொலைந்த காதல்
------------------------------
சோகமும் காதலும்
சொந்தக் காரர்கள்
அழுகையும் பிரிவும்
அவற்றின் நண்பர்கள்
தோற்ற காதல்
தொலைந்து போனாலும்
தேடித் பார்த்தால்
திரும்பக் கிடைக்கலாம்
அழுகை மாறலாம்
ஆனந்தம் சேரலாம்
----------------------------------------நாகேந்திர பாரதி