சனி, 31 டிசம்பர், 2011

குழந்தையும் தெய்வமும்

குழந்தையும் தெய்வமும்
---------------------------------------------------
நம்ம வீட்டுக் குழந்தை
அழுதால் செல்லம்
அடுத்த வீட்டுக் குழந்தை
அழுதால் பிடிவாதம்
நம்ம வீட்டுக் குழந்தை
அடித்தால் கொஞ்சல்
அடுத்த வீட்டுக் குழந்தை
அடித்தால் அதட்டல்
குழந்தையும் தெய்வமும்
குடும்பக் கோயிலுக்குள்
--------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 29 டிசம்பர், 2011

கொசுக்களின் கொண்டாட்டம்

கொசுக்களின் கொண்டாட்டம்
------------------------------------------------------
கொசு வத்திச் சுருளாம்
கொசு மருந்துத் தெளிப்பானாம்
மின்சார சாதனமாம்
மேனியெங்கும் தைலமாம்
கொசுக் கூட்டக் குடும்பத்தை
கொலை செய்யும் முயற்சிகளாம்
கொசுவுக்கு மருந்தெல்லாம்
பழக்கம் ஆயிடுச்சாம்
கொசுக் கடியும் நமக்கெல்லாம்
பழகிப் போயிடுச்சாம்
----------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 27 டிசம்பர், 2011

நரைக்காத மீசை

நரைக்காத மீசை
------------------------------------
ஒன்றிரண்டு நரை முடியை
ஓரமாகக் கத்திரித்தோம்
கண்டபடி வந்தபின்பு
கரு மையால் மறைத்து வைத்தோம்
மை கரைந்து போகும் போது
மானாவாரி நிறமாய் ஆச்சு
சுத்தமாக மழித்து விட்டு
சுதந்திரமாய் சுவாசித்தோம்
நரைக்காத மீசையோடு
நாம் இளைஞர் ஆகிப் போனாம்
----------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 26 டிசம்பர், 2011

நடக்காத ஆசை

நடக்காத ஆசை
------------------------------
நடைப் பயிற்சிக்கு
ஆசை தான்
குளிர், காற்றில்
குறைந்திருந்தால்
கொசு, செடிகளில்
குறைந்திருந்தால்
கூட்டம், பூங்காவில்
குறைந்திருந்தால்
தூக்கம், கண்களில்
குறைந்திருந்தால்
நடைப் பயிற்சிக்கு
ஆசை தான்
----------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

இதயமும் இதழ்களும்

இதயமும் இதழ்களும்
--------------------------------------
இரண்டு கண்களில்
இதயமும் இதழ்களும்

ஒன்றில் ஒளிந்திருக்கும்
இதழ்களின் ஈரம்

இன்னொன்றில் மறைந்திருக்கும்
இதயத்தின் சாரம்

இரண்டும் கலந்ததே
இவ்வுலக வாழ்க்கை

இரண்டும் கடந்ததே
அவ்வுலக வாழ்க்கை
--------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 22 டிசம்பர், 2011

கருணைக் கொலை

கருணைக் கொலை
----------------------------------
விட்டு விட்டதாம் வேர்
விழுந்து விடுமாம் மரம்
பட்டு விட்டதாம் கிளை
பறந்து விட்டதாம் இலை
ஊர் கூடி ஒன்றாய்
எடுத்து விட்டதாம் முடிவு
கயிறைப் போட்டு இழுக்க
ஒடிந்து விழுந்ததாம் மரம்
பாயில் புரண்டு பார்த்தாள்
நோயில் கிடக்கும் பாட்டி
-----------------------------------------------நாகேந்திர பாரதி

தமிழ் இசை

தமிழ் இசை
----------------------
இசைக்கு மொழி
இல்லைதான்
தமிழ் சேர்ந்தால் இன்பம்
கொள்ளைதான்
அசைக்க முடியா
மனத்தையும்
இசை ஆட்டிப் படைக்கும்
விந்தைதான்
அதில் தமிழும் சேர்ந்தால்
போதைதான்
அர்த்தம் புரிந்து ஆடும்
தலையும் தான்
----------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 20 டிசம்பர், 2011

வீடும் கூடும்

வீடும் கூடும்
-----------------------
மூச்சு முட்டுகையில்
நாக்கு தள்ளுகையில்
வாழ விருப்பமா
சாக விருப்பமா
சோக எண்ணமா
சுதந்திர வண்ணமா
வெந்த உடலுக்கு
மண்ணே வீடு
விட்ட உயிருக்கு
விண்ணே கூடு
---------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

பனை மரப் பலகாரம்

பனை மரப் பலகாரம்
----------------------------------------
பனை ஓலை மடக்கி
பதநீர் குடிக்கலாம்
பனை நுங்கைச் சீவி
கம்பரித்து சுவைக்கலாம்
பனங் காயைச் சுட்டு
சுவைத்து துப்பலாம்
பனங்கிழங்கை அவித்து
கடித்து தின்னலாம்
பருவ காலம் எல்லாம்
பனை மரப் பலகாரம்
-----------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 17 டிசம்பர், 2011

தென்றல் ஊதல்

தென்றல் ஊதல்
---------------------------------
ஆண்களும் பெண்களும்
அத்தனை கோடி
அவளை மட்டுமே
ஆர்வமாய்த் தேடி
தாய்மை உணர்ச்சியா
தாங்கும் மலர்ச்சியா
தூய்மை உள்ளமா
தூங்கும் இல்லமா
தேங்கும் காதலா
தென்றல் ஊதலா
-------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

சுற்றமும் நட்பும்

சுற்றமும் நட்பும்
-----------------------------
வேலை செய்யும் காலத்தில்
பேசுதற்கு நேரமில்லை
ஓய்வு பெற்ற காலத்தில்
கேட்பதற்கு ஆளில்லை
பெற்றாலும் வளர்த்தாலும்
பெரும் புகழாய் ஆக்கினாலும்
நண்பனாய் சேர்ந்திருந்து
நடந்திருந்து வந்திருந்தால்
இப்போதும் துணையிருக்கும்
எப்போதும் பேச்சிருக்கும்
--------------------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 10 டிசம்பர், 2011

ஏழை இல்லம்

ஏழை இல்லம்
----------------------
இடுப்பில் ஒரு பிள்ளை - விரல்
இடுக்கில் ஒரு பிள்ளை
அடுப்பில் ஒரு கண் - பிள்ளை
ஆட்டத்தில் ஒரு கண்
செலவின் மீது மனம் - வந்து
சேருமா இன்று பணம்
கணவன் வரும் ஓசை - அதில்
கவலை, காதல், ஆசை
ஏழை வாழும் இல்லம் - இதில்
இளமை மட்டும் துள்ளும்
----------------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 7 டிசம்பர், 2011

காதல் உலகம்

காதல் உலகம்
---------------------------------
ஓரப் பார்வையில்
காதல் ஒளிந்திருக்கும்
உதட்டுச் சுழிப்பில்
உள்ளம் மறைந்திருக்கும்
கோபப் பேச்சில்
குறும்பு கலந்திருக்கும்
குனிந்த நடையில்
கூப்பிடும் குரல் இருக்கும்
காதல் உலகத்தில்
என்னென்னமோ இருக்கும்
-------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 1 டிசம்பர், 2011

வரவும் செலவும்

வரவும் செலவும்
------------------------------------
முதலா ளிக்கு
வரவு வரணும்
தொழிலா ளிக்கு
செலவு செய்யணும்
செலவு செஞ்சா
வரவு வரும்
வரவு வந்தா
செலவு செய்யலாம்
செலவும் வரவும்
சேர்ந்தே இருக்கும்
-------------------------------------------------நாகேந்திர பாரதி