செவ்வாய், 29 நவம்பர், 2011

வாயும் வயிறும்

வாயும் வயிறும்
-------------------------------
முரட்டு இட்டிலி
பத்து சாப்பிட்டு
மரக்கா தம்ளரில்
காபி குடிச்சிட்டு

சோறும் சாம்பாரும்
வெஞ்சன வகைகளும்
அப்பளம் வடாமும்
தின்னு முடிச்சுட்டு

பழைய சோறு
பெரிய தட்டிலும்
ஊறுகா மிளகா
சின்னத் தட்டிலும்

சேத்துச் சாப்பிட்டு
படுக்கப் போக
வத்திப் போயி
வயிறு கிடக்கும்

ஆடின ஆட்டமும்
ஓடின ஓட்டமும்
பத்துமா வயித்துக்கு
பள்ளிப் பருவத்தில்

-------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 27 நவம்பர், 2011

பாட்டி உலகம்

பாட்டி உலகம்
--------------------------------
வீட்டைப் பெருக்கி
துணிகள் துவைத்து
விளக்கு வைத்து
கதைகள் சொல்லி
ஆக்கிப் போட்டுப்
போய்ச் சேர்ந்த பாட்டிக்கு
உள்ளூர் தவிர
அசலூர் தெரியாது
எங்களின் உலகமே
அவளென்றும் தெரியாது
---------------------------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 25 நவம்பர், 2011

இன்ப துன்பம்

இன்ப துன்பம்
------------------------
மழைக்குப் பயந்து
மயங்குவதில்லை செடி
மடங்கிக் குளித்தால்தான்
மரமாக மாறலாம்
உளிக்குப் பயந்து
ஓடுவதில்லை பாறை
சிதறித் தெறித் தால்தான்
சிலையாக மாறலாம்
கசக்கிப் பிழிந்தால்தான்
கருப்பு வெளுப்பாகும்
-------------------------------------------------நாகேந்திர பாரதி

கிராமத்து ரோடு

கிராமத்து ரோடு
--------------------------------
எட்டு மணிக்கு ஒரு பஸ்
நாலு மணிக்கு ஒரு பஸ்
புழுதி வாரிப் போகும்
மத்த நேரங்களில்
ஆடு , மாடுகளையும்
சைக்கிள், வண்டிகளையும்
சிறியவர் ஓட்டத்தையும்
பெரியவர் நடையையும்
பார்த்துக் கொண்டு
படுத்துக் கிடக்கும்
கிராமத்து ரோடு
-----------------------------------நாகேந்திர பாரதி

புதன், 23 நவம்பர், 2011

கிராமக் காதல்

கிராமக் காதல்
---------------------------
கண்மாய்க் கரையில்
பார்த்துப் பழகி
கருவக் காட்டில்
தொட்டுத் தொடர்ந்து
அம்மன் கோயிலில்
குங்குமம் இட்டு
அடுத்த ரெயிலைப்
பிடிக்கும் போது
கிராமம் சூழும்
காதல் வீழும்
---------------------------------நாகேந்திர பாரதி

காரண காரியம்

காரண காரியம்
-------------------------------
பார்த்தும் பார்க்காமல் போனதற்கு
காரணம் இருக்கும்
சிரித்தும் சிரிக்காமல் போனதற்கு
காரணம் இருக்கும்
பேசியும் பேசாமல் போனதற்கு
காரணம் இருக்கும்
பைத்தியமாய் நடந்த பகல்களில்
காரணம் இருக்கும்
ஏங்கிக் கிடந்த இரவுகளில்
காரணம் இருக்கும்
--------------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 22 நவம்பர், 2011

கிராமக் கிழவி

கிராமக் கிழவி
------------------------------
நாத்து நட்டதும்
களை எடுத்ததும்
கஞ்சி கடஞ்சதும்
கலயம் சுமந்ததும்
புள்ளை பெத்ததும்
புரண்டு படுத்ததும்
ஓஞ்சு விழுந்ததும்
சாஞ்சு கிடப்பதும்
கண்ணுக்குள் நீராய்
கிராமத்துக் கிழவி
------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 21 நவம்பர், 2011

கிராமக் கிழவன்

கிராமக் கிழவன்
-----------------------------------
பனைமரம் ஏறியதும்
பதினி காய்ச்சியதும்
வரப்பு வெட்டியதும்
வயலை உழுததும்
அறுத்துப் போட்டதும்
அடித்துத் தூத்தியதும்
வண்டி கட்டியதும்
வரவு பார்த்ததும்
இணைத்துப் பார்த்து
இருமிக் கிடப்பான்
--------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 20 நவம்பர், 2011

மெய்யும் பொய்யும்

மெய்யும் பொய்யும்
------------------------------------------
நானாக இருக்கையில்
நரம்புகள் துடித்திடும்
நானில்லை என்றபின்
நாடிக்குப் புரிந்திடும்
என்னவாய் இருந்ததிது
ஏனிப்படி ஆனது
என்றெல்லாம் கேள்விகள்
எழும்பிடும் போதிலே
மெய்யென்றும் பொய்யென்றும்
மெதுவாகத் தெரிந்திடும்
-------------------------------------------------------------நாகேந்திர பாரதி

சனி, 19 நவம்பர், 2011

மறப்பதும் மன்னிப்பதும்

மறப்பதும் மன்னிப்பதும்
------------------------------------------
மறப்பது மனிதம்
மன்னிப்பது இறைமை

மறப்பதும் மன்னிப்பதும்
மனம் திருந்திய மனிதர்க்கு

நோக்கமே தவறென்றால்
நொண்டிச்சாக்கு துணைஎன்றால்

மறப்பது தப்பு
மன்னிப்பது குற்றம்
--------------------------------------------நாகேந்திர பாரதி

செவ்வாய், 15 நவம்பர், 2011

வைக்காத பெயர்கள்

வைக்காத பெயர்கள்
-------------------------------------
செல்லக் குட்டிம்மா
கண்ணுக் குட்டிம்மா
பஞ்சும்மா பிஞ்சும்மா
செல்லம்மா வெல்லம்மா
கட்டிம்மா குட்டிம்மா
கண்ணும்மா பொண்ணும்மா
வைத்த பேரைச் சொல்லிக்
கூப்பிட்டுக் கொஞ்சாமல்
வாய்க்கு வந்த பேர் சொல்லி
கொஞ்சிடுமாம் தாய்மை
--------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 14 நவம்பர், 2011

இருட்டுப் பாட்டுக்கள்

இருட்டுப் பாட்டுக்கள்
-----------------------------------------------
பள்ளிக்கூட சந்தோரம்
பயத்தோடு சிகரெட்டு
கடற்கரை படகோரம்
கைமாறும் கரன்சிகள்
ஆட்டோவை நிறுத்தி விட்டு
ஹாப் வாங்கும் அவசரம்
அரிவாளின் வெறியோடு
துரத்தும் கால் வேகம்
இருட்டுப் பாட்டுக்களில்
சமுதாய வெளிப்பாடு
------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 7 நவம்பர், 2011

நாட்டாமை வார்த்தைகள்

நாட்டாமை வார்த்தைகள்
----------------------------------------------
மனைவியோ கணவனோ
மகனோ மகளோ
தாயோ தந்தையோ
சோதரனோ சோதரியோ
நட்போ சுற்றமோ
நோயில் விழுந்தால்
அடுத்தவர் அருமை
அப்போது புரியும்
அதற்கும் முன்னே
அடுக்கிய வார்த்தைகள்
நடுவில் புகுந்து
நாட்டாமை செய்யும்
-----------------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 6 நவம்பர், 2011

அரைப் பள்ளிக்கூடம்

அரைப் பள்ளிக்கூடம்
--------------------------------------------
அரைப் பள்ளிக்கூடத்தில்
அஞ்சாம் வகுப்பு வரை
வாழ்ந்தது வாழ்க்கை
அதற்குப் பின்னே
வயக்காட்டு வேலையும்
வயதுக்கு வந்ததும்
மாமனை மணந்ததும்
மக்களைப் பெற்றதும்
வயது போனதும்
வதங்கி விழுந்ததும்
வாய்க்கரிசி வாங்கியதும்
வாழ்க்கையா என்ன
----------------------------------------------நாகேந்திர பாரதி