புதன், 26 அக்டோபர், 2011

காது வலியும் தீப ஒளியும்

காது வலியும் தீப ஒளியும்
-------------------------------------------------
ஓலைப் பட்டாசு போய்
உயரே பறக்குது ராக்கெட்டு
வீட்டுப் பட்சணம் போய்
வித வித பலகாரம் கடைகளில்
தியேட்டர் கியூ போய்
டிவியில் சினிமா கியூ
தைத்து வாங்கியது போய்
தயார் உடை அப்போதே
வாழ்த்து அட்டைகள் போய்
விரைவு ஈமெயில்கள்
எண்ணை சிகைக்காய் போய்
எத்தனை ஷாம்பூ வகை
அமைதியான தீப ஒளி போய்
ஆரவார காது வலி
------------------------------------நாகேந்திர பாரதி

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

பச்சைக் கலர் பை

பச்சைக் கலர் பை
--------------------------------------
அரிசி, பருப்பு,புளி, மிளகாய்
வர்ற போதும் போகும் போதும்
கொடுத்து விட்டும் எடுத்துப் போயும்
இருந்த காலம் மறந்து போயி
பட்டணத்து ரேஷன் கடை
வாசலிலே வதங்கிப் போயி
பழுத்துப் போன உடம்போடு
பச்சைக் கலர் பையோடு
--------------------------------------நாகேந்திர பாரதி

வெள்ளி, 14 அக்டோபர், 2011

வாசமுள்ள வார்த்தைகள்

வாசமுள்ள வார்த்தைகள்
---------------------------------------------------------
வாய்க்காலைப் பத்தியும்
வத்தக் குழம்பைப் பத்தியும்
சேலையைப் பத்தியும்
செம் மண்ணைப் பத்தியும்
கோயிலைப் பத்தியும்
குடிசையைப் பத்தியும்
கதையாவும் கட்டுரையாவும்
கவிதையாவும் எழுதுறப்போ
தூரத்தில் இருந்து
தொடர்புடைய வாசம்
---------------------------------------------------நாகேந்திர பாரதி

வியாழன், 13 அக்டோபர், 2011

முந்தி பிந்தி

முந்தி பிந்தி
-------------------------
சைக்கிளில் போனாலும்
ஸ்கூட்டரில் போனாலும்
ஆட்டோவில் போனாலும்
காரில் போனாலும்
முந்தைய வண்டியை
முந்திப் போகணும்
இடிச்சுப் பிடிச்சு
எகிறிப் போகணும்
பிந்திக் கிளம்பினா
இந்தப் பாடுதான்
--------------------------------------------நாகேந்திர பாரதி

புதன், 12 அக்டோபர், 2011

ஆட்டோ ஸ்டாண்ட் அடையாளம்

ஆட்டோ ஸ்டாண்ட் அடையாளம்
------------------------------------------------------------
பஸ் ஸ்டாப்பில் இறங்கி
பக்கத்து சந்தில் நுழைந்து
வலப்பக்கம் திரும்பினால்
ஆட்டோ ஸ்டாண்ட்
அதிலே இருந்து
அஞ்சாவது வீடுதான்
கட்சிக் கொடி தகராறில்
காணாமல் போனது
ஆட்டோ ஸ்டாண்ட் மட்டுமா
நம்மோட வீடும்தான்
---------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 10 அக்டோபர், 2011

வயலும் வாழ்வும்

வயலும் வாழ்வும்
----------------------------------
சகதியும் மலமும் கலந்து
வழுக்கும் வாய்க்கால் வரப்பு
ஊன்றிக் குதித்துத் தாண்டி
கண்மாய்க் கரையை அடைந்தால்
பளபள களிமண்ணோடு
வழுக்கும் கண்மாய் மேடு
துவைத்துக் குளித்துத் திரும்பி
தாண்டி வீட்டை அடைந்து
காலைக் கழுவி முடிக்க
சருவத் தண்ணி அருவாகும்
------------------------------------------------நாகேந்திர பாரதி

திங்கள், 3 அக்டோபர், 2011

பாத்தியில் நாற்று

பாத்தியில் நாற்று
-----------------------------------
தெருவும் திண்ணையும்
முற்றமும் அடுப்படியும்
கோயிலும் குளமும்
சூடமும் சுண்டலும்
வெயிலும் மழையும்
வேர்வையும் சகதியும்
சிரிப்பும் அழுகையும்
பாட்டும் ஆட்டமும்
பத்து வயது வரை
பாத்தியில் நாற்று
-------------------------------------------நாகேந்திர பாரதி